சிவன் கோவில் தெற்குத் தெரு: எழுத்தாளர்களின் கிழக்கு!

மீரா - 94


“வேலை இருக்கிறது நிரம்ப - என்னை
வேகப் படுத்திவிடு தாயே – பசுஞ்
சோலை மரத்தின் குளிர்நிழலில் –
மனம் சொக்கவைக் கும்பூ நகையில் – அந்தி
மாலை மதிய முதஎழிலில் -நான்
மயங்கி கிடந்தேனே நாளும் – ஆ!
வேலை இருக்கிறது நிரம்ப - என்னை
வேகப் படுத்தி விடு தாயே! “

லட்சிய வேகம் கொண்ட இந்த மரபுக் கவிதை தந்தவர் மீ.ராசேந்திரன்.

குதிரைக் குளம்படிகளின் வேகமும் தாவலுமாக தடையற்ற ஓட்டம் கொண்டவை மீராவின் மரபுக் கவிதைகள்.

“ராசேந்திரன் கவிதைகள் ”எனும் தலைப்பில், அவரது மரபுக்கவிதைகள் 1965-அக்டோபரில் நூல் வடிவம் ஏறுகின்றன. திரட்டி வெளியிட்டவர் மீராவின் மாணவர், முதுகலைத் தமிழில் என்னுடன் பயின்ற சக மாணவர், பின்னர் சிவகங்கை சேதுபதி மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். ’சேந்தி உடையநாதபுரம்’ ம.பெ.சீனிவாசன்.

தி.மு.க தலைவர் அண்ணா 1960-களில் நடத்திய திராவிடநாடு மாத இதழில் இக்கவிதையை முகப்பில் வெளியிட்டு சிறப்புச் செய்திருந்தார். அண்ணா மீராவை யார் என அறியார்; திமுக அரசியலில் இயங்கிய நாங்கள் அனைவரும் அண்ணாவை அறிவோம். அண்ணாவின் நாவன்மை, எழுத்து வன்மை எங்களை மயக்கி இழுத்துச் சென்ற கீதங்களாயின. திராவிட நாடு இதழில் முகப்பில் இடம் பெறும் அளவுக்கு லட்சிய வேகம் கொண்டோருக்கு ஊக்கம் தந்து மேலெடுத்துச் செல்லும் வரிகளாக உருக்கொண்டிருந்தன இவரது கவிதைகள்.

“தைத்திங்கள் வருகின்ற பொங்கல் நாளில்
தங்கத்தை சுமக்கின்ற மகளிர் ஆக்கும்
நெய்ப் பொங்கல் சுவைத்துண்டு மகிழ்ச்சி கொள்வர்
நிதி படைத்த சீமான்கள்: என்றும் எங்கள்
கைதொட்டு வாய்பட்டதுண்டோ பொங்கல்?
கண் மட்டும் ஓயாமல் பொங்கும் பொங்கும்
தெய்வங்கள் திருநாட்கள் எங்கட் கில்லை
தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?”

ஏழை எளியோரை திருநாட்களும் தெய்வங்களும் தீண்டுவதில்லை; தெருவோரச் சாக்கடையில் தேர் வருவதில்லை - இந்த இறுதி இரண்டு வரிகளை முன்னிறுத்தி, கவிதையைச் சிலாகித்து அண்ணா காஞ்சி இதழில் எழுதியிருந்தார். (’காஞ்சி’ மாத இதழ் திராவிடநாடு இதழ் நின்றதின் பின் தொடங்கப்பெற்றது).


