ஈழம் உலகை உலுக்கிய கடிதங்கள் - நூல் முன்னுரை



நம்‌ கைவிரல்களைப்‌ பின்னியபடி....

நான்‌ முதலில்‌ மனிதன்‌. இரண்டாவதாய்‌ தமிழன்‌. அடுத்ததாகச்‌ சிலர்‌ என்னை இந்தியன்‌ என்கிறார்கள்‌. நான்‌ இல்லை என்கிறேன்‌. பிறகு நான்‌ சர்வதேச மனிதன்‌. 

இந்தியர்கள்‌ என்று உச்சரிக்கிற யாரும்‌ சர்வதேச மனிதர்களாகவும்‌ இல்லை; தமிழர்களாகவும்‌ இல்லை. அதனாலேயே அவர்கள்‌ மனிதர்களாகவும்‌ இல்லை.

நான்‌ தமிழனாக இருப்பதால்‌ மனிதனாக இருக்கிறேன்‌ என்பது இயல்பானது போலவே, இந்தியனாக இருப்பவன்‌ மனிதனாக இல்லாததும்‌ இயல்பானது.

இல்லையென்றால்‌ எந்த மனிதனும்‌ இங்கே இருபது கிலோ மீட்டருக்குள்‌ இருக்கிற பூமியில்‌ இலட்சக்கணக்கில்‌ மனித உயிர்கள்‌ கொத்துக்‌ கொத்தாய்க்‌ கொலை செய்யப்பட்ட போது - கண்‌ கொண்டு காணாமல்‌, காது கொண்டு கேளாமல்‌, கருத்து கொண்டு உணராமல்‌ இருக்க முடியுமா? இருந்தார்கள்‌; இந்தியர்கள்‌ என்பதால்‌ இருந்தார்கள்‌. மரணங்களின்‌ மேல்நின்று நர்த்தனமாடுகிற எந்த இந்தியனையும்‌ மனிதன்‌ என்று கூற நா கூசுகிறது.

இந்தியரின்‌ சேசப்பற்றினைப்‌ பற்றி எழுதுகிறபோதெல்லாம்‌. இப்போது எழுதுகோலுக்கு நடுக்கம்‌ எடுக்கிறது.

மனிதர்கள்‌ மேல்‌ கொண்ட பற்றுக்காக முத்துக்குமார்‌ என்ற அக்னிக்‌ குஞ்சு எரிந்தது. பல அக்னிக்குஞ்சுகள்‌ பிறந்தன. ஒவ்வொரு குஞ்சும்‌ ஓரொரு வகையாய்‌! அநீதிகஞக்கெதிரான ஒரு சகோதரனாய்‌ எரிந்தது. முத்துக்குமார்‌ என்றால்‌, சர்வதேச முகத்தின்‌ மீது அறைந்தாற்போல்‌ ஐ.நா மன்றத்தின்‌ முன்‌ எரிந்தான்‌ முருகதாசன்‌. உறைந்து போன மனித மனங்களை உலுக்கி எடுத்த வான்‌ படைக்‌ கரும்புலி கேனல்‌ ரூபன்‌... தங்களின்‌ உயிர்களுக்குப்‌ பின்னாவது, தமிழினத்தின்‌ மனச்சாட்சி உசுப்பப்படுமென்ற பேரவா அவர்தம்‌ கடிதங்களாகப்‌ பயணித்தது.

ஓர்‌ இதயத்திலிருந்து இன்னொரு இதயத்தைத்‌ தொடுகிற கருத்து வாகனம்‌ - கடிதம்‌. கடிதம்‌ சேருகிற புள்ளியில்‌ சுனைநீர்‌ ஊற்றுப்‌ பீறியடிக்கலாம்‌; நுங்குச்‌ சுவையின்‌ இத்திப்பை நாக்கு திரும்பத்‌ திரும்பச்‌ சுழற்றலாம்‌. அருவி மொத்தத்தையும்‌ ஒரு தலையில்‌ கவிழ்க்க முயலலாம்‌.

குளுமையை, சுவையை, இதத்தைத்‌ தருகிற கடிதங்களிலிருந்து வித்தியாசமான தட்ப வெப்பச் சூழலில்‌ பிறந்தவை ஈழம்‌ சார்ந்து எழுந்து வந்த கடிதங்கள்‌. அடிமையை விடுதலை செய்யும்‌ ஒரேயொரு திசை தவிர வேறெதுவும்‌ இல்லாதவை இந்தக்‌ கடிதப்‌ படைப்புகள்‌.

தமிழினத்துக்கு மட்டுமல்ல, உலகம்‌ முழுமைக்குமான ஆவணங்கள்‌ அவை. இதில்‌ இணைக்கப்பட்டிருக்கும்‌ தி சண்டே லீடர்‌ பத்திரிகை பின்‌ ஆசிரியர்‌ லசந்த விக்கரமதுங்க - கொலை செய்யப்படுவோமென முன்கூட்டியே உணர்ந்து ராசபக்சே அரசின்‌ கொலை வெறியை அம்பலப்படுத்தி எழுதிய கடிதம்‌ மட்டும்‌, சிங்கள இனத்‌துக்குள்ளிருந்து வந்த கடிதம்‌. அநீதியை எதிர்க்கிற, மனித உரிமைகளுக்காக நிற்கிற எவராயினும்‌ எம்மினத்துக்கு உரியவர்‌. ஒடுக்கப்படுகிற மனிதருக்காகப்‌ பேசுகிற போது அவர்கள்‌ சர்வதேச மனிதர்கள்‌.

உலகன்‌ மனச்சாட்சியை உலுக்கும்‌ இக்கடிதங்கள்‌, விடுதலை வரலாறு உள்ளளவும்‌ நம்முடன்‌ பேசியபடி, நம்‌ கரங்களைத்‌ தம்‌ விரல்களுக்குள்‌ பின்னியவாறு நம்முடன்‌ பயணிக்கும்‌.

இக்கடிதங்களைத்‌ தொகுத்து வெளியிடுகையில்‌, தானும்‌ ஒரு தீபச்‌ சுடரை ஏந்திய பெருமிதத்தைப்‌ புதுமலர்‌ பதிப்பகம்‌ பெறுகிறது.

சூரிய தீபன்‌

ஜூன் 2009

சென்னை

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

மலேயா கணபதி

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?