துரோகிகளின் தேசம்
ஒரு மளிகைக் கடைக்குப் போகிறீர்கள். சாமான்களின் பட்டியல் தருகிறீர்கள். “துவரம் பருப்பு புதுசு வருகிறது. நயம் பருப்பு, வந்ததும் சேர்த்து அனுப்பி வைக்கிறேன்” என்கிறார் கடைக்காரர். சிட்டை போட்டு, வரவு வைக்கிறார். அவருக்கும், உங்களுக்கும் தெரியாத வேறொரு இடத்தில் உங்கள் பெயரும் வரவு வைக்கப்படுகிறது.
பெட்ரோல்ட் பிரெக்டின் நாடகம் அது. கருத்தாக்கம், நாடக வடிவமைப்பு இவைகளால் உடுக்கடிப்பு செய்து முடுக்கி விடப்பட்ட சிந்தனைகளுடன் நெற்றிக் கோடுகள் நெருக்கமாகி நடக்கிறேன். என்னைப் போலவே கனமாய் நாடகத்தால் பாதிப்புற்ற அவரை யாரென்று நான் அறியேன். என்னுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டே நடக்கிறார். எப்போதாவது அந்த நண்பருடன் தொலைபேசியில் பேசுகிறேன். அது கணக்கு வைக்கப்படுகிறது.
ஒருவர் திருமண நிகழ்வுக்குச் செல்கிறார். மணமக்கள் ஒப்பனை முடித்து மணமேடை வரத் தாமதம். அருகிலிருப்பவர்களிடம் “எல்லாத்துக்கும் புஷ் அரசாங்கம்தான் காரணம், குண்டு வச்சுத் தகர்க்கணும்” என்கிறார் கேலியாக. பக்கத்திலும், எதிரிலும் ஹஹ்ஹா சிரிப்பு பீறிடுகிறது. கேலியும் எதிர்ச் சிரிப்புகளும் திருமண மண்டபத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள கருவியில் பதிவாகிறது.
கேலி, சிரிப்பு, மளிகைக் கடைப் பட்டியல், போவது வருவது என அமெரிக்க மக்களின் மொத்த, மக்களது அசைவும் உளவுத் துறைகளின் பேரேட்டில் பதிவாகி விடுகிறது.
“ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு போட்டாலும் எங்கு வைக்கப்பட்டுள்ளார் எனக் கண்டறிந்து கொண்டு வர இயலாதபடி - ஜெனிவா அமைதி ஒப்பந்த விதிகள் எனும் கண்களைக் கட்டி மூடியபடி அல்லது கடாசி எறிந்து விட்டு, உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட பல சிறைகள், சித்திரவதைக் கூடங்களை உலகெங்கும் பல இடங்களில் அமெரிக்கா இயக்குகிறது. இந்த விபரங்களை பிரின்ரோஸ் என்ற செய்தியாளர் புலனாய்வு செய்து வெளியிடுகிறார். அவரும் ரிச்போஸியோ என்ற செய்தியாளரும் இணைந்து செய்திகள் வெளியிட்டதும் அவர்களின் தொலைபேசியும், நடமாட்டமும் உளவுத்துறையால் கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் மீது தேசப்பற்றுச் சட்டத்தின் கீழ் (Patriotic Act) நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என அவர்களுக்கே தெரியவில்லை. “உங்களிருவரின் தொலைபேசிப் பேச்சுக்களும் பதிவாகின்றன. விரைவில் வேறு பெயர்களில் உள்ள தொலைபேசிகளைப் பயன்படுத்துங்கள்” என அரசாங்கத்திலுள்ள அவர்களுக்கு வேண்டிய ஒருவர் ரகசியமாய் எச்சரித்த பிறகே அவர்களுக்குத் தெரிய வருகிறது.
