கி.ரா என்னும் செயல் ஆளுமை

”கரிசல் பகுதியின் தலித் வாழ்க்கை பற்றி எழுத நீங்கள் அதிகம் பிரயாசைப் படவில்லையே?” - கேள்வி.

“எனக்கு அவர்கள் மொழி தெரியாது. ஆகவே அவர்களுடைய வாழ்வை என்னால் விவரிக்க இயலாது. பள்ளர்களில் இரண்டு வகை இருக்கிறார்கள். ஆத்தா பள்ளர் என்று ஒரு இனம்; அஞ்ஞா பள்ளர் என்று ஒரு இனம். இதுவே நமக்குத் தெரியாதில்லையா? இப்ப பசு அம்மான்னு கத்துதுன்னு சொல்றோம்; எருமாடு “ஞ்ஞா” என்றுதான் சொல்லும். இத வச்சு அவங்களுக்குள்ள பிரிவு இருக்கு. அதவொட்டி பழக்க வழக்கங்கள் மாறுது. அவங்க பேச்சு மொழிகள்ள வித்தியாசம் தெரியும். இப்படி அந்த மொழி தெரியாம நா அவங்க வாழ்க்கையை எழுத முடியாது. தலித் வாழ்க்கையை அவங்கதான் எழுதணும்.”

(சண்டே இந்தியன், நேர்காணல், பக்.36, செப்டம்பர் 30, 2012.)

இது கி.ரா அளித்த பதில்.

தெரியாததைத் தெரிந்து கொள்ளல் தான் தேடல். நாம் தேடலில் இருக்கிறோம். தெரியாதன, அறியாதன, அனுபவப்படாதவை பற்றிப் பேசுதல், எழுதுதல் கூடாது என்பது கி.ரா.வின் படைப்பு நேர்மை. தெரியாததைத் தெரிந்து கொள்ளும் மனமிருக்க வேண்டும். அதனால் நேர்காணல் தலைப்பு “வர வரக் கண்டறி மனமே.”

கி.ரா.விடம் கண்டடைந்த மேலான பண்பு தனக்குத் தெரியாததை - தான் அறியாததை, அறியாதது என ஏற்றுக் கொள்ளும் தன்மை: இதுவரை தன் கட்புலணுக்கு வந்தடையாத ஒன்றை - தான் தேடாது அது வந்து சேராது எனத் தெரிந்தும், ’அதான் எனக்குத் தெரியுமே’ என பக்கவாட்டில் பார்வை ஓட்டாத ஒற்றைக்கால் கொக்கு அவரல்ல. இந்த நேர்காணலிலும் “அவங்க மொழி எனக்கு தெரியாது; அவங்க கலாச்சாரத்தை முழுமையாக அறிந்தவன் இல்லையே” என்ற ஆதங்கத்தை, சுய நேர்மையை முன்வைக்கிறார்.

தொடக்க காலம் முதலாய் கி.ரா.விடம் ஒன்றை அவதானித்து வந்துள்ளேன். அவர் ஒரு கற்றறிவுக் களஞ்சியம் அல்ல; ஆனால் அவருடைய அனுபவ அறிவு விசாலமானது; அவைகளைத் தொகுத்துச் சொல்லும் முறை அபாரமானது. முதலில் நாம் தொடங்கவேண்டும். அது ஒரு கேள்வியாக, ஐயமாக, தெளிவுபெறுதலுக்காக இருக்கலாம். ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட்டால் அதிலிருந்து கிளை கிளையாய்ப் பிரித்து உரையாடி, மேலே மேலே போய்க் கொண்டிருப்பார் கி.ரா. ஏதொன்றையும் செல்வதற்குமுன் இதுக்கு முன்னால் நான் இதைச் சொல்லி இருக்கேனா என உறுதிப்படுத்திக் கொள்வார். அவருடைய சொற் சுவாரசியமும் எடுத்துரைப்பும் சொக்குப்பொடி போட்டதுபோல் வெளிப்படும். எடுத்துரைப்பு ஒவ்வொரு தடவையும் வேற வேற வேற வேற ரூபத்தில் வெளிப்படும். எல்லாம் முன்கூட்டியே தெரிந்திருந்த போதும் கி.ரா.விடம் வெளிப்படும் வேறவேற ரூபங்களைக் காணுதற்காக இதன் பொருட்டு "இல்லையே, நான் கேட்டதில்லையே” என்பேன்.

