பொங்கு தமிழ் இணையத்தில் யதீந்திரா எழுதிய கட்டுரைக்கு பா.செயப்பிரகாசத்தின் எதிர்வினை
தோழருக்கு,
தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது பற்றிய தங்கள் கட்டுரை வாசித்தேன். அதற்கு வரவேற்பு நல்கிய கடிதமும் கண்டேன்.
முதலில் இராணுவத்தில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டது தொடர்பில் அரசாங்கம் போதிய கவனத்துடன் அனுகியிருக்கவில்லை என்று குறிப்பிட்டு நிறுத்திக் கொள்கிறீர்கள். அந்த வெளி நிரப்பப் படவில்லை. தற்செயலான ஒன்றாய் இது தோன்றவில்லை. அந்த வெளி வேண்டுமென்றே விடப்பட்டுள்ளதாய் தெரிகிறது. அரசின் செயல்பாடுகளை விமரிசிக்காமல் ஓரம் போகும் போக்கை சமீபகாலமாய் தங்கள் கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. இன்றைய காலத்தில் எது முக்கியமானதாய் முன்னிறுத்தப்பட வேண்டு என்ற குறியிலக்கு தவறுவதை காணலாம். இது எவ்வகையிலும் இனவழிப்புக்கு உடந்தையாக இருந்த ஐ.நா.வையோ கொலையாளிகளான இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ, எல்லாமும் எடுத்துத் தந்து எதுவுமே தான் செய்யாதது போல் காட்டிக் கொள்ளும் சர்வதேசத்தின் மனச்சாட்சிக்கோ சிறு நெருடலையெனும் தரப் போவதில்லை. மாறாக தமிழ் மனச்சாட்சியையே கேள்விக்குள்ளாக்குகிறது. வரவேற்க வேண்டியது. நீங்கள் முன்வைக்கும் அத்தனை விமர்சனங்களோடும் பல விழுக்காடுகள் உடன்பாடு எனக்கு; இயக்கங்கள் ரீதியாக மறுக்கப்பட்ட இயக்க சனநாயகம், மக்களுக்கான சனநாயகம் பற்றி நிறைய உரையாட உண்டு. இன்றளவும் தமிழ்த் தேசியர்களின் சிந்தனை பரப்பு எத்தனை குறுகியதாய் செயல்கொள்கிறது என்பதிலும் அய்யமில்லை. ஆனால் அய்யம் எங்கு எழுகிறது எனில் நீங்களிந்த அளவோடு நிறுத்திக் கொள்கிற புள்ளியில் தான். இந்த ஒதுக்கம் சரியா என்பதினும் தேவையா என்ற கேள்வி எழுகிறது. இதில் தங்களை முன்னிறுத்தும் ஒருவகை expressionism / exibhitionism வெளிப்படுகிறது.
படையில் இணைந்து கொள்வதா இல்லையா என்பது அவர்களது சொந்தத் தெரிவாகும் என்று குறிப்பிடுகிறீர்கள். இது போன்றதொரு சொந்தத் தெரிவைத் தான் ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்துக்குள் இணைத்துக் கொள்வதை நாம் விழைகிறோம். ஆனால் குடும்பம் என்ற பலவந்த அமைப்புக்குள் பெண்கள் ஒடுக்கமாகி இருப்பது எதனால்? அவர்கள் மீதான பொருளாதார நிர்ப்பந்தம்; அதை மையப்படுத்தி பிணைத்துள்ள உறவுத் தளைகள். பிள்ளைகள் உற்பத்திக்குள் முடக்கப்படும் பெண் வேறு எந்த உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியிலும் இல்லை. இந்தப் பொருளாதார வன்முறை வேறு எந்த வன்முறையினும் குரூரமானது.
இந்தப் பொருளாதாரப் பலவந்தம் வேறு எந்த வன்முறையையும் உச்சந்தலையில் அடித்து உட்கார வைத்து விடும். துப்பாக்கி வன்முறை ஒரு உயிர் பறிப்பு முறை. ஆனால் பொருளாதார வன்முறை சிறுகச் சிறுக கொன்று சிதைக்கும் வன்முறை. இதற்கு உட்பட்டு இணங்கித்தான் பெண்கள் படையில் இணைந்திருக்கிறார்கள். உண்மையில் இது அவர்கள் தெரிவு அல்ல. ஆண்களற்ற சமுதாயத்தில் வாழ நேர்ந்து விட்ட பெண்களின் தெரிவு வேறு என்னவாக இருக்கும்?
வியட்நாமிய யுத்தத்தின் போது இப்படியொரு ஆண்களற்ற தேசத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்களிடம் ஒரு ஆஸ்திரேலியப் பெண் தொண்டர் கேட்டபோது, அதற்கு அவர்களின் பதில் "எங்களுக்கு ஆண்களைத் தாருங்கள்" என்பது. வேறொரு சாதாரண நிலையில் ஒரு இனவெறி ராணுவத்தில் இணைந்து கொள்ள அந்தப் பெண்கள் முன் வந்திருப்பார்களா என்ற கேள்வியும் இதனுள் வாழுகிறது.
மருத்துவர் சிவதாசிடம் தங்கள் மீதான அவதூறைத் தெளிவுபடுத்துமாறு கேட்டு, அந்தப் பணியை சிவதாஸ் செய்திருக்கிறார். இதற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அந்த 15 பெண்களையும் அவர்களது பெற்றோர் கூட பார்க்க அனுமதிக்கப் படவில்லையே ஏன்? இதுவரையிலும் எந்தப் பெண்ணுரிமை அமைப்போ, மனித உரிமை அமைப்போ அவர்களைக் காண, உண்மை கண்டறிய அனுமதியில்லையே ஏன்? இத்தகைய ஒரு பழியை எந்த அரசாங்கமாயினும் பொறுத்துக் கொள்ளக் கூடாது. லட்சக் கணக்கான மனிதப் படுகொலைப் பழி துடைக்க நல்லிணக்க விசாரணை குழு அமைத்த பாவனையையாவது அரசு மேற்கொண்டிருக்கலாமே; இல்லையே ஏன் - என்று இப்படிப் பல ஏன்கள் எழுகின்றன. "அவர்களது பாதுகாப்பு குறித்து கரிசனை கொள்ளும் உரிமை தமிழ்ச் சமூகத்துக்கு உண்டு," என்பீர்களாயின் இந்தக் கரிசனைகளும் அதற்கான முயற்சிகளும் ஏன் விமர்சனமாக வெளிப்படவில்லை?
இத்தகைய கேள்விகளற்ற ஒற்றை விமர்சனப் பாதையும் ஓரம் போதலும் உங்கள் பலம்; அதுவே உங்கள் பலவீனமும் கூட - இன்றைய இனவழிப்பு முன்னெடுப்புகளுக்குக் கூட முணுமுணுப்புக் காட்டாமல் இருப்பதும் தான்.
கொடூர இனவழிப்புக்குப் பின்னரும் ஒரு மக்கள் தொகுதியின் விடுதலையை சிந்தியாமல், "தோல்வியடைந்த சேனை நன்கு கற்றுக் கொள்கிறது" என்ற படிப்பினை வழியறியாதவராய் தமிழ்த் தேசியர் இருக்கிறார்கள். அரச பயங்கரவாதம் குறித்து மௌனிக்கிற அறிவாளிகளும் அந்தப் புள்ளியில் தான் இணைகிறார்கள்.
பா.செயப்பிரகாசம்
26 டிசம்பர் 2012
கருத்துகள்
கருத்துரையிடுக