'சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்' முன்னுரை

'சிலுக்கு ஸ்மிதா'வை சுலைமான்‌ ஹாஜியார் சந்திக்க நேர்ந்தது எதிர்பாராத ஒரு உணர்வு பூர்வமான சந்திப்பு.

குத்திக்‌ காட்டும்‌ எள்ளல்‌ தொனி ஆரம்பமாகும்‌ காட்சி, எதையோ நோக்கித்‌ தாவலுடன்‌ பாய்கிறது. ஒரே பாய்ச்சலாய்ப்‌ பாய்ந்து சிலுக்கு ஸ்மிதாக்களின்‌ கற்பிக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து யதார்த்தமான, குண்டும்‌ குழியுமான வாழ்க்கையில்‌ கொண்டு போய்‌ கால்‌ பதியச்‌ செய்கிறது. இப்ப நம்ம கிட்டே மிஞ்சிமிருக்கிற இந்த மதம்‌, ஜாதியெல்லாம்‌ வெறும்‌ ஜடந்தான்‌..

மார்க்க நெறிகளின்படி, வாழ்க்கை முறையை நடத்திப்‌ போகிற சுலைமான்‌ ஹாஜியாரின்‌ வாசகமாக வைக்கப்பட்டிருந்தால்‌, ஒரு வேளை மார்க்க அபிமானிகளின்‌ குரோதத்துக்கு கதாசிரியர்‌ ஆளாகியிருக்கலாம்‌. ஆனால்‌. கோதண்ட ராமய்யரின்‌ வாசகமாக வந்து விழுகிறது. அதனால்‌ விவகாரம்‌ இல்லாமல்‌ போகிறது. “பாவா, என்னை ஆசீர்வதிங்க. எனக்கு நல்வாழ்வு வேண்டி அல்லா கிட்ட துஆ கேளுங்க" என்று ஸ்மிதா ஹாஜியாரின்‌ காலடிகளில்‌ விழுந்து வணங்கியபோது, அவருடைய உள்ளக்‌ கிடக்கையும்‌ அதுதான்‌.

படத்‌ தயாரிப்பாளரான கோதண்டராம அய்யர்‌ “இன்னொரு உலகமும்‌ இருக்குவே. அதையும்தான்‌ பார்த்து வையுமேன்‌” என்று ஒரு வலிமையான கைப்பிடியில்‌ ஹாஜியை இப்படி ஸ்டுடியோ பக்கமாய்த்‌ தள்ளிக்‌ கொண்டு வந்து விடுகிறார்‌.

என்றைக்கோ கைவிட்டுப்போன கவிதையுலகின்‌ மிச்சமுள்ள சிலச்‌ சில வரிகள்‌ அவர்‌ முன்‌ பளிச்சிட்டு விழும்படி, இப்போது ஹாஜியாரின்‌ கண்‌ பார்வை எல்லைக்குள்‌, பறவையின்‌ சிற்றசைவாய்‌ அசைந்து வரும்‌ சிலுக்கு ஸ்மிதா, தன்‌ வீட்டு டி.வி திரையில்‌ உலவிய பிம்பம்‌ இப்போது நெடுதுயர்ந்து தேவதையாக, உயிரைப்‌ பிடித்தாட்டும்‌ வகையில்‌ வருகிறது.

ஸ்மிதாவை இரண்டாம்‌ முறையாக சந்திக்க ஹாஜியார்‌ ஆயத்தமாவதைத்‌ தெரிந்து, ஏகப்பட்ட வசவாய்‌ வாய்ப்பாறி விடுகிற அவருடைய சம்சாரம்‌ 'அசன்‌ பாத்துமா' அம்மாள்‌ கூட, ஸ்மிதாவின்‌ தற்கொலை இறப்பு பற்றிக்‌ கேள்வியுற்றதும்‌. “எல்லா மக்களையும்‌ காப்பாத்து ஆண்டவனே” என்று வேண்டுகிறார்‌. 'ஸ்மிதாவின்‌ இறுதி யாத்திரை எப்படி நடந்தேறுகிறது?'

