பொய் மலரும்

வீட்டுக்கு முன்னாலுள்ள முக்கும் கல்லில் முகம் சோம்பி ஒரு பாலகன் உட்கார்ந்திருந்தான், தன் வினையை மிகவும் பத்திரமுடன் தூக்கிப் பிடிப்பது போல், பொக்குக் கட்டியிருந்த சிரங்குள்ள கையை அவன் உயர்த்திப் பிடித்திருந்தான். வெடித்து ஈரம் உலர்ந்து விறுவிறுவென்றிருக்கும் சிரங்கைச் சொறிகையில், திணறிப்போய் ‘ஆ’ ‘ஊ’ என்றான். வாயைக் கோணிக் கொண்டும் முகத்தைச் சுளித்துக் கொண்டும் இன்ப வேதனை சொறிகையில் அனுபவித்தான்.

முக்குக் கல்லின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறபோது தான், பாட்டி ஊரிலிருந்து வந்தாள். அவனைப் பார்த்ததும் அவள் கண்களில் ஈரம் பனித்தது. அவன் கையைப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டு ‘என் ராசா’ என்றாள், தன்னுடன் வந்த நாணக்கம்மாவிடம், குரல் தழதழக்க ‘என் பேரன், பார்த்தியா’ என்றாள்.

சேலைத் தலைப்பால் பேரனின் முகத்தைத் துடைத்து “அவ மகராசியா விட்டுட்டுப் போய்ட்டா, இதுகளையெல்லாம் எந்தலை மேலே ஏத்திட்டு அவ சுகமாப் போய்ச் சேர்ந்துட்டா” என்றாள். கட்டுப்பாட்டை மீறி வெளியாகிய கண்ணீர் அவளின் பள்ளமான கன்னங்களில் பளபளத்தது.

உள்ளே கூட்டிக் கொண்டு போய், அவனுடைய கைவிரல்களில் தேங்காய் எண்ணெய் இட்டாள். தலையில் எண்ணெய் தடவி முந்தானையால் முகம் துடைத்து விட்டாள்.

பாட்டி இப்போதுதான் ஊரிலிருந்து வருகிறாள். சொந்த ஊரில் மழை பெய்யாமல் பஞ்சம் பிழைக்க அவளும் நாலைந்து பேரும் வந்திருக்கிறார்கள், களையெடுப்பு கதிரடிப்பு முடிந்தவுடன் அவர்கள் திருப்பிப் போய்விடுவார்கள்.

பாட்டி ஊரில் தான், இளையவர் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான், அவனை, அண்ணனை, தங்கையை தாயில்லாத அவர்களை பாட்டி வளர்த்தாள். அவர்களுக்காக அவன் வைத்திருந்த சிறுகாணியையும் இழந்து ஆண்கள் செய்யும் முரட்டு வேலையைக் கூட அவர்களுக்காக அவள் செய்தாள்.

இரண்டு வருசங்களின் முன், சித்தியும் சித்தப்பாவும் அங்கே வந்து, ஊருக்குத் திரும்பிய வேளையில், பாட்டியிடம் கேட்டார்கள் “இவனையாவது கூட்டிட்டுப் போகட்டுமா, உங்களுக்குக் கொஞ்சம் சுமை குறையும்”.

பாட்டியின் தலையசைப்பு வரும் முன்னால் இளையவர் சம்மதம் தெரிவித்தான். அவனது அடி மனசில் நீண்ட காலங்களாய் ஒரு தாகம், வேட்கையுடன் மடிந்து கிடந்தது; மிக்சரும் வடையும் பார்த்து நெடிய காலமாகிவிட்டது, பல வருஷங்கள் மிதந்தோடி விட்டன, முன்னால் ஒரு தடவை அம்மாவுடன் ஊருக்குச் செல்கையில், அம்மா மிக்சரும் வடையும் வாங்கிக் கொடுத்தாள், அதற்குப் பின் இல்லை.

பஸ்ஸில் போகையில் சித்தியும் சித்தப்பாவும் வாங்கிக் கொடுக்கிற வடையை மனசில் நினைத்தான். ஒரு மிக்சருக்காகவும் வடைக்காகவும் அவன் தன் படிப்பை விட்டுவிடச் சம்மதித்தான்.

