கி.ரா நினைவேந்தல்



1. சின்ன மாசம்

உள்ளே அம்மா நோய்வாய்ப் படுக்கை. அம்மாவைக் காட்டி, “அவங்க ஒன்னு சொல்லுவாங்க, அது ஒங்களுக்குச் சொல்லீருக்கனா, இதுக்கு முன்னால?” என்று கேட்டார் கி.ரா.

சொல்ல வருகிற ஒவ்வொன்றையும் இப்படி உறுதிப்படுத்திக் கொள்வது கி.ரா இயல்பு. ஒரே விசயத்தை ஒவ்வொருமுறை சொல்கிறபோதும் கி.ரா வேற வேற ரூபமெடுப்பார்; புதிய மொழி, புதிய விவரிப்பு, புதிய பாவனை - அத்தனையும் கைகூடி, புதுப்புது அர்த்தங்கள் பொங்கி வழியும். ஒரு செய்தி, ஒரு விசயம் புதிதாக வந்தடைகிற போது, பலருக்கும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிற துடிப்பு உண்டாகும். யாருக்குச் சொன்னோம், யாரை விட்டோம் என்று ஞாபகம் இருக்காது. அதற்காக ’நான் இதைச் சொல்லி இருக்கனா” என்று உறுதிப்படுத்திக் கொள்வார் . ”தெரியாதே” என்று தலையசைத்தேன். பல முறை கேட்டிருந்தாலும் தெரியாது என்று சொல்லுதல் என் இயல்பு. ஏனெனில் பரிமாறும் ஒவ்வொரு தடவையும் அவர் கை அகப்பை புதுசுபுதுசாய் இருக்கும்.

“சின்ன மாசம்னு’ பெண்கள் கணக்கேட்டில் உண்டு. ” என்கிறார் கி.ரா.

கல்யாணம் நடக்கிறது. ஆணும் பெண்ணும் இணைகிற நாளையும் கணக்குப் பண்ணிக் கோர்த்து முகூர்த்த நாள் குறிப்பார்கள். திருமண நாளிலோ, அதற்கு ஓரிரு நாள் முன்னமோ மாதவிடாய் இருக்கக்கூடாது. முன்னும் பின்னுமான நாட்களில் உடல் பலவீனமாக இருக்கும். எத்தனை பொருத்தமிருந்தாலும், உடல் பொருத்தம் மட்டும் அந்நாட்களில் கூடாது.

“ஐயோ, அவளுக்கு அது சின்னமாசமாச்சே” என்பார்களாம் பெண்கள். முதல் வாரம், இரண்டாவது வாரம் தூரமாகிவிட்டால், மீதி 15 நாட்கள்தாம். பெண்கள் கணக்கில் அது சின்னமாசம்.


2. தப்பிப் பிறந்த பிள்ளளை 

கணவதியம்மாவின் வயிற்றில் இரண்டாவது உயிர் வளர்ந்தது. அந்த இன்னொரு உயிரைச் சுட்டிக்காட்டி கி.ரா.வுக்கும் கணவதி அம்மாவுக்கும் இடையில் சில நாட்களாக ஒரு தர்க்கம் நிகழ்ந்தது.

“இப்பத்தான் ஒன்னு பிறந்து, மடிமேல தவழுது. இன்னொன்னு வேணுமா?”

கி.ரா. சொல்லிக் கொண்டிருந்தார்.

“ரெண்டு மாசம்தான ஆகுது, கலைச்சிரலாம்.”

கணவதியம்மா ஒப்பவில்லை. வழக்கமான ஒரு புஞ்சிரிப்பு.

“இருந்தா இருந்திட்டுப் போகட்டுமே.”

“இரண்டாவதும் ஆணா பிறந்திச்சின்னா?”

“ஏம் பொண்ணா இருக்கட்டுமே.”

கர்ப்பத்திலேயே ஆண், பெண் வேற்றுமை கண்டறியும் அறிவியல் வித்தைகள் விளைந்திராத காலம். இப்போது ஒரு ‘ஸ்கேனில்’ எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறது. கருத்தரிப்பதா, வேண்டாமா என்ற ஊசலாட்டத்துக்கு இடமில்லாமல் முடிவுசெய்கிறார்கள்.

பிள்ளைப்பேறு, மகளிர்நலம், குழந்தை வளர்ப்பு என்று சிந்திப்புக் கொண்ட கி.ரா இந்தக் கருவைக் கலைத்து விடலாம் என்றார். கணவதியம்மா, “இல்ல, இருக்கட்டும்” என்றார். ‘அப்படி ஒரு பிடிசாதனையாய் இருந்தாங்க’ என்றார் கி.ரா.

