மர்ஜேன் ஸத்ரபி (Marjane Satrapi)

திரைப்படக் கொட்டகைக்குப் போய் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிய அனுபவம் இளமையில் ஏற்பட்டதுண்டு. பலரும் இது போன்று சந்தித்திருக்கலாம். ஒரு எழுத்தாளரின் கூட்டத்துக்குப் போய் இடம் கிடைக்காமல் திரும்பி வந்தது என் வாழ்வின் முதல் அனுபவமாக நிகழ்ந்தது.

முந்தியநாள் என்னைத் தொட்டிருந்த ஏமாற்றத்துக்குப் பிறகு, எச்சரிக்கையாகி விட்டேன். ஒரே மாதிரி கசப்பு மீண்டும் மீண்டும் கை கோர்த்து வரக்கூடாது என்ற தவிப்பில் நகர அரங்கில் மர்ஜேன் ஸத்ரபியின் சந்திப்பு, உரையாடல் மாலை 6.30 மணிக்கு 5.30 மணிக்கே போய் உட்கார்ந்துவிட்டேன். அப்போதுதான் அரங்கைத் திறந்தார்கள்.

மணிக்கணக்கில் வரிசையில் நின்று நெருக்கியடித்து சட்டை டார் டாராகி டிக்கெட் வாங்கிப் போய் உட்கார்ந்து பார்த்த பழைய திரைப்படக் கொட்டகை அனுபவம் மேலெழுந்து வந்தது, முந்திய நினைவுகள் மேலெழுந்து வந்து நம் மீது கவிகிற நேரம் இந்த சும்மா இருக்கிற நேரம் தான்.

“இன்றைய பேச்சாளரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இதில் எழுதுங்கள். உங்களிடம் வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கொடுங்கள். சேகரித்து அவர்கள் எழுத்தாளரிடம் கொண்டு செல்வார்” என்று அச்சிடப்பட்ட படிவம் அரங்கின் வாசலிலேயே கையில் சொருகப்பட்டது.

மர்ஜேன் ஸத்ரபியின் “பெர்ஸ்பொலிஸ்” (Persepolis) ஒரு தன் வரலாற்று வரைபட நாவல். வரலாற்றில் செகசோதியாய் இருந்து இப்போது இல்லாமல் போன பாரசீகப் பேரரசுக்கு உள்ளடங்கிய ஈரானின் தலைநகரம் “பெர்ஸ்பொலிஸ்” . நேரிலும் சரி , வரலாற்றிலும் சரி ஒரு சின்னாபின்னப்பட்ட வாழ்வாக நிற்கிறது.

மர்ஜேனி ஈரானில் 6 வயதிலிருந்து 16 வயது வரை தலைநகர் டெஹ்ரானில் வாழ்ந்தார். அப்போது மன்னராட்சி நடந்தது. மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு இஸ்லாமியப் புரட்சிக் குடியரசு உருவாகியது. பெயர் சொல்லும்படியான எந்த அடையாளத்தையும், மறுமலர்ச்சியையும் அது பெண்களுக்குக் கொண்டுவரவில்லை. மன்னராட்சிக் காலத்தைவிட இஸ்லாமியக் குடியரசில் பழமைவாதம் முன்னுக்கு வந்தது. சுதந்திரமாய்ப் பேச, எழுத அனுபதிக்கப்படாமல் பெண்கள் சுயமாக வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் கழுத்துப் பிடியில் இருந்தது சனநாயகம்! அப்படியானால் அதன் பெயர் அதுவல்ல.

“பெர்ஸ்பொலிஸ்” ஸத்ரபியின் சிறுபிராய நினைவுகளை விவரிக்கும் உருவகப் பெயர். இரு பாகங்கள் கொண்டது. அது பற்றிய புத்தக மதிப்பீட்டுக்கு 12 கேள்விகள் அடங்கிய படிவம் அச்சிட்டிருந்தார்கள். அதைக் கூட்ட ஏற்பாட்டாளரிடம் உடனடியாகச் சேர்க்க வேண்டியதில்லை. போதுமான காலம் எடுத்துக்கொண்டு பொது நூலகத்துக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.