ஆனால் கரிசல் குளத்தில் பஸ்ஸில் இறங்கி, ஊருக்கு ஒரு மைல் நடந்த போது ஒரு ‘முறுக்கு’ மட்டுமே அவனுக்குக் கிடைத்தது; தன் கனவுகள் நொறுங்கிப் போவதாய் அந்தச் சிறுவன் நினைத்தான்; துக்கம் தொண்டையை அடைக்க, சிறு சிறு விம்மல்களுடன் சித்தியின் பின்னால் நடந்தான். அவனுடைய அழுகையின் காரணம் தெரியாமல் அவர்கள் திகைத்தார்கள். தாயை இழந்து, அதன் பின் தாயைப் பெற்ற பாட்டியின் அரவணைப்பிலேயே வளர்ந்து, அரவணைப்பைப் பிரிவதால் ஏக்கம் கொண்டு அழுவதாக அவர்கள் நினைத்தார்கள் பரிதாபமாய், ஒரு மிக்சருக்காகவும் வடைக்காகவும் அந்தப் பிஞ்சு உள்ளம் படிப்பை விட்டு விட்டதை அவர்களால் உணர முடியவில்லை, இரக்கத்திற்குரியதாய் ஒரு பாலகனின் சாதாரணமான கனவுகள் – கண்ணீராய் கரிசல் மண் புழுதியில் உதிர்ந்து உலர்ந்து போனது.

2


தரித்திரத்தின் சிறகுகளில் இரண்டு வருசங்கள் பறந்து போயின. படிப்பு பாழ்பட்டுப் போனது. களையெடுக்கவும் களைக்காலம் முடிந்ததும், கம்மம் புஞ்சைக்குக் காவல் காக்கவும் அவன் போய்க் கொண்டிருந்தான்.

ஒரு நாள் அய்யா (அப்பா) அவனிடம் கேட்டார். “டே, பள்ளிக்கூடம் போறியா?”

பள்ளிக்கூடம் போகாமலே, ஐந்தாம் வகுப்பில் அவனுக்குப் பாஸ் போட்டிருந்தார்கள். அப்பா மறுநாள் ‘ரிக்கார்’ட் ஷீட் வாங்கி வந்தார்.

ஐந்தாம் வகுப்பிற்கு மேல், காடல் குடிக்குத்தான் போக வேண்டும்; அங்கே எட்டாம் வகுப்பு வரை உண்டு.

மறுநாள் அய்யாவும் அவனும் புழுதி கொப்புளிக்கும் வண்டிப் பாதையில் நடந்தார்கள். வண்டிச் சக்கரங்கள் அழுந்திப் பள்ளமாகிய தடத்தில் இருவரும் நடந்தபோது அவனுக்கு உற்சாகமாக இருந்தது.

மூன்று மைல் தூரமுள்ள காடல்குடியில் அவன் சேர்க்கப்பட்டான்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் நடந்து போவார்கள்; அவன், நாகிரெட்டி, ஜப்பான், செண்பகம், மல்லம்மா - எல்லோரும் அங்கே படிக்கப் போனார்கள்.

மல்லம்மா ஒருத்திதான் பெண். கீழ வீட்டு அழகர்சாமியின் மகள். காலையிலேயே தூக்குப் பாத்திரமும் பைக்கூடும் எடுத்து வைத்து, கார வீட்டு மெத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பாள். பையன்கள் தலை தெரிந்ததும் அவைகளை எடுத்துக் கொண்டு ஓடி வருவாள்.

புளியந் தோப்பில், ‘கட்டைப்புளி’ யருகே, அவளுக்காக அவர்கள் காத்திருப்பார்கள்.

சில நாட்களில் அவளை விட்டுவிட்டு அவர்கள் போய் விடுவார்கள். ஜப்பான் இது மாதிரியெல்லாம் செய்வான். இரண்டாவது உலக யுத்தத்தில் ஜப்பான்காரன் குண்டு போடுகிறபோது அவன் பிறந்தான். அதனால் அவனுக்கு அப்படிப்பட்ட பெயர் வைத்து விட்டார்கள். ஊரில் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர் உண்டு. கூட வரும் செண்பகத்தைக்கூட ‘செனா’ என்று தான் கூப்பிடுவார்கள்.

ஜப்பானுடைய சொந்தப் பெயர் என்னவோ யாருக்கும் தெரியாது. பள்ளிக் கூடத்திலும் அந்தப் பெயரையே பதிந்து விட்டார்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் யாரையாவது விட்டுவிட்டுப் போக வேண்டுமென ஜப்பான் திட்டம் போடுவான். அதன்படி மற்றவர்களும் சேர்ந்து, அவனுடைய சதிக்கு உடன்பட்டு விட்டுப் போய் விடுவார்கள்.

ஒரு தடவை ‘கட்டைப் புளிக்குப்’ பக்கத்தில் நிற்பதற்குப் பதில், மேலப் புளிக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டான் ஜப்பான். “வாங்க, எல்லோரும் ஒளிஞ்சிக்கலாம்” என்று கூப்பிட்டபோது எல்லோரூம் அவன் பின் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.

கூட வந்த ‘செனா’ சொன்னான், “மல்லம்மா, பாவம்டா”

பையன்கள் தலை தெரிந்ததும், கார வீட்டிலிருந்து ஓடி வந்த மல்லம்மா, அவர்களைக் காணாமல் திகைப்பதைப் பார்த்தார்கள். பதட்டத்துடன் எல்லாத் திசைகளிலும் விழிகளை ஓட விட்டாள். தன்னை விட்டுவிட்டு அவர்கள் போய் விட்டார்கள் என்பதை நினைத்த போது நடுக்கம் கண்டது. வேகமாய் மூச்சு வாங்க ஓடி, ஓடைக்கரையின் மேல் நின்று பார்த்தாள். ஓடைக்கரையின் மேல் ஏறிப் பார்த்தால், முன்னாலே போய்க்கொண்டிருப்பவர்கள் தெரியும்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எல்லாம் வெறுமையாகி நின்றது. இரண்டு கோடுகளைப் போல் நீண்ட வண்டிப்பாதை காலியாக வெயிலில் பள பளத்தது. முகம், உடல் எல்லாம் வியர்த்து நின்றாள். தொண்டை அடைக்க அழுகை தாவிக் கொண்டு வந்தது. தூக்குப் பாத்திரத்தை கீழே நழுவ விட்டு, மண்ணில் உட்கார்ந்த போது -

அவளின் பின்னால் மெதுவாகப் போய் ஜப்பான் ‘பே’ என்று சத்தம் போட்டான், அவள் திடுக்கிட்டுத் திரும்பியபோது எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தனியாக பள்ளிக்கூடம் போவதில்லை. போவதில் பயப்படுவதற்குக் காரணம் இருந்தது.

பச்சையாபுரத்தைத் தாண்டி, காடல் குடிக்குப் போக வேண்டும். பச்சையாபுரம் மந்தையில் போகிற போதே - இளையவருக்குக் கால்கைகள் நடுங்கும்; கால் தள்ளாட நின்றுவிடுவான். எல்லருமே நடுக்கத்துடன் தளர்ந்து தயங்கி நடப்பதை அப்போது பார்க்கலாம்.

பச்சையாபுரம் சர்க்கரை நாய்க்கருக்கு நாலு நாய்கள்; லம்பாடி மாடுகள் போல் பெரிய பெரிய நாய்கள். பண்ணைக் காவலுக்காக வைத்திருக்கிறார்.

அவை எப்போதும் மந்தையில் படப்புகளுக்குப் பக்கத்தில் தான் படுத்திருக்கும். இவர்களைக் கண்டதும் ஓடி வரும். உடல் நடுங்க ஒருவரை யொருவர் நெருக்கியடித்துக் கொள்கிற போது, ஜப்பான் சொல்வான். “பயப்படாமே வரிசையாக வாங்க ஒன்றும் செய்யாது.”

எல்லோரும் வரிசையாய் நின்று மெதுவாய் நடப்பார்கள். முதலில் ஜப்பான், கடைசியாக மல்லம்மா, ‘தோ, தோ, பேசாம வா, ஸ்சு, ஸ்சு” என்பான் ஜப்பான். நாய்களைத் தடவிக் கொடுப்பான். பயம் பூசி மிரளும் விழிகளுடன் பரிதாபமாய் நடக்கும் அந்தச் சிறுவர்களை ஒவ்வொருவராய் நாய்கள் மோப்பமிடும். கடைசியாய் மல்லம்மாவை மோந்து பார்த்து விட்டு நாய்கள் நின்றுவிடும், அவளை ஒன்றும் செய்யாது.

ஜப்பான், கண்களைச் சிமிட்டி சிரித்துக் கொண்டே இடக்காய்ச் சொல்வான் “என்ன இருந்தாலும், பொம்பளைன்னா, அது ஒரு தனி மவுசுதான்”.

3


சார் ஒவ்வொரு நாளும் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். கொண்டு வராத போது வெளியே வெயிலில் நிறுத்தினார், காலை மணியடித்து வகுப்புத் தொடங்கியதும் வெளியில் நாலைந்து பேர் நிற்பது வழக்கமாகியது.

ஒவ்வொரு நாளும் இளையவர் வெயிலில் நின்று கொண்டிருந்தான். மூன்று மைல் நடந்து வந்த களைப்பில் வயிறு வெறிதாகி பசி எரிய நின்றான். நேர் கிழக்கில் நின்றதால் கண்கள் கூசி, பார்வை சுருங்கியது. பத்து மணிக்கு மேலேறுகிற வெயில், அவனது இளம் முகத்தைத் தடவிப் பார்த்து இரக்கத்துடன் மேகங்களுக்குள் குனியும்.