2

பின் பக்கம் பெருகிவரும் வைகை; முன்புறம் அலையடிக்கும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்: நடுவில் ஆற்றங்கரை மேட்டில் எழில் வீசும் தாஜ்மஹால் என கட்டிடக் கலைக்கு சாட்சியாய் உயர்ந்து தெரியும் மதுரைத் தியாகராசர் கல்லூரி: மீ.ராசேந்திரன் என்னும் மரபுக் கவிஞனின் கவிதை ஊற்று பீறிட்டடித்த கிணறு: தமிழ் வளர்க்கும் தியாகராசர் கல்லூரியில் அப்துல்ரகுமான், தி.கு.நடராசன், பாவலர் பாலசுந்தரம் என அனைவரும் சக மாணவர்கள். கவிதைகளுடன் திமிறி எழுந்து செயல்பட்டோர் அருகிப் போக, மீராவும் அப்துல் ரகுமானும் நின்று நிலைத்தனர். அக்காலத்தில் (1961) மதுரைத் தியாகராசர் கல்லூரியில் சிறப்புத் தமிழ் எடுத்துப் பயின்ற புகுமுக வகுப்பு (Pre-university course) மாணவன் நான்.

முதலில் தன்னை ஒரு தமிழ்தேசியக் கவிஞராக வடிவமைத்துக் கொள்கிறார் மீ.ராசேந்திரன். தமிழ் மறுமலர்ச்சி, வடமொழி எதிர்ப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம், விதவை மணம் போன்ற லட்சியங்கள் அனைத்தும் தி.மு.க.வுக்கு நெருக்கமானவை. இவை காரணமாய் தமிழ்த் தேசியக் கவிஞர் திராவிட தேசியக் கவிஞராக எண்ணப்படுகிறார். மீரா இதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அதுதான் இது, இதுதான் அது என வாதிடும் போக்கையும், அதற்கான நேரச் செலவழிப்பையும் தொடக்க முதலே கைகழுவி விட்டார். சுற்றிலும் இயங்கிய இளைஞர் பட்டாளம் திராவிட நாடு விடுதலைக்கு முழக்கமிட்டது போலவே, திராவிட நாடு விடுதலைக் கருத்தியலில் இயங்கினார் சிலகாலம்!

1960கள் முடிய பாரதிதாசன், சுப்புரத்தினதாசன் என்ற சுரதா, முடியரசன், தமிழ் ஒளி, வாணிதாசன், கம்ப தாசன், கண்ணதாசன், புலவர் பொன்னிவளவன், மீ.ராசேந்திரன், நீலமணி, இன்குலாப், மு.மேத்தா என யாப்புத் தோட்டத்தில் கவனமாய் ஊழியம் செய்து கொடுத்தார்கள். மரபில் வந்த இவர்கள் கொள்கையாளர்கள்.

1959 ஜனவரியில் திருவல்லிக்கேணியிலிருந்து சி.சு.செல்லப்பா எழுத்து மாத இதழ் தொடங்கினார். கவிதை ,விமர்சனம் என்ற இரு முனைகளில் அது சிறகடித்துப் பறந்தது. ஆனால் மண்ணின் மைந்தர்களோடு ஒட்டாமல், தன்னைத் தூக்கலாகக் காட்டிகொண்டது. மணிக்கொடி இதழ் போல் சிறுகதை எழுத்துக்களின் களமாக ஆகவில்லை; ’எழுத்து’ எடுத்து விசிறி விதைத்த புதுக்கவிதை விதை, அறுபதுகளின் இறுதியில் எழுபதுகளின் தொடக்கத்தில் முளைவிடத் தொடங்கியது. Free verses என சொல்லப்பட்ட புதுக்கவிதைக்கு, பாரதி அதற்கான பொதுமலான நிலத்தை தோற்றுவித்துத் தந்திருக்கிறான் எனக் கருத ஆதாரமுண்டு.

