வெற்றுடல் உயிர் திரும்பாது : வேதகால விதை முளைக்காது!


மூன்று பெண் எழுத்தாளர் படைப்புக்கள் டெல்லி பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன; ஒன்று வங்காளம்; மற்றிரண்டும் தமிழ். 

மூன்று ஆங்கில ஆக்கங்களும் ஆங்கிலப் பேராசிரியர்களுக்கும் ஆங்கிலத்துறைக்கும் தெரியாமல் உருவப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட படைப்புக்கள் கலையாக்கம் குன்றி வெளிப்பட்டதாகவோ,  வடிவ நேர்த்தியுடன் அமையவில்லை எனவோ எந்த விமர்சனமும் இல்லை.

அவை வெளிப்படுத்தும் கருத்தியல்தான் முதல் அம்சம். வாசிக்கும் அனைவரின் நெஞ்சத்திலும் கருத்துப் போரை எடுக்கும் என்பதால், சிந்தனையை தூண்டும் என உறுதிப்பட்டதால் நீக்கியுள்ளனர்.

பாமாவின் ‘சங்கதி’ படைப்பு நீக்கப்பட்ட இடத்தில் பண்டித ரமாபாய் என்பவரின் வரலாறு ஈடு செய்யப்பட்டுள்ளது. அவரது முழுப்பெயர் பண்டித ரமாபாய் சரஸ்வதி. அவர் ஒரு உயர் பிராமணக் குடும்பத்தைச் சார்ந்த சமஸ்கிருதப் புலமையாளர். மணமாகி இரண்டு ஆண்டுகளில் கணவன் இறந்ததால், கல்கத்தாவில் இருந்து கைக்குழந்தையான மகளுடன் புறப்பட்டுப் ’புனே’ சென்றார். உயர்சாதி பிராமணப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும் இளவயது விவாகத்தை எதிர்த்தும் "ஆரிய மகிள சபா" - என்ற அமைப்பை உருவாக்குகிறார்.

அவர் லண்டனில் மருத்துவக் கல்வி கற்று இந்தியாவின் முதல் மருத்துவர் ஆகிறார். அவர் வெளியிட்ட நூலின் "உயர்சாதி இந்துப் பெண்கள்",  பிராமணர் போன்ற உயர்சாதிப் பெண்களின் மீதான அடக்குமுறைகள் பற்றி அவர் கரிசனம் வெளிப்படுகையில், பாமாவின் "சங்கதி" தலித் பெண்கள் மீதான சாதிய பாலின ஒடுக்குமுறை குறித்துச் சித்தரிக்கிறது. தலித் மக்களின் விடுதலையைச் பேசும் ஒரு படைப்பு இது. இங்கு ஒரு கணம் யோசியுங்கள். பாமாவின் படைப்பு நீக்கப்பட்டு, அவ்விடத்தில் ராமாபாய் ஏன் கொண்டுவரப்பட்டார் என்பதற்கான சூட்சுமம் புரிகிறதா?

மகேசுவேதாதேவி, பாமா, சுகிர்தராணி போன்றோரின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு நான்கு காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்தனையும் புழுக்கள் நெளியும் சொத்தைகள் என அம்பலப்படுத்தினார் எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன்.

சாதிய, மதவாத சிந்தனைகளை எதிர்த்து வாசிப்பவன் சிந்தனையில் அசைவுகள், சலனத்தை உண்டாக்கும் படைப்புகள் கூடாதாம். சாதிய, மதவாத அடக்குமுறைகளைப் பேசாத சமகால எழுத்து எதனையும் உயிர்ப்புள்ளதாக ஏற்கமுடியாது.

இப்படைப்புகளை நீக்கியமைக்கு தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் கண்டனம் தெரிவித்து உரையாற்றியுள்ளார்.   

“எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் படைப்புக்களை டெல்லிப் பல்கலைக் கழகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதற்கு  கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துக்களை மதவாதக் கண்ணாடி அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லிப் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் ” 

இப்படியொரு தமிழுணர்வும் எழுத்துரிமை பேணும் செயலூக்கமும்  கொண்ட முதலமைச்சருக்கு   பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்  தெரிவிப்போம்.  

- பா.செயப்பிரகாசம் (30 ஆகஸ்ட் 2021)


டெல்லிப் பல்கலைக் கழகம் ஆங்கிலப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கிய சுகிர்தராணியின் கவிதைகள் பார்வைக்கும் பகிர்தலுக்கும் தரப்பட்டுள்ளன.

1. கைம்மாறு

******************

தோலினால் அடி தைக்கப்பட்ட 

கூடையுடன்  அவள் கிளம்புகிறாள்

முனைமழுங்கிய  இரும்புத்தகடும்

சேகரிக்கப்பட்ட  சாம்பலும்

அவள் கைகளில்  கனக்கின்றன

மனிதநெரிசலில் திணறும்

வீடொன்றின் பின்புறம் வந்து நிற்கிறாள்

பார்வையில்படுகிறது

ஆணியில் சுழலும் சதுரத்தகடு

ஒற்றைக்கையால் அதை உயர்த்தியபடி

சாம்பலையள்ளி உள்ளே வீசுகிறாள்

பின்

துளையின் முரட்டுப் பக்கங்களில்

முழங்கை  சிராய்க்க

இட வலமாய்க் கூட்டிக் கூட்டி

கூடையில் சரிக்கிறாள்

நிரம்பிய கூடை தலையில் கனக்க

நெற்றியில் வழியும் மஞ்சள்நீரை

புறங்கையால் வழித்தபடி

வெகு  இயல்பாய்க்  கடந்து போகிறாள்

அவளுக்காக என்னால் முடிந்தது

ஒரு வேளை மலம் கழிக்காமலிருப்பது.


2. என் உடல்

***************

குறுஞ்செடிகள் மண்டிய மலையில்

பெருகுகிறது ஒரு நதி

அதன் கரைகளில் வளைந்து

நீர்ப்பரப்பினைத்  தொட்டோடுகின்றன

பால்வழியும் மரத்தின் கிளைகள்

இஞ்சியின் சுவைகூடிய பழங்கள்

மெல்லியதோல் பிரித்து

விதைகளை வெளித்தள்ளுகின்றன

பாறைகளில் பள்ளம் பறித்தெஞ்சிய நீர்

முனைகளில் வழுக்கி விழுகிறது அருவியாய்

நீர்த்தாரைகளின் அழுத்தத்தில்

குருதிபடர்ந்த வாயை நனைக்கிறது

வேட்டையில் திருப்தியுற்ற புலி

கீழிறங்குகையில்

எரிமலையின் பிளந்த வாயிலிருந்து

தெறிக்கிறது சிவப்புச் சாம்பல்

வானம் நிறமிழக்க

வலஞ்சுழிப் புயல் நிலத்தை அசைக்கிறது

குளிர்ந்த இரவில்

வெம்மை தன்னைக்  கரைத்துக் கொள்கிறது

இறுதியில் இயற்கை

என் உடலாகிக் கிடக்கிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