பெண்ணடிமைச் சாசனத்தின் இன்னொரு பக்கம்: உல்லாசத் திருமணம் – நாவல்


திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது - வழக்கத்திலுள்ள வாசகம்! திருமணம் ஆணின் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது - சமகால வாசகம்.

ஒரு ஆணுடைய இதயத்துக்கும் சௌகரியத்துக்கும் ஆன ஒப்பந்தச் சடங்கு அது,

இன்னொரு பாலியலின் முழுமையான ஒப்புதலின்றி நிறைவேற்றப்படுதலால், திருமணம் பெண்மீதான ஒரு வன்முறை. இந்து மதத்தில் மட்டுமல்ல; அனைத்து மத சமுதாயங்களின் திருமண நிகழ்வுகளும் தரிசனப் படுத்துவது இந்த உணமை; குடும்ப வன்முறையின் தொடக்கப்புள்ளி திருமணம் என்னும் ஒப்புக்கைச் சீட்டுடன் தொடங்குகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையாக இருக்கிறதென்று மனச் சமாதானம் கொள்ளமுடியாது. எந்நாடாயினும், எவ்வினமாயினும், எச் சாதியாயினும் அனைத்திலும் திருமணமென்பது, பெண்ணை அடிமையாக்குகிற பொருண்மை தான்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவின் இரு முக்கிய நகரங்கள் பேஸ், தாஞ்சியர்; இவ்விரு நகரங்களின் இஸ்லாமியக் கலாச்சரத்தைக் களனாக வைத்து நாவல் இயங்குகிறது. அமீரின் பெற்றோர் முதல் தலைமுறை; அமீர், அவன் தமையன், தம்பி – இரண்டாம் தலைமுறை, அமீரின் பிள்ளைகளான ஹுசேன், ஹசன் – என மூன்று தலைமுறைகளின் நதியலையில் கதை ஓடம் செல்கிறது.

சந்தை வணிகத்தின் நெறிகளால் உருவாக்கப்பட்ட ஒரு சவுகரியம் ’உல்லாசத் திருமணம்’. வியாபார நிமித்தம் செனகல் போன்ற கருப்பின நாடுகளுக்கு பயணிக்கிற அராபியர்கள் ’பிரவுன்’ நிறத்தவர்; ஆயினும் தம்மை வெள்ளைநிறத்தவராக கெத்தாகக் கருதிக்கொள்கிறவர்கள். தேவைப்படும்போது கருப்பினப் பெண்களை திருமணத்துக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். மளிகைச் சாமானகள், மற்றும் அரிய பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு ஆண்டுதோறும் செனகல் நட்டுக்குச் சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அமீர். வியாபாரத்துக்கான சரக்குகள் சேகரம் ஆகிறகாலம் வரை - அது ஆறு மாதமோ, ஒரு வருசமோ, குறிப்பிட்ட காலத்துக்கு வீடும் பெண்ணும் அமர்த்தி திருமணம் செய்து கொண்டு பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து வாழ்கிற ஏற்பாட்டு முறையைக் கைக்கொள்கிறான். அதன்படி செனகலின் நபூ என்ற கருப்புப் பெண்ணை அமீர் ஓராண்டுக்கு திருமணம் செய்து கொள்கிறான். வணிகக் காரியம் நிறைவேறியதும், அந்தப் பெண்ணை விட்டுவிட்டு வந்துவிடலாம்; கருப்பினப் பெண் அதன்பின் இதுபோல் வேறொரு ஒப்பந்த திருமணம் செய்துகொண்டு வாழலாம்; வேறு உறவுகள் வைத்துக் கொண்டும் வாழலாம்.பாலியல் தொழில் புரிந்தும் வாழலாம்.

ஆணின் பாலியல் தேவைகளைத் தீர்ப்பதற்கு, சிவப்பு விளக்கு, சின்ன வீடு, வைப்பு, பரத்தையர் விடுதி, உல்லாசத்திருமணமென எத்தனை ஏற்பாடுகள். ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு வகை! நிலக்கரியை விட கருப்பு உண்டா? வைரம் கிடைக்கிறது. கருப்பின பூமியிலிருந்து நபூ போன்ற சில வைரங்கள் கிடைக்கின்றன; மெய்யாகவே அவளிடம் உடல் ஆசுவாசம் மட்டுமல்ல, மன ஆசுவாசமும் கொள்பவனாக அமீர் தன்னை இழக்கிறான்.

