இறுதித் துளிவரை வாழ்ந்தவர் - களந்தை பீர்முகம்மது

இலக்கிய உலகைத் தொட்டுக்கொண்டிருந்த பருவம், வாசகனாக - பார்வையாளனாக. திருச்செந்தூர் தோழர்களின் உறவு பலமாக இருந்தது. காணும் இடங்கள்தோறும் அவர்கள் இருந்தார்கள். தாமரை, தீபம், கண்ணதாசன், கணையாழி போன்ற இலக்கிய நறுமணங்களை நாசி சுவாசித்துக்கொண்டிருந்தது. பா.செயப்பிரகாசத்தின் கதைகளை தாமரை இதழில் வாசிக்கிறபொழுதுகளில் ஏதோ ஒரு புதிய உணர்வு மேவி வருவதை உணர்ந்தேன். “நம்ம பக்கத்து ஊர்க்காரர்தான் போலிருக்கு” என்கிற எண்ணம் உண்டாயிற்று. கரிசல் மண்ணின் வாடை அடிக்கிறதே? அதற்கும் மேல் அந்தத் தமிழ்நடை அப்போது காணக் கிடைக்காத தன்மைமிக்கதாகவும் இருந்தது.

பின்னர் நானும் எழுத்தாளன் ஆனேன். சூரங்குடி எழுத்தாளர் அ.முத்தானந்தம் அறிமுகம் கிடைத்தபோது, அவர் பா.செ பற்றிக் கொஞ்சம் சொன்னார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறுகதைப் போட்டியை நடத்தியபோது, என் கதைக்கும் பரிசு கிடைத்தது. சென்னையில் பரிசளிப்பு விழா. பரிசை வாங்கிக்கொண்டு ஊருக்கும் திரும்பிவிட்டேன். சில வாரங்கள் கழித்து முத்தானந்தத்தின் கடிதம் வந்தது. சென்னை விழாவிற்கு பா.செயப்பிரகாசம் வந்திருந்ததாகவும், அவர் என்னைப் பார்த்ததாகவும் ஆனால் என்னுடன் பேச வாய்ப்பில்லாமல் போய்விட்டதாகவும் முத்தானந்தத்திற்கு எழுதியிருந்தார். அந்தத் தகவல் தெரிந்தபோது எனக்கு வருத்தமாக இருந்தது. பா.செ.யின் பெயரும் படைப்புகளும் அறிமுகமாகியிருந்த அளவுக்கு அவருடைய முகம் எனக்கு அறிமுகமானதாய் இருந்ததில்லை. அப்படி தெரிந்திருந்தால், நானே அவரை எட்டிப் பிடித்திருப்பேன்.

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன், பா.செ.யை முதன்முதலாக எங்கு, எப்போது, எந்தச் சூழ்நிலையில் பார்த்தோமென்று? கொஞ்சமும் நினைவுகள் மீள்வதாயில்லை. அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.வில் இருந்த அவருடைய வீட்டிற்குச் சென்று அவரைப் பார்த்ததுதான் முதல் பார்வையாக இருக்குமோ என்று ஐயுறுகிறேன். 2002ஆம் ஆண்டில் சென்னை ஒயிட்ஸ் ரோட்டிலிருந்த புரொஃபஷனல் கொரியர் அலுவலகப் பணியில் இருந்த நாட்களில் அரும்பாக்கம் செல்லவும் அவரோடு அளவளாவவும் அதிக நேரமும் வாய்ப்பும் அமைந்தன.

ஆனால் இந்தச் சந்திப்பிற்கும் முன்னமே, ’பா.செயப்பிரகாசம் படைப்புலகம்’ என்ற நூலை நான் அவருக்காகச் செய்ய ஆரம்பித்துவிட்டேன். 2000ஆவது ஆண்டில் மதுரையிலிருந்து அ.பீர்முகம்மது பாகவியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சிந்தனைச் சரம் இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தேன். அப்போது எனக்கும் பா.செ.க்கும் இடையிலான கடிதப் போக்குவரத்துகள் நடந்தபடியிருந்தன. நானும் பல சிறுகதைகளை எழுதிவந்த வகையில் என் கதைகளோடு அவருக்கு நல்ல இணக்கம் உண்டாகியிருந்தது. இந்த அடிப்படையில்தான் அவர் என்னிடம் தன்னுடைய படைப்புலகப் பணித் தொகுப்பைக் ‘கலைஞன்’ பதிப்பகத்திற்காக ஒப்படைத்திருந்தார்.

