கி.ரா எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்!
புரட்டிப் போடும் புதிய கருத்துக்களுடன் 2017, செப்டம்பா் 16 பிறந்தது. புதுவைப் பல்கலைக் கழகப் பண்பாட்டு அரங்கில் கி.ரா 95 முழுநாள் நிகழ்வு. காலை கி.ரா - வாசகர் உரையாடல்; மாலை வாழ்த்தரங்கம்; மாலைவரையான நிகழ்ச்சி நிரலை நாங்களும் மாலை வாழ்த்தரங்க நிகழ்வினை வழக்குரைஞர் கே.எஸ்.ராதகிருஷ்ணன் அவர்களும் ஏற்பாடு செய்து, முன்னின்று நடத்தினோம்.
பகல், மாலை இருநிகழ்வுகளிலும் ஏற்புரை - கி.ரா தொடர்ந்து புதுமைகள் வழங்கிக் கொண்டிருந்தார். எட்டயபுரத்தின் கவித்துவம், இடைசெவல் உரைநடைக்குக் கடத்தப்பட்டிருந்தது. எந்த மக்களின் மண்ணிலிருந்து மொழி வடிவங்களைப் பாரதி எடுத்தானோ, அதே மண்ணிலிருந்து உரைநடையை கி.ரா.வும் அள்ளி லாவகமாய்க் கையளித்தார்.
நாட்டார் வரலாற்றுத் தொல்லியல் பண்பாட்டுக் கலைக்களஞ்சிய அகராதி எனப் பாராட்டப்படும் கரிசல்வட்டார வழக்குச் சொல்லகராதி. கி.ரா.வின் தொய்வுபடா முயற்சிக்குச் சான்று. இந்த 98-லும் விடாமுயற்சியாய் புதுப்புதுச் சொற்கள், சொல்லாடல், சொலவம், வரலாற்றுத் தரவுகள், நம்பிக்கைகள், வழக்காறுகள் என குறித்துவைத்துக் கோர்த்துக் கொண்டு வந்தார். நான் புதுவைவாசியாய் வாழ்ந்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒவ்வொருமுறை போகிறபோதும், புதுபுதுச் சொற்களை அகராதியில் கோர்த்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். உரையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர் கி.ரா. புதிய சொற்கள் விழுந்தால், என்னிடம் ’அதை எழுதிக்கோங்க’ என்று அகராதியை நீட்டுவார். புதியன அகர வரிசையில் சிவப்பு மையால் எழுதி நிலைநிறுத்தப்படும்.
எட்டயபுரத்தானின் புரட்சிக் கருத்துக்கள் பாய்ச்சலாகி முன்னகர்த்தியது போல், புதுவையில் கி.ரா கால் பதித்த காலமுதல் அதிர்வை விளைவித்து வந்தது இடைசெவல்காரரின் பேச்சு! அன்றைக்கும் அதே அதிர்வு!
கி.ரா.விடம் தன்னுணர்வாக ஒட்டிக் கொண்டது பாரதியின் மொழி மட்டுமல்ல, பாரதியின் மனசும்! ரா.கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட மகனுக்கு பூநூல் அணிவித்து வேதம் கற்பிக்க முயன்றவன் பாரதி இல்லையா? புதுச்சேரிக்காரரான கனகலிங்கம் பின்னாளில் பாரதி என் குருநாதர் என்னும் நூலை எழுதினார்.
கி.ரா 95 முழுநாள் அரங்கில் அவர் தன் முழுரூபம் காட்டினார்.
மணமகள் அம்ஸாலி மணமகன் முகமது ஆஸிப். சற்றேனும் தடுமாற்றமிலாமல் செப்டம்பா் 16 மாலை வாழ்த்தரங்கத்தில், தன் பேத்தி அம்ஸாவின் திருமண வரவேற்பை நடத்திக் காட்டினார் கி.ரா.
கி.ரா.வின் இளைய மகன் பிரபாகர்லி நாச்சியார் இணையரின் மகள் அம்ஸா. ஒரு கணிணிப் பொறியாளர். ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த அம்ஸா, வாழ்வின் தகுந்த துணையாகக் காதலித் துத் தேர்வு செய்தது முகமது ஆசிப் என்ற இஸ்லாமியரை.
காலை நிலாமுற்றம் தலைப்பில் வாசகர்களுடன் உரையாடிய வேளையில், தன் குடும்பத்தில் மாலையில் ஒரு புரட்சிகரத் திருமணம் நடைபெற உள்ளதாக கி.ரா.வின் முதல் அறிவிப்பு.
சிலர் எல்லா வீடுகளுக்கும் போவார்கள். எல்லா வீடுகளிலும் சாப்பிடுவார்கள்.தங்கள் வீட்டுப் பெண்ணை இதர சாதியினருக்கு திருமணம் செய்து தர மறுப்பார்கள். என் பேத்தி ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்ய விரும்பினாள். இந்து முஸ்லீம் ஒற்றுமை பற்றிப் பேசுகிற போது என் வீட்டில் நிஜமாக ஒரு திருமணம் நடக்கவிருக்கிறது. துணிவாக ஏதாவது செய்ய வேண்டும். இதைத் தியாகம் என்று சொல்ல மாட்டேன். நம் பிள்ளைகளின் மகிழ்ச்சிதான் முக்கியம் கி.ரா மனம் திறந்தார்.
சாதி எப்போது ஒழியும்?
