கற்றலும் தேடலும் எல்லைகளற்றவை

“ஜனநாயக முறையின் அடிப்படைகளை, அதிபர் புஷ் அநாகரிகமான வழிகளில் மீறியிருக்கிறார். அவை விவரிக்க முடியாத குற்றத்தன்மை கொண்டவை”. - அமெரிக்கப் பொது நூலகப் பணியாளர் தீர்மானம்.

தற்காலிகமாகச் சில மாதங்கள் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தங்கியிருந்தேன். 19.5.2006 அன்று மழை பெய்து கொண்டிருந்தது. சியாட்டில் மழை வித்தியாசமானது. நம் ஊரில் நெருக்கிப் பெய்கிற கோடை மழை வெக்கையைக் கிளப்பி விட்டு நோய்களை உண்டுபண்ணும். குளிர் நாடுகளில் பெய்கிற கோடை மழையை ‘வசந்த மழை’ என அழைக்கிறார்கள். வேக்காடு என்ற சொல் அமெரிக்க அகராதியில் கோடை நாட்களிலும் கிடையாது. கோடை, வசந்தத்தைக் கூட்டி வருகிறது.

நட்டுக்க வெயில் அடித்த வசந்தகாலத்தில் சியாட்டின் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்துக்குள் அடியெடுத்து வைத்தேன். இயற்கை என் வருகையைக் கேலி செய்தது. சட்டென காற்றும் மழையும் வீசி நனைத்துவிட்டது.

ஸ்வெட்டர் அல்லது ஜாக்கெட் கொண்டு வராததற்கு வருந்தினேன். வீட்டிலிருந்து வசந்த காலத்தில் வெளியேறியதால் அது தேவையாயிருக்கவில்லை. தேவைப்படுகிறதோ, இல்லையோ அமெரிக்கர்கள் பெரும்பாலும் கையில் ஜாக்கெட் எடுத்து தோளில் போட்டுக் கொள்கிறார்கள் அல்லது இடையைச் சுற்றிக் கட்டிக்கொண்டு உலாத்துகிறார்கள்.

மழை பெய்தாலும் பரவாயில்லையென நண்பர் கொடுத்த குடையுடன் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தை ஒரு சுற்று சுற்றி வரக் கிளம்பினேன். கருத்தரங்கம் தொடங்க அரைமணி நேரமிருந்தது. வாஷிங்டன் ஏரிக் கரைமேல் அமைந்திருந்த பல்கலைக் கழகத்தில் பத்தில் ஒரு பகுதியைக் கூட அரைமணி நேரத்தில் பார்க்க முடியவில்லை.

வெளியே மழை, காற்று, குளிர், உள்ளே வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ‘கேனா’ அரங்கத்தில் அரசியல் வெப்பம் நிறைந்த கத கதப்பு. உலகின் ஏகாதிபத்தியப் பேரரசு என்பதைக் காட்டிக் கொள்ள உலகை மறு பங்கீடு செய்ய அமெரிக்கா நடத்தும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை ஒவ்வொரு அமெரிக்கனும் சந்திக்கிறான். ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் ஐந்து ஆண்டு ஆட்சியில் ஓரொரு போரை நடத்தி அவரவர் கணக்கை நிறைவு செய்கிறார்கள். ஆப்கான் யுத்தம், ஈராக் யுத்தம் என இரட்டைப் போர்களில் அதிபர் புஷ் தலைகொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு அமெரிக்கன் தன் தலைமுறையில் சராசரி நான்கு போர்களுக்குச் சாட்சியமாகிறான். “உலகம் இனியும் காத்திருக்க முடியாது புஷ்ஷை வெளியேற்றுங்கள்” என்ற முழக்கத்தை இன்றைய அமெரிக்கன் முன்வைக்கிறான். ஈராக் மீதான அடாவடி யுத்தம் அந்த முழக்கத்தை இன்னும் தீவிரமாய் மேலே தள்ளியுள்ளது.

அமெரிக்க மக்கள் இணைந்து புஷ் மீது விசாரணைக் குழுவை உருவாக்குகிறார்கள். ஒரு நாட்டு மக்கள் தம் அதிபர் மீது குற்றங்கள் சுமத்தி விசாரணைக் குழுவை அமைக்கிறார்கள். பல்துறை வல்லுநர்கள் பங்கேற்று விசாரணையை நடத்தி முடித்தார்கள். விசாரணைக் குழுவின் அறிக்கை சியாட்டின் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் ‘கேனா’ அரங்கத்தில் கூடியிருந்தோர் முன் சமர்ப்பிக்கப்பட்டது. நடந்த நாள் மே 19, 2006.