“பெரும்பெரும்‌ நடிகர்கள்‌ நடிகைகள்‌ இன்றி, புகழ்‌ மிக்க இயக்குநர்கள்‌, தயாரிப்பாளர்கள்‌ இன்றி, உறவினர்‌ இன்றி நகர்ந்த சிறிதான இறுதி யாத்திரையில்‌ சோகத்தால்‌ முழுமையாக ஆட்பட்ட நிலையில்‌ சுலைமான்‌ ஹாஜியார்‌ நடந்து செல்கிறார்."

பொதுப்‌ புத்திக்கு அறியப்பட்ட நடிகைகளின்‌ மினுமினுப்பான வாழ்க்கையை, ஊடகங்களால்‌ பூதாகரமாக ஊதிப்‌ பெருக்கப்பட்ட அவர்களின்‌ பக்கங்களை, தூக்கித்‌ தலைகீழாய்ப்‌ போட்டு உடைக்கிற கதை. திரை கற்பித்த பொதுப்‌ பார்வையை முறித்து, யதார்த்த சித்திரத்தை முன்‌ பரப்புகிறது.

அமெரிக்க வாழ்‌ தமிழ்‌ எழுத்தாளரான காஞ்சனா தாமோதரனின்‌ உலகத்‌ தமிழ்‌ மொழி அறக்கட்டளை, சமகால தமிழிலக்கிய வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, சிறந்த சிறுகதைகளை வெளியிடக்‌ கருதியது. சிறந்த கதைக்‌ ௧ரு, கதையாடல்‌ முதலிய அம்சங்களுடன்‌ தமிழ்‌ வாழ்வின்‌ சாரத்தையும்‌, பன்முகத்‌ தன்மையையும்‌ பிரதிபலிப்பதாக கதைகள்‌ அமைய வேண்டுமெனக்‌ கேட்டபோது, இளம்‌ படைப்பாளிகள்‌ பலரது படைப்புகளை சேகரித்து அனுப்பும்‌ முயற்சியைக்‌ கைக்‌ கொண்டேன்‌. வாசக மனதை ரொம்ப தூரத்துக்கு ரொம்ப நேரத்துக்கு அலப்பரை பண்ணிய இந்தக்‌ கதைகளும்‌ - களந்தை பீர்முகமதுவின்‌ இந்தக்‌ கதைகள்‌ 'சிலுக்கு ஸ்மிதாவும்‌, சுலைமான்‌ ஹாஜியாரும்‌', 'சிற்றுளி'-யும்‌ அதில்‌ அடங்கும்‌.

இந்த இரண்டும்‌ இவை போன்ற கதைகளும்‌ வேறு, வேறான விஷயங்களைப்‌ பேசுகின்றன. இப்படியான விஷயங்கள்‌, அதன்‌ ஆரம்ப எடுப்பு, அது எங்கே போய்‌ முட்டி முடிகிறது என்று முன்‌ கணிக்க முடியாத ஓட்டம்‌. இப்படியான அள்ளக்‌ குறையாத நிறைய உத்திகளைக்‌ களந்தை பீர்முகமது கைவசம்‌ வைத்திருக்கிறார்‌.

இந்த நூலின்‌ நான்காம்‌ கதையான "தீயின்‌ விளிம்புகள்‌” இப்படித்‌ தொடங்குகிறது.

“மொட்டைத்‌ தலையும்‌, வெள்ளையானத்‌ தாடியும்‌ கொண்டிருக்கும்‌ இந்த ஒல்லியான, வளர்ந்த, சற்றே சிவந்த நிறந்துடன்‌ ஜோரான கைலி கட்டி சபையில்‌ நடு நாயகமாய்‌ அமர்ந்திருக்கும்‌ ஜனாப்‌ முகைதீன்‌ மரக்காயர்‌ பற்றி உங்களுக்குத்‌ தெரியாமல்‌ இருக்க முடியாது. இந்த நபர்‌ புதியவரேயாயினும்‌ அவர்‌ நமது சமூகத்தின்‌ அடியாழத்திலிருந்து எழும்பி வந்திருப்பவர்தான்‌."

