ஒரு ஜெருசலேமின் மன ஓசை - கே.என்.சிவராமன்

ஜே.பி. என நண்பர்களால் அழைக்கப்பட்ட பா.செயப்பிரகாசம், எழுபதுகளின் புகழ்பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி. வானம் பார்த்த கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த பகுதிகளைக் கவித்துவம் ததும்பும் தன் படைப்பு மொழியில் முன்வைத்தவர். தொடக்கத்தில் தன் சொந்தப் பெயரிலும் பிறகு சூரியதீபன் எனும் புனைபெயரிலும் சிறுகதைகள் எழுதியவர். ‘ஒரு ஜெருசலேம்’, ‘ஒரு கிராமத்து ராத்திரிகள்’, ‘காடு’, ‘இரவுகள் உடையும்’ முதலான பத்துச் சிறுகதைத் தொகுப்புகளும், ‘வனத்தின் குரல்’, ‘நதிக்கரை மயானம்’, ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’, ‘ஈழக்கதவுகள்’ உள்ளிட்ட ஆறு கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன.

1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்ட மாணவர் தலைவர்களில் ஒருவரான பா.செ., முதலில் கல்லூரி ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தமிழக அரசின் செய்தி மக்கள்தொடர்புத் துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். உடல்நலம் குன்றி சமீபத்தில் இறந்த இவரைக் குறித்து அசைபோடும்போது எண்ணற்ற உணர்வுகள் அலைமோதுகின்றன.

ஏனெனில் சி.சு.செல்லப்பாவுக்குத் தமிழ் சிறுபத்திரிகை உலகில் என்ன இடம் இருக்கிறதோ அதே இடம் பா.செயப்பிரகாசத்துக்கும் உண்டு. ‘எழுத்து’ம் ‘மனஓசை’யும் இல்லையெனில் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

மிகைப்படுத்தவில்லை. இன்று காத்திரமான சிறுபத்திரிகை தீவிர இலக்கியவாதிகளாக அறியப்படும் பலர் ‘மனஓசை’யில் எழுதத் தொடங்கியவர்கள்தான். அவர்களை அடையாளம் கண்டு மேடையேற்றி அழகு பார்த்தது ‘மனஓசை’யே. இத்தனைக்கும் புரட்சிகர மார்க்சிய லெனினிய அமைப்பு ஒன்றின் வெகுஜன திரள் சார்பாக வெளிவந்த பத்திரிகையே ‘மனஓசை’. என்றாலும், அப்பத்திரிகையின் ஆசிரியராக பா.செயப்பிரகாசம் இருந்ததாலேயே அரசியல் பண்பாட்டுத் தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போலவே கலைத்தன்மைக்கும் அவரால் அழுத்தம் கொடுக்க முடிந்தது. உண்மையிலேயே அது பெரிய விஷயம். சாதனை என்றும் சொல்லலாம். ஏனெனில் ‘மனஓசை’க்கு முந்தைய காலம் தமிழ் அறிவுத்தளத்தில் பெரும் விவாதங்கள் நடந்துகொண்டிருந்த கொந்தளிப்பான கட்டம்.

நாடு, விடுதலை, நிர்மாணம், மொழிவாரி மாநிலங்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டம், அதைத் தொடர்ந்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம், நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த உழவர் புரட்சியை அடுத்து இந்தியா முழுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைக்கு எதிராகத் தொண்டர்கள் மத்தியில் நிகழ்ந்த உட்கட்சிப் போராட்டம், மார்க்சிய லெனினிய அமைப்புகளின் தோற்றம், ஆயுதப் புரட்சியும் அழித்தொழிப்பும் முன்னெடுக்கப்பட்ட சூழல், இதனால் புரட்சிகர அமைப்புகளில் ஏற்பட்ட பின்னடைவு, இந்தப் படிப்பினையில் இருந்து ஆயுதப் புரட்சிக்கு முன் மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனக் கோட்டயம் வேணு முன்வைத்த Mass Line, இதற்குப் புரட்சிகர அமைப்புகளில் ஒருசாரார் மத்தியில் கிடைத்த ஆதரவு, இதனையடுத்து குழு, கூட்டுக்குழு, வெகுஜனத் திரள் எனத் தமிழக மார்க்சிய லெனினிய அமைப்புகளில் ஏற்பட்ட பிளவு, வெண்மணியில் எரிக்கப்பட்ட உயிர்கள், தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், பொன்பரப்பி, அன்றைய ஒருங்கிணைந்த வடஆற்காடு மாவட்டம் ஆகிய இடங்களில் அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த தேவாரம் தலைமையில் வேட்டையாடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மா.லெ. தோழர்கள், அமைப்பினர், இதனை எதிர்த்துச் சட்டரீதியாகப் போராடுவதற்காக உருவான மக்கள் உரிமைக் கழகம்…

