தி பாண்டி லிட் பெஸ்ட், ஆகஸ்ட் 2018 - நிகழ்வுக்கு எழுத்தாளர்கள் எதிர்ப்பு

15 ஆகஸ்ட் 2018

'தி பாண்டி லிட் பெஸ்ட்' நிகழ்வுக்கு எழுத்தாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர் நாராயணசாமி தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று எழுத்தாளர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அலையன்ஸ் பிரான்ஸிஸ் சார்பில் 'தி பாண்டி லிட் பெஸ்ட்' என்ற தலைப்பில் 3 நாட்கள் இலக்கிய விழா வரும் 17-ம் தேதி மாலை புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி திடல் அருகே தொடங்க உள்ளது. இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று தொடங்கி வைக்கின்றார். இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இம்மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 80க்கும் மேற்பட்ட அறிவியல், வரலாறு, கலை, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு நூலாசிரியர்கள் கலந்துகொண்டு தங்களது படைப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர். இதில் பங்கேற்போர் தொடர்பான விவாதம் தற்போது புதுச்சேரியிலும், பிரான்ஸிலும் தொடங்கியுள்ளது.

மாநாட்டில் வலது சாரி சிந்தனையாளர்களைப் பங்கேற்க செய்வதாக குற்றம் சாட்டி போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், சிபிஐ (எம்-எல்), திராவிடர் கழகம் ஆகியவை அறிவித்துள்ளன. இந்நிலையில் எழுத்தாளர்கள் இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எழுத்தாளர்களான கி.ராஜநாராயணன், பா.செயப்பிரகாசம், ரவிக்குமார், மாலதி மைத்ரி உட்பட பலரும் இவ்விழாவை புறக்கணிக்க வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக எழுத்தாளர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ''வகுப்பு வாத சக்திகள் பல்வேறு நிகழ்ச்சி நிரலை புதுச்சேரியில் அரங்கேற்றத் திட்டமிட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாகவே புதுச்சேரியில் இலக்கியத் திருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டிய ஆளுநர் கிரண்பேடியின் ஆதரவு, இந்நிகழ்வில் பங்கேற்கும் வகுப்புவாதிகளுக்கு கிடைத்துள்ளது அதிர்ச்சி தருகிறது.

இந்நிகழ்வுகள் புதுச்சேரி மண் சார்ந்த கலை இலக்கியத்தையோ, தமிழ் கலை இலக்கியத்தையோ பிரதிபலிக்கவில்லை. இந்நிகழ்வு முழுக்க ஆர்எஸ்எஸ், இந்துத்துவா, சங்கப்பரிவாரங்களின் கருத்தியல் பிரச்சாரத்துக்கு தளம் அமைப்பதாகவே உள்ளது. நிகழ்வில் பங்கேற்போர் இந்துத்துவ அமைப்புகளிலும், வலதுசாரி அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயல்படுவோராக இருக்கின்றனர். புதுச்சேரியில் நிலவும் சமூக நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் இந்நிகழ்வு சீர்குலைத்து விடும் என்று அஞ்சுகிறோம். இந்நிகழ்வை தவிர்க்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்து தமிழ் 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?