தைரியமாகச் சொல்வதை, தைரியமாகச் செய்வதை வரவேற்கவேண்டும். தாழ்த்தப் பட்டோரை காலமெல்லாம் ஒதுக்கி வைக்கக் கூடாது. தற்போது நிலைமை மாறியுள்ளது.உயர்குலத்தோரைவிட தாழ்குலத்தோர் மிகத்திறமையுடன் முன்னேறி வருகிறார்கள். மிகத்திறமையுடன் தாழ்குலத்தோர் இருந்தால் உயர்குலத்தோர் ஏற்கமாட்டார்கள். சாதியை எப்படி ஒழிப்பது? சாதியை உண்டாக்கியவர்களே அதற்காக வருத்தப்படுவது நடந்தால் தவிர சாதி ஒழியாது.
அதிரடியாக ஒரு விதையைப் போட்டு விட்டு ரொம்ப சாதாரணமாய் கடந்து போனார் கி.ரா.
இங்கு சுயசாதியை துறப்பதைச் செயலிலும் நிறைவேற்றினார். எவரொருவர் சுயசாதியை முதலில் சிந்தனையால் துறக்கிறாரோ, அக்கணமே அவர் சாதியற்றவர்ர்கிரார். வருத்தமுற்று, சொல்லல் செயலால் சாதி மத அடையாளத்தைத் துறக்கிற அவ்வேளை அத்தருணத்தில் அவர் மனிதனாகிறார்.
017, செப்டெம்பர் 16- மாலை, மூத்த தோழர் நல்லகண்னு, பழ.நெடுமாறன், நீதியரசர் ரா.மகாதேவன் போன்றோர் இருந்த மேடையில் கி.ரா இணையர், கே.எஸ்.ஆர் முன்னிற்க திரைக் கலைஞர் சிவகுமார் புரட்சிகரத் திருமணத்தை நிகழ்த்தி வைத்தார்.
கி.ரா. ஒரு புரட்சிகரத் திருமணத்தை நிகழ்த்தியதன் வழி, எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்தின் மற்ற பகுதியினருக்கும் செயல்களின் வழிகாட்டியாக ஆகிவிட்டார். சாதி மதங்களுக்காக மண்டையை உடைத்துக் கொண்டு சண்டைக்கோழியாய் எகிறித் தாக்கிடத் துடித்துக் கொண்டிருக்கிற இருண்டகாலத்தில் இந்தச் செயல் செய்ய தனீத் துணிவு வேண்டும்.
எழுத்துக்களின் முன்னத்தி ஏர் மட்டுமல்ல, இந்தப் பாதையில் செல்லுங்கள் எனச் சொல்லி நடக்கிற செயல்களின் முன்னத்தி ஏராகவும் ஆகியிருக்கிறார் இந்த எழுத்துப் பெரியார். இவர் செயல்களின் பெரியார்.
கவிதைக்குப் பாரதி.
உரைநடைக்கு கி.ரா.
கரிசல் இலக்கிய வட்டார அகராதி முதலாக சொலவம், வழக்காறுகள் என வண்டிவண்டியாய்க் கொட்டிய கைகள், இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் என எண்ணியிருந்தோம்.
எவரும் நூறு வயது வாழுதல் அபூர்வம்: எழுத்தாளர்கள் வாழ்வது இன்னும் அபூர்வம். கி.ரா என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி, தீராநதியாய் இன்றும் ஓடிக் கொண்டிருந்தது; இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய்த் தமிழ், தமிழ்ச்சமூகம் என வற்றாது பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16-இல், தன் 99–ஆவது வயதில் கி.ராஜநாராயணன் அடியெடுத்து வைப்பார் எனக் காத்திருந்தோம்.
வட்டார மொழியும்அதன் வகை தொகையில்லாச் செழுப்பமும் கி.ரா என்னும் பெருமரத்தை கொப்பும்கிளையுமாய் செழிக்கச் செழிக்க வளர்த்தன. தாத்தா சொன்ன கதைகள், சிறுவர் கதைகள், பாடல்கள், சொலவடைகள், சொல்லாடல், விடுகதை என நாட்டர் வழக்காறுகளினுள்ளிருந்து புதிய இலக்கியவகைகளைக் கண்டெடுத்தார். இவையெல்லாமும் இன்ன பிறவனவும் நாட்டாருக்குள் இருந்தவைதாம்.
அவைகளத் தேடிக்கண்டடைய ஒருவர் தேவையாயிருந்தது.அது அவராக இருந்தார். எல்லாமும் சேர்ந்து அவராகி, பள்ளிக்கூடம் கண்டிராதவரை ’வருகைதரு பேராசிரியர்’ என்ற படித்தவர்கள் அமரும் கல்விப்புல நாற்காலியில் உட்காரச் செய்தது. புதுவை பல்கலைக் கழகம் அளித்த வருகைதரு பேராசிரியர் வட்டார எழுத்துக்குக் கிடைத்த கவுரம். கி.ரா கரிசல் எழுத்துக்களுக்கு முன்னோடி என்கிறார்கள் பலர். கரைசல் இலக்கியத் தந்தை என்கிறார்கள். அதை நான் ஏற்கவில்லை. அது ஓரளவு உண்மை, முழு உண்மையல்ல. உரைநடைத் தமிழுக்கு முன்னத்தி ஏர் பிடித்தவர் என்பது உண்மை கி.ரா என்ற சகாப்தம், தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. இனி சகாப்தத்தின் நாட்கள் நடக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக