பா.செயப்பிரகாசத்தின் கடைசி நேர்காணல்
24 ஆகஸ்ட் 2021
அன்புள்ள அப்பா,
நீண்ட காலமாக நான் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்விகளைக் கீழே தொகுத்துள்ளேன்.
அவரவர் வாழ்க்கையின் வேகத்தில் & மனஸ்தாபத்தில் - பல மனம் விட்டுப் பேசவேண்டிய தருணங்களை நாம் அனைவரும் இழந்து விட்டோம்.
நாம் குடும்பமாக உட்கார்ந்து இவைகளைப் பகிர்ந்து கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை (its called family time here in foreign countries). அதனால் தான் இக்கேள்விகள், ஏனென்றால் உங்களை பற்றி முழுவதுமாக அறியாமல் போய்விடுமோ என மனம் அரித்துக் கொண்டேயிருக்கிறது. விருப்பமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவும். உங்கள் பதில்கள் என் கடைசி வரை நினைவில் வாழும்.
தீபன்
************************************************************************************************
2 செப்டம்பர் 2021
தீபன்,
நீ கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளேன். தனிப்பட்ட கேள்விகளாயினும், பதில் தர ஒரு வாரம் எடுத்துக் கொண்டது.
சுய விமர்சனமாக, தன்னிலை விளக்கமாக, நிறைய நிறைய வாழ்வுக்குள் போய்த் தேடி, தோண்டி எடுத்துக் கொடுக்க வேண்டியதாயிற்று. ’முக்காலே மூணு வீசம்’ சரியாக வந்துள்ளது என நினைக்கிறேன்.
அன்புள்ள அப்பா.
23 அக்டோபர் 2022
(பா.செ மறைந்த அன்று காலை அனுப்பிய மின்னஞ்சல்)
தீபன் தனிப்பட்ட முறையில் நீ என்னிடம் எடுத்த நேர்கணலை சற்று சரி செய்து செழுமை செய்து மீண்டும் அனுப்பியுள்ளேன். இதனையே ஆவணப்படுத்திக் கொள்க.
அன்புடன் அப்பா,
பா.செ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தீபன், நீ இக்கடிதத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல், குடும்ப உரையாடல் என நமக்குள் இதுவரை நிகழவே இல்லை; இரவு உணவின் போது மேலை முதலாளிய நாடுகளில் குடும்ப உரையாடல் நடைபெறும் என நீ சுட்டிக்காட்டிய உண்மை தவிர்க்க இயலாதது. தமிழ்ச் சமூகத்தில் குடும்ப அமைப்பு ஒரு அதிகார அமைப்பு; மேல்கீழ் அடுக்கு படிநிலை முறை; அனைவரும் சமம் என்ற சனநாயக நோக்கு இந்த அமைப்பில் துளியுமில்லை.
நான் அலுவலகப் பணி என்று ஓடிக் கொண்டிருந்தேன். அம்மா அலுவலகம், சமையல், சாதாரணப் பெண்களின் வாழ்க்கை என அலைவிலிருந்தார். மீதி நேரங்கள் எங்களுக்குள் சண்டையிடுவதில் கழிந்தன. பிள்ளைகள் வளர்ந்த பிறகாவது இது தவறு என நிறுத்தியிருக்க வேண்டும். நிறுத்தியிருக்க முடியும் - முறையான உரையாடல் நிகழ்ந்திருந்தால்;
ஒரு உண்மையை நான் ஏற்க வேண்டும், குடும்ப ஒழுங்கை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு செல்வதில் நான் தோல்வியடைந்தேன். சண்டையிடும் போது அம்மாவின் மூர்க்கம் நானும் கொண்டிருந்தேன்.
அதேவேளை அம்மாவுக்கு நான் நிறைய பாதகங்கள் செய்திருக்கிறேன். அதை அவ்வப்போது பேசி உணர்த்தி நிறுத்தியிருக்க வேண்டும். உடனே இல்லையென்றாலும் கொதிநிலை தணிந்த அமைதியான சூழலில் உணர்த்தியிருக்கலாம்.
அம்மாவின் கைவசத்தில் நான் குடும்பத்தை ஒப்படைக்க வேண்டி வந்தது. அப்போதும் கூட்டுறவு, ஒருமைப்பாட்டு உணர்வில் குடும்பம் இயங்கவில்லை என்பது உரையாடல் நிகழாமல் போனதற்கு காரணமாகிவிட்டது.
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் குறியாய் நம் காலங்கள் கடந்தன; மாறாக விமர்சனமாய் வெளிப்பட்டிருக்க வேண்டும். விமர்சனமாக வெளிப்பட்டிருப்பின் அவரவர் தவறைத் திருத்திக் கொள்வதில் முடிந்திருக்கும். குடும்பத்தில் அனைவரும் மாற்றி மாற்றிக் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருந்தோம். யாரும் யாரோடும் இல்லை. ஒருவருக்கொருவர் ஆதரவாய் உதவும் கரங்களுக்குப் பதில் சண்டைபோடும் கரங்களைக் கொண்டிருந்து காலம் ஓடியது.
ஒட்டுமொத்தத்தில் குடும்பத் தலைவனாக இந்த சமுதாயத்தால் இன்றும் கருதப்படும் தந்தையின் வகிபாகத்தை நான் முழுமையாக இழந்திருக்கிறேன் என உணர்கிறேன். பதிலாக தவறுகள் தொடர்ந்து செய்பவனாக ஆகிப் போனேன்.
”தவறுக்கும் தவறான தவறைப் புரிந்து விட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
பதறிப் பதறி நின்று கதறிக் கதறினாலும்
பண்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே“
(படம் – தங்கப்பதுமை)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு நான் சாட்சியமாகி நிற்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. ஒரு ஜெருசலேம் கதை - உண்மையில் உங்களுக்கு நேர்ந்த கதையா including the end?
ஆம், நான் கண்ட, அனுபவித்த, எனக்கு நேர்ந்த கதை. அதன் இறுதி முடிவு புனைவாக உருவாக்கிச் சேர்த்துக் கொண்டது. அம்மாவை எரித்த சுடுகாட்டுக்குச் செல்லும் சிறுபையன்கள் அனைவரும் என் கூட்டாளிகள். கதையில் வரும் மந்தி ராமசாமி என் உறவுப் பையன். கோரைப் புற்களின் கீழ் குன்றிமணியளவுள்ள சிறுகிழங்குகள் இனீப்பாயிருக்கும். பஞ்சப் பசியில் பிடுங்கிச் சுவைத்தோம்; ஆனால் கோரைப் புற்களின் கீழ் தென்படும் சிறுசிறு (இம்ணிக் கோண்டு) பூண்டுக் கிழங்குகளைப் பறிப்பது, அதனால் தகராறு எழுவது, நான் மந்தி ராமசாமியை அடித்து வீழ்த்தியதாக வருவது அனைத்தும் கற்பனை.
2. உங்கள் தாயைப் பற்றி உங்கள் நினைவில் உள்ளது எவை? அவரை இன்றும் miss பண்ணுகிறீர்களா?
ஒரு செருசலேம் கதையில் வரும் அந்த நிகழ்வு மட்டுமல்ல பல நிகழ்வுகளும் குவிந்துள்ளன. ஐந்து வயதில் அம்மாவை இழந்தேன் என்ற போதும், அவைகளை மட்டுமே ஒரு ஒரு காவிய அளவுக்கு, தரத்துக்கு எழுதலாம்.
அம்மா இல்லாத குறையை இப்போதும் உணர்கிறேன். பால்ய காலத்திலும், அதனை விட அதிகமாக இளமையில், நடுத்தர வயதில், இந்தக் கொடும் முதுமையில், முந்திய காலம் எதனையும் விட அம்மா தேவைப்படுகிறார். அம்மாவை நினைத்து உணர்ச்சி வசப்படுகிறேன்.
3. உங்கள் தந்தையை பற்றி உங்கள் நினைவில் உள்ளது எவை? அவரை இன்றும் miss பண்ணுகிறீர்களா?
சட்டென நினைவில் வருபவை இரண்டு. உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்காக, பக்கத்தில் மூன்று கி.மீ தொலைவிலுள்ல காடல்குடியில் போய் அப்பா சேர்த்தார். சிலநாட்கள் கழித்து பாடப்புத்தகங்கள் வாங்குவதற்கு ரூபாய் கொண்டுவராதவர்கள் நாளைக்குப் பள்ளிக்கூடம் வரக்கூடாது என்று வகுப்பு ஆசிரியர் சொன்னதால் அடுத்த நாள் நான் பள்ளி செல்லவில்லை. காட்டு வேலைக்குப் போய் விட்டு மதியம் திரும்பியதும், சேதி அறிந்து அய்யா (அப்பா) என்னை - காதைப் பிடித்து திருகி, கன்னத்தில் அறைந்து, அடித்துக் கீழே தள்ளி, உதைத்துப் பந்தாடியது – இன்னும் ஈரம் குறையாமலிருக்கிறது. இது தான் “பொய் மலரும்" கதை.
மற்றொரு சம்பவம்; அப்போது நீ பாண்டிச்சேரியில் பிறந்திருந்த நேரம். சில மாதங்கள் கழித்து அய்யா (அப்பா) உன்னைக் காண பாண்டிச்சேரி வந்தார். தஞ்சாவூரிலிருந்து ஒரு நண்பர் தனது காரை சென்னையிலுள்ள குடும்பத்தினருக்காக அனுப்பினார். அவரது குடும்பம் சென்னையில் வாழ்ந்தது. கார் போவதினால் அதில் நானும் போய் உங்களைப் பார்த்துவிட்டு, பின்னர் சென்னை செல்வதாகத் திட்டம். அன்றிரவு பாண்டிச்சேரியில் தான் தங்கினேன். அப்போது ஜிப்மர் குடியிருப்பில் வீடு. மறுநாள் காலை சென்னை செல்கிறபோது, தானும் சென்னை வருவதாக அப்பா கூறினார். கார் சும்மதான் ஆள் எவருமில்லாமல் சென்னை போகிறது. முக்கியமாய் அவர் சென்னைக்கு இதுவரை வந்ததில்லை. நான் வேண்டாம் என்றேன். அப்பா முறையிடுதல் போல, ”ஏ, நானும் வர்றேன்பா” என்றார். வந்தால் எங்கே தங்குவீர்கள் என்று கேட்டேன். சொந்தக்காரர் பெயரைச் சொன்னார். அப்பா சொன்ன சொந்தக்காரர் ஜமீன் பல்லாவரம் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்தார். சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடிய காலம். அதைக் காரணம் காட்டி மறுத்துவிட்டேன். அப்பா கெஞ்சுவது போல் கேட்டுப் பார்த்தும் நான் முடியாது என மறுத்துவிட்டேன். வீட்டில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன மனநிலையிலிருந்தேன், ஏன் அப்படிச் செய்தேன் என என்னால் இதுவரை எந்தச் சமாதானமும் சொல்லத் தோனவில்லை. எவ்வளவு பெரிய தவறினைச் செய்துவிட்டோம் என இப்போதும் மறுகிக் குமைகிறேன்.
4. உங்களை வளர்த்த பாட்டியை பற்றி உங்கள் நினைவில் உள்ளவை எவை? அவரை இன்றும் miss பண்ணுகிறீர்களா?
’ஒரு பேரனின் கதைகள்’ என்ற நூலில் வருகிற பாட்டி அவள்தான். ஒரு பேரனாக வாழ்ந்தவை தாம் அக்கதைகள். பாட்டி இல்லையெனில் நானில்லை, வாழ்வில்லை. என் பாலிய காலம் முதலாக 15 வயது வரை எட்டாம் வகுப்பு படிக்கும் வரை பாட்டியுடன் வாழ்ந்தேன்.
5. உங்களுக்கு பிடித்தமான உணவு எவை & miss பண்ணும் உணவு எவை?
மீன் பிடிக்கும். அது பின்னாளில் வளர்த்துக் கொண்ட சுவை. மற்றப்படி கரிசல் சீமையில் விளையும் சிறுதானியங்கள் பிரியம் கூடுதல். மானாவாரிப் புஞ்சையில் ராகி (கேழ்வரகு), சாமை,கம்பு, சோளம் (இதில் இருவகை உள்ளன - செஞ்சோளம், மாப்பிள்ளை மினுக்கிச் சோளம்), குதிரைவாலி போல சிறுதானியங்கள் சத்துள்ளவை. பசி தாங்குபவை. தயிர் அல்லது மோர் போட்டுப் பிசைந்த கம்மஞ் சோறு ரொம்பப் பிரியமாய்ச் சாப்பிடுவேன். (கம்மங் கூழ், கம்மங்கஞ்சி எனப் பல பெயர்கள்). குதிரைவாலிச் சோறும் கோழிக்கறியும் என்ற சொல்லை உச்சரிக்கையிலே நாக்கு சொட்டாங்கு போடும்.
நான் தவறவிட்ட உணவு என எதுவுமில்லை. எது கிடைத்தாலும் சாப்பிடுவது - இது வறுமையின் காரணமாக பெற்ற அனுபவம். வயிறை வாட விடக்கூடாது என்பது கற்றுக் கொண்ட பாடம்.
6. நீங்கள் எழுதியவைகளில் உங்களுக்கு பிடித்தமான கதைகள்/நாவல் எது?
ஒரு செருசலேம், தாலியில் பூச்சூடியவர்கள்.
பிடித்தமான நாவல் இனித்தான் படைக்க வேண்டும்.
’மணல்’ ஓரளவுக்கு எனது மயிலிறகு தடவலுக்குரிய பிரியமான எழுத்து. அதை உருவக்குதற்காக நான் உழைத்த உழைப்பு எழுத்திலும் பேச்சிலும் அடங்காது.
7. உங்கள் பெரும்பாலான கதைகளிலும் & உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் - பெண்களுக்கு ஆதரவான ஒரு soft corner இருப்பதாகத் தோன்றுகிறது? இது நீங்கள் சிறு வயதில் தாயை இழந்ததாலான பாதிப்பா?
அதனாலில்லை, கோட்பாட்டு ரீதியாக உருவாக்கி என்னுள் இறக்கிக் கொண்ட கருத்தியல் இது. சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். ஆண்டில் பல காலம் கூலி வேலைக்குப் போய் அரை வயிறு, கால் வயிறு சாப்பிட்டோம். எல்லாமும் ஏழை, பாழைகள் மேல் ஒரு பரிவை உண்டாக்கின. என்னைப் போல உயர்சாதியைச் சார்ந்த மக்களுக்கு இந்நிலையெனில், ஒடுக்கப்பட்ட சாதிகளும் இல்லாததுகள், ஏலாததுகள் தாம்; இதே வறுமைக் கோட்டுக்குள் வாழ்பவர் தாம். இயல்பாக ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கிய பரிவுப் பார்வை உருவாயிற்று. பெண்கள் பலவீனமான பாலினத்தைச் சார்ந்தவர்கள். அடிநிலையிலிருப்போர். எனவே அவர்கள் மீதான இரக்கம், பரிவு, சார்பு நியாயமானது. பெண்கள் கீழ்நிலையிலேயே வைக்கப்பட்டிருப்பதற்கு ஆணாதிக்கவாதிகள் காரணம்.
8. உங்கள் அண்ணனை பற்றி, அவர் உங்கள் வாழ்வில் செய்த & செய்து கொண்டு இருக்கிற பங்களிப்பை பற்றி?