என்.எஸ்.ஏ என்ற தேசிய உளவு நிறுவனம் (National Security Agency) வெளிநாட்டு கண்காணிப்பு சட்டத்தின்படி, நீதிமன்ற ஆணை இல்லாமல் அமெரிக்க மக்களின் தெலைபேசிகளை கண்காணிக்கிறது என 2005 டிசம்பரில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இத்தகைய செய்திகளைச் சேகரித்து விசாரணை செய்து, வெளியிடவே அந்த இதழுக்கு மாதக் கணக்குகள் ஆனது. வெளிநாட்டுக் கண்காணிப்புச் சட்டத்திற்கு என தனியே உருவாக்கப்பட்ட தனி நீதிமன்றம் இவ்வாறு தொலைபேசிப் பதிவு செய்து போடப்பட்ட வழக்குகள் எல்லாவற்றையும் அங்கீகரித்தது. எதையும் சட்டத்திற்குள் வராதது என நீக்கி விடவில்லை. தனி நீதிமன்றமே ஆமாம் சாமியாக மாறி விட்ட போதும் அதிபர் புஷ்ஷின் அதிகார ஆசை கட்டுக் கடங்கவில்லை. யார் மீதும் எப்போதும் நீதிமன்ற ஆணை இன்றியே உளவறியும் ஆணை வழங்கிக் கொண்டிருந்தார்.
வெளிநாட்டுக்குச் செல்லும் தொலைபேசிகள் மட்டுமே ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்றார் அட்டர்னி ஜெனரல் கான்சேல்ஸ். அது சட்டப்பூர்வமானது என்பது அவர் கருத்து.
ஆனால் என்.எஸ்.ஏ அமெரிக்க மக்களையே உளவு பார்க்கிறது என்று பத்திரிகைகள் வெளிப்படுத்தியவுடன் “அல்கொய்தா மற்றும் தீவிரவாதிகள் இங்கே பேசுவதும், இங்கே இருப்பவர்கள் அவர்களுடன் பேசுவதுமாக பேச்சுக்களை கண்காணிக்க நான் ஆணையிட்டிருக்கிறேன். அதுதான் உண்மை” என்றார் புஷ்.
புஷ்ஷும் அதிகாரிகளும் சொன்னதெல்லாம் பொய் என்று யு.எஸ்.எ டுடே (USA today) நாளிதழும் வெளிப்படுத்தி விட்டது. இப்போது புஷ் நிர்வாகம் அந்தப் பத்திரிகைகளின் மேல் சீறி விழுகிறது.
புஷ் அரசாங்கத்தை, நடவடிக்கைகளை விமர்சிக்கிற ஒவ்வொருவரும் தேசத் துரோகியாகிறார். பயங்கரவாதிகளுக்கு சமமாகப் பார்க்கப்படுகிறார். பத்திரிகையாளரும் தேசத் துரோகி, பயங்கரவாதி பட்டியலில் சேர்க்கப்படுகிறார்.
தேசப்பற்றுச் சட்டம் (Patriotic Act) என்பது செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத நிகழ்வுக்குப் பின் கொண்டு வரப்பட்ட புதிய சட்டமாகும். இப்போது தேசப் பற்றுச் சட்டம் அந்த இரு செய்தியாளர்கள் மீது பாய்ந்துள்ளது.
ஒரு செய்தி இதழ் அல்லது செய்தியாளர் தான் புலனாய்வு செய்து பெற்ற செய்திகளின் ஆதார மூலத்தை வெளிப்படுத்த தேவையில்லை என்பது இதழியல் கோட்பாடு. அந்தப் பண்பாட்டை அமெரிக்க உளவுதுறைகள் கேலி செய்கின்றன. ‘எங்கிருந்து பெற்றாய் இச்செய்தியை. மூலத்தைச் சொல்’ என்கிறது அரசும் புலானாய்வு அமைப்பும். முதலில் புலனாய்வு செய்து அம்மாதிரியான செய்திகளைச் சேகரித்தல் கூடாது. அவை தேசபக்திச் செய்திகள். அரசாங்கத்திற்கு குறிப்பாக உளவுத் துறைகளுக்கு மட்டுமே சொந்தமானவை. இரண்டாவது சேகரித்ததை திறப்பாய் வெளியில் தெரிவிக்கக் கூடாது.