ஆறாம் வகுப்புப் புஸ்தகத்தின் விலை எட்டு ரூபாய், எல்லோரும் கொடுக்கிறார்கள். மல்லம்மாதான் முதலில் கொடுத்து புஸ்தகம் வாங்கினாள். முதலில் பணம் கொடுத்ததும் பெருமையுடன் எல்லோரையும் பார்த்தபடி தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

அவனுக்கு இரண்டு டவுசர்கள் மட்டுமே இருந்தன. ஒன்றை மாற்றி ஒன்றை மட்டுமே போட வேண்டியிருந்தது. மேல் சட்டை இல்லை. அவனைப் பள்ளியில் சேர்த்த மறுநாள் அய்யா அவனுக்காக கச்சைத் துணியாலான “பாடி” வாங்கிக் கொண்டு வந்தார். ஒரு பனியன் போன்றது அது; அது ஒரு மேல் சட்டை போல் கூட இல்லை.

வெறும் பாடியுடன் பள்ளிக்கூடம் போக அவனுக்கு வெட்கமாக இருந்தது, மிகவும் கூச்சப்பட்டான், அதுவும் சாதாரணத் துணியினால் ஆன பனியன் போன்ற பாடி.

அன்றிரவு அய்யாவிடம் சொன்னான். “இந்த பாடி நல்லா இல்லே” அய்யா எப்போதும் அதிகம் பேசமாட்டார். அவர் பேசி யாரும் பார்த்ததில்லை. கோபம் வருகிறபோது மட்டும் சத்தம் போடுவார் அல்லது அவர் பேசுவது கோபம் வருகிற போதாக இருக்கும்.

தாயில்லாப் பிள்ளையாய் நிற்கும் அவன் அய்யாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ள ஆசைப்படுவான். மற்ற வீட்டுப் பிள்ளைகள் போல், அய்யாவின் தோள் மேல் உப்பாரி போக அவனுக்கு ஆசை கொப்புளிக்கும். ஆனால் அந்தச் சிறு பிள்ளையின் ஆசை நிறைவேறாமலேயே போயிற்று. கோபத்தில் அவனை உதைப்பதும் எரிச்சல்படுவதும் தவிர வேறொன்றும் நடக்கவில்லை.

அவன் சொன்னபோது, அய்யா தலை நிமிராமலேயே கேட்டார்

“ஏன் நல்லா இல்லே?”

“கொட்டுக்காரன் மாதிரி இருக்குன்னு எல்லோரும் கேலி செய்யறாங்க”

“யார் கேலி செய்தது?”

“முருகேசன் தான்”

அதற்கு அய்யா எந்தப் பதிலும் சொல்லவில்லை; அவர் பதில் சொல்ல மாட்டார். பதில் சொல்கிற விஷயமும் இல்லை. எதை வைத்து பதில் சொல்வது!

மதியச் சாப்பாடு கொண்டு போக ஒரு தூக்குப் பாத்திரமும் அவனுக்கு இல்லை. பக்கத்து வீட்டு லெக்குமத்தையிடம் தான் இளையவர் இரவல் வாங்கிக் கொண்டு போனான். அது அவனைவிடப் பெரிதாக இருக்கும்.

அவனைப் பையன்கள் அடையாளம் காட்டுகிறபோது சொன்னார்கள் “அண்டா மாதிரி தூக்குச் சட்டி கொண்டு வருவானே, அவனா?”

4


கடைசியில் இளையவரும், நாலைந்து பையன்களும் மீதியிருந்தார்கள். சார் ஒவ்வொருத்தராக நிறுத்திக் கேட்டார் “நீங்களெல்லாம் எப்பக் கொண்டு வருவீங்க?”

எண்ணெய்க்காரச் செட்டியார் மகன் சொன்னான் “நான் மத்தியானம் கொண்டு வருவேன் சார்”

அவன் குரலில் தொனித்த ஊக்கம் இளையவருக்குக் கலக்கத்தை உண்டாக்கியது. தன்னுடன் நாலைந்து பேராவது பணம் கொடுக்காமல் மீதி இருக்க வேண்டுமேன அவன் ஆசைப்பட்டான், எதிர்பார்ப்பு பொய்யாகி, அவனை அச்சுறுத்தியது.

“சரி, மத்தியானம்; பிறகு “நீ?”