அப்படிப் பிடிவாதமாய் இருந்து பெற்ற பிள்ளை பிரபாகர். கணவதிஅம்மா சட்டடியாய் படுத்துவிட்ட போது, “தப்பிப் பிறந்த அந்தப் பிள்ளை, இன்னைக்கு அம்மாவுக்குக் கஞ்சி காய்ச்சிப் புகட்டி, மருந்து கொடுத்து, தூக்கச் செய்ய, துடைக்க வைக்க, துணிமாற்ற என அசூயைப்படாமல் எல்லா வேலையும் செய்கிறது”.

உள்ளே அறையில் படுத்திருந்த அம்மாவைக் காட்டி என்னிடம் சொன்னார் கி.ரா. அவர் தெரிவித்த போது பிரபாகர் என்ற பிரபி சமையல் செய்துகொண்டிருந்தார். சமையலறையிலிருந்து வேகமாய் வெளியே வந்து, ”இன்னும் சத்தமாச் சொல்லுங்க” என்றார்.

படித்தோர், பதவியிலிருப்போர், மேநிலையாக்கம் கொண்டோர் அசூயை கொள்வார்கள். தாதி வைத்துக் கவனித்துக் கொண்டு, அவர்கள் தூரம் பேணுவார்கள்.

“பெற்ற தாய்க்குத் தான செய்கிறோம்” என்றார் படிக்காத பிரபி.

அந்தக் குழந்தை அம்மாவுக்கு கஞ்சி புகட்டியது; கஞ்சி புகட்டு முன் பல் துலக்கிவிட்டது; வாயில், உதடுகளில் வழிந்த பருக்கையை துடைத்தது; குப்புற, மல்லாக்கப் படுக்க செய்து உடம்பு கழுவிவிட்டது. பிள்ளைக்குத் தாய் செய்வது இல்லையா, இந்தப் படிக்காத ஊர் சுற்றிப் பிள்ளை ஒரு தாயாகி அவ்வளவு கடமைகளையும் நிறைவேற்றியது.

காட்சிகளைக் காணுகையில் என் கண்ணிமைகள் மழை ஏந்தின.


3. அடங்காத பிள்ளளை

"அடங்காத பிள்ளை பெத்தா
உறங்காமத்தான் இருக்கனும்”

என்பது மக்கள் தமிழ்.

அப்போது நான் சென்னையில் குடியிருப்பு. 1989 வாக்கில் கி.ரா.விடமிருந்து எனக்கு ஒரு கால்க் காசு கடுதாசி (அஞ்சலட்டை) வந்தது; ”பிரபி ஓடிப் போய்விட்டான், பட்சி பறந்துவிட்டது”

படிப்பு ஏறாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த செல்லப்பிள்ளை, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப் போனது. ஒன்றரை மாதம் கழித்து தூத்துக்குடியில் சர்வே அலுவலகத்தில் பிரபி பணிபுரிவதாக செய்தி வந்தது. ”தனக்குத்தான் பள்ளிக்கூடம் லவிக்கல. பிள்ளைகளாவது படிச்சு பெரிய உத்தியோகத்துக்குப் போகணும்” என்று கி.ராவுக்குப் பேராசை. மூத்தவர் திவாகர் முழுசாக பெரிய பத்து கூட தாண்டவில்லை. போலீஸ் கான்ஸ்டபிள் வேலை கிடைத்து பணியில் சேர்ந்து விட்டார்.

வீட்டைவிட்டு ஓடிப்போய் ஒருநாள் திரும்பி வந்தார் பிரபி. வெளியில் போய்த் திரும்பிய கி.ரா ”துரை வந்துட்டாராக்கும்” என்று அம்மாவைப் பார்த்துச் சொல்லிவிட்டு சடக்கென்று உள்ளே போனார். ஒரு வருசம் மகனுடன் பேச்சு இல்லை.


4. வாழ்நாள் வேதனை

உயர்த்தப்பட்ட அரசுக் குடியிருப்பு வாடகை ரொம்ப அதிகம் என்று ஒவ்வொருவராய்க் காலி செய்து கொண்டு போனார்கள்.

அரசுப் பணியாளர் மட்டுமல்ல, வாடகை வீட்டுக்காரர் எவராக இருந்தாலும் இதே நினைப்பு ஓடுவது இயற்கை. இதுவரை கொட்டிக் கொடுத்து வந்த வாடகையைக் கோர்த்துக் கோர்த்துக் கணக்குப் போட்டால், அதில் ஒரு கோபுரத்தை விடப் பெரிய வீடாகக் கட்டியிருக்கலாமே என்று தோன்றும்.