ஒவ்வொரு முறையும் அரசின் ரகசியத் தகவல்கள் எனும் குண்டு வெடிக்கிறபோது அதிபர் புஷ்ஷும் துணை அதிபர் செனாவும் ஆளுங்கட்சியான குடியரசு கட்சியினரும் அரண்டு போகிறார்கள்.
“ஒவ்வொரு செய்தி கசிகிற போதும் எதிரிகள் (பயங்கரவாதிகள்) தோற்கடிக்கப்படுவது தள்ளிப் போகிறது” என்கிறார் ஒரு தொலைக்காட்சியில் புஷ்.
புஷ் என்ற ஒரு அதிபர் மட்டுமல்ல, இவருக்கு முந்தி வழிவழியாய் வந்த பல புஷ்களின் உள்ளார்த்தத்தை சரியாகவே கைப்பற்றிக் கொண்டு, செயல்படுகின்றன. சி.ஐ.ஏ (C.I.A), என்.எஸ்.ஏ (National Security Agency), எஃப்.பி.ஐ (Federal Bureau of Investigation) போன்ற உளவுத் துறை நிறுவனங்கள் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் வழி கீழிருக்கும் அமைப்புகள் நடப்பதுண்டு; ஆனால் தான் வழி நடத்த அதிபர்கள் செயல்படுகிறார்கள் என்ற இடத்தை உளவுத்துறை நிறுவனங்கள் அடைந்துவிட்டன.
ஜெயலலிதா அரசுக்கு ஒரு பெருமை உண்டு; ஆட்சியை ஜெயலலிதா நடத்தவில்லை போலீஸ் நடத்தியது என்ற பெருமை அது; வழி நடத்தப்பட்டு செயல் படுபவர்கள், தாமே வழி நடத்துபவர்களாய் அதிகார மயமாகி விடுகிறார்கள். ஆட்சியாளர்கள் அவர்கள் அறியாமல், இந்த நிறுவனங்களின் கட்டுப் பாட்டுக்குள் வந்து விடுகிறார்கள். இப்படி மாறிப் போனதின் வெளிப்பாடு ஒரு கட்டத்தில் அ.தி.மு.க. கட்சியையே போலீஸ் நடத்தியது என்ற நிலையை எட்டிவிட்டது.
ஒவ்வொரு அமெரிக்க அதிபரும், ஆட்சிக்கு வருகையில் அவரது நோக்கம் என்ன? அவரும் அவரைச் சார்ந்தவர்களின் உட்குறிப்பு என்னவாக இருக்கிறது? அமெரிக்க அதிபர்களின் உட்குறிப்பு அமெரிக்க ஆளும் வர்க்கக் குழுக்களின் உட்குறிப்பு என்ற சமாந்தர வாய்ப்பாடாக மாறிவிட்டது. உளவுத் துறை அமைப்புகளும், அதிகார அமைப்புக்களும் ஆளும் வர்க்கக் குழுக்களின் விருப்பத்துக்கு ஏற்ப உலகை மறு பங்கீடு செய்கிற ஆக்கிரமிப்பு யுத்தங்களை உண்டு பண்ணி நடத்துகின்றன. வர்க்கக் குழுக்களின் தூதுவனாக வந்தடைந்த அதிபர் இவை போட்டுக் கொடுக்கும் பாதையில் நடக்கிறார்.
காலைக் கடன் கழிப்பு முதல் இரவுப் படுக்கை வரை ஒவ்வொரு மணித்துளியும், அமெரிக்க மக்கள் வாழ்வு உளவுத்துறையால் விழுங்கப்படுகிறது. கணினி, தொலைபேசி, கிரடிட் கார்டு போன்ற மின்னணுப் பொறிகள் இந்த நடமாட்டங்களை இலகுவாகத் தூக்கி உளவுத் துறைகளின் கையில் கொடுத்து விடுகின்றன.