நபூ தன் கணவனை கைக்குள் இடுக்கிக் கொண்டாள் எனக் கருதுகிறாள் மனைவி லாலா ஃபாத்மா. அறிவுக்கூர்மை; உடற் கவர்ச்சியுமுள்ள நபூவின் ஈர்ப்பு ஒரு பக்கம்; மனைவி குடும்பம் உறவுகள் சுற்றம் இஸ்லாமிய சம்பிரதாயம் மற்றொரு பக்கம். இரு புள்ளிகளிடையில் அலைக்கழிப்புள்ளாகும் அமீர், மன அழுத்தத்திற்கான விடியலாய் எப்போதும் சந்திக்கும் தத்துவப் பேராசான் முலே அகமதுவை அணுகுகிறான். அல்குரான் பல்கலைக்கழக பக்தியியல் பேராசிரியர், முலே அகமது.

”ஒரு ஆண் நான்கு பெண்களை மணம் செய்து கொள்ள இறைவன் அனுமதி அளித்துள்ளார். ஆனால் ஒரு நிபந்தனையுடன்! மீண்டும் சொல்கிறேன் ஒரு நிபந்தனையுடன். அவர்களை சரிசமமாக நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன்” (பக்கம் 124)

கொந்தளிப்பும் குழப்பங்களுமான இருளில் வெளிச்சம் தருகிற அவரது கருத்து அதிகாரப் பூர்வமானது. அவருடைய அறிவுத் திறன் குறித்து எவருக்கும் ஐயம் இல்லை.

செனகலிருந்து அம்மிருடன் பேஸ் நகர் வந்தடைந்த நபூ, இஸ்லாமிய முறைப்படி அமீரை மணம்புரிந்து கொண்டபோதும், அமீரின் மனைவி லாலா ஃபாத்மா கருப்பினப் பெண் என்பதால் வெறுக்கிறாள்: சொந்த வீட்டுக்குள் தனது நான்கு பிள்ளைகளையும் வெறுத்து ஒதுக்கச் செய்கிறாள். ’கருப்பினத்தவர் கீழான நடத்தை கொண்டவர்கள்; தம்மின் நலன்களுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்‘ போன்ற சித்திரங்கள் உள்மனதில் படிந்து கிடப்பது - இந்த ஒரு லாலா ஃபாத்மா மட்டுமே அல்ல; வெள்ளை இனத்தினராக தம்மைக் கருதும் ’பிரவுன் நிற’ லாலா ஃபாத்மாக்கள் பேஸ், தாஞ்சியர் நகரங்களின் பரப்பெங்கும் நிறைந்துள்ளனர்.

நபூ இரட்டைக் குழந்தைகள் பெறுகிறாள். மூத்தவன் வெள்ளை நிறம் - ஹூசன்; இரண்டாமவன் கருப்பு - ஹசன். இரட்டைக் குழந்தைகள் பற்றி அமீரிடம் நேரடியாகக் கேட்டாள் லாலா ஃபாத்மா.

“பிரசவம் நடந்த போது அந்த அறைக்குள் இருந்தீர்களா, இல்லை அல்லவா? எனவே திருமணம் ஆகாத, ஓடுகாலியான, பல பேருடன் உறங்கிய அந்த மோசமான பெண், புதிய செவிலித்தாயைக் கைக்குள் போட்டு வெள்ளைக் குழந்தையைத் திருடி இருக்க வேண்டும்; அவள் சொல்வதை எல்லாம் நம்ப முடியாது; நம்மிடம் வந்து கதை அளக்க முடியாது”

வாழ்க்கையில் முதல் முறையாக அமீர் உரக்கப் பேசினான்

”லாலா ஃபாத்மா, நபூ மீது இத்தகை பழியைச் சுமத்துவதை இனியும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆமாம் இத்துடன் நிறுத்திக்கொள். இனியும் ஒரு வார்த்தை இழிவாக வரக்கூடாது.அவளைத் திட்டினால் அது என்னையும், என் புகழ், என் நேர்மை ஆகிய எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குவதற்குச் சமம். எனவே நீ எல்லாவற்ரையும் நிறுத்திக் கொள்ளவேண்டும்”

அவள் துணிந்து கேட்டாள் ”இல்லையென்றால் ..”

