கரிசல் கலை இரவு உரை (10.12.2017)

 




வேம்பு இளையோர் கூட்டமைப்பு நடத்தும் கரிசல் கலை இரவு 2017 விழாவினைத் தொடங்கிவைத்து பா.செயப்பிரகாசம் ஆற்றிய உரை.

”நான் ஒரு எழுத்தாளன். சிறுகதைத் தொகுதிகள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள் என ஏறக்குறைய நாற்பது நூல்கள் வரை எழுதியுள்ளேன். என்னை எழுத்தாளன் என எவரும் அறியார். முன்னால் அமர்ந்திருக்கும் உங்களில் எத்தனை பேருக்கு என்னை எழுத்தாளன் எனத் தெரியும்? எவருக்கும் தெரியாது. ஆனால் எப்போதாவது நான் சென்னை செல்கிற போது என்றைக்காவது ஓரிரு நாள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 10 நிமிடம் வருவேன். இன்றைய காலகட்டத்தில் மக்களில் பலருக்கு நான் எழுத்தாளனாக அறியப்பட்டதை விட, தொலைக்காட்சியில் தோன்றும் ஒரு சில நிமிடங்களால்  நான் அறியப்பட்டிருக்கிறேன். இது எத்தனை துயரமானது. அந்த அளவிற்கு காட்சி ஊடகம் வலிமை வாய்ந்ததாகக் காணப்படுகிறது. 

மக்கள் பாவலர் இன்குலாப் தான் இறந்த பிறகும் தனது உடலைச் சமுதாய பயன்பாட்டிற்காக அளித்தவர். அத்தகைய மனிதருக்காக இந்த கரிசல் கலை இரவு நிகழ்வை அவரது பாடலுடன் தொடங்கிக் காணிக்கையாக்கியது மகிழ்ச்சியும் பெருமிதமும் தருகிறது.  

நமது நாட்டுப்புறதில் ஒரு சொல் கலையாகும். நமது கிராமியக் கலைஞர்கள் ஒரு சொல்லில் கலை நிகழ்த்தக்கூடியவர்கள்.  

வழக்கமாக கிராமப்புறத்தில் நமது தாய்மார்கள் பெண் பிள்ளைகளைத் திட்டுவார்கள். “உன்னைய வெளக்கமாத்தாலே அடிக்கனும்” என்று. அன்றைக்கு அந்தத் தாய்க்கு ஆங்காரம் அதிகமாகிவிட்டது; மகளைப் பார்த்துக் கத்தினாள் ”ஒன்னைய அடிக்காத வெளக்கமாறு வீட்டுல இருக்கலாமா”. 

”விளக்குமாற்றாலே அடி – இது வசவு;

”உன்னைய அடிக்காத விளக்குமாறு வீட்டில இருக்கலாமா?”  - இது கலை. 

சூரங்குடியில் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்தை நோக்கி வேகமாக ஓடி வருகிறாள் ஒரு சிறுமி. பேருந்து நிற்காமல் புறப்பட்டுப் போய் விடுகிறது. போய்விட்ட பேருந்தைப் பார்த்து சிறுமி கத்துகிறாள் "உங்கம்மா குடலறுக்கப் போறியா". அவ்வளவு அவசரமா என்று சொல்லாமல் சொல்கிறாள். அவளது ஆங்கரிப்பு, ஆத்தாமை கலையாய்க் கொட்டுகிறது. இதை அப்படியே பிரதி செய்து கலையாக நிகழ்த்தக்கூடியவர்கள் நமது நாட்டுப்புறக் கலைஞர்கள்.  

நாம் கலைகளையும், கலைஞர்களையும் வாழவைப்பதற்கு கலைகளை மறு உருவாக்கம் செய்யவேண்டும். கரிசல் கலை இரவில் ஆடிய கோலாட்டத்துக்கு பாடிய பாடல் பெண் விடுதலை சம்பந்தமான பாடலாகும். அது போல் வேம்பு இளையோர் கூட்டமைப்பின் சிற்பி கலைக்குழு ’மான்கொம்பு ஆட்டம்’ ஆடினார்கள். அப்பாடல் புரட்சிகர உள்ளடக்கம் உடையது. இது போல கலைகளை மறு உருவாக்கம் செய்யவேண்டும்.”

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