நிறையவே சொல்லவுண்டு. என் வாழ்வில், எண்ணத்தில் உயரிய பீடம் அவருக்குரியது. புதுச்சேரியில் நானிருந்த பத்தாண்டுக் காலம் வரை, என்னை புரிந்துகொண்டு கரிசனத்துடன் நடத்தினார். எந்த வேற்றுமையும் அவர் பாராட்டியதில்லை. புதுச்சேரியிலிருந்த காலமுதல் எனது சமுதாயச் செயற்பாடுகளை, கலை இலக்கிய வெளிப்படுகளை அங்கீகரித்து அரவணைத்துக் கொண்டு சென்றார். நான் புதுச்சேரியை விட்டு நீங்கியதில் அவருக்கு உடன்பாடில்லை. சென்னை அனைத்துக்கும் தலைமையிடமாக இருப்பதுபோல் இலக்கிய உரையாடல், பரிமாறல், தொடர்பாடல் எல்லாவற்றுக்கும் தலைமையிடமாக இருக்கிறது. அதனால் அங்கு செல்கிறேன், நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் மருத்துவரான மைத்துனர் பி.வி.வெங்கட்ராமன் வீட்டில்தான் தங்க இருக்கிறேன் எனச் சொன்னதினால், நான் சென்னை செல்ல உடன்பட்டார்.
அது போலவே சென்னை மைத்துனர் வெங்கட்ராமன் என்னைப் பாதுகாத்து வந்தார். நான் வீட்டில் வழுக்கி விழுந்து, இடது தொடை எலும்பு முறிவான நாளின் நள்ளிரவு மருத்துவமனையில் சேர்த்து, மருத்துவச் செலவுகள் முழவதையும் ஏற்றுச் செய்தார். எனக்கு வாய்த்தது போல், இந்த அண்ணன் போலவோ, மைத்துனர் போலவோ வேறு எவருக்குக் கிடைப்பார்கள்!
9. உங்கள் அண்ணியை பற்றி?
அண்ணன் போல, அதே கரிசனத்துடன் நடந்து கொண்டார். அவரைப்போல் எவரையும் வெறுக்காத, நேசிக்கிற உயிரை நான் கண்டதில்லை. சுட்டிக் காட்ட வேண்டியது எதுவெனில், முரட்டுத் தனமும் வஞ்சகமும் கொண்டவர்களைக்கூட அவர் அரவணைத்துச் செல்லும் மேன்மையான பாங்கு. அறிவார்ந்த வார்த்தையில் சொன்னால் ’குணவதி’.
10. உங்கள் வாழ்வில் மிக மகிழ்ச்சியான தருணம் என நீங்கள் நினைப்பது எது? ஏன்?
எல்லாமும் மகிழ்ச்சியான தருணங்கள்! கணக்கிட்டால் ஒன்றா இரண்டா அடுக்கிக் கொண்டு போகலாம்.
11. உங்கள் வாழ்நாள் சாதனையாக நீங்கள் நினைப்பது? ஏன்?
நாட்டாரியல் சேகரிப்பாளர், எடுத்துரைப்பாளர் எஸ்.எஸ். போத்தையா பற்றிய இரு தொகுப்பு நூல்கள்: யதார்த்தவாத படைப்பிலக்கியத்துக்கு அன்னமிட்ட வீர.வேலுச்சாமியின் படைப்புக்கள் தொகுப்பான “மண்ணின் குரல்”: ஈழத்துக் கவிஞர், போராளி கி.பி. அரவிந்தன் பற்றிய ”கனவின் மீதி” நினைவேந்தல் தொகுப்பு: மண்ணின் கலைஞர் கே.ஏ.குணசேகரன் பற்றிய தொகுப்பு - போன்ற தொகுப்பு நூல்கள் கொண்டுவந்ததைச் சாதனையாகக் கருதுகிறேன்.
தமிழ் உரைநடை முன்னோடி கி.ரா 95 - முழுநாள் நிகழ்வினை முன்னின்று நடத்தியதோடன்றி, நிகழ்விலேயே கி.ரா.வின் படைப்பு மேன்மையைச் சித்தரிக்கும் 1) கி.ரா.என்னும் மானுடம் 2) கி.ரா.வும் புனைகதைகளும் 3) கி.ரா. கோட்பாட்டு நோக்கு ஆய்வு – ஆகிய மூன்று தொகுப்புக்களையும், வெளியிட்டமை என் வாழ்வின் சாதனைகள்.
1965 - மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று தலைமையேற்று நடத்தியது , வாழ்நாட்களில் புறக்கணிக்கவியலாத ஒன்று.
12. இனி இருக்கும் உங்கள் காலத்தில் - நீங்கள் எவற்றை (Personal, எழுத்து etc.,) செய்து முடிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
எழுத வேண்டியவை நிறைய வண்டி வண்டியாய் என்னெதிரில்: முதுமை என் மீது மலையாகக் கவிகிறது. முற்றாகக் கவியுமுன், முழுமையாக, அல்லது எண்ணுவதில் பாதியையாவது முடிக்கவேண்டும்.
13. உங்கள் வாழ்வில் நீங்கள் ஈடு செய்ய முடியாத இழப்பாக நினைப்பது?
குடும்பத்தை, குடும்ப வாழ்வை இழந்தது.
14. உங்கள் வாழ்வில் திரும்பிச் சென்று மாற்றக்கூடிய தருணம் வாய்த்தால் எதைச் செய்வீர்கள்?
குடும்பத்தை மீட்டெடுப்பது.
15. உங்களுக்கு இதுவரை நிறைவேறாத ஆசை என எதுவும் உண்டா?