மர்ஜேன் 45 மணித்துளிகள் பேசுவார், கேள்வி நேரம் அரைமணி என திட்டமிடப் பட்டிருந்தது. கேள்விகள் நிறைவடைந்தன. திரண்டிருக்கும் கூட்டத்தின் கேள்விகளின் பெரு மழையை எதிர்நோக்கி மர்ஜேன் தன் சொற்பொழிவை அரைமணிக்குள்ளாக சுருக்கிக் கொண்டார்.

அரைவட்ட வடிவ அரங்கு. இசை, நாட்டியம், நாடகம் என்ற நிகழ்த்துக் கலைகளுக்கு வசதியாக அரைவட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரம் பேர் அமர்ந்திருந்தார்கள். நகர அரங்கில் நடந்தேறும் நிகழ்ச்சிகள் எப்போதும் தரத்தின் உயரத்தை எட்டிவிடுவதால், அமெரிக்காவில் எங்கெங்கேணும், குறிப்பாக "சியாட்டில்' நகரில் பிறந்து பிரசித்தி பெற்ற ஸ்டார் பக்ஸ் காஃபி (Star bucks coffee) நிறுவனம் பிஸ்கட், காஃபி, தேநீர் வழங்கினார்கள்.

தமிழகத்தில் மசால் வடை, மெது வடை, போண்டா, பன், பிஸ்கட் போல அமெரிக்காவில் குக்கீஸ் என்பது விருப்பமான திண்பண்டம். அந்த நொறுக்குத் தீனியும் தேநீருக்கு முன் தந்தார்கள்.


பெர்ஸ்பொலிஸ்

முதல் பாகம் ஸத்ரபியின் பால்யகால சுயானுபவங்கள்

இரண்டாம் பாகம் பருவ வயதின் சுயனுபவங்கள்


"எம்பிராய்டரீஸ்' பாரிஸ் வந்து தங்கிய பின் எழுதிய பழைய நினைவுகளின் பின்னல்.

தன் வரலாறாக மூன்று நாவல்கள், இதை கிராபிக்ஸ் நாவல் என மதிப்பிடுகிறார்கள். நிகழ்வுகளை ஆங்காங்கே கோட்டுக்கலை வழியே, கேலிச் சித்திரங்கள் மூலம் சித்தரிக்கின்றார். வரைபடக் கலையை கறுப்பு வெள்ளையில் மட்டுமே ஏன் கையாளுகிறார் என்ற கேள்வியும், அவருடைய விளக்கங்களும் சுவாரசியமானவை.

அனுபவங்கள் ஒரே மாதிரியானவை அல்ல. எத்தனை மனிதர்கள் உண்டோ, அத்தனை வகை வகையான அனுபவங்கள், ஒருவர் என்ன பாத்திரமாகத் தன்னை சமுதாயத்தோடு பொருத்திக் கொள்கிறாரோ அம்மாதிரியான குணங்களின் உருவாக்கம். ஒருவருடைய அனுபவத்தை வாசிக்கிறபோது, அது தன்னையோ அல்லது தன்னைச் சுற்றியோ எங்கோ தொடுவது போல் தென்படுகிறது. அதன் காரணமாய் சமகால சித்தரிப்பாக அது மாறிவிடுகிறது. சமகாலத்தின் சரியான சித்தரிப்பு காரணமாக முந்திய காலத்தின் காவிய, இலக்கியப் படைப்பாளிகள் நம்மருகே உட்கார்ந்திருக்கிறார்கள்.

