சாதனைகளை நோக்கி...
(விழி.பா.இதயவேந்தனின் 'நந்தனார் தெரு' நூலுக்கு பா.செயப்பிரகாசம் என்ற சூரியதீபன் எழுதிய முன்னுரை)
கதைகளுக்கு முன்னுரை என்பது தேவையில்லை என்று கருதுகிறேன். முன்னுரை என்பது, படைப்பை நுகர்பவர்கள் சொந்தமாக ஒரு கருத்தோட்டத்துக்கு வரவிடாமல் ஒரு முன் கருத்தை உருவாக்கிவிடுகிறது. என்ன சொல்லப்பட்டதோ அதன் வழியே படைப்புக்களை பார்க்கிற வாசகத்தடை முதலில் உருவாக்கப்படுகிறது. எதிர்பார்ப்புகள் பல நேரங்களில் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். தாஜ்மகால் பற்றியும், யமுனைக் கரை பற்றியும் தரப்பட்ட ஏகமான சித்திரங்கள், நேரில் தரிசிக்கையில் தகர்ந்து விடுகின்றன.
சிறந்த படைப்புக்களை வாசகன் அளவில் சுயமாகத் தரிசிக்கையில், அப்போது அவர்கள் கிளர்ந்தெழுவார்கள். தானும் ஒரு கலைஞனாய்த் துள்ளிக் குதிப்பார்கள். ராப்பாடி போல், எந்தவித நலனும் இல்லாமல் பாடி முழுகிப் போவார்கள். அந்தப் படைப்புக்குக் கூடுதல் விளக்கம், கூடுதல் புரிதல், விமர்சனம் தேவைப்பட்டால், பின்னுரையில் வைப்பது சரியாக இருக்கும். இது படைப்பிலக்கியம் பற்றி மட்டுமல்ல, அதை விமர்சித்த முன்னுரையாளன் பற்றிய மதிப்பீட்டுக்கும் வாசகன் வரத்துணை செய்யும். முன்னுரையாளனே சரியாகத் தடம் பிரித்துப் போகிறானா என்று பார்ப்பதற்கும் வழி அமைத்து விடும், இது நுகர்வாளனின் புலன் அறிவை இன்னும் கூர்மைப்படுத்துகிறது. ஆனாலும் முன்னுரை என்ற சடங்கு இன்றளவிலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
இப்போதும், இதற்கு முன்னும், நாம் பல முறையும் சொல்லி வருவது இதுதான்: கலையிலும், இலக்கியத்திலும், சமூக விஞ்ஞானத்தை உள்வாங்கிய கலைஞர்கள் சரியான கையளிப்புகளைச் செய்திருக்கிறோமா? நாக்குக்கு ருசியாகச் செய்துவிட்டால், இன்னும் இன்னும் என்று கேட்டு சாப்பிடுகிற கலை மாதிரிகளைச் சமூகப் பிரக்ஞை உள்ளவர்கள் தமிழில் வரவு செய்து, கொண்டோமா?
இந்தத் தொகுப்புக் கதைகளைப் படிக்கும்போது, இந்தக் காலகட்டத்தில் நாம் எல்லோருக்கும் சேர்த்து, ஒரு ஆழமான பரிசீலனை தேவையாயிருக்கிறது. இதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. சமூக விஞ்ஞானச் சிந்தனையில் இயங்குபவர்களின் படைப்புக்கள் குறித்து, அந்தந்த நேரத்தில் தீர்க்கமான பார்வை வைக்கப்படுவதில்லை. நோய் நொம்பலம் இல்லாமல் அந்தப் படைப்புப்பயிர் மகசூல் தருகிறதற்கான விமர்சனங்கள் இல்லை.
தன்னவன் என்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவது, இல்லையென்றால் கண் மண் தெரியாமல் தாக்குவது என்ற குழு மனப்பான்மை இன்றளவும் தமிழில் இயங்கிக் கொண்டு தானிருக்கிறது.
இந்த வகையில் கலை இலக்கியவாதிகளில் முற்போக்குச் சிந்தனையாளரின் படைப்புகளுக்கும் பத்திரிகைகளுக்கும் கலாச்சாரத் தடை விதித்துள்ளார்கள். இத்தகைய போக்குகளைக் கலை இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் கூட அங்கீகரிப்பதில்லை.
போனால் போகட்டும் என்று பத்தோடு பதினொன்றாகச் சேர்த்துக் கொள்கிற 'மேதமை' நிலைதான் கார்க்கிக்குக் கிட்டியது.