இப்படி நாடு முழுக்கவும் மாநிலம் நெடுகவும் புறச்சூழல்கள் நிலவி வந்த நேரத்தில் சிறுபத்திரிகைகள் ‘கலை கலைக்காகவே’ கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தன. இதற்கு எதிராக இடதுசாரிகள் ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என ஓங்கிக் குரல் கொடுத்தார்கள். இதற்கு மத்தியில்தான் ‘மனஓசை’ 1980களில் பிறந்தது. உண்மையில் ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற இலக்குடன் ‘மனஓசை’ பயணப்பட்டாலும், கூடவே ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டின் பக்கம் சாய்ந்தவர்களையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தன் பக்கம் இணைத்தது என்பதுதான் முக்கியமான விஷயம்.

இந்த இணைப்பே இன்றைய தமிழ் இலக்கியச் சூழல் உருவாகவும் வித்திட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘மனஓசை’ இப்படி இரு தரப்புக்கும் பாலமாக அமைந்ததால்தான் எஸ்.வி.ராஜதுரையால் துணிச்சலாக ‘இனி…’ மாதப் பத்திரிகையைக் கொண்டுவர முடிந்தது. ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் சார்பாக அனுராதா ரமணனை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘சுபமங்களா’ மாத இதழுக்கு ஆசிரியராக கோமல் சுவாமிநாதன் பொறுப்பேற்றதும் அப்பத்திரிகையின் உள்ளடக்கத்தையே முற்றிலுமாக மாற்ற முடிந்தது. இதற்கான விதை ‘மனஓசை’தான்; அப்பத்திரிகையின் உள்ளடக்கத்தை நிர்ணயித்த அதன் ஆசிரியரான பா.செயப்பிரகாசம்தான்.

அரசியல் பண்பாட்டுக் கட்டுரைகளுடன் மக்கள் நலன் சார்ந்த, அதே நேரம் இலக்கியத் தரத்துடன் சிறுகதைகள், உலகெங்கும் ஒடுக்கப்படும் மக்களின் கவிதைகள், மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்திய மேற்கத்திய கோட்பாட்டு அறிமுகங்கள் என இன்றைய இடைநிலை பத்திரிகைகளுக்கான இலக்கணங்களை மிகத் துல்லியமாக வரையறுத்துக் கொடுத்தது ‘மனஓசை’தான்.

மகாகவி பாரதி பிறந்த எட்டயபுரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இராமச்சந்திராபுரத்தில் பிறந்த பா.செயப்பிரகாசம், தன் 15 வயது வரை வறுமையை மட்டுமே உண்டு வாழ்ந்தார். சிறுவயதிலேயே தன் தாயைப் பறிகொடுத்தவர். அப்பொழுது நிகழ்ந்த நிகழ்வுகளை ‘ஒரு ஜெருசலேம்’ சிறுகதையாக வடித்திருக்கிறார். களையெடுப்பு, பருத்தி எடுப்பு, கதிரறுப்பு எனக் கூலி வேலைகள் அனைத்துக்கும் சென்றபடியேதான் பள்ளியிலும் படித்தார். அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள சென்னம்மரெட்டிபட்டி இவரது பாட்டியின் ஊர். உயர்நிலைப் பள்ளி அங்கு தொடங்கப்பட்டபோது முதல் மாணவராகச் சேர்ந்தார். அரசின் உதவிபெற்ற அந்தத் தனியார் பள்ளியைத் தொடங்கி வைத்தவர் அன்றைய முதல்வரான காமராஜர்.