தன் வரலாற்று நாவல் முறையில் வடிவமைத்துக்கொண்டே போவதில் ஷெராபியின் வெற்றி இது. கோட்டுக்கலை சார்ந்த காமிக்ஸ் என்ற வரைபடக் கலையும், கார்ட்டூன் என்ற கேலிச்சித்திரமும் ஒரு உதிரத்தின் இரட்டைப் பிறவிகள். இரட்டை பிறவிகளாக இருக்கிற போதும், அதனதன் தன்மையில், தனித்தனிக் குணாம்சங்கள் கொண்டவை. அதே போல் காமிக்ஸ் வாசிப்புக்கும், இலக்கிய படைப்பு வாசிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். இரண்டும் இரு துருவ முனைகள்.

காமிக்ஸ் வாசிப்பில் ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்துக்குத் தாவிக்கொண்டே போகிற தொடர்ச்சி முழுமை கிடைக்கிறது. முழுமை அதை முடிக்கிற எல்லையில் மட்டுமே நின்று கொண்டிருக்கும். குறிப்பிட்ட தனித்தனி வரைபடம் முழுமையைத் தராது. காமிக்ஸில் தனித்த ஒரு படம் அல்லது ஒரு கொத்துப் படங்கள்கூட ரசனையையும் வாசிப்பின் லயத்தையும் தருவதில்லை.

இதிலிருந்து எப்போதும் வித்தியாசப்பட்டு நிற்பது இலக்கியப் படைப்பும் வாசிப்பும். ஒரு வாசகம், ஒரு பகுதி அல்லது சித்திரிப்பை ஒரு படைப்பிலிருந்து தனியே பிரித்துவிட முடியும். அது தனியாகவும் மணம் வீசும். கொத்தாகவும் மணம் வீசும். தனியேப் பிரித்துப் பேச, எடுத்துரைக்க, மேற்கோள் காட்ட, வாசிக்க பொருள் நிறைவுகொள்ள என எல்லா வகையிலும் பரிணமிக்கும். அது முழுமைக்குள் ஒரு புள்ளி. முழுமையை தனக்குள் அடக்கிய ஒரு புள்ளி.

மர்ஜேனின் கேலிச் சித்திரம் வெறுமனே காமிக்ஸ் அல்ல. ஒரு காமிக்ஸ் எவ்வகையிலும் தொடமுடியாத காவிய உணர்வு எனும் எல்லையை அவை தொட்டு நிற்கின்றன. தனியாக அந்த வரைபடத்தைக் கொண்டே, அதனைச் சுற்றி இயங்கும் நிகழ்காலத்தையும் புரிந்துகொள்ளலாம்.நிகழ்காலங்களும் அதற்கு உள்ளூடான அர்த்தமும் அதைச் சுற்றி சுற்றி வருகின்றன.

மர்ஜேன் ஸத்ரபியின் பால பருவம், பல கொதிநிலைகளும் எரிமலையின் கொதித்து அடங்கிய சாம்பலும் படர்ந்திருந்தது. 6 முதல் 16 வயது வரை ஈரான் தலைநகர் டெக்ரானில் வசிப்பு, மன்னர் "ஷா' ஆட்சி தூக்கியெறியப்பட்டது அந்த ஆண்டுகளில்தான். இஸ்லாமியப் புரட்சியரசு உருவாக்கம் கொண்டது அந்த ஆண்டுகளில்தான். ஈராக்குடன் அழிவுப் போர் நிகழ்த்தப்பட்டது அந்த ஆண்டுகளில்தான்.

தன்னை யாரென வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு மார்க்சிய வாதியின் மகள். மகுடம் பதிக்கப்பட்ட அரச பரம்பரையின் பேத்திகளில் ஒருவர். ஈரானின் வரலாற்று நிகழ்வுகள், அவருடைய பால பருவத்தின் பத்து ஆண்டுகளை உருட்டிக்கொண்டு போயின. அறிவுக்கூர்மையுடன் வளரும் சுட்டித்தனமான பெண்ணான அவரை ஈர்த்த அந்தப் பொழுதின் நாளாந்த நிகழ்வுகள் பெர்ஸ்பொலிஸ் ஆக உருக்கொண்டன.