”மீரா கவிதைகள்” என பின்னர் கவிஞர் மீராவே தொகுத்து வெளியீடு செய்தார். அவரது கவிதைகளில் வெளிப்படும் வேகத்துக்கும் ஓட்டத்துக்கும் இரண்டு காட்டுக்கள் உண்டு:

சாகாத வானம் நாம் - கவிதை

”சாகாத வானம் நாம்: வாழ்வைப் பாடும்
சங்கீதப் பறவை நாம்: பெருமை வற்றிப்
போகாத நெடுங்கடல் நாம்: நிமிர்ந்து நிற்கும்
பொதியம் நாம்: இமயம் நாம்: காலத் தீயில்
வேகாத பொசுங்காத தத்துவம் நாம்:
வெங்கதிர் நாம்: திங்கள் நாம்; அறிவை மாய்க்கும்
ஆகாத பழமையினை அகற்றி பாயும்
அழியாத காவிரி நாம்; அருவியும் நாம்;
இந்த தடையில்லா வேகம்,
தமிழ்காக்கும் அணியில் நின்றே
’சென்றோம் நாம்: வென்றோம் நாம்’ என்ற நீண்ட
சீர்த்தியினைத் திசையெங்கும் நிரப்புவோம் நாம்”

என்னும் இறுதி வரி வகை தொடர்கிறது.

- விசையொடிந்த தேகந்தன்னில் வேகம் பாய்ச்சி எம்மையெல்லாம் எழுந்து நிற்கச் செய்த வீர வரிகள் இவை. பாவேந்தர் பாடல்கள் போலவே ஒவ்வொரு சொற்பொழிவிலும் மீ.ராசேந்திரனின் வரலாற்று வைர வார்த்தைகள் எமக்குத் துணையாய் கைப்பிடித்து வெளிச்சத் திசை நோக்கி அழத்துச் சென்றன.

மன்னர் நினைவில் என்னும் மற்றொரு கவிதை:

”இருந்தாலும் இது கொடுமை கொடுமை சாவே
இரக்கமற்ற செய்கை உன் செய்கை
எந்த மருந்தாலும் தீராத நோயை நெஞ்சில்
வளரவிட்டாய். விளம்பர மோகத்தில் மூழ்கி
விருந்தாலும் விழாவாலும் வெளிச்சம் போடும்
வேடிக்கை மனிதர்கள் எல்லாம் இங்கே
இருந்தாலும் இறந்தாலும் ஒன்றுதானே;
இலை வைத்தாய்; மலர் சிதைத்தாய்; கொடுமை ஐயோ!”

”பற்பல அறச்சாலைகளையும் அறிவுச்சோலைகளையும் படைத்த கருணை வள்ளல் சிவகங்கை மன்னர் துரை.சண்முகராஜா தம் இளவயதிலேயே இயற்கை எய்தினார். அவர் இயற்கை எய்தி ஓராண்டுக்குப் பின் நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து இக் கையறுநிலைக் கவிதையை இயற்றினார் கவிஞர்” என அடிக்குறிப்பு தகவல் தருகிறது.

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் அவரது செருக்கும் முறுக்கும் திமிறிக்கொண்டு சொற்களும் வரிகளும் வெளிப்படும்; ஒரு கவிஞனுடைய இயல்பு கவிதைகளில் வெளிப்படுதல் தன்னியல்பானது. கிண்டலும் கேலியும் வேகவேகமாய்ச் செயலாற்றும் மீராவின் குணவாகைக் கொண்டிருந்தன அவரது கவிதைகள். வேகத்துக்கு ஈடு செய்யும் அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம் போன்ற எளிய யாப்பு வடிவத்தைக் கைக்கொண்டார்.


3


எழுபதுகளில் ஒரு தாவல் நடக்கிறது; மீரா என்ற மரபுக் கவிஞரிடம் மட்டுமல்ல, மரபில் கால் பதித்திருந்த அப்துல் ரகுமான், இன்குலாப், ஈரோடு தமிழன்பன், சிற்பி, நா காமராசன், மு.மேத்தா என அத்தனை மரபாளர்களும் சுயமான புதுக்கவிதைகளில் நடை போடத் தொடங்கினர். புது வடிவத்தினைக் கைக்கொளவதில் ஓராண்டு முன் பின் என கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

அப்துல் ரகுமான்
"நக்கண்ணை என்னும் தெக்கணக்கிள்ளை”
என யாப்பில் தொடங்கிய வடிவக் கட்டுக்கோப்பை, நக்கண்ணையின் காதல் மீதூறும் அகக் கவிதையை ஏன் வீரவரலாற்றுப் புறநானூற்றில் தொகுத்தனர் என்னும் கேள்விக்கு, ஒரு அற்புதமான உவமை தந்து தொடர்ந்து மேலெடுத்துச் செல்கிறார்.