எட்டாம் வகுப்பு வரை பா.செயப்பிரகாசம்தான் பள்ளியின் முதல் மாணவர் என்பதால், காமராஜர் தொடக்கி வைத்த மதிய உணவுத் திட்டத்தில் அவரிடமிருந்து முதல் மதிய உணவுப் பொட்டலத்தை இவர் பெறும்படி பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ‘காமராஜரிடம் கையேந்திய முதல் மாணவன் நான்…’ எனப் பின்னாளில் சிரித்தபடி இதைப் பதிவுசெய்திருக்கிறார். இவரது ‘கோபுரங்கள்’ சிறுகதை இதை மையமாகக் கொண்டதுதான்.

இப்படி ஆடு மேய்த்து உழவு கலப்பைப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு பாலகன், முதுகலை தமிழ் படிக்கிற வரை வந்தது பெரிய சாதனை. மதுரையில் இவரது சித்தப்பா ஆலைத் தொழிலாளியாக இருந்தார். அவர் வீட்டில் தங்கி முதுகலை வரை படித்தார். இக்காலத்தில்தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இதுகுறித்து பெருமாள் முருகனும் தேவிபாரதியும் எடுத்த நேர்காணலில் (2008, அக்டோபர் மாத ‘காலச்சுவடு’) பா.செயப்பிரகாசம் பதிவுசெய்திருக்கும் விஷயங்கள் சுவாரசியமானவை.

“ஒரு செய்தி சொல்லிடறேன். நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறபோதே இந்தியில் ராஷ்ட்ரபாஷா வரைக்கும் படிச்சேன். அது ஒரு பிராமணப் பள்ளிக்கூடம்ங்கிறதால அங்கேயே இந்தி சொல்லித் தந்தாங்க. 1957-லிருந்து 1961 வரைக்கும் பள்ளியில இந்தி ஒரு பாடமாயில்ல. ஆனா, தேர்வுகளுக்குப் போறதுக்காக இந்தி வகுப்புகள் நடத்தினாங்க. அதில் சேர்ந்து படிச்சேன். தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமா நான் பள்ளியிறுதி வகுப்பு படிக்கிறபோது முற்றிலும் ஒரு தமிழ் மாணவனாக மாறிட்டேன். அதனால ராஷ்ட்ரபாஷா தேர்வுக்குத் தயாராயிட்டிருந்தபோது மத்திமா தேர்வுக்காக நான் பெற்றிருந்த சான்றிதழையே கிழிச்சுப் போட்டேன். அந்த மொழி நமக்கு நல்லாப் புரியணும்கிறதுக்காக அப்ப இந்திப் படங்கள்லாம் நிறைய பார்ப்பேன். புரியும். அப்புறம் வேணும்னே மறக்கடிக்கப்பட்ட மொழிதான் இந்தி. கல்லூரியில் புகுமுக வகுப்பில் சிறப்புத் தமிழ்தான் எடுத்தேன். இளங்கலையிலும் தமிழ்தான். அது நான் திட்டமிட்டே எடுத்தது. அதோட தொடர்ச்சியாத்தான் 1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம். இதில் நாங்க மாணவர் தலைவர்களா அறியப்படுறோம். நா. காமராசன், கா.காளிமுத்து, நான் மூன்று பேரும் மதுரையில் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துனோம். அப்புறம் மூன்று பேருமே இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதானோம்…”

இக்காலத்தில் பா.செயப்பிரகாசம் எழுதத் தொடங்கவில்லை. வாசகராக மட்டுமே இருந்தார். மொழியாக்க நூல்களையே தேடித் தேடிப் படித்தார். அப்பொழுது புதுமைப்பித்தனோ ஜெயகாந்தனோ மற்றவர்களோ இவருக்கு அறிமுகமாகவில்லை. சரத்சந்திரரும் காண்டேகருமே இவரை ஆட்கொண்டார்கள். காண்டேகர் மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்ததன் விளைவு, மு.வரதராசனாரைப் படிக்கத் தொடங்கினார். மு.வ. இவரை ஈர்த்ததுக்குக் காரணமே அவர் காண்டேகரைப் பிரதிபலித்ததுதான். பின்னர் ரஷ்ய இலக்கியங்கள். கவிதைகளில்கூட மொழியாக்கக் கவிதைகளைத்தான் ஆரம்பத்தில் விரும்பினார்.