அதிகார அரசு நடத்திய அடக்குமுறைகளை அவர் கண்டார். தூக்கி எறியப்பட்ட மன்னர், அவர் சுழற்றிய சவுக்கடிகள், இஸ்லாமியப் புரட்சியின் நாயகர்கள், அவர்களின் மிருத்தனமான அடக்குமுறைகள், இவை ஏறி உட்கார்ந்ததால் சப்பழிந்துபோன மனித சுயம், தனிமனித உணர்வுகள் இக்காட்சிகள்தாம் "பெர்ஸ்பொலிஸ்'.


கிராபிக் நாவல் வடிவைக் கையாளவேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு உதித்தது எப்படி? இவ்வகையில் முன்னோடிகளாயிருந்தோரிட மிருந்து இந்த மனத் தூண்டுதலைப் பெற்றுக் கொண்டீர்களா?

ஸத்ரபி : இல்லை. உண்மையைச் சொன்னால், அது தற்செயல் இணைவு, நான் காமிக்ஸ் வாசி அல்ல. ஈரானில் காமிக்ஸ் வாசிப்பு, காமிக்ஸ் புத்தகங்கள் என்ற கலாச்சாரமே இல்லை. ஒருசில கேலிச்சித்திரங்கள், வரைபடங்கள் என அங்கங்கு தென்பட்டது. ஆனால் முழு கேலிச் சித்திரப் புத்தகமாக இல்லை. எனது சிறு பிராயத்தில் அத்தகைய புத்தகத்தை பார்த்தது இல்லை. என் பால்ய பருவத்தில் கண்டதெல்லாம் "டின்டின்' ஆனால் டின்டின் சத்தமாய்ப் பேசி, சலிப்படைய வைத்தது. ஆகவே அவற்றில் நான் ஆர்வம் காட்டவில்லை.

பாரிஸில் சில ஓவியக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புப் பெற்றேன். அந்த ஒவிய நிலையம் எனக்குப் பிடித்திருந்தது. படிக்க, வரைய, பயில உங்களுக்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. வீடு அதற்குத் தோதான இடமில்லை. அவர்கள் எல்லோரும் கேலிச் சித்திர ஓவியர்கள். அவர்கள்தாம் காமிக்ஸ் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

கேலிச் சித்திரம் எழுத முயற்சி செய்யும்படி தூண்டினார்கள். காமிக்ஸ் நீண்ட நெடிய நேர வேலை. ஒவ்வொரு படமாக நீங்கள் அதை நகர்த்த வேண்டியிருக்கிறது. கடலில் ஒரு துளிதான். ஒவ்வொரு துளியாய் சேர்த்துச் சேர்த்து கடலை நீங்கள் காட்டவேண்டும். நான் அதை செய்ய விரும்பவில்லை. ஈடுபட்டுச் செய்யுமளவு பொறுமையும் இல்லை. ஒரு புத்தகத்தை முடிக்க ஒன்பது மாதங்கள் அல்லது ஓராண்டு ஆகியது.

ஆனால் விசயத்தை படமாக உருவகிப்பது பிரதியும் பிம்பமும், விசயமும் படிமமும் என்பது எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. அதில் நான் நீண்ட தொலைவு பயணிக்க முடியும். என்னுடன் கூடவே வாசகனையும் பயணிக்கச் செய்யமுடியும். எழுதவும், வரையவும் பெருவிருப்பம் கொண்டவளாதலால் உண்மையில் அதன் பின்தான் கேலிச் சித்திரம் எனக்கு ஊடகமாக இருக்க முடியும் என்பதைக் கண்டேன். இரண்டாவது பக்கத்திலிருந்து முதல் பக்கத்தை உருவாக்கினேன். இதுதான் நான் செய்யவேண்டியது என்பதைத் தெரிந்துகொண்டேன்.


எழுதுகிறபோது, வாசகர்களை மனதில் நிறுத்திக்கொண்டு எழுதுவீர்களா?

