நூல்நோக்கு: கி.ரா.வின் கடைசி ஆண்டுகள்

நூற்றாண்டை நோக்கி: கி.ரா.வுடன் சில பக்கங்கள்
பா.செயப்பிரகாசம்
விஜயா பதிப்பகம்
தொடர்புக்கு: 0422 2382614
விலை:ரூ.160

பா.செயப்பிரகாசம் புதுச்சேரியில் தங்கியிருந்த ஒன்பது ஆண்டுகளில் கி.ராஜநாராயணனுடன் செலவிட்ட தினசரிப் பொழுதுகளைப் பற்றிய நினைவுகளின் சேகரம் இது. கோடையில் இரண்டு முறை குளிக்க வாய்த்ததில் புளகாங்கிதம் அடைந்தாலும் கி.ரா.வின் நினைவில் அந்த நெய்க் கரிசல் பூமிதான் நிறைந்து நின்றுள்ளது. இடைசெவலை ஒட்டிய ஒடங்காட்டின் பரப்பளவு சுருங்குவது பற்றிய கவலையை அவரது கடைசிக் கதையான ‘பஞ்சம்’ பிரதிபலித்துள்ளது.

செயப்பிரகாசத்தின் நினைவுக் குறிப்புகளாக மட்டுமின்றி, இருவருக்கும் இடையிலான உரையாடல்கள், பகிர்ந்துகொண்ட செய்திகள், கி.ரா.வைக் குற்ற வழக்கிலிருந்து விடுவித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எழுதிய தீர்ப்பின் தமிழாக்கம் என கி.ரா தொடர்புடைய அனைத்தையும் உள்ளடக்கிக்கொள்ள முயல்கிறது இந்தப் புத்தகம். மானாவாரி விவசாயிகளின் மழைக் கணிதம், புதுச்சேரியின் அதிவேக வளர்ச்சி, அங்கு முழு நிலவு நாட்களில் கி.ரா நடத்திய ‘தாப்பு’ இலக்கியக் கூட்டங்கள், அவர் நடைப்பயிற்சி செய்த கல்லூரிச் சாலை, சிற்றிதழ்களுக்கு அவர் செய்த நன்றிக்கடன், பல்கலைக்கழகத் தமிழறிஞர்களின் பதவி வேட்கை என்று இடையிடையே வேறு பல விஷயங்களும் கருத்தை ஈர்க்கின்றன. பக்கம் ஒன்றுக்குப் பத்துக்குக் குறையாத கரிசல் வார்த்தைகள்.

மாணவப் பருவத்திலும் அரசுப் பணிக்காலத்தின் விடுமுறைகளிலும் இடைசெவல் சென்று கி.ரா.வைச் சந்தித்ததையும் நினைவுகூர்ந்துள்ளார் செயப்பிரகாசம். கி.ரா.வுடன் நெருங்கிப் பழகிய ஓவியர் மாரீஸ், வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், எழுத்தாளர் சூரங்குடி அ.முத்தானந்தம் என்று கரிசலின் பின்னத்தி ஏர்களைப் பற்றிய அறிமுகமாகவும் அமைந்திருக்கிறது இந்நூல். கி.ரா.வின் ஒவ்வொரு அசைவையும் தனது ஒளிப்படங்களால் ஆவணப்படுத்திய புதுவை இளவேனில், அவரது வீட்டுக்கு உடைசல் அரிசி கொண்டுவந்து சேர்த்த சர்மிளா, கணவதி அம்மையாருக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்க உதவிய ஓவியரும் நடிகருமான சிவக்குமார் என யாவரும் கி.ரா அன்புக்கு முன்னால் ஓர் நிறைதான்.

- இந்து தமிழ் திசை, 2 அக்டோபர் 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