சின்னக் கொரோனா, பெரிய கொரோனா!

முதல் அலை

தமிழரை தீக்காயப் படுத்திய ஒரு செய்தி 28-3-2021-ல் வெளியானது. வெளிநாடுகளின் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்திய மொழிகளுக்கான இருக்கைகள் அறுபத்தொன்பது; இந்திக்கு இருபத்தைந்துக்கு மேற்பட்ட இருக்கைகள்; சமஸ்கிருதத்துக்கு இந்திக்கு அடுத்து அதிக இருக்கைகள்:

தமிழுக்கு - போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில் 47 ஆண்டுகளாக இயங்கிவருகிற தமிழ் இருக்கை ஒன்று: கிராக்கூப் நகரின் எலோனியன் பல்கலைக்கழகத்தில் மற்றொரு தமிழ் இருக்கை, ஆக இரண்டே இரண்டு: இந்த இரு இருக்கைகளுக்கும் ஏழு ஆண்டுகளாய்த் தமிழ்ப் பேராசிரியர்கள் நியமனமில்லை. தமிழ்ப் பேராசிரியர்களை நியமிக்கும் ஐசிசிஆர் என்று சொல்லப்படும் மத்திய அரசின் கல்வி அமைப்பு, தூங்கி எழுந்து தற்போது பணி நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளாகக் காலியாக வைத்திருக்க என்ன காரணம்? ஒன்றிய அரசின் தமிழ், தமிழருக்கு எதிரான மனநிலை.

முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் இதே காட்சி; இப்போது இந்தி, சம்ஸ்கிருதம் தவிர, பிற மாநில மொழிகளுக்குப் பட்டைநாமம் தீட்டுகிற பா.ச.க ஆட்சி! இரு அகில இந்தியக் கட்சிகளும் தமிழ், தமிழர் வெறுப்பினை உட்கிடக்கையாய்க் கொண்டு இயங்குகிறவை.நேற்றுவரை கோலோச்சிய அடிமைக் கூடாரவாசிகளான அ.தி.மு.க தலைமைமையின் சேவக மனநிலை மற்றொரு காரணி. பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல். அதுவும் வெருகுப் பூனையின் மனம் நோகாமல் பாலைக் காக்கிறார்கள்.

மூன்று சமஸ்கிருத நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களை மத்திய சமஸ்கிருத பல்கலைகழகங்களாக தரம் உயர்த்திடும் மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

பாஜக உறுப்பினர் கணேஷ் சிங் சமஸ்கிருதம் பேசினார், சமஸ்கிருதம் பேசுகிறவர்களுக்கு நீரிழிவு வராது என்றார். ஆதாரம் கேட்டால் அமெரிக்காவில் ஒரு கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது என்றார். அப்படியொரு அதிபுத்திசாலிப் பல்கலைக்கழகம் உலகின் எம்மூலையிருக்கிறது என ஆய்வாளர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர்.

விவாதத்தில் பேசிய அமைச்சர் பிரதாப சந்திர சாரங்கி சமஸ்கிருதத்தில் பேசினார். இந்தியாவில் சமஸ்கிருதம் பேசும் 24 ஆயிரம் பேரில் தானொருவன் என்று கூட்டல் கணக்குக்கு வலுசேர்த்தார். வேடிக்கை, வெட்கமானதும் கூட, ஒரு உறுப்பினர் கூட சமஸ்கிருத மசோதாவில், அந்த மொழியில் கேள்வி எழுப்பவில்லை.

இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் எண்ணிகையில்லாக் கோடி. தமிழ் செம்மொழிக்குத் தெருக்கோடி! தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கிய தொகை மொத்தம் 29 கோடி. அதே மூன்றாண்டுகளில் செத்துப்போன சமஸ்கிருதத்தைச் சாகாத மொழி எனக் காட்ட செலவழித்த தொகை 643 கோடி. ஐந்து மொழிகளுக்கும் ஒதுக்கியதைவிட 22 மடங்கு கூடுதல்.

மட்டுமல்ல, துக்கடா அமைச்சர்கள் முதல் தலைமை அமைச்சர் மோடிவரை இந்தியிலே பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பினால் இந்தியில் பதில் வருகிறது. நாட்டுமக்களுக்கு இந்தியிலேயே உரையாற்றுகிறார் மோடி. அது அவரது தாய்மொழியாம்; பரிதாபம், அவரது தாய்மொழி குஜராத்தி.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், எந்தத் துறையாயினும் இந்தியில் பதில் அளிக்கிறார்கள்.

'இந்தி தெரியாது என்றால், வங்கிக் கடன் கிடையாது' என்று சொல்லும் அளவுக்கு இந்தித் திணிப்பின் வெப்பக் கதிர் வீச்சு அடிக்கிறது. விமான நிலையத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்த்து 'இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?' என்று ஒரு சாதாரணப் பணியாளர் கேட்கும் அளவுக்கு இந்தித் திணிப்பு வெறியாகி விட்டது. மத்திய சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வில் இந்தியில் தனி ஒரு தேர்வாம்.

இந்தித் திணிப்பு வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல; அது பண்பாட்டு கலாச்சாரத் திணிப்பு. பண்பாட்டுப் படையெடுப்புத்தான் மனிதப் படையெடுப்புகளிலேயே ஆபத்தானது என்பதை கோவை தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி தெளிவுபடக் காட்டுகிறது.


இரண்டாம் அலை

நடைபெற்று முடிந்த சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க துணையுடன் கோவை தெற்குத்தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் என்ற பா.ச.க வேட்பாளருக்கு ஆதரவாக இந்தியிலே முழக்கங்கள் எழுப்பப் பட்டன. பேரணியில் சென்றவர்கள் மார்வாடிகள், குஜராத்திகள், மராட்டியர்கள் மற்றும் வடஇந்தியர்! வடமாநிலப் பெண்டிர் அத்தனைப் பேரும் ‘வானதி அக்கா எங்கள் அக்கா”என்று இந்தியில் முழக்கமிட்டனர். மொழி, இன, பண்பாட்டுத் தாக்குதலில் மற்றுமொரு கைபர் கணவாய் ‘கோவையில்’ திறந்துள்ளது.


பல லட்சம் மக்களைக் காவு கொள்ளக் காத்திருக்கிறது மதவாத கொரோனா. 2017 நாடாளுமன்றத் தேர்தலில், ”இஸ்லாமியர்களுக்கு உ.பி.யில் நிறையக் கல்லறைகள் (கபர்ஸ்தான்கள்): இஸ்லாமியர் தங்களுக்கு நிறைய கபர்ஸ்தான்களை உண்டாக்கிக்கொண்டனர். இந்துக்களுக்கு போதுமான கல்லறைகள் இல்லை. பா.ச.க ஆட்சி ஏறியதும் இந்துக்களுக்கு நிறைய மயானங்கள் உண்டுபண்ணப்படும்”

தேர்தல்பரப்புரை செய்தார் மோடி (தகவல் – பூவுலகின் சுந்தர்ராஜன்). அதை உ.பி.யில் நடைமுறை சாட்சியாக்கியிருக்கிறார்கள் மோடியும் யோகி ஆதித்யாவும்.

உயிரைஉறிஞ்சி உடலைச் சக்கையாய் வீசுகிற கோரோனோ முதல்வகை: மனித உளவியலைக் தாக்கி, மக்கள் தொகையை மத ரீதியாகப் பிளவுபடுத்திப் பார்க்கும் சமுதாயத் தொற்று பெரிய கொரோனா. பௌதீக, உடல் ரீதியான கொரோனோவை எதிர்கொள்ள -

“நோய்நாடி நோய்முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி, வாய்ப்பச் செயல்”

என அறிவியல் வழிமுறைகள் பல உள்ளன. ஆனால் எந்தச் சமுதாய அறிவியல் பார்வைக்கும் கட்டுப்படாது, அறிவியல் ஆய்வுகளை முற்றாக ஒதுக்கித்தள்ளி, நம்பிக்கைகள் மீது மட்டும் கட்டப்படுகிறது பெரிய கொரோனா.

பசு மூத்திரம், பசு மாட்டுச் சாணம் ஆகியவைகளை உடம்பில் பூசிக்கொண்டு ’யோகா’ செய்தால் கொரோனா ஓடி ஒழியும் என்கிறது மதவாதம். அதுபோல் கையை மடக்கிப் பெருவிரலை மாத்திரம் லிங்கம் போல் நீட்டி நிறுத்தி லிங்க யோகா செய்தால், அது நுரையீரலுக்குள் நிறையப் பிராணவாயுவை உள்ளிழுக்க அதனால் கரோனா தொற்று போயே போய் விடும்!

பிரஷாந்த் கிஷோர் என்ற தேர்தல்அரசியல் வல்லுநர் மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் தேர்தல் வியூகம் வகுத்துப் பணியாற்றினார். இவரது ”ஐ பேக் அமைப்பு” தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தது. இவ்வாண்டு மே 2-ஆம் நாள் ”ஐபேக்” நிறுவனத்தைக் கலைத்துவிட்டு, அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

“தேர்தல் வியூகராக ஆறு, ஏழு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அந்தச் சமயங்களில் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். மேற்கு வங்கத் தேர்தலில் இருந்ததைப் போன்ற சவால்களை இதுவரை நான் சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட மாநிலம் முழுவதையுமே மதரீதியாக பா.ச.க பிளவுபடுத்திவிட்டது. இதைத் தடுத்து நிறுத்திட வேண்டிய தேர்தல் ஆணையமோ, கைகட்டி வேடிக்கை பார்த்தது. இத்தேர்தலில் பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையம் நடந்துகொண்டது.” என சலிப்பின் உச்சியில் நின்று பேசுகிறார்.