சாருடைய குரல் அவன் மீது பாய்ந்தது, இளையவர் தலையை அசைத்தபடி சொன்னான் “நான் நாளைக்குக் கொண்டு வந்திடுவேன் சார். எங்க அய்யா கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்”

அவன் தலை, அதற்கு எதிர்மாறான திசையில் அசைந்து, தடுமாற்றத்தைக் காட்டியது.

“நாளைக்குக் கொண்டு வந்திருங்க, நாளைக்கு புஸ்தகம் வாங்க கோவில்பட்டி போகனும், திங்கட்கிழமை எல்லோருக்கும் புஸ்தகம் வந்திரும்”,

சார் சொல்கிறபோது, அவருடைய பார்வை எதிர்த்திசையில், மூன்றாம் வகுப்பில் இருந்தது. அங்கே கௌரி டீச்சர் சப்-இன்ஸ்பெக்டர் பையனை மார்போடு அணைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். அவன் எப்போதும் சப்-இன்ஸ்பெக்டர் பையனுடன் தான் விளையாடுவாள், அவனுக்கு அவளிடம் செல்லம் அதிகம்.

இன்னும் கல்யாணம் ஆகவில்லை பள்ளிக்கட்டத்தில் கௌரி டீச்சர் மட்டுமே வாயில் சேலைக் கட்டி வருவாள். காலையில் ஒன்று மத்தியானம் ஒன்று என்று மாற்றி மாற்றி உடுத்தி வருவதை பிள்ளைகள் எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள், மற்ற டீச்சர்கள் அவளைப் பொருமைக் கண் கொண்டு வெறுக்கிறார்கள். அவளுடன் யாரும் பேசுவதில்லை. ஒல்லியாய் அளவாய் அமைந்த உடலில் முகம் எப்போதும் பிரகாசிக்கும்; இன்ஸ்பெக்டர் பையனைக் கொஞ்சிக் கொண்டே அவளுடைய பார்வை சார் மீது விழுந்தது.

“நாளைக்குக் கொண்டு வரலேன்னா பள்ளிக்கூடம் வரக்கூடாது; வந்தா உதைச்சி வெளியே அனுப்புவேன்”

குரல் கடுமையாக வந்தாலும் சாரின் இதழ்கள் காற்றில் ஆடும் வயல் அலை போல் அழகாகப் புரண்டன. இதழைக் கடித்தபடி கௌரி டீச்சரின் மேல் பார்வைகள் புரளப் பேசினார்.

அன்றைக்கு ராத்திரி அய்யாவிடம் இளையவர் சொன்னபோது அவரிடம் பதில் வரவில்லை. “நாளைக்குப் பணம் கொண்டு வரலேன்னா சார் வரக் கூடாதுன்னு சொல்லிவிட்டார்”, அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை,

அவரால் சொல்ல முடியாது.

“கால் பாட்சை நெருங்கிடுச்சு, இன்னும் புஸ்தகம் வாங்கலை, எல்லோரும் கேலி செய்யறாங்க”

அய்யா குனிந்து விதைப்பதற்கான பருத்தி விதையை சாணிப் பாலில் பாசி தோய்த்து எடுத்துக் கொண்டிருந்தார்.

இளைவர், கோபம் கொண்டவனாய் சீறும் குரலில் சொன்னான் “நாளைக்குக் கொடுக்கலேன்ன, நான் பள்ளிக்கூடம் போக மாட்டேன்”

அய்யா மெதுவாக நிமிர்ந்து, பார்வையை உயர்த்தி அவனைப் பார்த்தார். அந்த இரவிலும் அவருடைய கண்கள் தீயாய்க் கனிந்து பிரகாசித்தது. தொலைவில் மையிருளில் மிதந்து வரும் இரு கொள்ளிக் கங்குகள் போல் அவனை நோக்கி அவை வந்தன.

பிசிறுபடாத குரலில் அய்யா சொன்னார் “போகலைன்னா முதுகுத் தோல் உரிந்து போகும்”.

உறுமல் இல்லாமல், அத்திரமில்லாமல் அந்தக் குரல் வெளி வந்தது. இளையவர் நடுங்கிப் போய் நின்றான். ஆணித்தரமாய் விழுந்த அந்தக் குரலில் அவன் பயந்து போய் பார்த்தான். எதிரில் அடக்கமான தீயாய் இருக்கிற அய்யாவையும், பள்ளிக்கூடத்தில் இருக்கிற சாரையும் நினைத்து இருவருக்குமிடையில் அவன் துவண்டு சோர்ந்து போனான்.

