செவ்வந்திப் பூவாய் ஏப்ரல் 2021 செம்மலர்

(மே 2021 செம்மலர் இதழில் வெளியான பா.செயப்பிரகாசம் கடிதம்)

மலையாள எழுத்தாளர் ஆர். உன்னி எழுதிய “பாதுஷா என்ற கால்நடையாளன்” தொகுப்பில், கவிஞர் சுகுமாரன் மொழியாக்கத்தில் வெளியான ”வாங்கு” சிறுகதையை வாசித்துள்ளேன். வாசிப்பின் போது எனக்குப் புலப்படாதிருந்த சில மறைவுப் பக்கங்களை, சட்டென வெளிப்படையாய்ப் பிடித்த்க் கொள்ளமுடியாமல் போன உளவியல் ஏங்குதலை, கலாச்சார மீறலை ”வாங்கு படமும் விமர்சனமும்" என்றிவ்வாறு முழுமையாய்த் திறந்து வைத்துள்ளார் பர்வத வர்த்தினி. வாசிப்பின்போது அனைத்துக் கதவுகளையும் சாளரங்களையும் திறந்து வைத்திருப்பதாகவே கருதுகிறோம். திறப்பு எத்தனையிருப்பினும் சூட்சுமத்தின் அர்த்தக் காற்று ஏதேனுமொரு மூலையில் சுருண்டு போய் வெக்கை நிகழ்ந்து விடுகிறது.

நாங்கள் ’மனஓசை இதழ்‘ நடத்திய 1980 களில் ஓவியர் சந்துரு எங்களுடன் பயணித்திருக்கிறார். அந்த அசாதாரண ஓவியர், சமுதாயத்தில் இதுகாறும் அறியப்படாத ஆளுமைகளை சாதாரணர்களுக்கு சிலைவடிவில் அறிமுகப்படுத்துகிற ”குருவனம்” நேர்காணல் நாறும்பூநாதன் என்ற எழுத்து ஓவியரின் அர்த்தச் செறிவுடன் வெளிப்பட்டுள்ள பதிவு. ஒரு நேர்காணலின் வெற்றி அதன் பதிலுரைகளில் மட்டுமில்லை, கேள்விகளின் வைப்பிலும் அடங்கியுள்ளது. எழுதுகோல் ஓவியரும் தூரிகை ஓவியருமிணைந்து வெற்றியைச் சாத்தியப் பௌத்தியுள்ளனர். ”பொருநை நதிக்கரையில்” ஓவியருடன் காணும் நேர்காணல் அந்தக் கலைஞனுக்குள் ரத்தமும் சதையுமான ஒரு மனிதன் இருக்கிறான் என்பதை நிதர்சனப் படுத்தியிருக்கிறது. ”கலைக்கான அங்கீகாரம் எது ”என்ற கேள்விக்கு” இவரின் ஓவியம் எத்தனை ரூபாய்க்கு விற்பனைக்கு போகிறது என்பதை வைத்தா மதிப்பிடுவது? அப்படி என்றால் அது வர்த்தகம் தான்”, என்று அளிக்கிற பதில், நிச்சயம் இந்த முதலாளிய சமுதாயத்தில் ஒரு நிரந்தரப் பிரகடனம்!

குறவன் – குறத்தியாட்டக் கலைஞர்கள் விளாத்திகுளம் கடற்கரை, நரிப்பூர் சுப்பையா, ஒயில் கும்மி வாத்தியார் சென்னப்பன், வீட்டுக்கு வீடு இராமகாதை இசைத்து ’அன்னம் போடுங்க தாயே’ என்று பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்த கரிசல்குளம் மூக்கம்மா, வாய்ப்பாட்டு சண்முகத்தாய் - என கிராமியக் கலைஞர்கள் “கண்டா வரச்சொல்லுங்க” என்ற எஸ்.ஏ.பி.யின் பதிவில் என்னுடன் மீண்டெழுந்து வருகின்றனர். கூத்தாடிகள் என செல்லமாக அழைக்கப்படும் இந்த கிராமியக் கலைஞர்கள் பற்றி எஸ்.ஏ.பி.யின் தேடல் அனுபவங்கள் வளமானவை; அவர்களில் வெளிப்படும் கலைத்திறனை விட கூடுதல் சுவாரசியமானவை அவர்களின் வாழ்வியலும் வாழ்க்கைக் குணாதிசயங்களும்! எஸ்.ஏ.பி அவைகளைக் கவனித்திருப்பார். ”அனுபவங்களின் சட்டி நிறைந்திருக்கிறது; பரிமாற பெரிய அகப்பை எஸ்.ஏ.பி.யின் கையில் இருக்கிறது“. பதிவு இக்கோணத்தில் இன்னும் தொடர வேண்டும்.

உலகமெல்லாம் வீசும் சுதந்திரக் காற்று ஒரு பெண்ணின் சமையலறை சன்னலுக்குள் நுழைவதில்லை என்பதைப் பேசுகிறது ச.பாலமுரளியின் ”சமையலறையில் தெரியும் ஒரு பறவை” படைப்பு: இல்லறம் புகுந்த புதுப்பெண் தன்னுள் முகிழ்த்த இனிய நினைவுகளின் காட்சிகளை கணவன் விட்டுச் சென்ற காமிராவில் பதிவு செய்து, பிறகு அவன் வருகை தொலைபேசியில் உறுதியான வினாடியில் அழித்து விடுகிறாள். புதுப்பெண்ணேயானாலும் எந்தப் பெண்ணும் ஆணுக்கு அடங்கி வாசிக்க மனசால் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறாள்; அவள் உணர்வுகளை பாலமுரளி வெளிப்படுத்தும் ஒவ்வொரு வரியும் கவிதை .

பாலியல் உணர்வுகளை மதித்து அபரிதமாய் அள்ளித் தருகிற சூழல் வாய்த்திருக்கிற சிலரின் பூமியில் - இயல்பாய் எழும் பாலியல் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் அல்லாடும் சாதாரணர்களின் ”நிர்வாணக் குரல்கள்” கதை உதய சங்கரின் மொழியாக்கம். அவரின் லாவகமான மொழியாக்கத்தில் மாண்டே முழுமை கொண்டுவிடுகிறார். மாண்டேயின் இந்தப் படைப்பும், எல்லாக் கதைகளைப் போலவே, சுற்றிச் சுற்றி எப்படிப் பார்த்தாலும், ஒரு அரசியல் விமர்சனக் கதை தான்.

இந்துத்வ பா.ச.கவுக்கு, தென்னாட்டில் அடிமைக் கூடாரத்தை அமைத்து ஊழியம் செய்யும் அதிமுகவை மக்களின் தேர்தல் தீர்ப்பு அம்பலப் படுத்தும் என்று நம்பிக்கை தருகிறார் மதுக்கூர் ராமலிங்கம்.நிறைய அலசல்களுடன் ஆதாரங்களுடன் வெளிப்பட்ட பதிவு.

அன்னையர் நாள், மகளிர் நாள், சுற்றுச்சூழல் நாள் என ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயர் சூட்டி நினைவைப் புதுப்பிப்பது போல, ஏப்ரல் முதல் நாள் ‘முட்டாள்கள் தினம்’ என ஏன் அழைக்கப்பட்டது என விளங்கவில்லை; இதன் நேர்முரணாய், நீண்ட தண்டின் உச்சாணிக் கொண்டையில் பூத்திருக்கும் செவ்வந்திப்பூ, வனம் அனைத்தையும் கர்வமாய்ப் பார்ப்பதுபோல், ஏப்ரல் செம்மலர் பூத்திருக்கிறது. முழு இலக்கிய வனத்தையும் கர்வமாய் ஏறிட்டு நோக்குகிறது இந்த செம்மலர்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?