உச்சநீதிமன்றத்தை வளைத்து, ராம ஜென்ம பூமியை மணம் செய்து மகிழ்ச்சிக் கடலில் திளைக்கும் பா.ச.க.வுக்கு, தேர்தல் ஆணையம் பெரிய பிஸ்தா அல்ல. தீர்ப்பைத் தானமிட்ட உச்சமன்ற நீதிபதி, பணி ஓய்வுக்குப் பின் மதிப்புறு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கப்பட்டார். நீதியரசருக்கு இன்பயோகம்!

“எங்களின் பரப்புரையைத் தொடர்ந்து நடத்துவதில் பல சிக்கல்கள் தோன்றின. பிரதமர் நரேந்திர மோடியின் புகழை மட்டும் வைத்துக்கொண்டு அனைத்துத் தேர்தல்களிலும் பா.ஜ.க வெற்றி பெற முடியாது என்பது நிரூபணமாகி விட்டது.”

உச்சமாக மற்றொரு கருத்தைவைத்து அரசியலிலிருந்து விடைபெறுகிறார் பிரசாந்த் கிஷோர். ”நான் அரசியலில் தோல்வியடைந்தவன். எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதை இனிதான் யோசிக்கவேண்டும்.”

பிரசாந்த் கிஷோர் போல கார்ப்பரேட் குழும அரசியல் செய்வோருக்கு, மதவாத அரசியல் தோல்வியைத் தந்திருக்கலாம். சமுதாய உளவியலைச் சரியாக நாடி பிடித்து அரசியல் பண்ணுகிறவர்கள் தோல்வியடையப் போகிறவர்களில்லை; மதவாத அரசியலென்னும் பெரிய கொரோனாவை வீழ்த்தி வெற்றியடையப் போகிறவர்கள் நாம்.


மூன்றாம் அலையும் முற்றுப் புள்ளியும்:

”கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளைத் தாக்கப் போகிறது; கொத்துக் கொத்தாக மடியும் அந்தப் பூக்களை நம் கைகளில் ஏந்தப்போகிறோம்” - எச்சரிக்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். இவர்கள் எடுத்துவைப்பது கொரோனாவுக்கும் பொருந்தும். மழலைகளைக் குறிவைக்கிற புதிய கல்விக் கொள்கைக்கும் பொருந்தும்.

”இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் சிறப்புமிக்க மரபுகள் இக்குழந்தைகளின் பாடத் திட்டத்திலும், கற்பிக்கும் அமைப்பிலும் இணைக்கப்பட வேண்டும். மூளை வளர்ச்சியடையும் பருவத்தில், இவை கற்பிக்கப்படவேண்டும்” - இது ’புதிய கல்விக் கொள்கை’.

ஐயாயிரம் ஆண்டுகள் முன் வேதகாலம் இருந்தது; வேதகாலத்தில் ரிக்கு, யஜூர், சாம, அதர்வன வேத நூல்கள் சேகரிப்பாகின. தலையில் பிறந்த பார்ப்பனன் முதல் பாதத்தில் பிறந்த சூத்திரன்வரை என நால்வர்ணம் போதித்தன; இதையும்தாண்டி வெளியில் பிறந்தவரை ’அவர்ணர்’ என ஒதுக்கின. கீதை பிரகடனம் செய்கிறது, “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்”!

வேதங்கள் பரிந்துரைத்து நடைமுறைப்படுத்திய பிறப்பு வேறுபாட்டை - கீதை போன்ற கொடுநூல்கள் வகுத்துக் கொடுத்த சாதியப் பாகுபாட்டை - ஆரியப் பண்பாட்டுக்குப் பொருத்தமான பாலியல் வேற்றுமையை – பெண்ணடிமைத் தனத்தை – சாதிக்குத் தக்க அறமும் தண்டனையையும் பேசும் சமூகசாரத்தை – வளச்சி அடையும் பருவத்திலுள்ள பிஞ்சு மூளைக்குள் இறக்கச் சொல்கிறது கல்விக் கொள்கை. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

“குடும்பங்களில் உள்ள தாய்தந்தையர் தமது முன்னோடிகள், பெற்றோர்கள் தமக்குக் கற்றுக் கொடுத்த பாரம்பரியப் பண்புகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கத் தவறி விடுகிறார்கள். குடும்பங்கள் இக்கடமையை நிறைவேற்றும் வகையில் உரிய கொள்கைகள் வகுக்கப்படும்.”