மற்றொரு மேலான குணம் அவரிடம் உண்டு. அவர் ஒரு படைப்பாளி; ஒரு படைப்புக் கலைஞன் படைப்பாக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், அந்த மன ஒருமையைக் குலைக்கும் எதனையும் பொறுக்க மாட்டார்கள். கி.ரா முற்றிலும் வேறான ஒரு ஆளுமை. எழுதுவதை நிறுத்திவிட்டு, தாள், எழுதுகோலை ஒரு புறமாக ஒதுக்கி வைத்துவிட்டு ”வாங்கோ” என்பார். அதன் பொருள் நீங்க சொல்லுங்க என்பதாக இருக்கும். மனுசர்களை விட, எழுத்து அவருக்கு முக்கியமல்ல. அவருடைய பிந்திய 20 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் அவரைக் காண்பதற்கும் உரையாடுவதற்கும் வரும் கூட்டம் ஐந்திலிருந்து பத்து எண்ணத்திற்குக் குறைந்ததில்லை.

“கிராமங்களில் தான் மொழிகள் உயிர்ப்புடன் வாழ்கின்றன” என்று சொன்னார். அதை அருத்தம் திருத்தமாக சாதித்துக் காட்டியுள்ளார். இலக்கியம் என்றால் அப்படித்தான். அவரவா் மொழியில் எழுதப்படவேண்டும்.

வட்டார மொழியும் அதன் வகைதொகையில்லாச் செழுப்பமும் கி.ரா என்னும் பெருமரத்தை கொப்பும்கிளையுமாய் செழிக்கச் செழிக்க வளர்த்தன. தாத்தா சொன்ன கதைகள், சிறுவர் கதைகள், பாடல்கள், சொலவடைகள், சொல்லாடல், விடுகதை என நாட்டர் வழக்காறுகளினுள்ளிருந்து புதிய இலக்கியவகைகளைக் கண்டெடுத்தார். ”கரிசல் வட்டர வழக்குச் சொல்லகராதி” என்ற ஒன்றை 50 ஆண்டுகளின் முன் அவர் கொண்டுவந்த பின்னரே, புதிய புதிய வழக்குச் சொல்லகராதிகள் உருவாகி வரலாயின. இவையெல்லாமும் இன்ன பிறவும் நாட்டாருக்குள் இருந்தவைதாம். அவைகளத் தேடிக்கண்டடைய ஒருவர் தேவையாயிருந்தது.அது அவராக இருந்தார். எல்லாமும் சேர்ந்து அவராகி, பள்ளிக்கூடம் கண்டிராதவரை ’வருகைதரு பேராசிரியர்’ என்ற அறிஞர்களின் கல்விப்புல நாற்காலியில் உட்காரச் செய்தது. புதுவைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் அளித்த ’வருகைதரு பேராசிரியர்’ இருக்கை வட்டார எழுத்துக்குக் கிடைத்த கவுரம்.

கி.ரா கரிசல் எழுத்துக்களுக்கு முன்னோடி என்கிறார்கள். கரிசல் இலக்கியத்தின் தந்தை என்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. அது ஓரளவு உண்மை, முழு உண்மையல்ல அவர் வட்டார அடையாளத்திலிருந்து, அதன் இன வரைவியலிலிருந்து, பண்பாட்டு அடையாளங்களிலிருந்து தொடங்கினார். ஆனால் அந்த மொழி யாருக்கானது? அது தமிழுக்கானதாக இருந்ததல்லவா? மக்கள் தமிழாக வெளிப்பட்டதா இல்லையா! நடப்பு உரைநடையின் உயிர்த் தண்டுவடத்தைக் கண்டறிந்த முன்னோடி அவர். வட்டார மொழியும் அதன் படைப்புக்களும் உலகெலாம் அறியப்பட்டு உச்சத்தில் கொண்டாடப்படுகையில் ஏன் இந்தச் சிறு கூட்டுக்குள்ளே அவரை அடைக்கிறீர்கள் எனக் கேட்கிறேன்.

2

”எழுத்தில் முன்னத்தி ஏர்” என்று அவரை இதுவரை அறிந்திருக்கிறோம். அப்படியே தாளம் பிசகாமல் செப்பி வந்தோம். 2017 செப்டம்பர் 16 – அவரது 95வது பிறந்தநாள் முழுநாள் நிகழ்வாக புதுவைப் பல்கலைக் கழக அரங்கத்தில் நாங்கள் முன்னெடுத்தோம். காலை "நிலாமுற்றம்” - கி.ரா.வுடன் வாசகர்கள் உரையாடல். “சிலர் எல்லா வீடுகளுக்கும் போவார்கள்; எல்லா வீடுகளிலும் சாப்பிடுவார்கள்; தங்கள் வீட்டுப் பெண்ணை பிற சாதியினருக்கு மதத்தினருக்கு திருமணம் செய்து தர மறுப்பார்கள். என் பேத்தி ஒரு முஸ்லிமை திருமணம் செய்ய விரும்பினாள். இந்து முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசுகிற போது என் வீட்டில் நிஜமாக ஒரு திருமணம் நடக்கவிருக்கிறது. துணிவாக ஏதாவது செய்யவேண்டும். இதை தியாகம் என்று சொல்லமாட்டேன், நம் பிள்ளைகளின் மகிழ்ச்சி தான் முக்கியம்”

மாலையில் இதே அரங்கத்தில் தன் குடும்பத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்தார் கி.ரா. நிலாமுற்றம் உரையாடலில் நிறையவே மனம் திறந்தார் கி.ரா.