ஸத்ரபி : இல்லை. அவர்களைப் பற்றிய கவலையில்லாமல் எழுதுகிறேன். நீங்கள் கவனித்திருப்பீர்கள். Publish என்ற சொல்லிலேயே public என்ற சொல்லும் அடங்கி இருக்கிறது. நூல் வெளியானதும் மக்கள் அதை விரும்புகிறார்களா, இல்லையா என அறியவே நான் ஆசைப்படுவேன். இது எல்லோருக்கும் உண்டுதான். நான் எனக்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்கிற எவரும் உண்மையில் அப்படியில்லை. அது ஒரு பேச்சுக்குத்தான். எழுதுதல் அல்லது படைத்தல் என்பது சுய மோகத்திலிருந்து பிறப்பெடுப்பது, ஒவ்வொருவரும் என்னைப் படிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், என் புத்தகங்களை பெருவாரியாக வாங்கவேண்டும் என்ற பெருவிருப்பின் அடிப்படையில் செயல்படுவது. அதே நேரத்தில் நான் எழுதுகிறபோது வரைகிறபோது வாசகரை நினைவில் கொள்வதில்லை. ஒரு நகைச்சுவையை நான் உண்டாக்குகிறபோது நிச்சயமாக ஒரு நண்பன் எனக்குள் தோன்றுவான். அந்த நண்பன் சிரித்தே தீருவான் என நினைத்துக்கொள்வேன்.

என் தாய்நாடு பல வரலாற்றுத் தவறுகளைச் செய்தது. தவறான புரிதல்களினால் அவை நடந்தன. இத்தவறுகளின் உள்மையத்தை நான் புரிந்துகொண்டது போலவே வெளிப்படுத்தும் முறையால் என் மக்கள் இன்னும் கூடுதலாய்ப் புரிந்துகொள்ள வேண்டுமெனக் கருதினேன். எழுதும் வேளையில் அதை முக்கிய அளவு கோலாகக் கொண்டேன். நான், எனக்கு மட்டுமே எழுதும் எழுத்தை விரும்பவில்லை. எழுத்து நான் மட்டுமே புரிந்துகொள்ள அல்ல. "வா, வந்து பார். உண்மையில் அது எப்படியிருந்தது' என்று அந்தப் புத்தகம் உரக்கச் சத்தமிட வேண்டும். ஆட்சி சர்வாதிகாரம் கொண்டது என்பது மட்டுமல்ல. மக்களே அந்த விருப்பத்தோடு இருந்தார்கள் என்பதுதான். ஆனால் ஒவ்வொரு தடவை நகைச்சுவையைப் படைக்கிறபோதும் நான் ஒரு நண்பனை மனசில் கொண்டிருப்பேன். நாம் ஒவ்வொருவரும் நண்பர்களை ஈர்க்க, பாதிக்கவே விரும்புகிறோம்.


"பெர்ஸ்பொலிஸில்' முகத்திரை அணிவது பற்றிச் சித்தரித்திருக்கிறீர்கள். முகத்திரை அணிவதை தடை செய்வதுபற்றி பிரான்சில் அது மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கியது இல்லையா?