கடைசியில் ஓ.4 குடியிருப்பில் ஒவ்வொருவராய் காலிசெய்து போனபின் “கி.ரா.தம்பதியினர் தவிர எவருமே இல்லை.

“தனியா இருக்கீங்க, பயமா இல்லையா” கி.ரா.வைப் பயமுறுத்தி இருக்கிறார்கள் நண்பர்கள்.

“வயசாளிக. ரெண்டு ‘மொங்கு மொங்கி’ இருக்கிறதை எடுத்துட்டுப் போனா என்ன செய்வீங்க?”

“எடுத்துட்டுப் போக என்னிடம் என்ன இருக்கு? புத்தகங்கள் தவிர!” கிராவின் பதில். எந்த எழுதுகோல் ஏந்தியும் தருகிற பதில்தான்.

அப்படியே நகர்த்திக் கொண்டே வந்தார்கள். முதியவர்கள் மட்டுமே ஜீவனம் நடத்திய வீட்டின் மொட்டைமாடியில் சில இரவுகளில் நடமாட்டச் சத்தம் கேட்கும்; பகலில் போய்ப் பார்க்கிறபோது ‘தண்ணி அடித்து விட்டுப்’ போன தடயங்கள் தென்படுமாம். பிறகு ஆளில்லா வீடுகளில் கள்ளச்சாவி போட்டுத் ‘தண்ணி சாப்பிட்டுப்’ படுத்துத் தூங்கி எழுந்திருந்து காலையில் போனார்களாம். தனக்குத் தெரிந்தவர்கள் மூலமாகப் போலீசிடம் கொண்டு போயிருக்கிறார் கி.ரா. காவல் ஆய்வாளர் விசாரித்துத் திரும்புகிறபோது சொன்னாராம்

“எதுக்கு வம்பு, வேற வீடு கேட்டு மாறிப் போயிருங்க”

கீழே இரும்பு கேட் பூட்டுப் போட்டுச் சாவி அம்மா கையில் இருந்தது. கேட்டில் பால் பாக்கெட் போட ஒரு பை தொங்கியவாறு இருக்கும். ஒரு நாள் பால் பாக்கெட் திருடு போயிருந்தது. ஒரு நாள் ரெண்டு நாள் என்றால் பரவாயில்லை, மூன்றாவது நாளும் திருடு போனது. பால் பாக்கெட் போடுகிறவர் போட்டாச்சு என்பதாக அழைப்பு மணியை அழுத்தி விட்டுப் போவார். அன்று களவாணியை எப்படியும் பிடித்துத் தீருவது என்று காத்திருந்தார் அம்மா. பால் போடுகிறவர் குடியிருப்பை விட்டு அகன்றது தெரிந்த பிறகுதான் களவாணி உள்ளே வருவான் போல. மேலே படிக்கட்டில் மறைவாய் உட்கார்ந்து பார்த்துவிட்டுக் கொஞ்ச நேரத்தில் கீழே இறங்கி இருக்கிறார் அம்மா.

அப்போதுதான் அது நடந்தது.

அவர் நின்றது முந்திய படி. அதற்குக் கீழே இன்னொரு படி இருக்கிறது என்று தெரியாமல், கால் ஊன்றி சறுக்கி விழுந்து விடுகிறார். கீழே விழும் சத்தம் கேட்டு எழுந்து வெளியில் வருகிறார் கி.ரா. அதற்குள் அம்மா எழுந்து பால் பாக்கெட்டுகளுடன் மேலே வந்து விட்டார். கீழே விழுந்து எழுந்த வெறிச்சியில் அடிபட்டது தெரியவில்லை.

கி.ரா.கேட்டார் “அடி பட்டுருச்சா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல”

“வீக்கம், வலி இருக்கா?”

“எதுவும் இல்லை”.

நேரம் செல்ல செல்ல வீக்கம், வலி எல்லாம் வந்தது. ‘சுருக் சுருக்’கென்று பின் இடுப்பில் வேதனை. வீட்டுக்கு வந்து போகிறவர்களிடம் கி.ரா. “இப்படி இப்படி” யென்று தெரிவிக்க, அவர்கள் சொன்னது ஆளாளுக்கு ஒரு யோசனை. தைலம் தடவுதல், ஒத்தடம் கொடுப்பது என்று வைத்தியம். வலி தாங்க முடியாமல் பக்கத்துக் குடியிருப்பிலிருந்த மகேஷ் என்ற அம்மா உதவியுடன் கதிர்காமம் மருத்துவமனையில் அம்மா சேர்க்கப்பட்டார். எலும்பு மருத்துவ வல்லுநர் சொன்னார் “கீழே விழுந்ததும் உடனே சேர்த்திருக்க வேண்டும். தண்டுவடம் கீழே இணைப்பு மூட்டில் அடிபட்டு விரிசல் ஏற்பட்டிருக்கிறது. உடனே வந்திருந்தால் ஒரு கட்டுப் போட்டு இணைத்திருப்போம். வேற வேற வைத்தியம் பார்த்துக் கீறல் இணைக்க முடியாத அளவுக்கு விலகிப் போய் விட்டது”

