சரிவிகிதக் கலப்புணவு - காக்கை சிறகினிலே ஆகஸ்ட் 2021 இதழ் குறித்து ஒரு கடிதம்

’வாயில் வேண்டலும் வாயில் மறுத்தலும்’ என்ற புள்ளியில் தொடங்கும் ”தமிழர் வாழ்வியலில் பரத்தையர்” என்ற சு.ராமசுப்பிரமணியனின் பதிவு ஒரு செறிவான ஆய்வின் முதற்செங்கல். கீழடி, அரிக்கமேடுகளில் அகழாய்வு செய்து ஆதாரங்களை நேரில் காட்ட முடியும். எனினும் தமிழ்மண்ணைத் தோண்டவும் திறப்பாய் இல்லாத இரும்புக் கதவு மூடிய இதயங்கள் - ஒன்றிய ஆட்சித் தலைமையிடம் இதுவரை இருந்தது கண்டோம்; ஆனால் இலக்கிய வரிகளுக்கு இடையிலான அகழாய்வு அவ்வளவு எளிதல்ல; சமகால அறிவுத் தெளிவு இல்லாத அணுகுமுறை யூகங்களுக்கு வழிகோலும் வாய்ப்புக்களுண்டு. இதுவரை எவரும் தொடாத, தொட விரும்பாத ஒரு வாழ்வியல் பண்பாட்டை தொட்டும் தோண்டியும் எடுத்து சிந்திக்கத் தூண்டிய திரு.ராமசுப்பிரமணியன் ஒரு இயற்பியல் பேராசிரியர் என்பது இன்னும் கூடுதலாக எம் போன்றோரை வியப்படையச் செய்கிறது. கட்டுரையின் இறுதியில் அவர் குறிப்பிடுதல் போல இனிமேலாவது தமிழறிஞர்கள் புறமொதுக்கிய இத்தகைய உள்ளடக்கங்களில் உட்புகுந்து முனைவர் பட்ட ஆய்வுகளை களத்தில் இருப்பவர்கள் முயற்சிக்க வேண்டும்; ஆய்வு வழிகாட்டியான ஒரு தமிழ்ப் பேராசிரியருடன் இந்த ஆலோசனையைக் கலந்தேன். ”இல்லை ஐயா, இதுவரை நாங்கள் எவரும் அந்த திசையிலேயே தலை வைத்துப் படுக்கவில்லை. நிச்சயமாக உறுதியாக இனி நாங்கள் எடுத்துச் செய்வோம்” என்றார்.

பழங்குடியின மக்களுக்கான உரிமைகள் எவைஎவை என சட்டங்கள் வழங்கியவற்றைத்தான் குரல் உயர்த்தி செயல்படுத்தப் போரானார் ஸ்டேன் சாமி. போராளி ஸ்டேன் சாமியின் மரணம் மதவாத எதேச்சதிகார அரசு மட்டுமல்ல, பிணை தர மறுத்த நீதிமன்றங்களும் இணைந்து செய்த ஒரு வங்கொலை. பேராசிரியர் கோச்சடையின் ’கூண்டிலும் பாடிய குயில்‘, மொழியாக்கமும், நிழல்வண்ணனின் “நான் தேசத் துரோகியா” என்று கேட்கும் ஸ்டேன் சாமியின் நேர்காணல் ஆக்கமும், காக்கைச் சிறகினிலே காலத்தில் எடுத்த நினைவேந்தல்கள்!. இதழினை வாசித்து, சேலத்தில் வாழும் என் நண்பர் அன்பு கணபதி ”இத்தனை அத்துமீறல்கள் நடந்தும் நான் ஒன்றுமே செய்யாமல் இருந்தோமே” என மனம் நொந்து பேசினார். “நம்முடைய இயலாமையும் மௌனமும் தான் எதேச்சாதிகாரம் பல்கிப் பெருகி ஆட்டம் போடுவதற்கான திறந்தவெளி. மக்கள் எதற்கும் பணிந்து போவார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு மூலதனம்” என்று பதிலிறுக்க வேண்டி நேரிட்டது.

ஜன நேசனின் ”எங்கே எங்கே போகிறோம்”,
விஜய ராவணன ராவணனின் ”அசோகம்” –
ஆகிய கதைகள், ஒரு பண்பட்ட சமுதாயததுக்கு அறிவியல் தொழில்நுட்பம் விளைவிக்கும் விபரீதங்களை மிகச் சிறப்பாய் எடுத்து வைத்து வாசகர்களை ஆற்றுப்படுத்தியுள்ளன.

ஜூலை 1983 இனப் படுகொலையை அங்கயற்கண்ணியின் நேர்காணல் தொகுப்பு நினைவோடை உரையாடலாக வெளிப்பட்டு உலகறியச் செய்துள்ளது. காக்கை ஆசிரியர்கள் இதழியல் தேவையைத் திட்டமிடுதலிலும் செயலாக்குதலிலும் வல்லவர்கள் என சான்றாக்கிய நேர்காணல் தொகுப்பு.

"தமிழால் முடியும், தாய் மொழியில் மருத்துவக் கல்வி“ – சு. நரேந்திரனின் இப்பதிவு தாய் மொழிக் கல்வியை புறக்கணித்து ஆங்கிலத்தைத் தலை மேல் தூக்கி வைத்து ஆடிய அரசுகளுக்கு எடுக்கப்பட்ட பாடம். ”கர்நாடகத்திலிருந்து கற்றுக் கொள்வோம்” – என கட்டம் கட்டி உணர்த்தியிருப்பது அற்புதம். உண்மைகளின் தொகுப்புக்களாக, யதர்த்தமான தர்க்கங்களின் முன்னெடுப்பாக அமைந்து போனதால், நீளமும் ஒரு பொருட்டாயில்லாமல் போகிறது.

ஆறாவயல் பெரியய்யா என்னும் கவி நின்று நிலைத்து பேசப்பட்டிருக்க வேண்டியவர். கவிதைகளில் முதல் பரிசை வென்ற அவர் இதுவரை சிங்கப்பூர் பயணத்தை மேற்கொண்டாரா இல்லையா எனத் தெரியவில்லை என்னும் வேனுமாதவனின் வியப்பு நம்மையும் தொத்திக் கொள்கிறது. ’கையளவு திறமை கொண்டு கடலளவு ஆர்ப்பரிக்கிற‘ கவிதையாளர்களின் நடுவில் ஆறாவயல் பெரியய்யாவின் சமக்கால ஒதுக்கம் எவ்வகையிலும் நியாயப்படுத்தக்கூடியது அல்ல என்பதை மட்டும் அவருக்குச் செய்தியாகத் தெரிவித்துக் கொள்வோம்.

சரிவிகித உணவு போல அமைந்து வெளியான இந்தக் கலவையிலேயே ஒருமுனைப்பட்டு காக்கைச் சிறகினிலே செல்திசை தொடரட்டும், வாழ்த்துக்கள்.

பா.செயப்பிரகாசம்
12 - 08 - 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