கையில், பையில் பெட்டியில் கத்தை கத்தையாக அமெரிக்க மக்கள் பணத்தை வைத்துக் கொள்வதில்லை. கைவசமுள்ளது கிரடிட் கார்டு. நீங்கள் எந்தக் கடையில் என்ன பொருள் வாங்குகிறீர்கள்? எந்த உணவுக் கடையில் சாப்பிடுகிறீர்கள்? என்ன நாடகம், இசை, திரைப்படக் கலை நிகழ்ச்சிக்குச் செல்கிறீர்கள்? எந்தக் காரில் பயணம் போகிறீர்கள்? என்பதெல்லாம் கிரடிட் கார்டு அசைவால் தெரிந்து விடுகிறது. ஒருமுறை பெட்ரோல் நிரப்பியதும் 500கி.மீ அடுத்து நீங்கள் இன்னொரு பெட்ரோல் பங்கில் நிறுத்தி நிரப்புகிறீர்கள். பயண முடிவில் அல்லது இடையில் எங்கே தங்குதல் செய்கிறீர்கள். நீங்கள் பயணம் செய்வது சாலை வழியிலா, ஆகாய வழியிலா உங்கள் போக்குவரத்து நடமாட்டச் சரித்திரத்தை கிரடிட் கார்டு பேசி விடுகிறது.
கிரடிட் கார்டு, கணினி, தொலைபேசி, கைபேசி எல்லாமும் பேசும் பொற்சித்திரங்கள். அவை பேசப் பேச அரசாங்கம் குறிப்பெடுத்துக் கொள்கிறது. மின்னணுத் தொழில்நுட்பம் மிக எளிதாக சொடக்குப் போடும் நேரத்தில், இதை சாதித்துக் கொடுத்து விடுகிறது. நாட்டுக் கண்காணிப்பு என்று உளவுத்துறை மற்றும் தேசபக்தி பேரேட்டில் குறிப்பேற்றப் பட்டாலும், உண்மையில் இது வீட்டுக் கண்காணிப்பு.
மின்னணுப் பொறிகளின் தொழில் நுட்ப உத்தி எனும் பாசிசவலை உங்களைச் சுற்றி மூடியிருக்கிறது. அதற்குள் தான் நடமாடுகிறீர்கள். 70களில் பிரபலமாகியிருந்த ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களின் கற்பனைகளைக் கூட தொழில் நுட்ப பாசிசவலை தோற்கடித்துக் காட்டுகிறது.
தங்கள் கணிப்பின்படி உங்களை ‘தேசத் துரோகி’, ‘பயங்கவாதி’ என்று உளவுத் துறைகள் தீர்மானித்து விட்டால் பிறகு தடி இறங்கும். நெற்றிப் பொட்டு மீது துப்பாக்கி உயரும். கிழக்கு ஐரோப்பா மற்றும் உலகநாடுகளில் ரகசியமாகச் செயல்படும் குவாந் தனாமோ போன்ற சிறை, சித்திரவதைக் கூடக் கதவுகள் திறக்கும்.
செப்டம்பர் 11, 2001 அமெரிக்க நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டிடம் வாசிங்டனிலுள்ள ‘பென்டகன்’ ராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு தான் வீட்டுக் கண்காணிப்பு தேசபக்திச் சட்டங்களின் கீழ் கையிலெடுக்கப்பட்டது.