ஒவ்வொரு கதையும்‌ இப்படி 'க்'கன்னா வைத்துத்தான்‌ ஆரம்பமாகிறது. அவரையும்‌ அவரைப்‌ போன்ற ஊர்‌ முக்கியப்‌ புள்ளிகளையும்‌ நீண்ட உரையில்‌ பிரலாபித்து, பிறகு சடக்கென்று 'கதைக்கு வருவோம்‌' என்று ஒரு சலா வரிசை வைத்துத்‌ (சிலம்பாட்டத்தில்‌ சலா வரிசை வைப்பது ஒரு உத்தி) திரும்புகிறது.

“அந்த ஊரின்‌ கட்டுப்பாடு ஒன்று சமீபத்தில்‌ திடீரென்று காலாவதியாகிப்‌ போய்விட்டது. பத்து வருஷ காலமாக எந்தப்‌ பொண்ணும்‌ ஊருக்குள்‌ படம்‌ பார்க்கக்‌ கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. அது செவ்வனே செயல்பட்டும்‌ வந்தது. இதுதான்‌ சாக்கு என்ற போக்கில்‌ சர்க்கஸ்‌ பார்க்கப்‌ போவதாக சொல்லிவிட்டுப்‌ போன பெண்கள்‌, 'பாக்கிய லட்சுமி' தியேட்டருக்குள்‌ நுழைந்து படம்‌ பார்த்தும்‌ திரும்பினார்கள்‌. பத்து வருஷத்‌ தடையும்‌ இவ்வளவு சுலபமாக உடைந்து விட்டதால்‌ மிச்ச, சொச்சக்‌ குழுக்களும்‌, சர்க்கஸ்‌ என்று சொல்லிவிட்டு, தியேட்டர்‌ பக்கமாய்‌ நடையைக்‌ கட்டினார்கள்‌."

இதுதான்‌ ஜமாஅத்‌ (பஞ்சாயத்து) கூடுவதற்கான காரணமானது. எப்படி சாத்தியமானது என்று ஜமாஅத்‌ முஸ்லீம்கள்‌ ஆச்சரியப்பட்டுப் போனார்கள்‌. சிலர்‌ பெண்களின்‌ அழகை ரசித்ததுமுண்டு. இதனால்‌ 'ஐமாஅத்‌'தின்‌ மானமே பறிபோய்‌ விட்டது. ஆகவே, இந்த ஜாம்பவான்கள்‌ எல்லாம்‌ அதன்‌ பின்னாலேயே பறந்து போய்‌ அதனை எப்பாடு பட்டேனும்‌ மீட்டு வந்து மறுபடியும்‌ ஊரோடு பொருத்தி அழகுபடுத்திவிட வேண்டும்‌ என்ற வைராக்கிய சித்தத்தில்‌ 'ஜமாஅத்‌' கூட்டுகிறார்கள்‌.

புனித மார்க்கத்தின்‌ மீட்பராக, அந்த நற்காரியத்துக்காக ஜிகாத்‌ (புனிதப்‌ போர்‌) மேற்‌கொண்டிருப்பவர்களாக, தங்களை அறிவித்துக்‌ கொண்ட தாலிபான்கள்‌, ஆப்கானிஸ்தானில்‌,

  1. பெண்கள்‌ பயின்று கொண்டிருந்த பள்ளி, கல்லூரி, கல்வி நிலையங்களை மூடினார்கள்‌.
  2. 1990ஆம்‌ ஆண்டுகளில்‌ மொத்த ஆசிரியர்களில்‌ 70 சதவிகிதம்‌ பேர்‌ பெண்கள்‌; அரசு ஊழியர்களில்‌ 50 சதவிகிதம்‌ பேர்‌ அவர்கள்‌. அரசுப்‌ பணியாக இருந்தாலும்‌ தனியார்‌ பணியாக இருந்தாலும்‌ சரி, வேலைக்குப்‌ போய்க்‌ கொண்டிருந்த பெண்களைப்‌ போகவிடாமல்‌ தடை செய்தார்கள்‌. மீறிப்‌ போனவர்களை சொன்ன பேச்சுக்‌ கேட்காதவர்கள்‌ என்று லத்திக்‌ கம்புகளால்‌ விளாசி ஓட ஓட விரட்டினார்கள்‌.
  3. ஒழுக்கமற்றவர்‌ என்று கருதப்படும்‌ பெண்களை கல்லால்‌ அடித்துக்‌ கொலையாக்கினார்கள்‌.
  4. தவறான தொடர்புள்ளவர்கள்‌ என்று கருதப்படும்‌ விதவையரை உயிருடன்‌ புதைத்துக்‌ கொன்றார்கள்‌.