எனக்குக் கிடைத்த அரிய பணியாக அதை எடுத்துக் கொண்டேன். அவருடைய கதைகளையும் இதர எழுத்துக்களையும் ஒட்டுமொத்தமாக வாசிக்கின்ற வாய்ப்பு அது. அவர் அரசுப் பணியில் இருந்தபோதும், தன் சிந்தனையையும் செயல்பாடுகளையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாகவே அமைத்துக்கொண்டார். வசதி வாய்ப்புமிக்கவராய் இருந்தபடி அவர் ஏழையெளிய மக்களுக்காகச் சிந்தித்தார் எனில் அதில் வெளிப்பட்டது சமூகத்தின் மீதான அவருடைய கோபம்தான். அது கடைசிவரையிலும் நீர்த்துப்போகாமல் இருந்தது.

அந்த வகையில் தமிழின் சிறந்த சிறுகதைகளில் அவருடைய ‘ஒரு ஜெருசலே’மோ ‘அம்பலக்காரர் வீ’டோ இருக்கின்றன. அசலான மனிதர்கள், அசலான மண்வாசம். வாய்க்கும் வாழ்வுக்குமாக வாழ்நாள் முழுதும் போராடுகின்ற அடித்தட்டு மக்கள் அவருடைய கதாமாந்தர்களாக இருந்தார்கள்; அவர்களும் மனிதம் செழிக்கின்ற மனிதர்களாக இருந்தார்கள். இத்தகைய சூழல்களைச் சித்திரிக்கும்போது முற்போக்கு முகாம் எழுத்தாளர்கள் பிரச்சாரத் தொனியை மேற்கொள்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தபடியிருந்த காலம் அது. பா.செ.யும் முற்போக்கு எழுத்தாளர்தான். அவருடைய கதைகள் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் இருந்தன. அவருடைய எழுத்தே அவருடைய மனமாகவும், அவருடைய மனமே அவருடைய எழுத்தாகவும் ஒருங்கிணைந்திருந்ததற்கு அந்தக் கதைகள் போதுமானவையாயிருக்கின்றன. அதனால்தான் நானோ பெருமாள்முருகனோ தேவிபாரதியோ அவரின் அணுக்க வாசகர்களாய் இருந்திருக்கிறோம் என்றபோதும் அவருடைய படைப்புகள் போதுமான பொதுவெளி விவாதங்களில் இருந்திருக்கவில்லை. அவர் கொண்டாடப்படவில்லை. அதற்கு என்ன காரணமென்று ஓரளவுக்குத்தான் சொல்ல முடிகின்றது; பல காரணங்கள் புதையுண்டிருப்பதாகப் படுகின்றன. அவர் தரப்பிலிருந்து ஒரு காரணத்தைச் சொல்ல முடியும், அதுதான் அவருடைய தன்முனைப்பற்ற அடக்கம். ஆனால் அவரின் மறைவையொட்டி எழுந்த இரங்கலுரைகளில், நினைவடுக்குகளிலிருந்து மீண்டும் பா.செ உயிர்த்தெழுந்திருக்கிறார். அவர் மூடுண்டிருந்திருக்கிறாரே அன்றி, மூழ்கடிக்கப்பட்டுவிடவில்லை.