எழுத்தாளனாக போதுமான பங்களிப்பினைக் செய்ய இயலாது போயிற்று என்ற ஏக்கம்.
16. இப்போது நீங்கள் 80தைக் கடந்திருக்கிறீர்கள். வயது மூப்பு பற்றி உங்கள் அபிப்ராயம்?
முதுமை வருமெனத் தெரியும். ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு வகையாய் நடனம் நிகழ்த்தும் என்பதும் அறிவேன். நடுத்தர வயதில் இதுபற்றி தீவிரமாகச் சிந்ததில்லை. ஆயினும் பாலியம், இளமை, நடுத்தர வயதுப் பருவங்களை சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகள், ஆற்றிய காலமாக நிறைவு கொள்ள முடியும்.
ஒரு குறிப்பிட்ட காலம்வரை அனைத்து உறுப்புக்களும் இசைவாய் இயங்கிட, உடல் ஒரு கூட்டிசையைப் பிரவகிக்கிறது. முதுமைவரை உறுப்புகளுக்கு நம் கட்டளை. முதுமை வந்து சேர்ந்த பின்னர், நம்மீது உடலின் கட்டளை. உடல் உபாதைகள் முழுமையாக ஆக்கிரமிக்கின்றன. இந்த முற்றுகைக்குள் மாட்டுப்பட்டு முதியவர்கள் அதற்குள் இயங்க அனுமதிக்கப் பட்டவர்களாகிறார்கள். பல்செட், ஹியரிங் எய்ட், பர்வைக் கண்ணாடி, இடுப்பு பெல்ட், முட்டிக்கட்டு (Knee Cab), ஊன்று கோல் – எத்தனை உபகரணங்கள்! உபகரணங்களின் துணையினால் முதுமையின் உடல் இயக்கம் நடக்கிறது.
“நேத்து வரைக்கும் நல்ல நெருக்கம். இன்னைக்கு இல்ல” என்றாற் போல இது.
உடலின் தாளங்களுக்கு ஏற்ப இசைப்பவர்களாக மாறிவிடுகிறோம். இப்போது நாம் சுயமான இசைக்கலைஞர் அல்ல.
“இனி இந்த மனிதனில் கவிதை இல்லை” என மலையாளக் கவிஞர் சுகதமாரியின் நீண்ட துயரமான புல்லாங்குழல் இசை வருகிறது. அது எனது இசையாகவும் கேட்கிறது.
இனி இந்த மனதில் கவிதை இல்லை...
"மணமில்லை தேனில்லை இனிமையில்லை.
இனி இந்த மனதில் கனவுகளும் பூக்களும்
மழையும் விடியலும் மீதமில்லை;
அழகில்லை, பூப்போல் கையணைக்க-
அனுராகமில்லை, கண்ணீருமில்லை,
விரகமும் அச்சமும் சுமூக மோகங்களும்-
நோவும் குற்றஞ் சுமத்தலும் முற்றுமில்லை...
இனி இந்த மனதில் கவிதையில்லை...
இருண்ட மனதில் இனி பண்டிகையில்லை -
சிரிப்பில்லை, களிப்பில்லை, சிறகுமில்லை-
மலர் தேடி ஓடும் மலைச்சரிவில்-
…………. ……. ……….
…………….. ………. …….
வளைந்த இலவமரக் கொம்பில் கட்டிய ஊஞ்சலில்
ஆட்டமில்லை, பாட்டமில்லை.
இனி இந்த மனதினில் கவிதை இல்லை"
மலையாளம் - சுகதகுமாரி: தமிழில் – இளம்பாரதி.
என்ன செய்யலாம்? எதிர்கொள். முதுமையைக் கொண்டாடு என்கிறார் சுகுதகுமாரி.
நானும் அவ்வாறே எதிர்கொள்வேன்.
17. மரணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முதுமையை நாம் எப்படி எதிர்கொளவது என்பதில் ஒரு தீர்மானமிருப்பின், மரணத்தை எதிர் கொள்வது என்பதிலும் ஒரு திட்டம் உண்டாகும். முதுமை என்பது – அரை மரணம்.
எந்தச் சடங்கும், சாஸ்திரமும், சம்பிரதாயமும் சொந்த வாழ்க்கைக்குள் நுழையாமல் பார்த்துக்கொண்டவர் கி.ரா; சாதி, மதச் சழக்குகளுக்குள் வாழ நேர்ந்ததைத் தவிர, வேறெந்தப் பாவமும் அறியாதவர். பிரகடனப் படுத்திக்கொள்ளாத பகுத்தறிவாளர்.
மரணம், மரணத்தின் பின்னான செயல்கள் பற்றி கி.ரா தெளிவான பார்வையை முன்வைத்துள்ளார். மரணச் சடங்கு, சாங்கியம் – என்பவை பற்றிய அவரது நோக்கினை இது வெளிப்படுத்துகிறது.