ஏனெனில் 60கள் மொழியாக்கங்களின் காலம். கலீல் ஜிப்ரான், இக்பால் போன்றவர்களின் கவிதைகள் மொழிபெயர்ப்பாகிக்கொண்டிருந்தன. அவற்றின் கவித்துவ வரிகளால் மாணவராக இருந்த பா.செயப்பிரகாசம் ஈர்க்கப்பட்டதில் என்ன வியப்பு இருக்கிறது?

“எனக்குத் தமிழ் எழுத்தாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை. சரத் சந்திரர், தாராசங்கர் பானர்ஜி, பஷீர், உருபு, பொற்றேகாட், தகழி போன்றவர்களின் படைப்புகள் என்னைப் பாதித்தவை. அவர்களது எழுத்துகளைப் படித்த பின்புதான் எனக்கும் எழுதணும்னு தோணுச்சு. சரத்சந்திரர் படைப்புகளிலே பெண்கள் அழுபவர்களாக மட்டுமே வந்தார்கள். பாலபருவத்தில் எனக்குள் கூடுகட்டியிருந்த துயரம் சரத்சந்திரரை வாசிக்கக் காரணமாயிருக்கலாம்…” என பா.செ., பதிவுசெய்திருப்பதற்குப் பின்னால் இருக்கும் அவரது வாழ்க்கையைக் கைதேர்ந்த வாசகரால் இப்பொழுதும் வாசிக்க முடியும்.

“‘சரஸ்வதி’யும் ‘எழுத்தும்’ எனக்கு அறிமுகமானது ஜி.நாகராஜன் வழியாத்தான். நான் புகுமுக வகுப்பு படிச்சு ஓராண்டு தோல்வியுற்று வெளியே இருந்தேன். தனிப்பயிற்சிக் கல்லூரியில் படிச்சேன். அப்ப நாகராஜன் அதில் ஆசிரியர். அவர் முதல்ல சேதுபதி உயர்நிலைப் பள்ளில ஆசிரியரா இருந்தார். பிறகு அவருடைய நடவடிக்கைகள் காரணமா சேதுபதி உயர்நிலைப் பள்ளில அவரால நீடிக்க முடியல. அதன் பிறகு தனிப்பயிற்சிக் கல்லூரியில அவரு ஆசிரியரா பணிபுரிந்தாரு. அந்தப் பயிற்சிக் கல்லூரிய முதல்ல எஸ்.டி.சிங்கற பேர்ல சங்கர நாராயணன்னு ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் நடத்தினாரு. நான் அவர்கிட்ட கணிதப் பாடம் படிச்சேன். அப்ப சினிமா தியேட்டர்ல ஜி.நாகராஜன் படத்தைப் போட்டு இவர் எங்கள் தனிப்பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றுகிறார்னு சிலைடு போடுவாங்க. அந்த அளவுக்குப் பிரபலமா இருந்தாரு. நல்லா பாடம் நடத்துவார். அவர் ஒயெம்சிஏல தங்கி இருந்தார். அப்ப ப.சிங்காரமும் அங்கே தங்கி இருந்தார். அப்பவே குடும்பத்துல இருந்து பிரிஞ்சிட்டார் நாகராஜன். அப்புறம் மதுரையில் நான் கல்லூரியில விரிவுரையாளரா இருக்குற போதெல்லாம் ஜி.நாகராஜனை பார்த்திருக்கேன்…” என இலக்கியப் பத்திரிகைகளை, தான் வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தை எல்லா நேர்காணல்களிலும் சொல்லியிருக்கிறார்.