விசாரணைக்குழு உறுப்பினர்களும் அரங்கில் கூடியிருந்தோரும் அதிசயிக்கும்படி பொது நூலகத்துறைப் பணியாளர்கள் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். பொது நூலகத் துறை அரசின் கட்டுப்பாட்டில் இயக்குவது; “ஏதொன்றையும் அளவிட, ஜனநாயகம் அடிப்படை வாய்பாடு. வரையறை செய்வது, விளக்குவது, தகவல் தருவது என்ற நூலகவியல் முறைமைக்கு, ஜனநாயகம் அடிநாதமாகும். ஜனநாயகத்தின் அடிக்கட்டான சுதந்திரத்தைக் காப்பது, வளர்ப்பது அமெரிக்க அரசியல் தலைமையின் கடமை எனக் கருதுகிறோம். ஜனநாயக முறையின் அடிப்படைகளை அநாகரிகமான வழிகளில் அதிபர் புஷ் கடந்திருக்கிறார். அவை விவரிக்க முடியாத குற்றத்தன்மை கொண்டவை” என ஒரு முன்னுரை கொடுத்து புஷ் அரசின் குற்றங்களைப் பட்டியலிட்டிருந்தார்கள் சியாட்டில் நூலகத் துறைப் பணியாளர்கள்.

“பொது நூலகப் பணியாளர்கள் நடத்தவிருக்கும் உலக மாநாட்டுக்கு இத்தீர்மானங்களை முன்மொழிகிறது” - என துண்டுப் பிரசுரம் வெளியிட்டு விநியோகித்தார்கள் சியாட்டில் நகரப் பொது நூலகப் பணியாளர்கள். சங்கச் செயலாளர் ஒரு பெண். விசாரணைக் குழுவின் கருத்தரங்கில் பேசினார். நிகழ்ச்சி நிரலில் அவர் பேசுவதாக இல்லை.

  1. பல்கலைக் கழக அரங்குக்குள் புஷ் மீதான விசாரணைக் குழு அறிக்கையைச் சமர்ப்பிக்கும் கருத்தரங்கை நடத்தப் பல்கலைக் கழகம் எவ்வாறு அனுமதித்தது? 
  2. பொது நூலகத்துறை அரசு சார்ந்தது. அரசு பணியாளர்களான பொது நூலக அமைப்பினர் தம் நாட்டு அதிபர் மேல் குற்றச்சாட்டுகள் சுமத்த இயலுமா?
  3. இவ்வாறு - சுதந்திரமான காரியத்தை எப்படி முன்னெடுத்தார்கள்? கேள்விகள் எனக்குள் கொக்கிபோட்டன.

கற்றல் என்பது அறிதல், தேடல்; தேடலுக்கு எல்லை இல்லை. எல்லையற்று விரியும் தேடல் பயணத்துக்கு, எல்லைகள் விதித்து விடக்கூடாது என்பதைப் பல்கலைக் கழகங்கள் நூலக அமைப்புக்கள் உணர்ந்திருக்கின்றன. ஜனநாயகத்தைக் காக்கப் பல்கலைக் கழகம் நடத்தும் பயணத்துக்கு இணையாய் அதே உணர்வோடு நூலகங்கள் செயல்படுகின்றன.

மேலிருந்து கீழாக இறக்கப்படுவதல்ல அறிவு. கீழிருந்து மேலாகப் பாய்ந்து விரிவது அறிவு. மேலிருந்து கீழாக இறக்கப்படுகிற எதுவொன்றும் அதிகாரச் சாயல் பூசியதாக இருக்கும். நமது கல்வி முறையும், அதைச் செயலாக்கும் கல்வி நிலையங்களும் இந்த அதிகாரத்தின் வெளிப்பாடுகள்.

சுதந்திரமான அறிவுத் தேடலில் இயங்க வேண்டிய நமது கல்வி நிலையங்கள், தேடலுக்கான வெளியைச் சுருக்கி மேலிருந்து அதிகாரத்தை இறக்கும் கட்டமைப்புகளாக இயங்குகின்றன. ஜனநாயகத்தின் பயில்நிலமாக முகம் காட்டுவதற்குப் பதில், முற்றாக அறிவுகளை மூடும் கூடங்களாகியுள்ளன.