“வீரவாள் வசிக்கும் வைர உரையை
ஈர மலர்களால் நிரப்புதல் போல,
மறவரலாற்றுப் புற நானூற்றில்,
அகச்சுவைக் கவிதைகளைத் தொகுத்து வைத்துள்ளனர்,
தலைவன் முகவரி தருவதனாலே”

என உவமையினையும் எழுத்து அசை சீர் தளை எதுகை மோனை குறையாது தருகிறார் ரகுமான். இவ்வாறு எழுதிக்கொண்டிருந்த மரபுக் கவிஞர் அனைவரும் இறக்கை முளைத்த பறவைகளாய் வானத்தின் ”பால்வீதி” பறந்து சென்றனர்:

கவிஞர் மீ.ராசேந்திரன், மீராவாகிறார். ஊசிகள், கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என கட்டுக்கடங்கா படைப்பாளியாக (FREE VERSES) மாறுகிறார். இது எழுபதுகளின் தொடக்கம்.

70-களின் தொடக்கத்தில் ஒரு கவிஞர் ஒரு பதிப்பாளராக பரிணாமம் கொள்வதும் நடக்கிறது. பதிப்பாளராக வெற்றிப் படிகளில் மேலேற மேலேற, அதே வேகத்தில் கவிஞராக அவர் பெற்றிருந்த படைப்பாற்றல் கீழிறக்கம் ஆகிறது. பதிப்பாளர் மீரா ; கவிஞர் மீரா - இருபேரும் ஒத்திசைவாகவில்லை.

அன்னம் பதிப்பகம், ஒரு சின்ன ’டிரெடில்‘ அச்சடிப்பு இயந்திரத்துடன் தொடங்கப் பெறுகையில், சிவன் கோவில் தெற்குத் தெரு எழுத்தாளர்களின் கிழக்காக மாறியது. ஒரு கவிதைப் பிரம்மாண்டம் சிவன்கோவில் தெற்குத்தெருவின் அன்னம் பதிப்பகமாக உருவெடுத்த பின் எழுத்தாளர்களின் கிழக்காக மாறியது பேருண்மை! ஆனால் மீராவின் கவிதா வாசகர்கல், அந்தப் பதிப்பகம் தொடங்கியபின், பிரமாண்டம் சன்னம்சன்னமாய் நொறுங்கிச் சரிந்தது கண்டனர்.

ஆண்டுக்கு மூன்று நூல்கள் - ஒரு கவிதை, ஒரு சிறுகதைத் தொகுப்பு அல்லது நாவல், கட்டுரை. முதன்முதலாக அபியின் மௌனத்தின் நாவுகள், ஜெயந்தனின் நினைக்கப்படும் சிறுகதைகள் ஆனால் திட்டமிட்டபடி அல்லாமல் பல நூல்கள் வந்து சேர்ந்தன .கி.ரா.வின் வேட்டி, ரகுமானின் பால்வீதி, அதையும் மீறிப் பல நூல்கள் வெளியாகின. கி.ரா.வின் சேகரிப்புத் திறன் நிறைந்த வட்டார வழக்குச் சொல்லகராதி முதன் முதலாக அன்னத்தில் வெளியாயிற்று. அவர் மட்டுமன்றி அப்துல் ரகுமான், இன்குலாப், பாலா, பஞ்சாங்கம், பாவண்ணன், இளம்பாரதி, நா.தருமராசன், வரலாற்றாசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியனின் எனப் பலரின் சங்கப் பலகையாய் அன்னம் ஆகியது.