கரண்டலுக்காக, மேலாதிக்கத்துக்காக, உலகில்‌ 'புதிய ஒழுங்கை' நிலை நிறுத்த வெறி கொண்டு அலையும்‌ அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு ஈடாக, இசுலாமிய உலகின்‌ புதிய ஒழுக்கக்‌ கோட்பாடுகளை எழுப்பப்‌ போவதாக தாலிபான்கள்‌ வெறி கொண்டார்கள்‌. சொந்த மக்களை, சொந்தப்‌ பெண்‌ மக்களை, புனித ஒழுக்கக்‌ கோட்பாடுகளுக்காக கொலை, கொலையாய்‌ போட்டுத்‌ தள்ளினார்கள்‌. தாலிபான்‌ என்பது ஒரு கலாச்சாரம்‌. வெறி கொண்ட, வெலம்‌ எடுத்துத்‌ திரியும்‌ அடிப்படை மதவெறி.

தாலிபான்‌ கலாச்சாரம்‌ உலகம்‌ முழுவதும்‌ அறியப்பட்டது. அறியப்படாமலே வேறோரு வடிவத்தில்‌ அது ஊருக்குள்‌ 'ஐமாஅத்‌'தாக, ஹாஜிகளாக, மெளல்விகளாக அலைகிறது. பலதார மணம்‌, தலாக்‌, முக்காடு, வாழ்க்கையே அவியும்‌ 'வேக்காடு' என்று திரிகிறது. மெளனமான விஷக்‌ கிணறு அது. ஏற்கனவே நிலவுகிற மூடுண்ட மதச்‌ சமூகத்துக்குள்‌ பெண்களை இருண்ட கண்டத்துக்குள்‌ தள்ளிச்‌ சித்திரவதைப்‌ படுத்துகிறது. புதிதாகச்‌ சேர்ந்த சித்திரவதை - பெண்கள்‌ சினிமா பார்க்கப்‌ போகக்‌ கூடாது என்ற தடை.

சினிமா பார்ப்பதற்கும்‌, பார்க்கப்‌ போவதற்குமான வித்தியாசம்‌ விளக்கப்படுகிறது.

வசதி படைத்தவர்கள்‌ தொலைக்காட்சி பெப்டிக்குள்‌ சினிமா பார்த்துக்‌ கொள்கிறார்கள்‌.

'கிளை நதிகள்‌' என்ற தனது மற்றொரு கதையில்‌ களந்தை பீர்முகமது சொல்வதுபோல்‌, “மரித்துப்போன வாப்பா பெயரில்‌ மஹ்ரிப்‌ வேளையில்‌ பாத்திஹா ஓதி முடிந்ததும்‌, குழந்தைகளுக்காக என்று சொல்லிக்‌ கொண்டு, வெளியாருக்குச்‌ சப்தம்‌ கேட்காதபடிக்கு டெலிவிஷனைப்‌ போட்டுப்‌ பார்த்துக்‌ கொள்கிறார்கள்‌."

வசதியற்றதுகள்‌, வருவாய்க்‌ குறைவு கொண்டதுகள்‌, ஏழை, பாழைகள்தான்‌ தியேட்டரில்‌ படம்‌ பார்க்கப்‌ போகிறதுகள்‌. "பார்க்கப்‌ போகிற இடங்களில்‌ நடப்பது என்ன?”

“இப்பவே நிறையப்‌ பேரு நம்ம ஊரு பொம்பளைங்கள பார்க்க ஆரம்பிச்சிட்டானுங்க. இப்படியே அவுத்து வுட்டுட்டா அவனவனும்‌ பொலிகாள மாதிரி உடம்ப வச்சுக்கிட்டு வம்புதும்பு பண்ணுவாங்களே" கவலைப்படுகிறார்கள்‌ - 'ஜமாஅத்‌'காரர்கள்‌. பெரிய புள்ளிகள்‌.