ஆனால் ஏதோ ஒரு எல்லையில், ஏதோ ஒரு புள்ளியில் தங்களோடு கருத்து ரீதியில் சமரசம் செய்து கொள்கிறவராகத் தெரிந்தால், உற்சாகப் பெருக்கில் தழுவிக் கொள்வார்கள்.
ஒரு பக்கம் சொந்த அணியினரின் விமர்சனங்கள், வழிகாட்டல்கள் ஆழமற்று இருக்கிற பலவீனமான நிலை, மற்றொரு பக்கம் கலை, இலக்கியவாதிகள் என்போரின் திட்டமிட்ட கலாச்சாரத் தடை.
இந்த சூழலில் புதிய கலை மரபு உருவம், உள்ளடக்கம், அழகியல் பற்றி ஆழமான புரிதல்கள், நாம் சார்ந்த மக்கள் இலக்கியத்துக்குத் தேவையாயுள்ளன. நம் தோள்களை அந்தப் பொறுப்புக்குத் தயார் செய்வதினூடே தான் நமது இலக்கியப் பணி முன்னேற வேண்டியுள்ளது.
"இந்த இளவயதில் இவரிடம் திரண்டிருக்கும் அனுபவங்கள் நமது தலைமுறைக்கு போதுமானவை" என்று பழமலய் அறிமுக உரையில் கூறுகிறார். வாழ்வின் அனுபவங்களே கலைப்பயிரின் மூலம் என்பது உண்மை. ஆனால் அனுபவங்கள் மட்டுமே கலைத் திரட்சியாகி விடுவதில்லை.
"மனிதன் தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தின் செல்வாக்கில் அனுபவித்துள்ள உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் தனக்குள் மீண்டும் எழச்செய்து, அவற்றைத் திட்டவட்டமான உருவங்களில் வெளியிடும்போது, கலையாகிறது" என்று பிளக்கனேவ் கலையின் பிறப்பு பற்றிச் சொல்வதைக் கவனிக்க வேண்டும். அனுபவங்களைக் கலையாக்கும் ரசாயனம் நிகழ்த்தப்படுகிறபோதே, உள்ளடக்கம், பொருத்தமான வடிவம் கொள்கிறது. அவன் படைப்பாளி ஆகிறான்.
"விழுப்புரத்தில் அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வருபவர். அவர்களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலியாகிப் போகாமல், தங்கள் இருப்பை மனச்சாட்சிக்குத் துரோகம் செய்யாமல் எண்ணி எண்ணிப் பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து போராடுகிறார். இந்த நிகழ்வுப் போக்கில்தான் இவர் நாட்டுப்புற பாடல்களைத் தொகுக்கிறார். வீதி நாடகங்களில் நடிக்கிறார். செய்திக் கட்டுரைகள் எழுதுகிறார். கதை, கவிதை, நாவல் என்று வரைகிறார்" என்று பழமலய் குறிப்பிடுவது அவர் வாழ்க்கையே. கலைக்குப் போதுமான மூலாதாரங்கள் அவரிடம் குவிந்து கிடக்கின்றன என்பதற்கு இந்தச் இந்த சான்று போதுமானது.
ஆனால் அனுபவம் மட்டுமே சிறப்பான படைப்பிலக்கியத்தைத் தந்துவிட முடியாது. அதை கலைப்படைப்பாக மாற்றுகிற பெரிய காரியம் அதனுடன் இருக்கிறது. கலையைப் படைப்பது நமது உள்ளார்ந்த விருப்பம் சார்ந்தது மட்டுமல்ல. கலையின் உள்ளார்ந்த விதிகளை கண்டறிதலும், கையாளுதலும் என்ற மீதிக் காரியத்தைச் சார்ந்ததுமாகும்.
"இக்கலைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான பழக்கத்தின் மேலும் பயிற்சியின் மேலும் ஏற்படக்கூடியது என்று பாரதி கண்டறிகிறான். இக் கலைகள் ஆழ்ந்த மனக்கிளர்ச்சியுடையோருக்கு இனிது சாத்தியம்” என்கிறான்.