படைப்புச் சிகரத்தினை ஏற்கனவே தொட்டிருந்த மீரா, அதையும் கடந்து மேல் செல்வார் என அனைவரும் எதிர்பார்த்தமை நிகழாது போயிற்று. எல்லோருக்கும் பால் வார்த்து ஈர்த்த ஒரு கற்பக தரு, சுரப்பியில்லாமல் வற்றிச் சுருங்க என்ன காரணம்?

”கல்லூரிப் பணி, தமிழ்த் துறைத் தலைமைப் பணி, முதல்வர் பொறுப்புப் பணி, கல்லூரிப் போராட்டப் பணி, கல்லூரி ஆசிரியர்கள், தொழிற்சங்கப் பணி, ’கவி’ இதழ்ப் பணி, அன்னம் பதிப்பகச் சிறப்பாசிரியர் பணி, அன்னம் விடு தூது இதழ்ப்பணி, அச்சக மேற்பார்வைப் பணி, கொஞ்சம் குடும்பப் பணி – இவை எல்லாமும் சேர்ந்து என் எழுத்துப் பணியைக் கட்டிப் போட்டு விட்டன.”
(மீரா கவிதைகள் முன்னுரை - பக் .23)

பாரதி நூற்றாண்டு 1982 இல் தொடங்குகிறது; எட்டையபுரத்தில் மூன்று நாள் விழா! 1983 பாரதி நூற்றாண்டின் முத்திரையாக நவ கவிதைகள் என கல்யாண்ஜி, கலாப்ரியா இந்திரன், சமயவேல், ச.விஜயலட்சுமி என ஒன்பது கவிஞர்களின் புதுக் கவிதைத் தொகுப்பு அன்னத்தில் வெளியாகிறது 1985-ல் ’அன்னம் விடு தூது’ இதழ் தொடங்கப் பெறுகிறது. டிரெடில் அச்சு இயந்திரத்தின் இடத்தில் சிலிண்டர் வந்துவிடுகிறது.

மீராவின் பரவசப் போக்கும், பணிகளைத் திட்டமிட்டு செதுக்கிக்கொள்ள இயலாமையும் பல பிரச்சினைகளுக்குக் காரணமாகின. அவை அவரின் இயல்பாகின.

அலைச்சல் அலைச்சல்; எங்கும் எதிலும் அலைச்சல்; மற்றவர்கள் பிறரை ஏவிவிட்டு இருக்கிற இடத்திலிருந்து வேலையைச் சாதித்துக் கொள்வார்கள். கவிஞருக்கு, குறிப்பாக பதிப்பாளருக்கு ஒவ்வொன்றையும் நேரில் சென்று, வேலைச் சோதனையிட்டாலன்றி நிறைவு தருவதில்லை.

அது 1977: அவசரநிலைப் பிரகடனம் முடிவெய்தியிருந்த காலம். ”இரவுகள் உடையும்” என்ற எனது தொகுப்பின் கையெழுத்துப் பிரதியினை மீராவிடம் கொடுத்திருந்தேன். பொருத்தமான அட்டை ஓவியத்தை வரைய யாரிடம் கொடுக்கலாம் என தேடித் திரிந்தார் மீரா. என்னிடமும் கலந்து பேசினார். நான் அப்போது தலைமைச் செயலகத்தில் அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எப்போது சென்னை வந்தாலும் மீரா என்னை சந்திக்க வந்துவிடுவார். இருவரும் சேர்ந்து பதிப்பகப் பணி தொடர்பாக வெளியே புறப்படுவோம். கிரியா பதிப்பகம் செல்லலாம் என அங்கு சென்றோம். அங்கு ஒரு ஓவியம்; இருட்டை உடைத்துச் சிதற அடிப்பது போல் ஒரு சுடர்: இருள் உடைந்து பலப் பல துண்டுகளாகிச் சிதறும் காட்சி. முகப்புக்கு பொருத்தமாக அமையும் என தேர்வு செய்து விலைக்கு வாங்கினார். அப்போது ஓவியத்தின் விலை ஆயிரம் ரூபாய். இதுதான் பதிப்பாளர் மீரா. பதிப்பாளன் மட்டுமல்ல, அவருக்குள் இயங்கிய ஒரு கலைஞனும் நேர்த்தியாக நூல் பிடித்து உடன் வந்து கொண்டிருந்தான்.

