கவிஞர்‌ புவியரசுக்கு கடிதம்‌

கவிஞர்‌ புவியரசு அவர்களின்‌ சன் தொலைக்காட்சிப்‌ பேட்டி; புல்லாங்குழல்‌ கவிதைகள் தொப்பு - இவை மீது வரையப்பட்ட கடிதம்‌


சென்னை

01.03.2000

இனிய, தோழமையின்‌

புவி அவர்களுக்கு,

நீங்களாக இல்லாமலிருந்தால்‌ நான்‌ இதை எழுதியிருக்க மாட்டேன்‌. எதைச்‌ சொல்வது என்று வருகிற போதே, அதை யாரிடம்‌ வைப்பது என்பதும்‌ சேர்ந்து வருகிறது.

இன்று தொலைக்காட்சியில்‌ (1.3.2000) தங்களைக்‌ கண்டேன்‌. தன்னூற்றாக மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. அதே பொழுதில்‌ சூரியத்‌ தொலைக்காட்சி (Sun TV) புவிக்கும்‌, புல்லாங்குழல்‌ கவிஞன்‌ புவிக்கும்‌ நிறைய வித்தியாசம்‌ கண்டேன்‌. சன்‌ தொலைக்காட்சி புவி சமுக மனிதன்‌ - ஒன்றிரண்டு பிசிறுகள்‌ இருந்தாலும்‌ கூட. புல்லாங்குழல்‌ கவிஞன்‌ அதை மறைத்துக்‌ கொண்டு பிறந்திருக்கிறான்‌.

பேச்சில் பளிச்சென்று எகிறும் இந்த பாங்கு கவிதைகளில் ஒளிந்து கொண்டு விட்டது. அதை எந்த முடுக்கில் ஒளித்து வைத்து விட்டீர்கள் என்று தேடவேண்டும்.

இப்படியாக இப்போது

ஊரார்‌ சொற்களை

உண்டு செரித்துக்‌

கழிகிற வாழ்க்கை... (பக்‌, 15)

நான்‌ யோசித்த வேளையில்‌

எனதென்று எதுவுமில்லை

என்பது தெரிந்தது (பக்‌, 5)

இப்படி நமது இயல்பு இல்லாத குணவாகு கவிதைக்குள் எப்படி வந்தது? அல்லது இன்றைய நம்முடைய குணவாகு அதுதான் என்ற மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?

"யோசிக்கும் வேளையில்" கவிதையை யோசித்து பார்த்தால்‌, அதன்‌ தொனி என்ற தோல் நீக்கிப்‌ பார்த்தால்‌, நாம்‌ நமது என்று நினைக்கிற பொருட்கள் எல்லாம், நமக்காக வேறு யாரோ உற்பத்தி செய்கிற பொருட்கள்‌. நாம்‌ கூட இந்த சமுதாயத்திற்காக, ஏதோ ஒரு முறையில் ஏதோ ஒன்றை பங்களித்துக்‌ கொண்டிருக்கிறோம். இது சமுதாய விஞ்ஞனாகக் கோட்பாடு. கவிதைக்கான சிந்தனை கூட, சமூக வெயில், மழை, காற்றினால் நம்முள் உருவானதுதான். ஆனால் அந்தக் கவிதையின் கடைசித் தொனி இந்த உறுதிகளின்‌ மேலெழந்த வரிகளாக இல்லை.

அதைப் போலவே 'அது' கவிதையை ஒரு குறிப்பிட்ட நேர மனோ நிலையை எழுத்தில் சுண்டியிருக்கிறீர்கள் என்று சொல்லலாமா? இந்த இரண்டுங் கெட்டதான, ஈரெட்டான மனநிலை, அடிக்கடி சலிப்பு மனோநிலை எதனால். எதிலிருந்து வருகிறது? ஒரு நடுத்தரத் தட்டுக்கு மட்டுமே இது வருமா? 

உளவியல் ரீதியாகத்தான், சிலவற்றுக்கு உப்பு தடவி, பார்க்க வேண்டியிருக்கிறது. தாம்பத்தியம் கூட (பக் 23) அப்பேர்ப்பட்ட உளைச்சலில் உருவானது அல்லவா?

உங்களில் ஒரு மாற்றம் வந்திருப்பதைக் காணுகிறேன். வானம்பாடி கீதத்திற்கும், புல்லாங்குழலின்‌ சோகத்திற்குமான பெரும்‌ பள்ளம்‌ அது. வானைதைக் குறிவைத்துக்‌ கதிக்கப்‌ பாய்ந்தது வானம்பாடியின்‌ பாடல்‌. மிக அமர்த்தலான ஒரு ராகம்‌ பாடுகிறது புல்லாங்குழல்‌. இந்தப்‌ புல்லாங்குழல்‌ மரணத்தைப்‌ பிரியமாய்‌ நேசிக்கிறது. அறுபத்துதொன்பது வயசு இளைஞனுக்கு இப்படியெல்லாம்‌ தோன்றுமா?

அனுபவ அறிவு ஏறுமுகமானது. படுத்துக்‌கிடப்பதில்லை. அது குப்புறவும்‌ விழாதது. மல்லாக்கப்‌ படுத்துக்‌ கொண்டு எச்சிலும்‌ துப்பாது. துப்பினால்‌ மறுபடியும்‌ முகத்தில்‌ தானே விழும்‌ என்ற ஞானச்‌ சேகரிப்பு அது.

ஏறுமுகமான படிகளை மறைத்து, அனுபவம்‌, திசைகளை மாற்றிவைத்து விடுமோ? திசைகளை, அதன் திசைகளில்‌ இருப்பாய்‌ இருத்த, நாம்‌ பட்ட பாதரவு என்ன? திசைகள்‌ மாறாமல்‌ காக்க என்ன வெம்பாடுபட்டோம்‌? அல்லது உங்கள்‌ முகத்தில்‌ வேறங்கும்‌ காண முடியாத உள்முகம்‌ ஒன்றிருக்கிறதா?