வாழ்க்கை சார்ந்த தாக்கமும் வாசிப்பு ஏற்படுத்திய பக்குவமும் பா.செ.வை எழுத்தாளராக்கியது. படிக்கக் கிடைத்த ‘சரஸ்வதி’, ‘எழுத்து’ பத்திரிகைகளும், சேலத்தில் 1971ல் பணியாற்றியபோது காண நேர்ந்த ‘வானம்பாடி’ பத்திரிகையும் இவரது அகத்தைச் செப்பனிட்டன. என்றாலும், பா.செயப்பிரகாசத்தை முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த இடதுசாரிய கருத்தியல் பக்கம் திருப்பியது ‘தாமரை’ பத்திரிகைதான். இந்த இதழை இவருக்கு அறிமுகப்படுத்தியவர் தமிழ்நாடன். இதன் பிறகே ‘தாமரை’யில் பா.செயப்பிரகாசத்தின் ‘குற்றம்’ சிறுகதை முதன்முதலில் வெளிவந்தது. தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். அவை எல்லாமே இன்றும் பா.செயப்பிரகாசத்தின் பெயர் சொல்லும் படைப்புகள்.

1971 – 72ல் இவருக்குத் திருமணமானது. அந்த மணவாழ்க்கை இவரை முழுக்க முழுக்க இடதுசாரியாக மாற்றியது. காரணம், இவரது மனைவி மணிமேகலையின் குடும்பம். மார்க்சிய பின்னணி கொண்ட அக்குடும்பத்தினருடன் இவர் நடத்திய உரையாடல் இவரை முழு இடதுசாரியாக வளர்த்தது. அதுவே மார்க்சிய புத்தகங்களைத் தேடித் தேடி இவரை வாசிக்க வைத்து மார்க்சிய லெனினிய அமைப்பினருடன் இவரைக் கைகோர்த்து பயணப்பட வைத்தது. ‘மன ஓசை’ மாதப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இவரைப் பணிபுரிய வைத்தது.

கிராமத்து வாழ்க்கை, தொழிலாளர் வாழ்க்கை, நகர வாழ்க்கை எனப் பா.செயப்பிரகாசத்தின் எழுத்துகளை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். இதனுடன் நான்காவது கட்டத்தையும் தயக்கமின்றிச் சேர்க்கலாம். அது பிரச்சாரம். ‘மனஓசை’க்கு ஆசிரியரானதும் தன் படைப்புத்தன்மையைக் குறைத்துக்கொண்டார். இந்தக் காலத்தில் இவர் எழுதிய சிறுகதைகளிலும் பிரச்சாரம் தூக்கலாகவே இருந்தன. என்றாலும், தன் ஆசிரியத்துவத்தில் பல காத்திரமான நல்ல படைப்புகளை வெளியிட்டார். சிறப்பான பல கதைகள் வந்தன. இலக்கியச் சிந்தனை போன்ற அமைப்புகளால் அந்த மாதத்துக்கான சிறந்த கதை எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டன.

குறிப்பிடத் தகுந்த மொழியாக்கக் கதைகள், மொழியாக்கக் கவிதைகள் பிரசுரமாகின. மாற்றுப் புரட்சிகர அமைப்பில் இயங்கிய கோ. கேசவனைத் தொடர்ந்து ‘மனஓசை’யில் எழுத வைத்தார். சீரழிவுக் கலாச்சாரம் குறித்தும் சோழர் காலத்தில் நடைபெற்ற கலவரங்கள் பற்றியும் கோசவன் எழுதிய கட்டுரைகள் பெரும் திறப்பை நிகழ்த்தின. கோவை ஞானி, அ.மார்க்ஸ் போன்றவர்கள் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும், கலை இலக்கியப் பிரச்சினைகள் குறித்து நடத்திய உரையாடல்களும் விவாதங்களும் தொகுக்கப்பட வேண்டியவை. போலவே, பெட்ரோல்ட் பிரெக்ட் குறித்த அ.மார்க்ஸின் தொடர். குறிப்பாக, தோழர் வசந்தகுமார் திராவிட இயக்கக் கலாச்சாரம் தொடர்பாக எழுதிய ஆய்வுத்தொடர் அன்று பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பெருமாள் முருகன், தேவிபாரதி, மனுஷ்யபுத்திரன், இந்திரன், பாவண்ணன், பழமலை, சுயம்புலிங்கம், சுப்ரபாரதி மணியன் எனப் பலரது பெயர்களை முதன்முதலில் பார்த்ததும் அவர்களது படைப்புகள் அறிமுகமானதும் ‘மனஓசை’ வழியாகத்தான். ஆப்பிரிக்க – மூன்றாம் உலகக் கவிதைகளை இந்திரனும், மலையாளக் கவிதைகளைச் சுகுமாரனும் தொடர்ந்து ‘மனஓசை’யில் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.