என் சுயானுபவத்திலிருந்து மீராவை விளக்கப்படுத்த இயலும்; பத்தாண்டுக் காலம் ’மனஓசை’யென்னும் கலை இலக்கிய மாத இதழைப் பொறுப்பேற்று, ஏற்கனவே சமுதாயமும் அதன் வாழ்வியல் இலக்கியமும் எத்திசைப் பயணித்தனவோ, அத்திசையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தியல் கண்ணோட்டதை முன்வைத்ததுப் பணிசெய்தேன். எதிர்க் குரலை அரங்கேற்றிய அந்தப் பத்து ஆண்டுகள், கக்கத்தில் நான் இடுக்கிக் கொண்டிருந்த படைப்பாற்றல் திறனையெல்லாம் நானறியாமல் நழுவிப் போக வைத்தன. நானறிய நடந்தது எனச் சொல்லல் பொருந்தும். இன்று எழுத உட்காரலாம், நாளை எழுதலாம் என காலமும் எழுத்தூழியமும் நழுவிப் போய்க் கொண்டிருந்தன.

“கழகத்தில் (திமுக) நான் எழுதிய கவிதைகளுக்கும் மீரா கவிதைகள், இப்போது இதில் (கோடையும் வசந்தமும்) உள்ள கவிதைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை; இரண்டிலுமே முற்போக்கு, அதி முற்போக்கு அரசியல் முகங்களே தென்படுகின்றன. நடையில் வீரியக் குறைவு, வார்த்தைகளின் கலப்பு, சில இடங்களில் செயற்கைத் தன்மை இத்தொகுப்பில் காணப்படுகிறது” - (கோடையும் வசந்தமும்: முன்னுரை பக்கம் 26). மீராவின் ஒப்புதல் வாக்குமூலம் இந்த வாசகம்.

ஊடகவியல் வேறு: இலக்கியப் படைப்பு வேறு. இரண்டினையும் முரணின்றி இயங்கவைக்க தனீத்திறமை வேண்டும். இரண்டு திறன்களையும் ஒரே வண்டியில் வசக்கிப் பூட்டும் வல்லமை எல்லாருக்கும் வாய்க்காது. சிறந்த பேச்சாளர்களில், சிறந்த ஊடகவியலாளர்களில், ஏதேனும் வல்லமைகளில் ஒன்று மேலேறிக் கவிகிறபோது, சாண் ஏறினால் முழம் இறங்குகிறது மற்றதான படைப்பு வல்லமை. ஏன் ஒரு இலக்கியவாதியின் இழப்பு இப்படி ஆகிவிடுகிறது என்னும் கேள்விகள் இன்னும் விடையற்றுத் தொடர்கின்றன.

எழுத்து அல்லது இலக்கியம் ஒற்றைப் பரிமாணம் கொள்வதற்குப் பதில், அச்சு பதிப்பு, நூல் வெளியீடு, இதழ்ப் பதிப்பு எனப் பல்வகைப் பணிகள் விரிவு கண்டபோது, ஒரு அசுரன் போல் அச்சுத் தொழிலைத் தாக்கிய கணிணிப் பாதிப்பு கருத்தில் கொள்ளப் பட்டிருக்கவேண்டும்.