எனவே ஒரு கலைப்படைப்புக்குத் தேவையாக, பல்வேறு அடிப்படை அம்சங்கள், துணை அம்சங்கள் உள்ளன. அனுபவங்கள் எல்லாமே கலையாகிவிடுவதில்லை. எந்த அனுபவங்களைக் கலைஞன் தேர்வு செய்கின்றான் என்பது முக்கிய இடம் பெறுகிறது. மனித வாழ்வின் அனுபவங்கள் எல்லாம் செழுமைப்பட்ட வடிவில் கிடைப்பதில்லை. அவை கந்தலும் கதுக்கலுமாய்க் கிடைக்கின்றன. அவைகளை உள்வாங்கி கிரகிக்கும் முறையிலும், கிரகித்தவற்றுள் ஒன்றை வெளிப்படுத்தும் வேளையிலும் தேர்வு நிலை உள்ளது. விதை நெல் போல அது தேர்வு செய்யப்படுகிறது.
உள்ளடக்கத்தைத் தேர்வு செய்த பின் வடிவம் முதன்மையாகிறது. உள்ளடக்கத்தைத் தேர்வு செய்கிற போதும் அதற்கான வடிவமைப்புச் செய்யப்படுகிற போதும் கலைஞனின் மனோபாவம் நோக்கு பிரதான பங்காற்றுகிறது. இதனையே சமூக நோக்கு என்கிறோம். ஒவ்வொரு கலைஞனும் சமூக நோக்கு கொண்டிருக்கிறான். அப்படி இல்லை என்று சொல்பவர்க்குக் கூட இயல்பாகவே ஒரு சமூகப் பார்வை அமைந்திருக்கிறது என்பது உண்மை. அது நாம் சுட்டிக் காட்டும் சமூக விஞ்ஞானப் பார்வையாக வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம்.
மொழி, நடை, வெளிப்பாட்டுமுறை ஆகிய வடிவ பொருத்தத்தை இலக்கியப் படிப்பும், வழக்கமும் பயிற்சியும் கைகொடுக்கின்றன. அவையும் வாசகர் தளத்திற்கு ஏலவே அமைகிறது. நுகர்வோர் தளம் பற்றிய உணர்வு சமூக நோக்கில் இணைந்துள்ளது.
எடுத்துக்காட்டாக, கலையின் சூட்சும மொழி பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்கள் தங்களையொத்த வாசகர்களுக்கே தருகின்றனர். தங்களையொத்த வாசகர்களையே உருவாக்க முயலுகின்றனர். வாசகர் யார் என்பதில், அவரவரின் வர்க்க மனநிலை இயல்பாகவே பங்காற்றுகிறது.
வாசகர்தளம் பற்றிய உணர்வு, ஒரு கருத்தாக்கமாக உருப்பெற்றது, சமூகவியல் ஆய்வுகள் தொடங்கப் பெற்ற பின்தான் குறிப்பாக மார்க்சிய விஞ்ஞானம் மேலெழுந்த பின் இந்த நுகர்வோர்தளம் பற்றிய பிரக்ஞை கூடுதலாகியது. தெளிவான உருப்பெற்றது. மக்களே அனைத்தையும் இயக்குபவர்கள்.
வரலாற்று சக்தி என்ற நோக்கில், கலை, இலக்கிய ஊடகத்தின் நுகர்வோர் தீர்மானகரமான இடம் பெறுகின்றனர். கலை என்னவகை மனக்கிளர்ச்சிகளை, அனுபவங்களை, உணர்வுகளை கலைஞனுக்கு அளித்ததோ, அதே போன்ற வினையாற்றலை வாசகனிடத்திலும் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. அந்த பிரகஞ்சை கொண்டே படைப்புகளைச் செய்கிறான்.
விழி.பா. இதயவேந்தனின் வாழ்வு அனுபவங்கள் வளமானவை. அடிப்படை மக்களுடன் அவர் இன்னமும் விலகாமலிருக்கிறார். விலகாமலிருக்கும் வரை, அனுபவங்கள் செறிவாகிக் கொண்டேயிருக்கும்.
தளம் பற்றிய தெளிவும், யாருக்காகக் கொடுக்கிறோம் என்ற பிடிமானமும் அவருக்குள்ளது.
அனுபவங்களைத் தேர்வு செய்வதில், ஏழ்மை, வறுமை அதனாலான அவலம் அடக்குமுறை என்பவைகளைத் தேர்வு செய்கிறார்.
இதற்கு முன்னும் இப்போதும் நாம் பலமுறை சொல்லி வருவதும் இதுதான். ஏழ்மை இவைகளை நேரடியாகச் சித்தரிப்பது மட்டும் அல்ல, அது ஒரு அம்சம். இதனுடாக எண்ணற்ற மனித குணங்கள், மன நிலைகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதுதான் கதையாகிறது.
சரத்சந்திரரின் 'சுபதா' நாவலைப் போல் வறுமையைச் சித்திரிக்கிற நாவலைப் பார்க்க முடியாது. இருக்கலாம். ஆனால் வறுமையின் ஊடே அல்லாடுகிற அத்தனை பேரும் தனித்தனிப் பாத்திரங்கள். குணங்களும், உறவுக் கூறுகளும், வேறு வேறாய், ரத்தமும் சதையுமாய் வாழ்க்கை சொல்லப்படுவதினும் விட, அவலம் வேறெதுவும் உண்டுமோ?
விழிபா.வின் எல்லாக் கதைகளிலும் ஒரு கோடு தொடர்ந்து ஓடுகிறது. ஏழ்மை, அடக்குமுறை என்ற கோடு. ஆனால் ஓடாத கோடு பாத்திரப்படைப்பு.
இந்த 'கதாநாயக' மக்களை அவர் நன்றாகவே அறிவார். நமக்கும் தெரியும். 'என் சனங்களின் கதையில்' (மனஓசை - ஆகஸ்ட் - 90), அவர் காட்டிய மக்கள் தான். அவர்கள் ஒவ்வொருவராக இவரிடம் கதையாகிறார்கள்.
அப்படிக் கதையாகிறபோது, குணப் பாத்திரங்களாகாமல் நிற்கிறார்கள் என்பது இவரது படைப்புப் பலவீனம். பாத்திரங்களின் மன நிலை, எண்ண ஓட்டம், குணவார்ப்பு இல்லாமல், பாத்திரங்கள் வெளிப்படையாக வருகின்றன. மற்றொன்று - ஒரு கருத்தினை விளக்குவதே கதைக்கு அடிப்படையாக மாறிவிடுவதால், பெரும்பாலும் இவருடையவை கருத்து விளக்கக் கதைகளே. கருத்து விளக்கக் கதைகள், பாத்திரங்களின் மன நிலையை விட சம்பவங்களுக்கு அதிக கவனம் செலுத்துவன.
அதனால் பாத்திரங்களின் மன நிலை, அதன் கருத்துக்கள் என்பது பின் தள்ளப்பட்டு, படைப்பாளரின் கருத்துக்கள் மனநிலை ஆகியவை கதையை நடத்திச் செல்கின்றன. படைப்பு தனக்கான சுயத்தன்மையை இழந்து படைப்பாளி படைப்பை இழுத்துக் கூட்டிச் செல்கிற ஆபத்து இதில் எப்போதும் இருக்கிறது.
சங்கடம் கதையில், வேலை தேடுவதற்காக வாடகை சைக்கிள் எடுத்துப்போய் சைக்கிள் வாடகை கொடுக்கக் காசு இல்லாமல் படும் அவலம். அவன் மன உளைச்சல் தான் சாரம். சைக்கிள் கடைக்காரன் உள்ள வீதியில் போகும்போதும் வரும்போதும் உறுத்தல். இது பாதிக் கதையாக வந்திருக்க வேண்டும். பதிலாக வேலை தேடும் முந்திய நிகழ்ச்சிகளில் சிந்தனை ஓடி ஒரு 'சஸ்பென்ஸ்' போல் தொடர்கிறது. குடும்ப நிலையைப் பற்றிக் கூறும் போது "என் தங்கை காலை பட்டினியாய் இருந்தாள். அவளுக்குக்கூட இரண்டு இட்லி வாங்கிக் கொடுக்க நாதியற்று அந்தக் காசை பத்திரமாய் வைத்திருந்தேன்” என்று வெளிப்படையாக வரிகளில் வருகிறது. மாறாக இது வாழ்வின் காட்சி ரூபமாக வந்திருக்க வேண்டும் நிறங்கள் - சுப்புலட்சுமியின் தற்கொலைக்குப் பின்னால் நிற்கிற நியாயங்களும் சோகமும் கதைக்குத் தேவையாயிருக்கவில்லை. படைப்பு வெளிப்படுத்த வந்தது 'காக்கிச் சட்டைகளது' நரித்தனத்தைத்தான்.
அன்னக்கிளியின் செருப்பு - நிறங்கள் கதை போலவே அதன் கரு பின்பகுதியில் தங்கி நிற்கிறது. ஆனால் பெரியநாயகம் டயர் வாங்குவதற்காகப் படும் பாட்டில் கதை அலைகிறது.