“நான் என்ன சொல்றேன்னா, ஒரு மனுசன் இறந்து விட்டால் நீங்க போகாதீங்க. அவங்க வீட்டில இருக்கிறவங்களே அடக்கம் பண்ணிக்கிடுவாங்க. நான் இறந்து போனால் கூட யாரும் வராதீங்க. நீங்க செய்ய வேண்டியது என்னன்னா சத்தமே கேட்கக் கூடாது. இந்தக் கண்ணாடிப் பெட்டியில் வச்சி அழுவது, மாலை போடறது எதுவும் பண்ணாதீங்க. நான் இறந்து போய்விட்டேன் என்றால், இறந்து போனதற்கான மரணச் சான்றிதழ் வாங்கணும். அப்புறம் இது சந்தேகமில்லாத மரணம்னு ஒரு சான்றிதழ் வாங்கணும். அவ்வளவுதான். மறுநாள் பாலுக்குப் போறது, இதெல்லாம் வேண்டாம். சாம்பலைக் கூட வாங்காதீங்க. அதைக் கொண்டுபோய் கடலில் கரைப்பது எதுவும் வேண்டாம். அதுபோல் அஞ்சலிக்கூட்டம், அனுதாபக் கூட்டம் எதுவும் நடத்தாதீங்க. போட்டோ வச்சு மாலை போடாதீங்க. சிலை வைக்காதீங்க. ஞாபகார்த்தமா எதுவுமே வேண்டாமென நான் சொல்றேன். மரணத்தில் முக்கியமா படம் எடுக்காதீங்க. படம் எடுத்து என்ன பண்ணப் போறீங்க. பொணத்துக்குப் பக்கத்தில இருந்து போட்டோ எடுத்து என்ன பண்ணப் போறீங்க. நம்ம செய்கைக்கு ஒரு நல்ல காரணம் இருக்கணும்”
(நேர்காணல் : தளம் காலாண்டிதழ்; சனவரி - மார்ச் 2016.)
இதுதான் என் பார்வையும்.
ஒவ்வொரு செய்கைக்குப் பின்னாலும் ஒரு சரியான காரணம் இருக்க வேண்டுமென்று நினைக்கிறவன் நான்.
வாழும் காலத்தில் கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த கொள்கை வீரர்களும் பகுத்தறிவாளர்களும், சாவுக்குப் பின் உறவுகளால், குடும்பத்தால், நட்புகளால் சாதி, மதக் குறியீடுகளுடன் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இறப்பின் பின் என்ன நடக்கிறது எனக் கண்காணிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைப்பதில்லை. அவர் கடைப்பிடித்த கொள்கைக்கு இப்போது நடத்துகிற சடங்குகள் எத்தனை பெரிய அவமானத்தினை உண்டாக்கும் என்பதை இருப்பவர்கள் உணரவேண்டும். ஒருவருக்கும் அந்த உணர்த்தி இல்லாததால் “எனது இறுதி அடக்கம் நான் விரும்புகிறபடியே அமையவேண்டும்” என மரண ஆவணம் வரைந்து, பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்கிற செயல்முறை சிந்தனையாளர்கள் பெருகிவருகிறார்கள். நானும் அது போலப் பதிவு செய்து கொள்ள நினைக்கிறேன்.
18. உங்கள் திருமணத்திற்கு முன் & திருமணமான பின் - உங்கள் குடும்பம் வாழ்வு எப்படியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்? அவற்றில் ஏதேனும் நிறைவேறியதா?
சாதாரண நடுத்தர வர்க்கச் சிந்தனையாளன், உயர்நிலை வாழ்க்கைக்கு ஆசைப்படுதலும் தேடுதலுமிருந்த வேளையில், ஊடே ஊடே முற்போக்குச் சிந்தனைகளும் இலட்சிய நோக்கும் கலவையாய் இருந்தன. சொத்து பத்து, நிலபுலம் (வீடுகள்) என சேர்க்க வேண்டுமென எண்ணம் சிறிதேனுமில்லை. மற்றவர்போல் அந்த எண்ணமுடன் இயங்கியிருந்தால் என் வாழ்வு பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் அதற்காக ஆசைப்பட்டார்கள்.
அண்ணன் ஒருமுறை சொன்னதாக அம்மா தெரிவித்தாள் ”அவனுக்குப் பணத்தின் அருமை இப்போது தெரியாது. பின்னால் எதுவுமில்லாமல் கஷ்டப்படுகிறபோது உணர்வான்".
19. உங்கள் மகன் பற்றிய உங்கள் அபிப்ராயம்?
எனக்கு கணினி தொடர்பாக நீ முன்முயற்சி மேற்கொண்டு ஆற்றிவரும் பணிகள் நிறைவானவை. என் வாழ்நாள் செயல்களை தொகுத்து இணையம், முகநூல் எனத் தொடர்கிறாய். தொடரட்டும் உன் பணி.
20. உங்கள் சொந்தங்கள் பற்றி?
தனித்தனியான அபிப்ராயங்கள், கணிப்புகள் உண்டு. காலத்தால் செய்த எனது உதவிகள் இல்லையென்றால் அவர்கள் மேநிலைக்கு வந்திருக்க முடியாது.
வசந்தன் எனக்கு பிரமிப்பை, அதிசயிப்பைத் தந்து கொண்டிருக்கிற அபூர்வமான மனிதர். கேட்டால் ”உங்களிடமிருந்து கற்றுக்கொண்டது” என்று பதில் கொடுப்பார். விளக்கம் ஓரளவு ஏற்புடையதாயினும், ஒருவருக்குள் இயல்பாக அந்த எண்ணங்களும் உணர்வுகளுமில்லாமல், அதை செயல்பூர்வமாக வளர்த்தெடுக்காமல் சாத்தியப்பட்டிருக்காது. இன்றைக்கும் புதுக்கோட்டையிலுள ரத்த சொந்தமான குடும்பம், சொந்தக் குடும்பம், உறவுகள் எல்லாப் பொறுப்பையும் எடுத்துப் போட்டுப் பொறுமையுடன், பொறுப்புடன் கவனித்துக் கொள்கிறார்.