5


மறுநாள் காலை, காடல்குடியை நோக்கி இளையவர் தன்னந்தனியாய்ப் போய்க் கொண்டிருந்தான். மற்ற பையன்களைப் போகவிட்டு, அவன் மட்டும் தனியே நடந்தான்.

மேலேறும் வெயிலில் பாதி வழியில் அவன் பாதையிலிருந்து விலகி, மேற்குத் திசை நோக்கி நடந்தான். எங்காவது ஓடிப் போவது அவனுடைய எண்ணமாக இருந்தது. எல்லாவற்றையும் விட்டு, இந்தப் பள்ளிக்கூடம், அய்யா, எல்லோரையும் விட்டு ஓடிப் போக, அந்தப் பிஞ்சு உள்ளம் தவித்தது.

கருவேலங் காடுகளுக்கிடையே அவன் நடந்தான், ஊடுகாட்டு வழியே நடந்து காலாங்கரை ஓடை வழியே அவன் போனான். நடை வேகம் கொண்டது. காலாங்கரை மேல், ஒத்தையடிப்பாதையில் கால் பரப்பி நடக்கையில் இரண்டு பக்கமும் பூத்து வெடித்துச் சிதறியிருந்த நெருஞ்சி முட்கள் காலில் அப்பின. கையால் எடுத்தபோது கையிலும் பொத்தின.

தூக்குச்சட்டி அதிகமாய்க் கனத்து அவனை ஓட விடாமல் தடுத்தது. ஓடை மரத்தூரின் கீழே தூக்கச்சட்டியையும் பைக்கூட்டையும் வைத்து விட்டு வேகமாக ஓடினான். வெயில் தெரிக்கும் கரிசல் மண்ணுடே எங்கேயோ விடுபட்டு பறந்து ஓடினான்.

ஆட்டுக்காரப் பையன்கள் அவனைப் பார்த்தார்கள். கையில் பையுடனும் தோளில் தூக்குப் பாத்திரத்துடனும் பள்ளிக்கூடம் போகாமல் ஒரு பையன் உழுவுகாட்டு வழியே ஓடுவது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அவனை நோக்கி விசிலடித்து, கை கொட்டி கேலி செய்தார்கள்.

நெருஞ்சி முள் பொத்தி ரணம் கொண்ட கால்களில், கூர் கூராய் நின்ற கரம்பைக் கட்டிகள் குத்தி தள்ளாடின. வேதனையில் முனகினான். 

வெகுதூரம் ஓடிப்போய் அவன் நின்றான், எங்கே போவது? அவன் சுற்று முற்றும் பார்த்தான். கறுத்த பாலைவனமாய் நீண்டு விரிந்துள்ள கரிசல் காடுகளின் நடுவில், தனியாய்ப் பூத்த மலர் எல்லாத் திசைகளிலும் அதிசயத்துடன் பார்ப்பது போல், நடுக்கத்துடன் பார்த்தான். நாக்கு ஒட்டி, இதழ்கள் உலர்ந்தன. பலம் தெறிக்க, சிறு குஞ்சுப் பறவையாய் தவித்து நின்றான்.

திரும்பி விடுவதைத் தவிர வேறு வழியில்லை; வந்த வழியே அவன் மீண்டும் திரும்பி ஓடினான். ஓடைமரத்தூரில் விட்டுச் சென்ற தூக்குச் சட்டியையும் பைக் கூட்டையும் எடுத்துக் கொண்டு, ஆட்டுக்காரப் பையன்களைக் கடந்து பள்ளிக் கூடத்திற்கு ஓடினான்.

அவன் போனபோது, ‘பிரேயர்’ நடந்து கொண்டிருந்தது.

மத்தியானம் வரை சார் கேட்கவில்லை. சாப்பாட்டு மணியடித்தும், பணம் கேட்காததால் சார் மறந்திருக்க வேண்டும். இளையவருக்கு அது நிவாரணமாக இருந்தது. இதுபோல் சாயந்திரம் வரை கேட்காமலிருந்து விட்டால் நன்றாயிருக்கும் என அவன் நினைத்தான்.

மதியம் சார் சாப்பிடப் போகவில்லை. வகுப்பிலேயே உட்கார்ந்திருந்தார்.

எதிரே மூன்றாம் வகுப்பில் கௌரி டீச்சர் இவரை நோக்கி நாற்காலியைத் திருப்பிப் போட்டபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

டீச்சர்களும் பிள்ளைகளும் சாப்பிடப் போயிருந்தார்கள்.