தன் வாழ்நாள் முழுக்க இளம் படைப்பாளிகளைப் பா.செயப்பிரகாசம் ஊக்குவித்திருக்கிறார். அவர்களது பசியைப் போக்கியிருக்கிறார். எதைக் குறித்து எப்படி எழுத வேண்டும் எனக் கற்றுக் கொடுத்திருக்கிறார். வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். 1990களில் ஈழப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபோது நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களிலும் முதல் நபராக பங்கேற்றிருக்கிறார். இத்தனைக்கும் அப்பொழுது அவர் அரசுப்பணியில் உயர் பொறுப்பில் இருந்தார். என்றாலும், எவ்விதத் தயக்கமும் இன்றி ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். சில போராட்டம், ஆர்ப்பாட்டங்களைத் தலைமை தாங்கி வழிநடத்தியிருக்கிறார்.

திராவிடம் – மார்க்சியம் – தமிழ் தேசியம் என பா.செயப்பிரகாசத்தின் அரசியல் வாழ்க்கையைப் பிரிக்கலாம். ஆனால், தன் வாழ்க்கை குறித்து அவர் வெவ்வேறு காலங்களில் அளித்த நேர்காணல்கள் அனைத்தையும் படிக்கும்போது பளிச்சென்று ஒரு வெளிச்சம் தட்டுப்படுகிறது.

அவர் எப்பொழுதுமே மொழிப்பற்றுடன் வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் அது. இதற்கு உதாரணமாக 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து இவர் பதிவுசெய்திருப்பதைக் குறிப்பிடலாம்.

“1968 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது நான் மாணவன் அல்ல. திமுக ஆட்சிக்கு வந்தபோது கொடைக்கானலில் நாங்கள் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்தினோம். காரைக்குடியில் ஒரு மாநாடு நடந்தது. நாங்க அந்தப் போராட்டக் கனலைத் தொடர்ந்து கொண்டுபோயிட்டு இருந்தோம். கொடைக்கானலில் நடந்த மாநாட்டில்கூட இந்த அரசு எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் என எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. மாணவர் தலைவர்களேகூட அந்த அடிப்படையில் சமாதானம் அடைந்தார்கள். அதை எதிர்த்து நான், திருச்சி மாணவர் தலைவர் அஜ்மல்கான் போன்ற சிலர் மாநாட்டிலிருந்து வெளியேறினோம். இதோட தொடர்ச்சியாகத்தான் மாணவர்கள் 68இல் கோவையில் தனித் தமிழ்நாடு கொடியை ஏற்றினார்கள். திமுக அரசு இருக்கிறபோதே கோவை அரசுப் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தனித் தமிழ்நாடு கொடியை ஏத்துனாங்க. அந்தச் சமயத்துல நான் ‘முரசொலி’யில துணையாசிரியரா இருந்தேன். அப்ப, 68இல் மாணவர்கள் சென்னை ரயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்காகப் போனாங்க. போராட்டம் எல்லாக் கல்லூரிகளிலும் நடந்துக்கிட்டு இருந்தது. மாணவர் தலைவர்களான துரைமுருகன், ஜனார்த்தனம் போன்றவர்கள் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் போய் மாணவர்களைச் சமாதானப்படுத்திப் போராட்டம் வேண்டாம்னு திருப்பி அனுப்புனாங்க. ஆக, மீண்டும் மாணவர்கள் மத்தியில் எழுந்த எழுச்சியை நீர்த்துப்போகச் செய்தது திமுகதான். அவர்களுக்கு இதைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவது மட்டுமே நோக்கமாக இருந்தது. மொழியைக்கூட அவங்க அப்படித்தான் பயன்படுத்திக்கிட்டாங்க.