”சாதி எப்போது ஒழியும்” – இது கேள்வி.

“தைரியமாகச் சொல்வதை, தைரியமாகச் செய்வதை வரவேற்க வேண்டும்; காலமெல்லாம் ஒதுக்கி வைக்கக் கூடாது. தற்போது நிலைமை மாறியுள்ளது. உயர் குலத்தை விட தாழ்த்தப்பட்டோர் மிகத் திறமையுடன் முன்னேறி வருகிறார்கள்; மிகத் திறமையுடன் தாழ் குலத்தோர் இருந்தால், உயர் குலத்தோர் ஏற்கமாட்டார்கள். அதுக்கு மூலத்தை கண்டடைந்தால் அது சாதி எனத் தெரியும். சாதியை எப்படி ஒழிப்பது? சாதியை உண்டாக்கியவர்கள் அதற்காக வருத்தப்படுவது நடந்தால் தவிர, சாதி ஒழியாது.”

உண்மையை தயக்கமில்லாமல் சொல்கிற அனைவரும் பெரியார்தான்.

சத்தமில்லாமல் செப்டம்பர் 16 மாலை அரங்கத்தில் தன் பேத்தி அம்சாவின் திருமணத்தை நடத்திக் காட்டினார். மணமகள் கி.ரா.வின் இளையமகன் பிரபாகர் - நாச்சியார் இணையரின் மகள் அம்சா. ஒரு கணினிப் பொறியாளர். ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தார். தன் வாழ்வில் தகுந்த துணையாக காதலித்து தேர்வு செய்தது முகமது ஆசிப் என்ற இஸ்லாமிய வாலிபரை.


பேத்தி அம்சா-வுக்கும் தன் வாழ்வின் காதலித்து தேர்வு செய்த அம்ஸா - முகமது ஆசிப் என்னும் சாதி மத அடையாளங்கள் அற்ற திருமணத்தை நடத்தி வைத்ததன் மூலம், உச்சம் தொட்டார் கி.ரா.

கி.ரா எனும் படைப்பாளுமையை செயல் ஆளுமையாக நிரூபித்த நிகழ்ச்சி இது.

உபத்திரவம் தரும் சாதி, மதங்களை உருவாக்கிக் கொண்டோம். அதிலிருந்து விடுபடுவதற்கான முண்டுதல் பலருக்குப் பிடித்தமில்லை. எதிர்த்துப் போராடி அது அழிக்கப்பட வேண்டுமென்பதில் துளியளவும் ஐயமில்லை. முக்கியமாய் இந்தப் புள்ளியில் தேவைப்படுவது “சனநாயக மனம்” என்பதை புரட்சிகரத் திருமணம் மூலம் கி.ரா. நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறார்.

கி.ரா.விடம் தன்னறியாமல் ஒட்டிக்கொண்டது பாரதியின் மொழி மட்டுமல்ல; பாரதியின் மனசும்! ரா.கனகலிஙம் என்ற தாழ்த்தப்பட்ட மகனுக்கு பூணூல் அணிவித்து வேதம் கற்பிக்க முயன்றவன் பாரதி அல்லவா! புதுச்சேரி கனகலிங்கம் பின்னாளில் ”பாரதி என் குருநாதர்” என்னும் நூலை எழுதினார்.

எல்லோரும் பெற்றுக்கொள்ள அன்பும், வழிகாட்டலும், உடல்நலம் பேணவும் உணவு குறித்துமான கருத்துக்களும் சிந்தனைகளும் நிறைந்து நிமிந்து கிடக்கிற கருவூலம் கி.ரா என்பது வாசகருடனான உரையாடலில் தெரிந்தது.

முழுநாள் நிகழ்வாக கிரா 95ஐ அரங்கேற்றி, கி.ரா.வுக்கு நாங்கள் சிறப்பு செய்தோம் என எண்ணியிருந்தோம். சாதி, மதமற்ற திருமணத்தை தன் குடும்பத்தில் நடத்தியதன் வழி கி.ரா நிகழ்வுக்கே சிறப்புச் செய்துவிட்டார். ‘இந்தப் பாதை செல்லுங்கள்’ எனக் கூறி முன் நடந்து அழைத்துச் செல்கிற கி.ரா செயலிலும் முன்னத்தி ஏர்!

- காக்கை சிறகினிலே, ஜூன் 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?