இப்படித்தான்‌ இஸ்லாமியப்‌ பெண்‌ மக்களுக்குப்‌ படிப்பு சொல்லிக்‌ கொடுக்க ஆரம்பித்ததும்‌ கெட்டுப்‌ போகிறார்கள்‌. ஒரு இலக்கியப்‌ படைப்பாளியிடம்‌ புஸ்தகங்கள்‌ வாங்கிப்‌ படிக்க ஆரம்பித்த பானு. கருப்பாய்‌ ஒடிசலாய்‌ இருக்கிற உப்பாங்குளம்‌ சேரிப்‌ பையனோடு ஓடிப்‌ போகிறாள்‌. “நல்லது, நல்லது. அவள்‌ அப்படியே போகட்டும்‌; அவள்‌ மனசுக்கேத்த மாதிரி ஒருவன்‌ கிடைத்திருந்து அவள்‌ போயிருந்தால்‌ அதில்‌ குறுக்கிட நமக்கு என்ன உரிமை உண்டு.” என்று அவள்‌ குடும்பமோ, இஸ்லாமிய சமுதாயமோ வாழ்த்தவில்லை. இலக்கியவாதி வாழ்த்துகிறார்‌. (இளஞ்சிறகுகள்‌)

“அவனும்‌, அவளும்‌ அருகில்‌ யாருமற்ற தனிமையில்‌. இறுகிப்‌ பிணைந்து கலந்து உறவாடி, நேரான துன்பமெல்லாம்‌ அடைவார்களாக" என்று அவர்‌ மனம்‌ அவர்களைச்‌ சுற்றிப்‌ பாதுகாப்பாய்‌ நிற்கிறது.

ஆரோக்கியமான அடி வைப்பு இப்படி சிந்திப்பாகத்‌ தொடங்கிவிட்ட முளை தெரிகிறது.

'குழந்தைப்‌ பெருக்கம்‌', 'குடும்பக்‌ கட்டுப்பாடு' இவைகளின்‌ மீது படர்ந்துள்ள மதக்‌ கருத்தாக்கப்‌ பாசியையும்‌ தூர்த்தெறிகிறார்‌. அங்கேயும்‌ பெண்‌ இருக்கிறாள்‌. அவளுக்குக்‌ கருவறை இருக்கிறது. சமையலறையும்‌ இருக்கிறது. அதைச்‌ சுமக்கிறவளே இதையும்‌, இதைச்‌ சுமக்கிற போதே அதையும்‌ சுமக்கிறவளாக வைக்கப்பட்டிருக்கிறாள்‌. மூன்றாவது கர்ப்பம்‌ தரித்ததை, கலைக்கக்‌ கூடாதென்று சண்டைப்பிடிக்கும்‌ வாப்பவிடமும்‌, உம்மாவிடமும்‌ 'யூனுஸ்‌' சொல்கிறான்‌:

“குழந்தையைக்‌ கவனிக்கிறவளும்‌, குடும்பத்தைக்‌ கவனிக்கிறவளும்‌ அவ. அவதான்‌ முடிவெடுக்கணும்‌."

“அவ புருஷன்‌ நீ. உனக்கு எந்தப்‌ பொறுப்பும்‌ இல்லை. அப்படித்தானா?"

“அவ வேதனை அவளுக்குத்தானே தெரியும்‌?” (காலவேர்கள்‌)

இப்படியும்‌ ஒரு பயல்‌ உண்டோ என்று அவர்களுக்கும்‌, இப்படிப்பட்டவர்கள்‌ இருப்பது கண்டு நமக்கும்‌ மனசு கூத்தாடுகிறது. யதார்த்தத்திலிருந்து கனவுகளை வரிப்பது, பிறகு அந்தக்‌ கனவை துல்லியமாகச்‌ செயல்படுத்துவது என்று யூனுஸும்‌, நசீனும்‌ மருத்துவரை நாடுகிறார்கள்‌.

'மதச்‌ சமூகத்தின்‌ தடைகளை, தணிக்கையை, அந்தச்‌ சமுதாய மக்கள்‌ எப்படி மீறுகிறார்கள்‌?'