ஸத்ரபி: ஆம் அவர்கள் இந்த சர்ச்சையில் என்னைப் பெரிதும் ஈடுபடுத்த விரும்பினார்கள். இஸ்லாமியப் பெண்களையும் பங்கேற்கச் செய்ய நினைத்தார்கள். இந்த முகத்திரையால் எத்துணை பாதிப்புகள் எனக்கு! முகத்திரைக்கு நான் எதிரியில்லை. ஆனால் அது அணியப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதை நான் எதிர்க்கிறேன். தலைநகர் டெஹ்ரானில், ஏழைகள் வாழும் தென் டெஹ்ரானிலிருந்து செல்வந்தர்கள் வாழும் வட டெஹ்ரான் வரை ஒரு நடை போய் வருவீர்களானால், ஸ்கார்ப்பும், புர்காவும் அணிந்த பெண்களை பார்க்க முடியும். அதே நேரத்தில் அணியலாமா கூடாதா என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. இதுதான் சரியானது. ஆனால் அதுவே சட்டமாக்கப்படுகிறபோது, உங்களுடைய தலையில் ஏதோ ஒன்றை அணிய வேண்டும் என்று வலியுறுத்துகிறபோது அதை நான் தீவிரமாக எதிர்ப்பேன். மத ஈடுபாடுள்ள யார் தலை மீதும் நான் இருக்க விரும்பவில்லை. நான் இருக்கமாட்டேன். இந்த வழியா, அந்த வழியா என்று சொல்கிற நீதிபதியாக மற்றவர்கள் இருப்பதையும் நான் எதிர்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை முகத்திரையை தடைசெய்வதும், முகத்திரை போடு என்று சொல்வது போலத்தான். இதைச் செய், அதைச் செய்யாதே என்று மக்களுக்குக் கட்டளையிடாதீர்கள்.

முகத்திரை அணியும் விவாதம் பிரான்சில் சூடுபிடித்தபோது அவர்கள் என்னையும் அதில் ஒரு சாட்சியாக்க விரும்பினார்கள். “இந்த ஈரானியப் பெண்ணைப் பாருங்கள். எவ்வளவு துன்பப்பட்டிருக்கிறாள்” என உலகுக்குக் காட்ட எண்ணினார்கள். மிக மோசமானது இது. ஏனெனில் புர்கா அணியும் சட்டத்தை இஸ்லாமியப் பெண்கள் எல்லோருமே எதிர்த்தார்கள். நோபல் பரிசு பெற்ற (2005) சிரின் எபாடியிலிருந்து என் வரை எல்லோருமே எதிர்த்தோம். இந்தச் சட்டத்துக்கு எதிரானவர் நாங்கள். இதைச் செய் என்று அவர்கள் சட்டம் கொண்டுவந்தது போலத்தான் இதைச் செய்யாதே என்று இங்கு சட்டம் கொண்டு வருவதும்.


இங்கு (அமெரிக்காவில்) ஒவ்வொன்றையும் பேச உரிமையிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் உங்கள் பேச்சில் செயலில் அரசியல் தொனி மிகுதிப்படுமா?

ஸத்ரபி: என்னுடைய எல்லாக் கதைகளும் அரசியல் தொனி கொண்டதுதான். என் தந்தைவழிப் பாட்டனார் இட்லர் போல சிறு மீசை வைத்திருந்ததை தற்போது எழுதிக் கொண் டிருக்கும் நூலில் குறிப்பிட்டுள்ளேன். அவர் யூதர்களுக்கு எதிரானவர் இல்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஈரான் போன்ற நாடுகளுக்கு மிகப் பெரிய எதிரியாக இருந்தது பிரிட்டன். உலகெங்கும் அவர்கள் அட்டகாசம் செய்தார்கள். ஜெர்மனி, பிரிட்டனுக்கு எதிரி. ஆகவே ஜெர்மனி எங்கள் நண்பன். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அளவுகோல் இது. அதனாலேயே என் தாத்தா இட்லர் மீசை வைத்துக்கொண்டார்.

இரண்டாவது உலகயுத்தம் மிகப்பெரிய தேவை என்று மேற்குலகம் நினைத்தது. மேற்கு நாடுகளுக்கு அது அத்தியாவசியமான தேவையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் முழு உலகத்துக்குமல்ல. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அல்ல. இதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். அமெரிக்கா முதல் ஐரோப்பா வரையிலான உலகின் மக்கள்தொகையில் பத்து சதவீதமேயான அறுநூறு கோடி வெள்ளையர்கள் இவர்கள். பத்து சதவீத எண்ணிக்கையுள்ளவர்களின் பிரச்சனையை உலக முழுவதுமுள்ள நூறு சதவீத மக்களின் பிரச்சனையாகக் காட்ட முயன்றார்கள். நம்ப வைக்க அவர்களால் இயலாது. ஆனால் அதுதான் வெள்ளைத் திமிர். வெள்ளைச் சுயமோகம். நாம் மட்டுமே, நம்முடைய பிரச்சனை மட்டுமே உலகின் பெரும்பான்மையான, ஆகப் பெரிய பிரச்சனை. ஆனால் அவர்கள் எதிர்கொள்கிற பிரச்சனையை எல்லாம் நம்முடையதாகக் காட்ட முயல்கிறார்கள். நம்முடைய பிரச்சனையாக தீர்ப்புரைக்கிறார்கள்.