“இல்லை என்றால் விவாகரத்து: ஒரு நிமிடம் கூட ஆகாது, உன்னைத் திருப்பியனுப்பும் கடிதத்தை எழுதினால், உன்பெட்டி படுக்கையைக் கட்டவேண்டும். அவ்வளவுதான், என் மனைவியாக இல்லாமல் போக மூன்று முறை நீ விலக்கப்பட்டாய் (தலாக்) என சொன்னால் போதும். அதுதான் சட்டம்” கடுமையான தொனியில் கூறினான்.

லாலா பத்மா ஓங்கி அழுதாள். இத்தகைய கோலத்தில் தன் கணவனை அவள் ஒருபோதும் கண்டதில்லை. ஆப்பிரிக்க சூன்யம் வேலைசெய்கிறது என நினைத்தாள். பிறகு அறைக்குள் சென்று தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். (பக்கம் - 148)

அழுவதை தவிர அவளுக்கு வேறு வழி இல்லை. எதிர்ப்பதும் அழுவதும் வாழ்க்கையாகி காலமுழுசும் நொந்து, உடல் நோய்வாய்ப்பட்டு, ஒரு நாள் இரவு தூக்கத்திலேயே இறந்தும் போகிறாள்.

ஆணாதிக்கத்தை எதிர்க்கும் இந்த எல்லையில் வேறுபட்ட ஒரு ஆத்மாவாக லாலா தோன்றுகிறாள். ஆனால் எதிர்த்து நிற்கவேண்டியதும் போராட வேண்டியதும் ஒரு ஆணை எதிர்த்து அல்ல; ஆணுக்கு அந்த அதிகாரத்தை வழங்கிய கொடிய மதச் சம்பிரதாயத்தை எதிர்த்து; ஆணுக்குப் பின்பலமாக இருக்கும் மதச் சட்டதிட்டதை எதிர்த்து; இன்னும் ஓங்கி எரியும் பழமையின் தீப்பந்தத்தை அணைக்க சமர் செய்திருக்கவேண்டும். தனக்கென இவ்வாறு விதிக்கப்பட்டதாக எண்ணுகிற லாலா போன்ற பெண்ணால் இதைச் செய்ய இயலாது. ஆகவே அவள் மரணம் தழுவுகிறாள்.

நபூவுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் மூத்தது வெள்ளை. தம்மினத்தவனாகக் கருதி அணைக்கிற, கருப்புக் குழந்தையான ஹசன் மீது எல்லையற்ற வெறுப்பை உமிழுகிறார்கள். ”நாம் எல்லோரும் வெள்ளை நிறத்தவர்கள்; நாம் அரேபியர்கள்; அவர்கள் அடிமைகள்; வெள்ளை அராபியர்களைப் பார்த்தவுடன் அவர்களின் முதுகெலும்பு தானாக மறைந்து விடும்” என இழிவுபடுத்தல் திசைகளாய் நெருக்குகிறது.

நாவலாசிரியர் சாட்டை எடுத்து ஓரிடத்தில் விளாசுவார்:

”குதிரையைக் கண்டுபிடித்ததற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்; இல்லையென்றால் வெள்ளைக்காரர்கள் கருப்பர்களை வாகனமாகப் பயன்படுத்தியிருப்பார்கள். மற்றவர்களை இழிவு படுத்துவதையே மனிதன் எப்போதும் விரும்புகிறான் (தமிழ்ச் சமூகத்தில், இந்திய இந்துச் சமூகத்தில் சாதிப் புறக்கணிப்பு சாமியாடுவதை நினைவில் கொள்ளலாம் – கட்டுரையாளர்). அதிலும் குறிப்பாக ஏழைகளை, கருப்பு நிறமுடையவர்களை, எவ்விதப் பாதுகாப்புமில்லாதவர்களை அவமானப்படுத்த விரும்புகிறான். இப்படித்தான் அடிமைத் தனம் என்னும் பயங்கரம் சில நாடுகளில் இன்னும் தொடர்கிறது”

கருப்பினப் புறக்கணிப்பின் நீட்சியாய் ஹசன் இழிவுக்குட்படுத்தலால், காலப்போக்கில் அவன் மிகவும் தனியனாக மாறி விட்டான். துயரத்தின் உப்புப் பாரித்த கடலைப் பருகிக் கொண்டே ஓடுகிறான்; உலகின் அனைத்து மூலைகளுக்கும் ஓடி ஓடி முற்றாகச் சிதைக்கப்படுகிறான். கருப்பாக பிறந்ததற்காக ’பிரவுன் நிற’ சமுதாயம் அவனை தண்டித்துக்கொண்டே விரட்டுகிறது.