முற்போக்கு எண்ணமுடைய படைப்புகளும் விமர்சனங்களும் கருத்தாடல்களும் வீரியமாய்த் தமிழுலகிற்குக் கிடைக்க, அவர் முன்நின்று வெளிக்கொண்டுவந்த மன ஓசை மாத இதழ் முக்கியமான பாத்திரத்தை வகித்திருக்கின்றது. இதன்மூலம் தமிழின் அறிவுஜீவிகளும் மார்க்சியச் சிந்தனையாளர்களும் மனஓசை இதழுடன் கைகோத்துச் செயற்பட்டுள்ளார்கள். பல எழுத்தாளர்களின் முதல் கதைகள் அவ்விதழில் வெளிவந்து இலக்கியவுலகில் அவர்களை நிலைபெற வைத்துள்ளது.

முதலில் சமூக நோக்கோடு அவருடைய அரசியல் நிலைப்பாடுகள் இருந்தன. அப்படியிருந்தும் அவரின் எண்ண வேகங்களுக்கு ஏற்ப சமூக நிலைகள் மாறிவிடத் தயாராய் இல்லை. இந்த வேகம் போதாது என்கின்ற மனக் குமைச்சல் அதிகரித்தபோது, அவர் இன்னும் தீவிரமான மார்க்சீய-லெனினீய இயக்கங்களில் பங்குபெறலானார். தெருவிலும் இறங்கி இயக்கப் பணிகளை ஆற்றியுள்ளார். அந்தக் குள்ள உருவத்திற்குள் இத்தகைய பெருமூச்சு அதிகரித்தபோதுதான், அவருடைய படைப்புகளிலும் அனல்வீச ஆரம்பித்திருக்கிறது. அதன் பின்னர் அவர் எழுதிய கதைகள் முற்போக்கு முகாமிற்குள்கூடப் பேசுபொருளாகவில்லை என்றுதான் நினைக்கிறேன். அது படைப்புகளின் தோல்வியாயிருந்தாலும் அவர் தன் கொள்கைத் தோல்வியைக் கொஞ்சமும் ஒப்புக்கொள்கிறவராயில்லை. நாளும்பொழுதும் அந்தச் சிந்தனைகளிலும் செயற்பாட்டிலுமே இருந்துவந்துள்ளார்.

தாராளமய உலகம் மூத்த குடிமக்களைப் பகடைக்காய்களாக மாற்றி ஒவ்வொருவரையும் தனித்தனியாக, மூலைக்கொருவராய் வீசி வருவதில் பா.செ.யும் சிக்கிவிட்டார். தனிமனிதராய்ச் சென்னையிலும் புதுவையிலும் மறுபடியும் சென்னையிலும் என்று அலைந்து திரிந்ததில் அவர் குளியலறையில் வழுக்கி விழுந்திருக்கிறார். இந்நிலையில் அவரை அவரின் சொந்த ஊர்ச் சட்டமன்ற உறுப்பினர் (ஜி.வி.மார்க்கண்டேயன், அதிமுக) தன் கண்காணிப்பின் கீழ் விளாத்திக்குளத்திற்கே அழைத்து வந்துவிட்டார். கடுமையான உடல் வேதனைகளுக்கு இடையிலும் எழுத்துப் பணியை விடாது தொடர்ந்துள்ளார்.

நானும் அவரும் ஒரே மாவட்டத்திற்குள் இருந்தபோதும் சந்திப்பதற்குச் சரியான வாய்ப்பு அமைந்திருக்கவில்லை. அவர் தன்னுடைய நாவல்களைத் தொடர்ந்து எனக்கு அனுப்பித் தந்திருக்கிறார். நானும் என்னுடைய நாவல் முயற்சியில் இருக்கிறேன். தயாரானதும் அந்தப் பிரதியை அவரிடம் நேரே சென்று கொடுத்து வாழ்த்துப்பெற எண்ணியிருந்தேன். நம் மன ஓசைகளைக் காலம் எப்போதும் செவிமடுக்கும் என்று எண்ணக் கூடாது போலும்! தள நாயகனாக மனத்தில் இருப்பவரைக் காலம் அபகரித்துவிட்டது; ஆழ்ந்த இரங்கலோடு தனித்திருக்கிறோம்.

நன்றி: காலச்சுவடு, டிசம்பர் 2022

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

போராட்டக் களங்களின் சகபயணி

பா.செயப்பிரகாசம் நூல்கள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