சிவந்த, ஒல்லியான, இராமநாதபுரம்‌ கிழக்கரைப்‌ பெண்கள்‌, இராமநாதபுரம்‌ ரயிலடிக்கு வருகிறார்கள்‌. அவர்கள்‌ குண்டாகி விட்டார்கள்‌. சுடிதார்‌ அணிந்து, அதன்மேல்‌ சேலையைச்‌ சுற்றி, தலை முக்காடு நழுவிப்‌ போகாமல்‌ கவனமாயிருக்கிறார்கள்‌. தங்களுடைய கால்களை, பாதங்களை அடிக்கடி பார்த்துக்‌ கொள்கிறார்கள்‌. சிறு, கவனக்குறைவு கூட பாதகம்‌ விளைவித்து விடும்‌. அவர்கள்‌ தங்கள்‌ மானத்தைக்‌ காப்பாற்றி விட்டார்கள்‌. கரண்டைக்‌ காலுக்குக்‌ கீழே, குர்த்தா தெரியவில்லை. மானாமதுரை, காரைக்குடி தாண்டியதும்‌ எல்லாரும்‌ ஒன்றுபோல சேலையைக்‌ களைகிறார்கள்‌. சென்னை ரயிலடியில்‌ நாகரீகமாக சுடிதார்‌ பூட்டிய பெண்‌ இறங்குகிறாள்‌.

அவரவர்களுக்குத்‌ தெரிந்த வழியில்‌ முடிந்த வகையில்‌ அவரவர்கள்‌ மீறுகிறார்கள்‌. ஆடைகளை மட்டுமல்ல, ஆடைக்குள்‌ கிடக்கிற மனசையும்‌ மதக்‌ கட்டுப்பாடு அறுத்து, வெட்டித்‌ தைக்கிறது. மனசால்‌ மீற முடிகிற கணங்கள்‌ மகத்தானவை. மனசை மூடி இழுத்துவிட்டுக்‌ கொண்டு முக்காட்டைப்‌ பொசுக்குகிறார்கள்‌. பயணத்தில்‌ அவர்களுக்குள்‌ எரிந்து சுருக்கும்‌ தீயை வெளியே அணைத்து விடுகிறார்கள்‌. அணைத்து விடுவதும்‌, பிறகு சொந்த மண்ணை! நோக்கி காலடிகள்‌ திரும்புகிற போது, அந்தத்‌ தீயை மறுபடி ஏந்திக்‌ கொள்வதும்‌ காட்சியானது.

படம்‌ பார்க்கத்‌ தடைவிதித்த மனப்போக்கு - எதிர்க்கும்‌ மனப்போக்கு இரண்டுக்குமான நேரடி மோதலாக 'தீயின்‌ விளிம்புகள்‌' கதை செல்கிறது.

இது, கதை சொல்லியின்‌ பாணியில்‌ தொடங்குகிறது. கருத்தில்‌ விளக்கமான நாடகப்‌ பாணியாக மாறுகிறது. எங்கெல்லாம்‌ கருத்துப்‌ பிரச்சாரத்துக்கான வழி திறந்து வைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம்‌ கலைஞன்‌ காணாமல்‌ போகிறான்‌. கதை சொல்லும்‌ பாணி என்பது - ஒன்று, கதையில்‌ வாசனை கரைந்து போகச்‌ செய்கிறது. இரண்டு, கதைப்‌ போக்கில்‌ கலைஞனை ஒவ்வொரு வரியிலும்‌, ஒவ்வொரு சொல்லிலும்‌ தட்டுப்பட வைத்துக்‌ கொண்டே, வெற்றிப்‌ புள்ளியைத்‌ தொடுகிறது.

எந்த இடம்‌, ஒரு கலைஞனை உமிரோட்டமாக இல்லாமல்‌ செய்கிறதோ, ஒரு கதையை உப்பு சப்பில்லாமல்‌ ஆக்குகிறதோ, அது கருத்துப்‌ பிரச்சாரமாக அல்லது ஊடே, ஊடே தலைகாட்டுகிற எந்தப்‌ பலவீனமாக இருந்தாலும்‌ களைய வேண்டும்‌.