”இனவெறி எல்லாத் திசைகளிலிருந்தும் வெளிப்பட்டது; கருப்பர்களை எதிர்த்து வெள்ளையர்கள் ; வெள்ளையர்களை எதிர்த்து கருப்பர்கள்; கருப்பர்கள் மட்டும் நிறையப் பணம் படைத்தவர்களாக இருந்திருந்தால், இருவரும் இணக்கமாகப் பெரிய உணவு விடுதியொன்றின் மேல் தளத்தில் மதுக்கோப்பையுடன் ஒருவரை ஒருவர் வாழ்த்தியபடி இருந்திருப்பார்கள்”

ஹசன் குமைகிறான். நிற பேதத்துக்கு வர்க்கவேற்றுமையே மூலம் என உலைக்களச் சிவப்புப் பொறி தெறிக்கிறது அவன் பிரகடனத்தில்.

மொரோக்கா நாட்டின் பேஸ் நகரிலும் தாஞ்சியரிலும் வாழ்ந்து அனுபவித்த கதைசொல்லியை , மொழியாக்கம் செய்தவரின் அவதானிப்பு அளவிடுகிறது: ”கதை சொல்லியின் உண்மையான இலக்கு வேறு என்பது விரைவிலேயே விளங்கிவிடுகிறது. அந்நாட்டில் நங்கூரமிட்டு, பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறவேற்றுமையினை விளக்கவே இக்கதைப் பின்னல் என்பதும் வாசகர்களுக்குத் தெளிவாகிறது.”

இந்து சமுதாயத்தில் சாதி வேற்றுமை வர்க்கவேற்றுமைக்கு மூலம்; செம்மி இறுகிப் போயுள்ள சாதி என்னும் வர்க்கவேற்றுமை, தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நிகழ்த்தும் பாலின வன்முறைகள், கருப்பினப் பெண்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை. தாழ்த்தபட்ட மக்கள் மீது உமிழப்படும் வெறுப்பு, கருப்பின மக்கள் மீதான வன்முறைக்கு இம்மியும் குறைந்ததில்லை. சாதியும், இந்து சனாதனமும் இரு பிணைசல் பாம்புகளென நட்டுக்க நின்று ஆடுகின்றன. பாம்புகள் பிணைகிறபோது, அவற்றின் மீது வெள்ளைத்துணியை எடுத்து வீசிப் போர்த்தினால், துணி அவ்வளவும் தங்கமாக ஆகிவிடுமென்பது ஒரு நம்பிக்கை; சாதி அத்த்துமீறல்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற இன்றைய ஆட்சி பீட சனாதனிகள் இந்த கற்பனை உலகத்தில் வாழுகின்றனர். மனிதனின் புனிதத்தை விட மாட்டின் புனிதம் மேலானது, கோமாதாவைக் காப்போம்; மாட்டுக்கறி உண்ணும் மனிதனைத் தேடிப்பிடித்து கட்டிப்போட்டு, சாட்டையால் அடித்துக் கொல்வோம்.

உல்லாசத் திருமணம் நாவலை முடித்து இதய நடுக்கத்துடனும், நீராடும் விழிகளுடன் கைகளில் ஏந்துகையில் - இந்து சனாதன சமுதாயம் கட்டமைத்துப் பேணிக் காத்துவரும் சாதிப் புறக்கணிப்பு பற்றிய அடுத்தகட்ட சிந்திப்புக்கு, ஒரு இலக்கிய வாசகன் பயணிப்பது தவிர்க்க முடியாத வாசிப்பு நியதி. அது சிந்த்திப்பின் செல்நெறி.

கலகம் செய்யும் இடது கை, சூறாவளி போன்ற நாவல்கலில் தொடங்கி,ஆண்டன் செகாவின் ஆகச் சிறந்த கதைகள், லூயி பஸ்தேரின் வாழ்க்கை வரலாறு வரை, பிரஞ்சிலிருந்து தமிழில் ஆக்கம் செய்து வழங்கி வரும் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் எழுத்துக் கலை லாவகம், உல்லாசத் திருமணத்தையும் உயர்த்திப் பிடித்திருக்கிறது - இதனால் தான் இந்நாவல் தமிழாக்கத்துக்கு இத்தனை விருதுகள்!.

வெளியீடு: தடாகம், எண்- 112, முதல் தளம், திருவான்மியூர் சாலை,
திருவான்மியூர் , சென்னை – 600041. பேசி: + 91- 98400 70870.

(காக்கைச் சிறகினிலே ஏப்ரல் 2021)




கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