“67 போராட்டத்துல முன்னணிப் பாத்திரம் வகித்த சீனிவாசன் காமராஜரை எதிர்த்து நின்னு தேர்தல்ல வெற்றிபெற்றார். ஆனா, தேர்தல்ல வெற்றி பெற்றதற்கப்புறம் எல்லாருடைய இயல்புகளும் எப்படி மாறுமோ அப்படித்தான் அவரது இயல்பும் மாறியது. அப்ப அதைக் குறித்துக் கடுமையா விமர்சித்தவர்களில் நானும் ஒருவன். திமுக ஆட்சிக்கு வந்தப்பக்கூட அதைக் கடுமையா விமர்சனம் செய்தவன் நான். திமுக அரசியலிலிருந்து நான் விலகிச்செல்லத் தொடங்கியது அப்போதுதான். அந்தக் காலகட்டத்துல இன்குலாப் சென்னைப் புதுக் கல்லூரியில பயிற்றுநர் பணியில் சேர்ந்திருந்தார். அவருடைய திமுக சார்பும் அந்தக் காலகட்டத்துலதான் உடையத் தொடங்கியது. மார்க்சியத்தின்பால் எங்களிருவருக்கும் ஈடுபாடு ஏற்பட்டதும்கூட அந்தக் கட்டத்துலதான்…”

எல்லா மனிதர்கள் மீதும் எல்லாவிதமான விமர்சனங்களும் உண்டு. அதையெல்லாம் மீறி, தன் காலத்தில், தனக்கு அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் அந்த மனிதன் என்ன செய்தான், எந்தவிதமான தாக்கத்தைச் சூழலில் ஏற்படுத்தினான் என்பதை வைத்துதான் அவனது இருப்பை அளவிட முடியும். போலவே, அந்தந்த காலகட்டத்தைப் பொறுத்துதான் அந்தந்த படைப்புகளை மதிப்பிட முடியும். பா.செயப்பிரகாசத்தின் எழுத்துகளை, அவரது காலத்தைச் சேர்ந்த மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளுடன்தான் உரசிப் பார்க்க வேண்டும். வெறும் கால்களுடன் மண் தரையில் ஓடிய வீரனின் வேகத்தை ஷூக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் அதை அணிந்துகொண்டு இயந்திரத்தால் சமமாக்கப்பட்ட தரையில் ஓடும் வீரனின் வேகத்துடன் ஒப்பிடுவது தவறல்லவா?

இலக்கியம் என்பது ரிலே ரேஸ் போன்றது. உலகமயமாக்கலுக்குப் பின் பரவலான இணையப் பயன்பாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு, ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டையும், ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற வாழ்வியலையும் சிந்தாமல் சிதறாமல் இணைத்துக் கொடுத்து இன்று மைதானத்தில் ஓட வைத்துக்கொண்டிருப்பது ‘மனஓசை’தான், பா.செயப்பிரகாசம்தான். எனவேதான் இன்றைய தமிழ் இலக்கியத்தின் வேர்களில் ஒருவராக அவர் வாழ்கிறார். என்ன, கிளைகளுக்கும் இலைகளுக்கும் வேரின் வியர்வை ஒருபோதும் தெரிவதில்லை. தன்னைத் தாங்கிப் பிடிப்பதே அந்த வேர்தான் என்பதையும் அவை அறிவதில்லை.

கே.என்.சிவராமன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

போராட்டக் களங்களின் சகபயணி

பா.செயப்பிரகாசம் நூல்கள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