செப்டம்பர் 11 தாக்குதல் பயங்கரவாதிகள் நிகழ்த்தியதல்ல; பெட்ரோல் யுத்தத்தை நிகழ்த்து வதற்காக திட்டமிட்டு அரசே நிறைவேற்றிய பலி நாடகம் என்றொரு காரணமும், புஷ் இரண்டாவது முறையும் அதிபராக வருவதற்காக அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சி என்று இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. செப்டம்பர் 11க்குப் பிறகு, இரண்டுமே சுமூகமாக நிறைவேறி விட்டன. இதை அமெரிக்க பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆதாரங்களுடன் எழுதுகின்றன. கேள்வி எழுப்புகின்றன.
அமெரிக்கா பல தேச, பல இன மக்கள் வாழும் நாடு; அவர்கள் குடியுரிமை பெற்றவர்கள்; பல தேச கலாச்சார நிகழ்வுகள் முன்பு சுதந்திரமாக நடைபெற்றன. இப்போது அவை போன்ற நிகழ்வுகளை சுதந்திரமாக அனுமதிப்பதில்லை. முன் கூட்டியே தடைகள் போடப்படுகின்றன. கழுத்துப் பிடியில் இருக்கிறது அவர்களின் கருத்துச் சுதந்திரம். குறிப்பாக அராபியர்கள், இஸ்லாமியர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர் எனப்படும் கறுப்பின மக்கள் கண்காணிப்புக்குள்ளாக்கப் படுகிறார்கள். அவர்களறியாமலே உளவறியும் கருவிகளும் அவர்கள் வீடுகளில் பொருத்தப்பட்டுவிட்டன. அவர்களறியாமலே தொலைபேசி, கணினி, கிரடிட் கார்டு அனைத்தும் கண்காணிக்கப் படுகின்றன.
தேசப் பற்றுச் சட்டத்தில் (Patriotic Act) தேசப் பாதுகாப்பு விதி (National security Letter) என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதி செப்டம்பர் 11க்குப் பிறகு, பயங்கரவாதிகளை வேட்டையாட உருவாக்கப் பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் அரசின் முன் அனுமதி பெற (warrant) வேண்டியதில்லை. நீதிமன்ற உத்தரவு பெறத் தேவையில்லை. தேசப் பாதுகாப்பு விதியின் கீழ் தனி நபர்களின் பதிவேடுகள், குறிப்புகள், விபரங்களை ஒரு கடிதம் அனுப்பி தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற முடியும். இவ்வாறு கண்காணிப்பு செய்யப்படுகிறது என்பதை அந்த நிறுவனம், சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கக் கூடாது.
2005ம் ஆண்டில் மட்டும் 9254 கடிதங்கள் 35000 பேரை குறிவைத்து நிறுவனங்களுக்கு அனுப்பப் பட்டிருக்கின்றன. இத்தனையையும் உளவுத் துறைகளே நேரடியாகச் செயல் படுத்துகின்றன.
தொலைபேசிகளின் எல்லா விவரங்களையும் உளவுத்துறைக்கு அனுப்புமாறு அனைத்து தொலைபேசி உற்பத்தி நிறுவனங்களுக்கும் இம்மாதிரிக் கடிதம் அனுப்பப்பட்டது. அமெரிக்காவின் மிகப் பெரிய தொலைபேசி உற்பத்தி நிறுவனங்கள் வெரிசான், ஏடிடி, பெல்சௌத் மூன்று பெரிய நிறுவனங்களும் அமெரிக்க உளவுத் துறையிடம் அனைத்தையும் கையளித்து விட, குவெஸ்ட் என்ற நிறுவனம் மட்டும் மறுத்து விட்டது.