கற்றல் பணியிலிருந்து ஓய்வு கொண்டபின், ஓம் சக்தி இதழ் பொறுப்பெடுக்க கோவை சென்றிருக்கக் கூடாது. முதலில் பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற வள்ளலார் வேடதாரி. தமிழகத்தின் கார்ப்பரேட் முதலாளி. அவர் அழைத்தார் என்பதால் போயிருக்கக் கூடாது. முதலில் அவரைச் சுற்றிக் கும்மியடித்து தம் அறிவுப்பெருக்கை விற்பனை செய்து கொண்டிருக்கும் சீடர்களைக் கடந்து இவரால் நெருங்க இயலவில்லை; மற்றொன்று ஓம்சக்தி இதழ் முகப்பில் சாமியாரின் படம் வெளிவரவேண்டும் என்று சொன்னபோது மீரா மறுத்து விடுதல். அவர் கோவையில் ’ஓம்சக்தி’ இதழ்ப் பொறுப்பில் இருந்த காலம் மனசு ஒட்டாது நின்ற வேளையில், மதுரையில் தோழர் எழுத்தாளர், கோ.கேசவன் மரணம் எனச் செய்தி வந்து சேருகிறது. புத்தகக் கடை முன் அறிவிப்புப் பலகை எழுதி வைக்குமாறு விஜயா பதிப்பக வேலாயுதத்திடம் தெரிவித்துவிட்டு மதுரை விரைகிறார்.

மதுரை வரும்போது இரவு மணி பத்து. அதற்குள் கேசவன் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டனர் அவருடைய துணைவியாரிடம் துக்கம் விசாரித்துவிட்டு, இரவு ஒரு மணிக்கு சிவகங்கை வந்து படுத்தவர், படுத்தது கொடுத்ததுதான்; மறுநாள் காலை 9 மணி ஆகியும் எழுந்திருக்க முடியவில்லை; உடம்பு அசைய முடியவில்லை. நெஞ்சு வலித்தது. மதுரையில் மாற்றி மாற்றி மூன்று மருத்துவமனைகளிலும் கோவையில் கொங்கு மருத்துவமனையிலும் தங்கி நோய்க்குப் பார்த்தார். கடைசியில் ’பர்கின்சன்’ என்னும் ஒரு வகை முடக்குவாதம் என்று கண்டுபிடித்தார்கள். சாப்பிடுவது குளிப்பது எதுவும் செய்ய இயலவில்லை; எல்லாம் அவருடைய மனைவி தான் கவனித்தார்.

நோயால் தாக்குண்டு மூன்றாண்டுகள் மூலையில் கிடந்து வாதனைப் படும் வேளையில் ”இப்போதாவது கடவுளைக் கும்பிடுங்கள்; கோயிலுக்குப் போங்கள்; ஓம் நமச்சிவாயா சொல்லுங்கள்; சுலோகம் சொல்லுங்கள் என்று நெய்வேலியில் இருந்து என் அருமை மகள் செல்மா சொல்லிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. என்னால் முடியவில்லை”
(மீரா கவிதைகள் பக்கம் 21) என்று எழுதுகிறார்.

அப்போது அந்தத் தந்தை இப்படி நினைத்திருக்கலாம்; பிள்ளைகளின் உரிமைகளில் நான் தலையிடுவது எப்படி இல்லையோ, அது போல் என் கருத்துக்களிலும் தலையிடப் பிள்ளைகளுக்கு உரிமை கிடையாது. அவர்களுக்கு தெய்வத்தில், கோயிலில், சுலோகத்தில் நம்பிக்கை; அவருக்கு மனிதனில் நம்பிக்கை. மனிதனை நம்பினார்.

“என்னைப் போல் என் பிள்ளைகள் இருப்பார்களா என்பது சந்தேகம் என் கருத்துக்களில் நூற்றுக்கு நூறு அவர்களுக்கு உடன்பாடு கிடையாது. நான் அவர்களின் உரிமைகளில் தலையிடுவது இல்லை” என்பார்.
(மீரா கவிதைகள் பக்கம் 20)