சாருக்கு முன்னால் நாலைந்து பையன்கள் பார்வையை மறைத்துக் கொண்டு நின்றார்கள். “கொஞ்சம் கொஞ்சம் தள்ளி நில்லுங்க” என்றார் சார். பையகள் விலகியபோது, இடைவழி வழியே சார் கௌரி டீச்சரைப் பார்த்து குறு நகை பூத்தார்.

கௌரி டீச்சர் இளையவரைக் கூப்பிட்டாள். அவன் கையில் காசை வைத்து “ரெண்டு பக்கோடா” என்றாள். அவன் வாங்கி வந்தபோது, ஒரு பொட்டலத்தை எடுத்து அவன் கன்னத்தில் தட்டி சொன்னாள் “சாரிடம் கொடு”

சார் தாகம் கொப்புளிக்கும் பார்வையுடன் கன்னத்தைத் தடவி விட்டுக் கொண்டார்.

இளையவரும், மற்ற பையன்களும் சங்கோஜத்துடன் இவைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

கௌரி டீச்சர் ஒரு பக்கோடாவை எடுத்து இதழ்களில் வைத்தாள். பாதி பக்கோடாவை எச்சில் படுத்தி இளையவரின் கையில் கொடுத்து “அங்கே” என்றாள். இளையவர் சாரிடம் கொடுத்தான்.

அப்போது பையன்கள் சாரிடம் புஸ்தகப் பணம் கொடுத்தார்கள். ஒவ்வொருவரிடமாக வாங்கி மேஜை டிராயரைத் திறந்து சார் உள்ளே போட்டார்.

சாருடைய கைகள் மட்டும் பணத்தை வரங்கி உள்ளே போட்டுக் கொண்டிருந்தன. பார்வை எதிர்த்திசையில் காலூன்றியிருந்தது.

இளையவர் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.

சார் பேர் எழுதி வைக்கவில்லை. பணத்தை எண்ணிக் கூடப் பார்க்காமலே உள்ளே போட்டுக் கொண்டிருந்தார். கொடுத்தவர்களையும் அவர் கவனிக்க வில்லை.

அவனும் மற்ற பையன்களும் வெளியே விளையாடப் போனபோது - கௌரி டீச்சர் உட்கார்ந்திருந்த நாற்காலியின் மேல் இரண்டு கைகளையும் ஊன்றி அவளுடைய நெற்றிக்கு மேலே சார் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

சாயந்திரம் வீட்டு மணியடித்த போது இளையவர் பைக்கூட்டை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டான். தூக்குச் சட்டியைக் கையில் பிடித்துக் கொண்டான். அவனுக்கு சந்தோஷம் தலை முதல் கால் வரை வேரூன்றிப் போயிருந்தது, சார் இன்றைக்குப் பணம் கேட்கவில்லை.

இப்படியே கேட்காமல் கால் பரீட்சை வரை கடந்து விட்டால் நல்லது என அவன் மனம் கற்பனையில் மூழ்கியது தலைக்கேறிய சந்தோஷப் பெருக்கில் அவன் வெளியேறினான்.

மற்றப் பையன்களுடன் வேகமாய் வாசலைக் கடந்த போது ஒரு குரல் கேட்டது “இன்னைக்குப் பணம் கொடுக்காதவங்களெல்லாம் நில்லுங்க”

அவனைத் தகர்த்துத் தூள் தூளாக்கும் அந்தக் குரல் முழங்கியது. “பணம் கொடுக்காதவங்க மட்டும் நில்லுங்க; மற்றவங்க போகலாம்.”

நாலைந்து பையன்கள் சார் முன்னால் நின்று சொன்னார்கள்: “நான் கொடுத் திட்டேன் சார். அவர்களுக்குப் பின்னால் சேர்ந்து இளையவர் சொன்னான் “நானும் கொடுத்திட்டேன் சார்.”

சார் அவனைக் கூர்மையாகப் பார்த்தார் அவருடைய பார்வை அவனை நிலைகுலைய வைத்தது; நடுக்கத்துடன் “நான் கொடுத்திட்டேன் சார்” என்றான்.

சாரின் இதழ்களில் பழுப்பு நிறத்தில் அசிங்கமாக ஒரு புன்னகை நெளிந்தது. “எப்படா கொடுத்தே?”

“மத்தியானம் சார்.”

“பொய் சொல்லாதே.”

“இல்ல சார். மத்தியானம் உங்க கிட்டே கொடுத்தேன்”

“எங்கிட்டயாடா கொடுத்தே?” சாரின் விழிகளில் கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பு ஏறியது.

சார் மேஜைக்குக் கீழே கிடந்த புளியம் விளாரை எடுத்தார். “பொய் சொல்லாதே; பொய் சொல்றவங்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது”

“இல்லே, கொடுத்திட்டேன் சார்” பயந்து மிரளும் அவன் சொன்னான்.