கற்றலும் தேடலும் என்பவை முற்றாக ஜனநாயக முறையைக் (Democratic Process) கொண்டவை என்பதை உணர்ந்து அந்த அடிப்படையில் சுயமாகத் திட்டமிடல், சுதந்திரமாகக் காரியமாற்றல் நடைபெற வேண்டும். கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரப் பல்கலைக் கழகத்தில் - சீனாவில் மாவோவின் கலாசாரப் புரட்சிக்கு எதிராக நூல் எழுதிய இருவர் - இவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் - அழைக்கப்பட்டு உரையாற்றினார்கள்.

அமெரிக்க அதிபர் புஷ் மூன்று மாதங்கள் முன் சீனா போய் சில அறிவுரைகள் வழங்கி விட்டு வந்ததும், அந்த வரத்தால் உயிர்பெற்று எழுந்து வந்தவர்கள் போல் இந்த எழுத்தாளர்கள் உரையாற்ற அழைக்கப்பட்டதையும் இணைத்துக் காண வேண்டும். “மாவோ சிந்தனைகள் பற்றியும், கலாசாரப் புரட்சி பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்று பேசினீர்கள். கவலையோ, அக்கறையோ கொள்ள வேண்டாத ஒரு விசயத்தை நீங்கள் இவ்வளவு தூரம் வந்து விளக்க வேண்டிய அவசியம் என்ன?” அரங்கத்தில் அமந்திருப்போரிடமிருந்தே கேள்வி வெளிப்பட்டது.

முதலாளியத்துக்கு ஆதரவாகவும், மார்க்சியத்துக் எதிராகவும் கருத்துக்கள் வைக்கப்பட்டதால் மாணவர்கள் மார்க்சியத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டனர். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் அறிவியல் வரையறை நடைமுறையாக்கப்பட்டது. மார்க்சியம் - பாட்டாளி வர்க்க விடுதலை முதலாளிய அரசு உடைக்கப்பட்ட இடத்தில் மக்களின் அரசு உதித்தல் - என அடுத்த கருத்தரங்கம் கலிபோர்னியா பல்கலைக்கழக அரங்கில் ஏற்பாடாகிறது. “மார்க்சியம் - இதுவரை நாங்கள் அறியாத பக்கம் அறிந்து கொள்ள முடிந்தது” என மாணவர்கள் அதிசயித்தார்கள்.

கற்றல், தேடல் கரை காண முடியாதவை எனக் கல்வி நிலையங்கள் கருதிச் செயல்பட்டதைக் காண வியப்பு எழுகிறது. ஜனநாயக அடிப்படையில் நூலகப் பணி கட்டமைக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிப்பது, கருத்துத் தெரிவிப்பது, வழிகாட்டுவது என்ற அறிவியல் பணியை ஜனநாயக வழிமுறையில் நிறைவேற்றுகிறார்கள். அறிவியல் பூர்வமாக ஜனநாயகத்தினை வளர்ப்பதும், ஜனநாயக பூர்வமாக அறிவியலை வளர்ப்பதும் என்ற இருவழிகளில் செயல்படுகிறது நூலகம், அதனால் பொது நூலகங்களில் கலை இலக்கியம், பிரச்சினைகள் முதல் இன்றைய தினத்தில் உச்சம் கொண்டுள்ள தீவிரமான சமுதாய அரசியல் பிரச்சினைகள் வரை விவாதிப்பதை அவர்களே ஏற்பாடு செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பொது நூலகங்களில் அறைக்கூட்டம், கருத்தரங்கம் நடத்துவதற்குக் கூடக் காவல்துறையின் அனுமதியைப் பெற வேண்டியிருக்கிறது. தேவநேயப் பாவாணர் நூலகத்தில் கருத்தரங்க அறையைப் பெற ஆயிரம் விளக்குக் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டியிருக்கிறது என்பதை அமெரிக்கர்களிடம் தெரிவித்த போது சிரித்தார்கள். தங்கள் வசம் உள்ள சுதந்திரத்தைத் தங்களின் ஜனநாயகத்தை விசாலப்படுத்துவதற்குப் பதில் காவல்துறையின் கையில் எப்படிக் கொடுத்தீர்கள் என்று நூலகத்துறையினர் வியந்தார்கள்.