'தட்டிக்‌ கொடுத்து தாயாக மாறிய மனைவி மட்டும்‌ இன்னும்‌ மாறாமல்‌ இருக்கிறாள்‌ தாயாகவே' என்கிற மாதிரி, ஒன்றில்‌ ஊன்றி உறுதியாக இருக்கலாமே. எல்லாமே மாறிவிட்டது, மாறிவிட்டார்கள்‌ என்ற அலைக்‌கழிப்புக்கு ஏன்‌ போக வேண்டும்‌?

நடுத்தர வர்க்கத்துக்கு நிறையக்‌ குருமார்கள்‌ இருக்கிறார்கள்‌ - ரஜனிஷ், ஓஷோ, ஜே.கே. யாரோ ஒருவர்‌ நம்மை உடைத்தார்‌. உடைத்தவர்‌ நமக்குள்‌ உட்கார்ந்து விட்டார்‌, அவர்கள்‌ உடைப்பதற்காகவே நாம்‌ காத்திருக்கிறோம்‌. அவர்களையும்‌ அவர்கள்‌ சொன்ன வழியிலேயே போய்‌ உடைத்தெறியலாமே?சுயத்தை அடைய எங்கேயாவது உட்கார வேண்டுமா? அதை விஞ்ஞானம்‌ என்றைக்குத்‌ தடை செய்தது? மார்க்சியம்‌. என்று அதறகுப் பெயர் சூட்டவேண்டாம்‌. அந்த சொல்லே, இன்று பலருக்கு கம்பளிப்பூச்சி அரிப்பாய்‌ மாறிவிட்டது. 

பற்றற்று இரு

பற்றாமல்‌ இரு

பற்றிக்‌ கொண்டே இரு

- என்பது சமூகம், சமூக ஞானம் பற்றிய தேடலாயிருந்தால்‌ சரியே. தானே தேடி, சுயமான சிந்தனைகளை வந்தடைவதைத் தானே மார்க்சியமும் சொல்கிறது. அதைக்‌ கெட்டி தட்டிப்‌ போகச்‌ செய்தவர்களைத்‌ தான்‌ மூஞ்சியில் அறைய வேண்டும்‌. 

உள்மன அனுபவங்கள் கோர்க்கப்பட்டு கவிதையாகலாம்‌. அது ஒரு வகை இலக்கியம்‌. ஆனால்‌ உள்மனப் புலம்பல்களின் மொத்தப்‌ படைப்பாகவும் தென்படும்‌ கவிதைகளை உள்வாங்கிக்‌ கொள்ள இயலாது.

அவைகள்‌ பெரும்பான்மை மக்கள்‌ தொகுதியால்‌ உணரப்படக்‌ கூடியதாக இல்லாமல்‌ மிகக்‌ குறைந்த சிலரால்‌ உணரப்படுவதாக இருக்கலாம்‌. ஆனால்‌ அது ஒரு சிலரின்‌ அனுவபமாகவாவது போய்‌ உறைக்க வேண்டும்‌. அப்போது கவிதையாகும்‌ வாய்ப்புண்டு. கவிதை, ஒருசிலரின்‌ அனுபவத்தைக் கூட பகிர்ந்து கொள்ளவில்லை என்றால்‌ இந்த சொத்துப்‌ பிரிப்பில்‌ ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள்‌. மொத்த வாழ்க்கையையே அலைபாய்தலின்‌ அசலாக மாற்றிக்‌ கொள்ளவேண்டாம்‌ என்பது இதன்‌ அடிப்படை.

சொல்முறையில்‌ கவிதையின்‌ தொடக்கத்தில்‌, நடுவில்‌, கடைசியில்‌ ஏதோ ஒரு முடுக்கில்‌ ஒரு விரிப்பை ஒளித்து வைத்து விடுகிறிர்கள்‌. வரலாறு செய்தி, விமர்சனம்‌, ஏளனம்‌, இரக்கம்‌ என்று இவை ஏதோ ஒரு முட்டங்கியில்‌ விரியக்‌ காத்திருக்கிறது. கவிதா வல்லமை இது.

நல்ல புரட்சியாளர்‌, நல்ல சிந்தனையாளர்‌, நல்ல பேச்சாளர்‌ என்று சகல வடிவங்களிலும்‌ இயங்கும்‌ நீங்கள்‌ சொந்தக்‌ கவிதை நூலை வெளியிடக்‌ கூடாதா என்ற தொலைக்காட்சி கேள்விக்கு சுடுவது போலவே பதில்‌ சொன்னீர்கள். 

"சமூகச் சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு, இவர் நிழலில் வாருங்கள், அவர் நிழலில் வாருங்கள் என்று சொல்கிறார்கள். வணிக யுகத்தில் சுயசிந்தனை வெளிப்பாடுகள் குறைவு. அந்த வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றீர்கள்.

"எங்கோ ஒரு மூளையில்‌, பிறப்பிறப்பு, நேரம் பார்த்து மன்னியுங்கள்" - என சில கவிதைகளைத்‌ தவிர்த்து, பிற கவிதைகள் மேற்கண்ட அனுபவங்கள் எனக்‌ கருத முடிகிறது. அல்லது நமது மன நடமாட்டம் தற்போது எப்படி உள்ளதோ, அப்படி வெளிப்பட்டிருக்கிறது என்று கொள்ளலாம்.

தோழமையுடன் 

பா.செயப்பிரகாசம்

சென்னை - 106.


கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

சாகாப் பொருளும் அது, சாகடிக்கும் பொருளும் அது!