21. இப்போது நீங்கள் தனிமையில் வாழ்வது பற்றிய உங்கள் மன ஓட்டம் என்ன?
உடலைப் பேணுவதில், நமது செயலாக்கத்துக்கு துணையாக பக்குவமாய் எடுத்துச் செல்வதிலே நாள் கடக்கிறது. முதுமை பற்றிய கேள்வியில் இதற்கான பதிலை விரிவாக விளக்கியுள்ளேன்.
22. நீங்கள் சென்று பார்த்த ஊர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது & ஏன்?
முதலில் அமெரிக்கா. படித்தும், பார்த்தும், பழகியும் உள்ளுணர்ந்த அனுபவங்களே ”முடிந்து போன அமெரிக்கக் கற்பனைகள்” நூல் என நீ அறிவாய்.
அடுத்தது பிரான்ஸ். என்னை அழைத்துச் சென்று உபசரித்தவர்களால் உண்டான பிரியம், நாட்டின் மீதாகவும் ஆகியது.
23. உங்கள் அரசாங்கப் பணியில் நீங்கள் சாதித்தது & இழந்தது யாவை?
முதலில் அரசாங்கத் துறைக்கே போயிருக்கக் கூடாது என்பது என் கருத்து. இறுதிநாள் வரை அரசுப்பணியில் நான் ஒட்டவேயில்லை.
24. உங்களுக்கு பின், உங்கள் படைப்புகள் என்னவாகும் அல்லது என்னவாக வேண்டும் என நினைக்கிறீர்கள்?
என்னவாகும் என்ற கவலையில்லை. கவலை கொள்ள இது நேரமுமில்லை. எதனாலோ, அல்லது ஏதோ ஒரு உந்துதலால் இந்த எழுதுகோல் பிடித்தாகிவிட்டது. அதன் கஷ்ட நஷ்டங்கள், எழுச்சி, வீழ்ச்சி எல்லாமும் அறிவேன். என்ன நடக்குமோ நடக்கட்டும்.
25. உங்களுக்கு பின், உங்கள் நினைவு எப்படி அனுசரிக்க பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?
என் எழுத்துக்களால் கொண்டாடப்பட வேண்டும்.
26. நீங்கள் பெரிதாக சம்பாதித்தும் உங்களுக்கு என எதையும் சேர்த்து கொள்ளவில்லை? அதை பற்றி உங்கள் இளமைக் காலத்தில் நினைத்தது என்ன, இப்போது நினைப்பது என்ன?
எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டுமென்னும் எண்ணம் எப்போதுமிருந்ததில்லை. அப்படியே வாழ்ந்தாகிவிட்டது. தவிர்க்க முடியாமல் ஒன்றிரண்டு உடமைகள் சேர்த்தாகி விட்டது.
27. நீங்கள் உங்கள் வாழ்வில் இதுவரை சேர்த்துக் கொண்டதாக & சேர்த்துக் கொள்ள வேண்டாம் என நினைப்பது எவை எவை?
சேர்த்துக் கொள்ள வேண்டுமென நினைப்பது உறவுகளுடனும் நட்புகளோடும் வாழுதல். வேண்டாமென நினைப்பது தன்னை முன்னிறுத்துதல், புகழ், அங்கீகாரம், துதி பாடுதல்.
28. உங்களுக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன் படம் - ஏன் பிடிக்கும்? இதுவரை எத்தனை தடவை அப்படம் பார்த்திருப்பீர்கள்?
எனக்கு பிடித்தாக யார் சொன்னது? பிடித்த பல படங்களில் அதுவும் ஒன்று.
29. மதுரை வீரன் படத்தை விட வேறு ஏதெனும் படம் மிகவும் பிடிக்குமா?
அந்தநாள், தேவதாஸ், காலம் மாறிப் போச்சு, மந்திரி குமாரி, பராசக்தி, மனோகரா, திரும்பிப் பார், சாரதா, புதையல், குலவிளக்கு, துலாபாரம், இப்படிச் சில.
30. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் யார்? ஏன்?
முதலாவது - வங்க மொழியில் உருவான சரத்சந்திரர். ஏனெனில் எனது வாழ்வும் அவருடைய படைப்புகள் போலவே சோகவடிவானது. துயரம் மிக்கது. பாலியம் முதலாக இளவயது வரையும் துயரமானதுதாக அமைந்திருந்தது.
அடுத்தவர் தமிழில் கி.ராஜநாராயணன். அவர் மண்ணின் மக்களை, அவர்களின் வாழ்வியலை எழுதினார்.
31. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது? ஏன்?
கன்னடத்தில் நிரஞ்சனா எழுதி, தமிழில் ஆக்கம் செய்யப்பட்ட ”நினைவுகள் அழிவதில்லை”. அதில் வெளிப்படுகிற போர்க்குணம், எடுத்துரைப்பு முறை என்னை ஈர்த்தது.