"களந்தை பீர்முகமது-வின்‌ படைப்புலகை, 1995க்கு முந்தி பிறந்தவை; அதற்குப்‌ பின்‌ படைக்கப்பட்டவை - என இரு காலமாகப்‌ பிரிக்கலாம்‌.

ஒரு கலைஞனுடைய வளர்ச்சித்‌ திசையில்‌, இந்தக்‌ காலப்‌ பிரிவு அவசியமாகிறது. அவனுக்குள்‌ இயங்கும்‌ கலைத்திறன்‌, குணத்தாவலை கொள்கிற காலப்‌ பிரிப்பு அது. தன்‌ கலையாற்றலின்‌ பூர்வீகம்‌ எங்கு, எப்படித்‌ தொடங்கி இருந்தாலும்‌ ஒரு கட்டத்தில்‌ இந்தத்‌ தாவல்‌ நிகழும்‌. இது பலருக்கும்‌ பல வகையாய்‌ நிகழலாம்‌. கருத்தியல்‌ விளக்கத்தினை முதற்படியில்‌ வைத்து, கலை நேர்த்தியைப்‌ பின்‌ படிக்கட்டுகளுக்குத்‌ தள்ளிவிட்ட சுமாரான படைப்புகள்‌ 1995க்கு முற்பட்டவை. ஊடக அரங்குக்கு ஏற்ப ஆட்டத்தை செதுக்கிக்‌ கொண்டவையாய்‌ தோன்றுபவை.

அதன்‌ பிறகு, அந்தக்‌ கலைஞனின்‌ ஒவ்வொரு நாள்‌ பொழுதும்‌ புதிதாக, கலைத்துவமாக முளைத்து விடிகிறது. அவனுடைய காட்டில்‌ கொடி உயர்த்திப்‌ பெய்கிறது மழை. உரத்தடிப்‌ பயிராய்‌ மதமதர்ப்புக்‌ கொண்டு கரும்பச்சையாய்‌ செழிக்கின்றன பயிர்கள்‌. ஒவ்வொரு மகசூல்‌ காலத்திலும்‌ கொழுத்த வெள்ளாமையை எடுத்துக்‌ கொள்கிறான்‌ அவன்‌.

கடந்த ஏழெட்டு ஆண்டுகளில்‌ படைத்துத்‌ தந்தவை, சாதாரணமாய்‌ நம்‌ கையில்‌ ஏந்தித்‌ தூக்கிப்‌ போட்டுவிட முடியாதவை. கனமானவை; சாதாரண வாசிப்புக்குப்‌ பலி கொடுத்துவிட முடியாது.

காலப்‌ பகுப்பைப்போல்‌, அவருடைய மதச்‌ சமூகத்துக்கு உள்ளே, வெளியே என்று படைப்பு வகைகளை இனம்‌ பிரித்துவிட முடியாது. தானறியாத, தான்‌ வாழாத எதையும்‌, மதச்‌ சமூகம்‌ தாண்டிய எதையும்‌ அவர்‌ சொல்வதில்லை. தானறிந்தவைகளைத்‌ தொடுகிறார்‌. வாழும்‌ சூழல்‌, வாழிடம்‌ இவை கலைஞனுக்குள்‌ கச்சைகட்டிக்‌ கொண்டு இறங்குகிறது. மதச்‌ சமூகம்‌, அதன்‌ உயிர்ப்பான உயிர்ப்பில்லாத விஷயங்கள்‌, சடங்கு, பழக்க வழக்கம்‌, அதுவும்‌ தென்‌ மாவட்டத்துக்கேயுரிய தனித்த பாங்கு, பேச்சு முறை, அதன்‌ பேரில்‌ வடிவமையும்‌ சிந்திப்பு முறை - விரிவாக வருகிறது. தோப்பில்‌ முகமது மீரான்‌, ஹெச்‌.ஜி. ரசூல்‌, களந்தை பீர்முகமது என்று அதற்குள்ளிருந்து தோற்றமெடுப்பவர்கள்‌ மட்டுமே, அதன்‌ கலாச்சாரத்தைத்‌ தருவார்கள்‌.

- பா.செயப்பிரகாசம், 2002

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

மலேயா கணபதி

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?