சியாட்டில் பொது நூலகப் பணியாளர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் சில முக்கியப் பகுதிகள். “ஏதொன்றையும் அளவிட ஜனநாயகம் அடிப்படை வாய்பாடு, நமது தொழில் முறைக் கடமைகளைப் புரிந்து கொள்ளுதல், விளக்குதல், தகவல் வழங்குதல் வழிகாட்டல்களுக்கு ஆதார மதிப்பீடாக (Core value) ஜனநாயகம் விளங்குகிறது. நவீன நூலகப் பணியியல் (Modern Liberarianship) இந்த ஜனநாயகத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

சுதந்திரமாக வினைபுரிதல், சுதந்திரமான நடவடிக்கையை வளர்த்தெடுத்தல், அமெரிக்கத் தலைவர்களின் கடமை எனப் பொது நூலகப் பணியாளர் அமைப்பு கருதுகிறது. புதிதாகக் கொண்டு வரப்பெற்ற அமெரிக்க தேசப்பற்றுச் சட்டத்தின் (Patfriotic Art) வரன்முறையற்ற அதிகாரங்கள், நடைமுறைகள் பொது நூலகப் பயனாளிகளின் உரிமைகளில் அத்துமீறித் தலையிடுவன.

ஜனநாயகத்தின் அடிப்படைகளைத் தகர்க்கிற பல அநாகரிக வழிகளை இன்றைய அமெரிக்க அதிபர் புஷ் மேற்கொண்டு வருகிறார். விவரிக்க முடியாத குற்றங்களின் அதிபராகி இருக்கிறார் எனக் கருதுகிறோம்.

  1. தவறான செய்திகள் புனையப்பட்ட தகவல்கள் அடிப்படையில் ஈராக் மீது போர் தொடுத்தது. 
  2. “காத்ரினா’ புயலால் பாதிக்கப்பட்ட நியூஆர்லியன்ஸ் மக்களுக்கு அவசர அவசியமாகச் செய்ய வேண்டிய உதவிகளைப் புறக்கணித்து அந்த நிதி ஒதுக்கீட்டை அது போன்ற மனிதாபிமான உதவிகளுக்கான நிதியைக் கோடிக்கான டாலர்களை ஈராக் யுத்தத்துக்கு மடை மாற்றியது. 
  3. செப்டம்பர் 11 (2001) நிகழ்வுக்குப் பின் தேசப்பற்றுச் சட்டம் ஒன்று, தேசப்பற்றுச் சட்டம் இரண்டு என மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றியது. அவை தொடர்பான அதிகாரங்கள், ஆணைகள், நடவடிக்கைகளை உண்டுபண்ணி, ஜனநாயகத்தின் ஆதார உரிமைகளைப் பறித்தது; 
  4. பயங்கரவாதிகள், அவர்களுக்குத் துணை செய்வோர் என்று தாங்கள் கருதுகிறவர்களை விசாரணை செய்தல், அடித்தல், உதைத்தல், போதை மருந்து உட்கொள்ள வைத்தல், தூக்கச் சிதைவு போன்ற சித்திரவதைகளுக்கு உள்ளாக்கல், அவைகளை நியாயப்படுத்தல். 
  5. எதிரிகள், சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆகியோருக்குச் சட்ட பூர்வ வழிமுறை களை மறுத்தல், அவர்களை விசாரணையின்றிச் சிறையில் நெடுங்காலம் வைத்திருக்கும் உத்தியைப் பயன்படுத்தல். 6. கணினி, கிரடிட் கார்டு, நூல்கள் வாங்கல், வழங்கல் போன்ற மின்னியல் தொழில் நுட்பங்களைக் கண்காணிக்கும் முன் அனுமதியற்ற (warrantless) அதிகாரம் தேசப் பாதுகாப்பு உளவு நிறுவனங்களுக்கு (C.I.A., F.B.I., N.S.A.) வழங்கப்பட்டமை.

நூலகர்களாகிய நாங்கள் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதில் அரசின் ஒளிவுமறைவற்ற திறப்பான குணங்களை வலியுறுத்துவதில் வேறு எவரிலும் மேலானவர்கள் எனக் கருதுகிறோம். அறிவுச் சுதந்திரம், நூலகர்களின் பிரதானக் கோட்பாடு, கருத்து மாறுபாடு கொண்டவர்களைக் குற்றவாளி யாகக் கருதுதல், தாக்குதல், அடக்குமுறை ஆகியவை இந்தப் பிரதானக் கோட்பாட்டுக்கு ஊறு விளைவிப்பது எனக் கருதுகிறோம்.

எனவே அமெரிக்க அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் அதிபர் புஷ் பதவி விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். வளரும் முற்போக்கு இயக்கங்களை ஆதரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இனியும் “உலகம் காத்திருக்க முடியாது. புஷ்ஷை வெளியேற்றுங்கள்” எனும் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்குக் கரம் நீட்டுகிறோம்”.

- உங்கள் நூலகம்,நவம்பர் - டிசம்பர் 2006

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

மலேயா கணபதி

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?