32. நீங்கள் பிறந்த ஊரை நான் இதுவரை பார்த்தது இல்லை? அவ்வூரைப் பற்றி விவரிக்க முடியுமா?
”சொந்த ஊரை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையைப் போல் இனிமையானது வேறெதுவுமில்லை” என்ற வரிகளுள்ள தெக்கத்தி ஆத்மாக்கள் நூலின் விவரிப்பு தான் என் ஊர். தெக்கத்தி ஆத்மாக்கள் கரிசல் வாழ்வின் நேரலை விவரிப்பு.
33. உங்கள் ஊரில் மிகவும் பிடித்தது எது & எவற்றை இப்பொது miss பண்ணுகிறீர்கள்?
சிறு வயதின் கூட்டாளிகள், சிநேகிதங்கள் எனப் பல.
34. முழுக் கைச் சட்டையையே பெரும்பாலும் அணிகிறீர்கள். ஏன்?
பெரிதாய்க் குறிப்பிட ஏதுமில்லை. அரைகைச் சட்டையை விட அது ஒரு பெரிய மனிதர் தோற்றத்தை தந்தது.
35. உங்களுக்கு பிடித்த நிறம்?
வெளிர் நீலம், இளம்துளிர்ப் பச்சை
தளம் இதழில் வெளியான பா.செ.யின் கடைசி நேர்காணல் குறித்து வாசகர் கருத்து.
பொதியவெற்பன்
பாசெ உடனான அவரது மகன் சூரியதீபன் மேற்கொண்ட (அதுவே அவரது கடைசி) நேர்காணல் வித்தியாசமானது. இருவர் உலகங்களும் வெவ்வேறே. இதற்கூடாக எனைப் பாதித்த, பிடித்த புலன(விடய)ங்கள்:
1. அவர் தம் இணையர்க்கும் தந்தையார்க்கும் இழைத்த பாதகங்கள்; குடும்பத்தை குடும்ப வாழ்வை இழந்த ஆற்றாமை குறித்த ஒப்புதல் வாக்குமூலங்கள்
2. "உங்கள் மகன் பற்றிய உங்கள் அபிப்ராயம்?" - சூரியதீபன்
"எனக்குக் கணினி தொடர்பாக நீ முன்முயற்சி மேற்கொண்டு ஆற்றிவரும் பணிகள் நிறைவானவை. என் வாழ்நாள் செயல்களைத் தொகுத்து இணையம், முகநூல் எனத் தொடர்கின்றாய் தொடரட்டும் உன் பணி"- பாசெ
3 " உங்கள் அரசாங்கப் பணியில் நீங்கள் சாதித்தன - இழந்ததன யாவை?"
"முதலில் அரசாங்கத்துறைக்கே போயிருக்கக்கூடாது என்பது என் கருத்து. இறுதி நாள்வரை அரசுப்பணியில் நான் ஒட்டவேயில்லை"
ஆம் அவரின் பணி ஓய்வுநாளில் நானவர்க்கு அனுப்பிய சேதி: 'விடுதலை நாள் வாழ்த்தே!'
4.முதுமையையும், மரணத்தையும் எதிர்கொள்ளும் ஆதங்கம், புரிந்துணர்வு, பரிபக்குவம் சித்திரிப்பு
ப.தனஞ்ஜெயன்
பா.செ அவர்களின் கடைசி நேர்காணல் நானே உரையாடுவது போல் உள்ளது. சூரியதீபனே நேர்காணல் எடுத்துள்ளார். பா.செவின் எழுத்து தாகம் தீரா நதியாகப் பயணிக்கிறது. பேட்டி முழுவதும் அவர் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்த காலகட்டங்களையும், தவற விட்ட தருணங்களில் அவர் மனம் பட்ட துயரங்களையும் சொல்வதோடு நிற்காமல் தனக்கான இலக்கிய அம்புகளைச் செய்து பயணித்திருப்பது அலாதி பிரியம்.
Venkatesh Rathakrishnan
மூத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எனக்குப் பிடித்த பல சிறுகதை எழுதியவர். அவரிடம் அவரது மகன் சூரியதீபன் எழுப்பிய கேள்விகளும், அதற்கான பதில்களும், அக்.-டிச.2022 ‘தளம்’ இதழில் விரிவாக பிரசுரமாகியுள்ளது.
எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
‘ஏன் எப்போதும் முழுக்கை சட்டை போட்டுக்கொள்கிறீர்கள்?’ என்பது மாதிரியான எளிய கேள்விகள் கூட இடம்பெற்றுள்ளன. பொதுவாக இதெல்லாம் ஒரு கேள்வியா என்ற எண்ணம் எழலாம். ஆனால், எழுத்தாளரைப் பற்றிய சித்திரத்தைத் தீட்டுவதில் இதுபோன்ற எளிய கேள்விகளுக்கு முக்கியத்துவம் உண்டு.
இந்தப் பேட்டியின் ஆரம்பத்தில், பா.செயப்பிரகாசம் தம் குடும்பம், மனைவி பற்றி தெரிவித்துள்ள விஷயங்கள் மனம் நெகிழ வைப்பவை. குடும்ப வாழ்வை கவனிக்காமல் போய்விட்ட ஆதங்கத்தையும் அந்த தோல்வியையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டு இருக்கிறார் பா.செ.
வாய்ப்புள்ளவர்கள் இந்தப் பேட்டியைத் தேடி வாசிக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக