கந்தர்வன் கடிதம்


பி 5/4, ஆலங்குளம் ஹவுசிங் யூனிட், 

புதுக் கோட்டை – 622005


19-01-1995

அன்புத் தோழர் ஜே.பி அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று நூலஞ்சலில் ‘எண்பதுகளில் சிறுகதை’ பற்றிய ஒரு நூலை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். இதற்கு ஒரு முக்கிய காரணமுண்டு. உங்களோடு எனக்கிருந்த நெருக்கமும் உங்கள் எழுத்தும் எனக்கு இன்றும் ஆதர்சம்.

மேற்கண்ட தலைப்பில் இரண்டாண்டுகளுக்கு முன் மதுரைப் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு அது. ஒரு முன்னோடி எழுத்தாளரான உங்களைக் குறிப்பிட்டு எந்தக் கட்டுரையாளரும் சொல்லாதது எனக்குக் கவலயளித்தது.

என் கட்டுரையின் கடைசிப் பகுதியில் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தேன். அதை நீங்கள் படிக்க வேண்டுமென்பதற்காக இதை உங்களுக்கு அனுப்பவில்லை.  நீங்கள் இப்போது எழுதாமலிருப்பது சரியல்லவென்றும், எழுத உங்களை ரோசப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் அனுப்பியிருக்கிறேன்.

முரட்டு அரசியல் மனசில் ஏறியதற்கும் உங்கள் மென்மைக் குணமே காரணம்.  இரண்டுமே என் போன்றோரை உங்கள் பால் ஈர்த்தது. எந்த அரசியல் நிலைப்பாடும் கலைஞனைப் படைக்க விடாமல் செய்துவிடக்கூடாது. நீங்கள் எழுத வேண்டும்.

இன்னொன்று ஒரு தாலுகா அளவில் அதிகாரியாயிருக்கும் எனக்குள்ள அலுவலகப் பிடுங்கல்கள் சொல்லி முடியாது. ஒரு மாநில அளவிலான அதிகாரிக்கு எவ்வளவு பிடுங்கல்கள் என்பதை நானறிவேன். ஆனால் நாலு தொழிற்சங்கங்களுக்குத் தலைவராகவும் அதில் ஏழு கமிட்டிகளுக்குப் பொறுப்பாகவும் இருந்து கொண்டுதான் எழுதுகிறேன்.

பத்திரிகை நடத்துவது, அதோடு இழுபட்டது எல்லாம் சரி. ஆனால் நீங்கள் அடிப்படையில் ஒரு உயரிய  படைப்பாளி.

நீங்கள் எழுத வேண்டும். மதுரையில் திடீரென்று சந்தித்தபோது சரியாகப் பேசிக் கொள்ள முடியவில்லை.

வீட்டில் எல்லோருக்கும் எங்களன்பைச் சொல்லுங்கள்.

இந்தப் பக்கம் வரும்போது என் வீட்டிற்கு வந்து ஒரு வேளை சாப்பிட்டுச் செல்ல வேண்டும்.

கந்தர்வன்.

பி.கு: புத்தகம் உங்களிடம் பத்திரமாக இருக்கட்டும். பிறகு வாங்கிக் கொள்கிறேன்.

- கதை சொல்லி கந்தர்வன் அஞ்சலி கட்டுரையிலிருந்து 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

மலேயா கணபதி

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?