இன்றைய செய்தி தகவல் தொழில் நுட்பத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியில் இவ்வாறு மாற்றம் செய்வது எளிது. வகை தொகை இல்லாமல் கேள்வி முறை இல்லாமல் எல்லோருடைய தொலைபேசி விபரங்களையும் மாற்றிக் கொடுக்க முடியாது என குவெஸ்ட் என்ற நிறுவனம் (Qwest Communications) மறுத்து விடுகிறது. இதுவரை யாரென்றே அடையாளம் தெரியாத, கொடுமையான முதலாளி என்ற அடையாளத்தை மட்டும் கொண்டிருந்த குவெஸ்ட் நிறுவனம் ஒரே நாளில் மனித உரிமைப் பாதுகாப்பு வீரனாக முகம் கொண்டு விடுகிறது. புஷ் அரசை ஆதரிப்பதில் ஆளும் வர்க்கக் குழுக்களுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாட்டில் குவெஸ்ட் நிறுவனம் மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்படுதல், தண்டிக்கப்படுதல் பற்றி செய்தியாளர் பிரின்ரோல் விளக்குகிறார்.
“அவர்கள் தேசப் பக்திச் சட்டத்தின் ஒரு பிரிவைப் பயன்படுத்துகிறார்கள். பயங்கரவாதிகளை இல்லாமல் ஆக்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது பத்திரிகை யாளர்களை இல்லாமல் ஆக்கிட இச்சட்டம் கையிலெடுக்கப்படுகிறது. தேசியப் பாதுகாப்பு விதியின் கீழ் ஒரு கடிதம் அனுப்பினால் போதும். எங்களுக்கும் இதன் கீழ்தான் அனுப்பப்பட்டுள்ளது”.
“தேசப்பற்றுச் சட்டமும் உளவுத் துறைகளின் நடமாட்டமும் செய்தியாளர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை மேலும் நெருக்கடிக் குள்ளாக்குகிறது. நீங்கள் சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். சிந்தித்ததை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறீர்கள். வெளிப்படுத்துகிற போது ஒரு மாபியா கும்பலைப் போல் நிறைய தொலைபேசிகளை யாருடைய பெயரில் இருக்கிற தென்றே தெரியாமல் குவித்துக் கொண்டு அல்லது தொலைபேசி அட்டைகளை (Telephone Card) குவித்து வைத்துக் கொண்டு நீங்கள் பேச வேண்டும். பிறகு அதே தொலை பேசியையோ அதே அட்டையையோ நீங்கள் பயன்படுத்தக் கூடாது. நினைக்கும் போது முதுகுத் தண்டு சில்லிடுகிறது” என்கிறார் ரோஸ்.
இதை எவ்வாறு எதிர் கொள்வது? பத்திரிகையாளர் டேவிட் கோல்டுஸ்டெயின் ஒரு எதிர்ப்பு முறையை முன் வைக்கிறார்.
“இன்று காலை என் நண்பருடன் தொலைபேசியில் பேசினேன். புஷ் அரசாங்கத்தை வன்முறை மூலம் தூக்கி எறியும் சதித் திட்டம் பற்றி விளக்கினேன். வெடிமருந்துகளும் ஆயுதங்களும் குவித்து வைக்கப்பட்டு விட்டன. ரகசிய ஆயுதப் பயிற்சி முகாம்கள் இன்னினார் தலைமையில் இன்னின்ன இடங்களில் நடத்தப்படுகின்றன. குடியேற்றவாதிகள் என்ற பெயரில் நடக்கும் அமைதி ஊர்வலத்தின் இறுதியில் தலைநகரைச் சுற்றி வளைத்து கைப்பற்றும் முயற்சி நடக்கும். தயாராகுங்கள் - என்று இந்த மாதிரி நடக்காத கதைகளை தொலைபேசியில் பேசுவது. நண்பர் களும், மற்றவர்களும், எல்லோரும் எல்லாருடனும் இப்படியே பேச ஆரம்பித்தால், எல்லாத் தொலை பேசி பேச்சுக்கும் இப்படியே பதிவாக ஆரம்பித்தால் உளவுத் துறையின் கதி என்ன வாகும்? எத்தனை தேசத் துரோகிகளை அவர்கள் பின் தொடர்வார்கள்? செய்து பார்ப் போமே என்கிறார் டேவிட் கோல்டுபெயின். புஷ்ஷை ‘யுத்தங்களின் அதிபர்’ என முடிசூட்டுகிறார் டேவிட் கோல்டு பெயின்.