‘இடுப்பு மூட்டு முறிவு’ என்ற கண்டத்திலிருந்து அம்மாவால் கடந்து வர முடியாமல் போனது. ‘கியூ’ புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. 13- ஆம் எண் வீட்டுக்கு மாறிவந்தார்கள்.

அம்மா மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் வீட்டு வேலைகள் முன்னைப் போல் செய்ய இயலவில்லை; எட்டு ஆள் திடம் கொண்ட அம்மா, இடுப்பெலும்பு அடியால் சுருங்கிப் போனார்.

முதல்நாள் மாலை மருத்துவ மனையில் பார்த்தபோது, அம்மா என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். எதற்கும் அஞ்சாத கி.ரா சற்றுக் கலங்கிப் போயிருந்தார். அப்போது அம்மா சொன்னது: “அய்யா, ரொம்ப பயந்து போய்ட்டார். அவரைப் பாத்துக்கோங்க. பயப்படவேண்டாம்னு தேத்துங்க.”

அம்மா சொன்னதை, கி.ரா.விடம் பின்னாளில் ஒருமுறை பகிர்ந்து கொண்டேன்.

“ அப்படிச் சொன்னாங்களா?” என்றார் கி.ரா.

”அப்ப நீங்க மருத்துவ மனையில இல்ல, வீட்டில இருந்தீங்க”

“ இடிவிழுந்தான் கூத்தை இருந்திருந்து பாருங்கிற கதையாயிருச்சி,” என்றார் கைப்பாக.எதற்கும் கலங்காத கி.ரா.வின் கண்களில் கலக்கம் தெரிந்தது.


5. துயரத்தின் வெக்கை

படிக்காத அந்தப் பிள்ளையும் படித்த கான்ஸ்டபிள் பிள்ள திவாகரும், திவாகர் அப்போது பண் ஓய்வு பெற்று புதுவைக்கு குடிபெயர்வாகியிருந்தார், தாய்க்குச் செய்தது போல தந்தைக்கும் இறுதிக்காலத்தில் செய்தனர். கோபதாபம், சின்னச் சின்னப் புலம்பல், சலம்பல் பிள்ளைகள் மீது கி.ரா.வுக்கு உண்டானாலும், அத்தனைக்கும் உருண்டு புரண்டு சமாளிப்பார்கள். சமையல் செய்து சாப்பாடு கொடுத்து வீட்டோடு வாழ்ந்து கவனித்தார் பிரபி.

கி.ரா.வுக்குத் தெளிவாகத் தெரிகிறது அது உயிர் பிரிகின்ற நேரம். பிரபியை அனைத்து தலையைத் தடவிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் ”நீ இங்கேயே இரு. என்னை விட்டுப் போகாதே” என சொல்லாமல் சொல்கின்றன கைகளும் அணைப்பும் பார்வையும். அண்ணனை வரச்சொல் என்று சைகை செய்கிறார். ’டாக்டரைக் கூட்டி வரவா’ என்று கைபேசியில் கேட்கிறார் திவாகர். இது மாதிரி கேட்கிறான் என்று பிரபி சொல்ல, அதெல்லாம் வேண்டாம் என்று ஒரு தலையசைப்பு. அண்ணன் வந்து சேருகிற போது முடிவுக் கட்டம்; கையும் காலும் இழுக்கிறது. உயிர் வெளியே போவதற்கு இரண்டு கையும் உளத்தல். பின்னர் கால் உதைவிடுகிற மாதிரி இழுத்து ஒரு உளத்தல். தலை தொங்கி பிரபியின் தோள்களில் சாய்கிறார்.

”ஒரு மடக்கு தண்ணி கொடு” அண்ணனிடம் சொல்கிறார் பிரபி. ஒரு மடக்குத்தான்; தொண்டைக் குழியில் தண்ணீர் என்ற திரவப்பொருள் இறங்க, சுவாசக் குழாய் வழி காற்று ரூபமான உயிர் வெளியேறி நடந்தது.

- கணையாழி - ஜூன் 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