1998 இறுதியில் அவர் உடல்நலம் குன்றிய நிலையில் கவிக்கோ விருது பெற்ற பின், சென்னை திருவான்மியூரில் மைத்துனர் வீட்டில் தங்கி மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். திருவான்மியூரில் கவிஞர் இன்குலாப்பும் நானும் சந்தித்து உரையாடினோம். ரகுமானும் இன்குலாபும் நானும் மீராவுடன் திருவான்மியூர் கடற்கரையில் நடந்து சென்றோம். நான் தெரிவித்தேன்,” ஊருக்கு போய் வருகிறேன் என்று சொல்கிற உங்கள் கருத்தை கைவிடுங்கள். உங்களை மையமாக வைத்து நிறைய காரியங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் ஒரு அடையாளமாக இருங்கள், நாங்கள் செயல்படுகிறோம்"

இல்லை போய்விட்டு வந்து விடுவேன் என்றார். அப்துல் ரகுமானுக்கு அது உடன்பாடில்லை. ஊருக்கு போய் அந்தப் பிரச்சனை இந்தப் பிரச்சனை என்று உடம்பைக் கெடுத்துக் கொண்டு, தீராத பிரச்சினைகளால் மனசையும் கெடுத்துக் கொண்டு வந்து நிற்பார் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அது எங்களுடைய குரலாகவும் ஒலித்தது.

நோய்வாய்ப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகி இருந்தன.

”மீரா நம்மைப் பிரிந்து விட்டார்; மீரா படுத்துவிட்டார். அவரை எழுப்ப முடியுமா எனத் தெரியவில்லை. மீரா மனதளவில் நம்மை விட்டுப் பிரிந்து போயாச்சு” என்று கி.ரா எழுதியது உண்மையாய்ப் போயிற்று.

இறுதிவரை, இறப்பு வரை கொள்கை நிலைப்பாட்டில் தடுமாறாமல் மீரா நின்றார். அவரது இறப்புக்குப் பின்னாலும் கொள்கைகள் தொடருகின்றன. எனினும் இங்கு சில கேள்விகளை எழுத்துலகம் நோக்கி நாம் முன்வைக்க வேண்டியிருக்கிறது:

  1. ஒரு லட்சிய எழுத்தாளனின் மரணம் இலக்கிய உலகில் கருதப்படாமல் போகும் காரணம் யாது?
  2. தமிழ்த் தேசியம், திராவிடத் தேசியம் இவைகளின் இருப்பு இன்றைய காலச்சூழலில் தேவையற்றுப் போனதா? அல்லது ஏற்று நடப்போர் நீர்த்துப் போய் விட்டதால் நீர்த்துப் போயினவா? 
  3. ஆனாலும் மொழிவழித் தேசியம் என்பது உலகப் பரப்பளவில் உண்டு. அந்த உண்மை தமிழருக்கும் உண்டு தானே?
  4. பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக சீர்திருத்தம், சமத்துவ சமுதாயம், சாதி மறுப்பு, மொழி ஆதிக்க எதிர்ப்பு போன்ற கருத்தியல்கள் உயிரற்ற சடலங்கள் ஆகி விட்டனவா? மொத்தத்தில் ஒரு கேள்விதான் - வாழ்வுக்கும் படைப்புக்கும் எக்கொள்கையும் தேவையற்றுப் போனதாய் இந்நூற்றாண்டு எதிர் நிற்கிறதா?
  5. அது உண்மையாயின் - நிகழ்காலத் தமிழ்க் கவிதை உலகமும், எழுத்தாளர் உலகமும் மன நோயாளியாகிக் கொண்டிருக்கின்றனரா?

நன்றி: ”சிவன் கோவில் தெற்குத் தெரு, எழுத்தாளர்களின் கிழக்கு” என்ற கவித்துவப் பொருத்தப்பாடுள்ள தலைப்பினை எனக்குத் தந்து, கவிஞர் மீரா 94–வது பிறந்த நாள் அன்று, ’மெய்நிகர் நிகழ்வு‘ உரை நிகழ்த்தச் செய்த நண்பர், வளரி கவிதை இதழாசிரியர் அருணா சுந்தரராசன் அவர்களுக்கு.

- காக்கைச் சிறகினிலே, நவம்பர் 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