ஈராக் மீது பெட்ரோல் யுத்தம், ஈரான் மீது அணு ஆயுத மிரட்டல், அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்காக நீண்ட கால யுத்தத்தை நடத்திக் கொண்டிருக் கிறார் புஷ். கண்ணுக்கெட்டிய தூரம் வரை, காலம் வரை யுத்தத்தின் இறுதி எல்லை தென்படவில்லை. வெளி நாட்டு யுத்தங்கள் உள்நாட்டு நெருக்கடியாக முற்றி விடாமல் காக்க தேசப்பற்றுச் சட்டம், தேசப்பாதுகாப்பு விதி என வரிசையாய் கைகளில் சோர்த்துக் கொண்டுள்ளார்.
புஷ்ஷுக்கு சற்றே தூரமாய் நின்று செல்லச் சிணுங்கல் சிணுங்கிறவர்கள் கூட சந்தேகிக்கப் படுகிறார்கள். நாட்டுக்காக, புஷ்ஷை விமர்சிப்பவர்கள் தேசத்துரோகி யாகிறார்கள்.
ஒவ்வொரு சூழலியவாதியும், ஒவ்வொரு பசுமைக்காப்பு இயக்கத்தினரும், ஒவ்வொரு பெண்ணியவாதியும், மனித உரிமை அமைப்பினரும், பிராணிகள் வதைத் தடுப்பு இயக்கத்தினரும் - எல்லோரும் தேசத்துரோகிகள் வரிசையில் வருகிறார்கள்.
இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் ஒரு கோடியே 12 லட்சம் தேசத் துரோகிகள் இருக்கிறார்கள். நான் தற்காலிகமாய் அமெரிக்காவில் இருந்த போது ‘அமெரிக்காவின் புதிய பயணம்’ என்ற என்னுடைய கட்டுரை புதிய பார்வையில் (மே- 2006) வெளி வந்ததைக் கேள்விப்பட்டதும், எம் மகள் கேட்டாள், “அப்பா புதிய பார்வையில் என்ன எழுதி யிருக்கீங்க?”
யுத்தங்களை நடத்துவதன் காரணமாய் உண்டாகும் உள்நாட்டு நெருக்கடிகளை எதிர் கொள்ள அமெரிக்கா மதப் பாசிசத்துக்கு மாறுவதைப் பற்றியது அக்கட்டுரை எனத் தெரிவித்தேன்.
“அப்பா, எச்சரிக்கையா இருங்க. இங்கே எல்லாமே ஒட்டுக் கேட்கப்படுது. நீங்கள் கணினியில் அனுப்புகிற செய்தி கூட, அவனுக கண் பார்வைக்குத் தப்புவதில்லை. நீங்கள் எழுதுவது, தகவல் தெரிவிப்பது அவனுக்குத் தெரிய வந்து விட்டால், உங்களை மட்டும் இல்லை, எங்களையும் சேர்த்து இந்தியாவுக்கு பார்சல் செய்து அனுப்பி விடுவார்கள்”.
வெளிப்படுத்திய மகளின் குரலில் பயமும், பதட்டமும் தொனித்தது.
இப்போது நான் தமிழ்நாடு திரும்பி விட்டேன். அமெரிக்காவின் தேசத் துரோகிகள் பட்டியலில் ஒரு நபர் குறைந்து விட்டார்.
ஆதாரம்: புரட்சி (Revolution), அந்நியன் (The Stranger), யு.எஸ்.ஏ டுடே (USA today)
ஓர் அந்தரங்கம் என்பதே இல்லாமல் இருப்பது வேறு. எல்லோர் அந்தரங்கங்களையும் தேவையின்றி சேகரிப்பது சமூக விரோத கும்பல்களுக்கு சாதகமாக அமையும்
பதிலளிநீக்கு