எண்பதுகள் கொடூரமானது. பிரான்சின் மக்களுக்கு நான் இதைச் சொல்லவில்லை. பிரான்சு மக்களுக்குக்கூட அது பயங்கரமானதுதான். ஏனெனில் நாங்கள் ஒரு போரை (ஈராக்குடனான போர்) நடத்தினோம். ஈரான் அரசியல் கைதிகளை பிரான்சு கொன்று வீசியது. கொரிய யுத்தத்துக்குப் பின் (வடகொரியா, தென்கொரியா யுத்தம்) ஈரான் ஈராக் யுத்தம் தான் மிகப்பெரியது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படுவோர் யார்? இந்தப் போரில் கொல்லப்பட்டோர் தொகை ஒரு மில்லியனுக்கு மேல் இருக்கும். யாரும் அதைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஈராக்குடனான யுத்தத்தில், மேற்கு நாடுகள் முழுவதும் எள்ளத்தனை கேள்வியும் இல்லாமல் சதாமை ஆதரித்து நின்றன. இந்த உண்மையை எவராவது பேசுகிறார்களா? என்ன கொடுமை இது?


கேள்விகளின் தீவிரத்தை மர்ஜேனின் பதில்கள் நியாயப்படுத்தின. அரங்கம் பிரச்சனைகளின் தகிப்பில் உயிர்த்தது. தீவிரத்தின் உறைப்பை உணர்த்திய கையோடேயே காரத்தை குறைக்க அவ்வப்போது நகைச்சுவை இனிப்புகளும் வழங்கினார் மர்ஜேன்.

சந்திப்பின் முடிவில் எழுத்தாளருடைய நூல்களை வாங்கி அதில் கையெழுத்துப் பெறுவதற்காக ஒரு மணி நேர க்யூ வரிசை நின்றது. எழுத்தாளர்கள் கையெழுத்திட்டுத் தருவது அங்கு வழக்கம். எழுத்தாளருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஒரு நூலின் விலை மட்டும் ஆயிரம் ரூபாய் இந்திய மதிப்பில். நினைத்ததுமே எனக்கு படபடவென்று வந்தது. பெர்ஸ்பொலிஸ் 20 டாலர்.

பெர்ஸே போலஸ் பற்றிய சில குறிப்புக்கள் அடங்கிய சிறு வெளியீடு என் கையில இருந்தது. அதை ஏந்தியபடி நான் வரிசையில் வந்தேன்.

“நீங்கள் நூல் வாங்கவில்லையா?” மர்ஜேன் கேட்டார்.

“அவ்வளவு விலை கொடுக்க இயலாது. ஏழை நாட்டிலிருந்து வந்திருக்கிற எழுத்தாளன்” என்று பதிலளித்தேன்.

“சரியாகச் சொன்னீர்கள்” என்று சிரித்தபடியே கையெழுத்திட்டுக் கொடுத்தார். அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு கையெழுத்திடுகிறபோதும், புகைப்படம் எடுக்கிறபோதும் அவர் கையில் சிகரெட் எரிந்துகொண்டே இருந்தது. புகைக்கிற நேரத்தைவிட எரிந்து சாம்பலாய் உதிர்கிற நேரமே அதிகம்.

- அணங்கு, டிசம்பர் - பிப்ரவரி 2007

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

மலேயா கணபதி

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?