யார் இந்தப் பெற்றோர்கள்? குழந்தைக் கல்வி மட்டுமல்ல, குடும்பக் கல்வியும் இந்துத்துவ மயமாக்கப்படும் என்ற மனப் பித்தம்.

“குழந்தையின் இரண்டு வயது முதலே இந்தி கற்பிக்கப்படவேண்டும்; 2 வயது முதல் 8 வயது வரையான குழந்தைகள் மிக வேகமாகக் கற்றுக் கொள்வார்கள். பன்மொழிகளைக் கற்பது அவர்களது அறிவாற்றலை வளரச் செய்யும். அதனால் குழந்தைகள் ஆரம்ப வயதுகளிலேயே மும்மொழிகளைக் கற்கத் தொடங்க வேண்டும்”. (முதலில் இருமொழி; தமிழ்நாடு கொந்தளிப்புக் காளானதும் மும்மொழி என கொள்கை மாற்றப்பட்டது.)

நஞ்சானும் நோஞ்சானுமாய் சீக்காளிகளாய்க் கிடக்கும் குழந்தைகள் இந்தியைக் கற்க வேண்டுமென்பதற்காக இந்தப் புதிய கல்விக் கொள்கையை வகுத்த மேதாவிகளின் அக்கறையில், ஒரு துளியேனும் தமிழருக்குண்டா? உண்டுமாயின், மழலைப் பள்ளியிலிருந்து ஆங்கிலம், ஆங்கில வழிக் கல்விப் பயிற்சியைத் தொடங்க வேண்டுமென அ.தி.மு.க அரசும் கல்வி அமைச்சாராயிருந்த செங்கோட்டையனும் எடுத்த முயற்சி - அதுவும் அரசுப் பள்ளிகளிலேயே செயல்படுத்த முனைந்த கூத்து நடந்திருக்காது.

இந்தி என்னும் ஈட்டியை நெஞ்சில் வீசுகிற வேலையை ஒன்றிய அரசு ஓங்கிச் செய்கிற வேளையில், எல்லாவற்றிலும் ஆங்கிலம் என்று குழந்தை மடியில் நெருப்புக் கட்டும் காரியத்தில் தீவிரம் கொண்ட அ.தி.மு.க அரசு, 2019 ஜூன் முதல் 2381 நடுநிலைப் பள்ளிகளில், அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, ஆங்கில வகுப்புக்களைத் தொடங்கியாயிற்று. 2020-ல் மேலும் மூவாயிரம் - பள்ளிகளில் ஆங்கில மழலையர் வகுப்புக்கள் தொடங்கயிருக்கிறார்கள். வடக்கே இருப்பவன் நம்மை இந்திக்கு அடிமையாக்கப் பார்க்கிறான். இங்கே இருக்கும் தமிழன் நம்மை ஆங்கிலத்துக்கு அடிமையாக்க காரணம் போடுகிறான்.

இந்த மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கு முன், மொழிகள் வழியாக வேகப்படுத்தப்படும் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கப் போராட வேண்டியது நாம் எடுக்கவேண்டிய முடிவு. புதிய கல்விக் கொள்கை - ஒரு ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புத் தான்.

முதல் உலகப்போரின் அக்டோபஸாகக் கவிந்த ”ஸ்பானிஸ் புளூ” என்ற தொற்றுநோய், அதுவரை பிறப்பெடுத்த தொற்றுக்களிளெல்லாம் கொட்டுரமானது என்கிறார்கள். பல லட்சம் பேரைக் காவு கொண்ட அந்நோய் நான்கு ஆண்டுகள் நீடித்தது. அதனினும் கொடூரமான இந்தக் கொரோனா எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் எனக் கண்டறிய முடியவில்லை. ஆயினும் ஒன்று தெளிவு - அந்தக் கொரோனாவை விடப் பல ஆண்டுகள் நீடித்திருக்கப் போகிறது மதவாதப் பெரிய கொரோனா!

கடலின் அடிமடியில் இருப்பதையெல்லாம் பளிச்செனக் காட்டி, உள்வாங்கிய கடல் அலை போல பின்வாங்கி, சீறி எழுந்து குழந்தைகளை, மக்களை தின்று தீர்க்கப் பாய்ந்து வருகிறது மூன்றாம் அலை!

கடந்த ஏழு ஆண்டுகளாய் ஆட்சி அதிகாரத்தின் துணையுடன் கொரோனா காலத்திலும் உச்சமெடுத்துப் பாய்ந்து கொண்டிருக்கிற இந்த மூன்றாம் அலைக்கு முற்றுப்புள்ளி இடும் எழுதுகோல், மக்களின் கரங்களில் இருக்கிறது. மக்கள் கைகளுடன் இணைத்து எழுதுகோல் ஏந்துவோம்.

- சூரியதீபன்

- செம்மலர், ஜூலை 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?