நிகழ்காலம் - போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர் சிறைக்குப் போய்த் திரும்பி வந்து தெருவிற்குள் நுழைவதால் ஏற்படும் பரபரப்பு வரிசையாக ஒவ்வொருவராகக் காட்ட வேண்டியதில்லை. ஏதாவது ஒரு சொல் முறையே போதும். போராட்டம் பற்றிய மக்களின் பார்வை, கேள்வி, ஆசிரியர் எதிர்கொள்ளுதல் என்னும் சிறப்பானதொரு விஷயம் தமிழுக்குப் புதியது.
ஒவ்வொரு கதையாக நோக்குவதிலும் விட, ஒட்டு மொத்தமாக சில கருத்துக்களைத் தொகுத்துக் கொள்வது சரியானது. இதயவேந்தனின் கதைகள் பற்றிய பரிசீலவனையாக இல்லாமல், சமகாலத்திய சமூகச் சிந்தனையுள்ள படைப்பிலக்கியப் பிரச்சினையாக தொகுத்துக் கொள்வது.
அனுபவம், சமூகநோக்கு, வாசகர் தளம் பற்றிய உணர்வு ஆகியவை போதுமான அளவில் நமக்குள்ளன. ஆனால் வடிவச் செயல்பாட்டுத் தளம் என்பது, நமக்குக் குறைபாடாக உள்ளது. அது கூடப் பிறந்த நோய் போலவும், இன்றளவும் நமக்குத் தொடர்ந்து இருந்து வருகிறது.
இளந்தலைமுறை எழுத்தாளர்களுக்கான முன்மாதிரிகள் போதுமானதில்லை. இளந்தலைமுறையினரே அத்தகைய முன்மாதிரிகளைத் தருகிற முன்னோடுதிறன் உள்ளவர்களாக மாற வேண்டும். பல நேரங்களில் தவறான முன் மாதிரிகளும் அவர்களுக்குத் தரப்படுகின்றன.
கலை கலைக்காகவே என்போர் அல்லது கலைக்காகவே உயிர் வாழ்வோம் என்போர் முதலில் வடிவம் பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் முதலில் வடிவத்தில் சிரத்தை கொள்கிறார்கள்.
ஆனால், நமது உத்தி, நடை, சொல்முறை வெளிப்பாட்டுத் தன்மை, அழகியல், வடிவ அம்சங்கள் ஆகியவை அவர்களின்றும் மாறுபட்ட தனித்த பாங்குடையவை; ஒரு மேல் நிலைப்பகுதியினருக்கு (Elite) எழுதும் அழகியல் அம்சங்களை அப்படியே நாம் கைக்கொள்ள முடியாது. எனவே தான் முன்மாதிரிகளை நாம் வழங்க வேண்டிய, அதுவும் வெள்ளப் பெருக்கு வேகத்தில் வழங்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.
சமூகத்தின் பால் கொண்ட ஆர்வம் காரணமாக நமது படைப்பாளிகள் முன் வருகிறார்கள். அதுவே அடிப்படை. ஆனால் கலை என்று வந்துவிடுகிறபோது அதன் வடிவாம்சங்கள் இணையான முக்கியத்துவம் பெறுகின்றன. வடிவம் காரணமாகவே அது கலையாக இருக்கிறது. ஒரு கலை மனசு இவைகளைல்லாம் பெருக்கெடுப்பதற்கான ஊற்றாக மாற்றப்பட வேண்டும்.
அதற்கான விவாதங்கள் நமது தளங்களில், நமது பத்திரிகைகளில் நிகழ்த்தப்பட வேண்டும். பட்டறைகள் - பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் இந்த திசை நோக்கி நடத்தப்பட வேண்டும். ஆக்கப் பணிகள் குறைவாகவே இருக்கும் என்ற குற்றச்சாட்டு இதனால் அடிபடும். படைப்பிலக்கியச் சாதனைகளே ஒரு பதிலாக இலக்கிய வீதியில் வைக்கப்பட வேண்டும்.
பெருமாள்முருகன், கோவிந்தராஜ், பொ.முருகேசன், தி.சுதாகர், விழி.பா.இதயவேந்தன் (சீராளன்) என்ற பெயர்கள், சமூக பிரக்ஞையுடைய சிறுகதைப் பக்கத்தில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் சாதனை படைப்பார்கள்.
- சூரியதீபன்
கருத்துகள்
கருத்துரையிடுக