“எல்லோரும் தள்ளி நில்லுங்க! இப்போ உண்மையைச் சொல்லணும்; இல்லே பிய்ச்சு எடுத்திடுவேன்.”

தண்ணீரில் நனைந்த ஒரு சின்னஞ்சிறு பறவையைப் போல், தன் முன்னால் தனியாக நின்ற அவனை நோக்கிக் குறி வைத்தார்.

காலில், முதுகில், தோளில் ‘சுளீர்’ என அடிகள் தைய்த்து விழுந்தன. “அடிக்காதீங்க சார், கொடுத்திட்டேன் சார்”.

மாறி மாறி வேகமாய் விழுந்த அடிகள் பொறுக்கமாட்டாமல் அவன் வீறிட்டான்.

“அடிக்காதீங்க சார்; கொடுத்திட்டேன் சார்”

ஒவ்வொரு அடியும் சாட்டையாய் விழுகிற போது உடலை நெளித்துக் கொடுத்து தீனமாகக் கத்தினான். “சார்” என்று பரிதாபமாகக் குரல் கிளம்பியது. அடி விழுகிற இடத்தைப் பிடித்துக் கொண்டே, சுருண்டு வேதனையில் துள்ளினான்; அடுத்த அடி வருகிற வழி நோக்கி அவன் பார்வை கெஞ்சுதலில் அழுதது.

சிவந்து, கோடுகோடாய் ரணம் பூசிய தழும்புகளுடன் உடல் குன்றிப் போய் மூலையில் சுருண்டவனை, தலை மயிரைப் பிடித்துக் கொண்டே சார் கேட்டார் “இனிமே பொய் சொல்லுவியா? எப்படா கொடுத்தே?”

அப்போதுதான் சாரைத் திகைக்க வைக்கிற பதில் அவனிடமிருந்து அழுகையினூடே வெளிப்பட்டது.

“மத்தியானம் சார், கௌரி டீச்சர் உங்ககிட்ட பக்கோடா கொடுத்த போது சார்.”

“டேய்” – சாரின் உறுமல் எல்லாத் திசையிலும் பறந்தது; ஆவேசம் கொண்டவரின் பற்கள் கடிபட்டன.

“சத்தியமா சார், மத்தியானம், கௌரி டீச்சர் உங்ககிட்டே பக்கோடா கொடுக்கச் சொன்ன போதுதான் சார்.”

விம்மல் ஒலிகளுக்கிடையே பிசிறு பட்ட சொற்களால் அவன் பேசினான்.

கணநேரத்தில் தன் அந்தரங்கத்தின் உயிர் நாடியை அவன் தாக்கியதால், சார் வசமிழந்தார். முகம் விகாரமாய் பேய் சொரூபமாகியது. தன்னுடைய எல்லாத் தாக்குதலையும் தோற்கடித்த அந்தச் சிறுவனின் தாக்குதலில் நிலை குலைந்தார்.

விளாரைக் கெட்டியாய்ப் பிடித்து, ஆகாயத்திலிருந்து பூமிக்கு அடிப்பவர் போல் குதித்து ஓங்கியவரின் கை, அப்படியே நின்றது.

சார் சுற்றிலும் பார்த்தார்.

வெளியே புறப்படத் தயாராகி நின்ற எல்லா டீச்சர்களும் வாத்தியார்களும் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

கௌரி டீச்சர் முகம் வெளிறி, நாற்காலியில் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தாள். அச்சத்தில் முகத்திலும் கழுத்திலும் வியர்வை பூக்க, உடல் குறுகிப் போய் உட்கார்ந்திருந்தாள். தலை நிமிர்ந்த போது - அவர்கள் அவளையும் சாரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சுற்றுப்புறத்தின் பார்வைகளால் தாக்குண்டவராய் சார் நின்றார். முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் கொப்புளித்தன. சமாளிக்க முயன்ற போது - முடியாமல் அவர் பார்வை கவிழ்ந்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை உயர்த்தி எதிரில் பார்த்தபோது கௌரி நாற்காலியில் உட்கார்ந்து தலைகவிழ்ந்து அழுது கொண்டிருந்தாள்.

ஓரடி பின்னடைந்து நடுங்கும் விரல்களால் கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்துக் கொண்டு, இளையவரிடம் சார் சொனனார் “சரி நீ போ.”

வேதனை தெரிக்கும் வலியில் குனிந்து தூக்குச் சட்டியை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு அவன வெளியே போனான்.

- தொடுவானம், பிப்ரவரி 1973

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்