பாப்பாத்தி மாடு

6 Jul 2019

அதொரு பப்பாத்தி மாடு, வேணுங்கறவன் புடிச்சுக் கட்டுன்னு ஒரு சொலவடை இருக்காமே அந்தப் பக்கம்? அதற்குச் சரியான அர்த்தம் என்ன சகோ?

Ponniah Karunaharamoorthy, Berlin

***********************************************************************************

9 July 2019

தோழருக்கு, அந்தச் சொலவடை முழுமையாக எனக்கு நினைவில்லை. தற்சமயம் நான் சென்னையிலுள்ளேன். நாளை புதுச்சேரி சென்று நான் தொகுத்த நூலில் உள்ளதை சரிபார்த்து விளக்குவேன்.

பா.செ

***********************************************************************************

10 July 2019

நண்பருக்கு,

“பாப்பாத்தியம்மா மாடு வருது,

கட்டுனா கட்டு , கட்டாட்டாப் போ“ 

என்பது முழுப் பழமொழி. 

சமீப காலம் வரை கிராமத்தினர் அவரவர் மாடுகளை (ஊர்க்காலி மாடுகள் என்று பேர்) ஒரு பொது இடத்தில் காலையில் மேய்ச்சலுக்கு விட்டுப் போவார்கள். அவைகளை மேய்ச்சலுக்குப் பத்திக் கொண்டு போய் மேய்த்து விட்டு வர ஒரு கூலியாள் போடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் கிராம சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தார்கள். அன்னாடம் மேய்ச்சல் முடிந்து அதே பொது இடத்தில் கொண்டுவந்து விட்டுப் போவான். அவரவர் மாடுகளை உரியவர்கள் போய் வீட்டுக்கு கொண்டு வருவார்கள்.

ஆனால் அக்ரகாரத்துக்கு ஒரு தனி கவுரவம் உண்டல்லவா? அவர்கள் வந்து பிடித்துக் கொண்டு போகமாட்டர்கள். மேய்க்கிறவன் கொண்டுபோய் விடனும். அதனால் அக்ரகாரத்து தெரு மாடுகளை இவன் பத்திக்கொண்டு போவான். மாடு தன் வீடு வந்ததும் தானே விலகும். அப்போது இவன் சத்தம் கொடுப்பான்

”பாப்பாத்தியம்மா மாடு வருது; கட்டுனா கட்டு, கட்டாட்டிப் போ” 

மாடு மேய்ப்புக்கு வீட்டு வீட்டுக்கு மாட்டு எண்ணத்துக்கு இவ்வளவு என்று மாசக் கூலி கொடுப்பதை வாங்கிக் கொள்வான். 

எனது “தாலியில் பூச்சூடியவர்கள்" கதையில் இது வரும். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ’தைலி‘ என்ற பெண்ணுக்கு, கூலி இல்லாமல் இலவசமாய் ’ஊர்க்காலி மாடுகளை’ மேய்த்து வரும் தண்டனையை ஊர்க்காரர்கள் வழங்குவார்கள். இது உயர் சாதிக் கொளுப்பினால் நிகழும். 

நட்புடன் பா.செ.

***********************************************************************************

11 July 2019

பிரியமுள்ள சகோவுக்கு;

என் ‘பிறகு மழை பெய்தது’ கதையை வாசித்துவிட்டு என் வாசகர் ஒருவர் தான் இப்பப்பாத்தி மாடு சமாச்சாரத்தைச் சொன்னார். நான் அது ஊர் மேய்ந்துவிட்டு வரும் மாடு எனும் அர்த்தத்தில் சொல்கிறாரென நினைத்தேன்.

விளக்கத்துக்கு மிக்க மிக்க மிக்க நன்றி.

இவண் தங்கள் 

P.Karunaharamoorthy, Berlin.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

பா.செயப்பிரகாசம் நூல்கள்