பா.செயப்பிரகாசம் என்னும் தெக்கத்திக்காரர்

நிலப்பரப்பு சார்ந்தும், சொல்முறைகள் சார்ந்தும், பேசப்பட வேண்டிய கதாமாந்தர்கள் சார்ந்தும் கரிசல் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவர் சூரியதீபன். அந்தப் பெயர் அறிமுகமானது மனஓசை இதழ் வழியாகவே. ஆனால் அதற்கும் முன்பே பா.செயப்பிரகாசம் என்ற பெயர் அறிமுகம். கரிசல் எழுத்தின் முன்னத்தி ஏராகக் கி.ராஜநாராயணன் பெயரை முதலில் வைத்துத் தொடங்கும் பெரும்பாலான பட்டியல்களில் மூன்றாவதாக வந்து நின்றவர் பா.செயப்பிரகாசம். இரண்டாவது பெயர் பூமணி.

புரட்சிகரக் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்புகள் 1980களில் இதழ்களைத் தொடங்கி நடத்தியபோது முழுமையும் புரட்சிக்கு ஒப்புக்கொடுத்துக் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் மனஓசை அதிலிருந்து விலகிய அடையாளத்தோடு தன்னைக் காட்டிக்கொண்டது. அதற்குக் காரணமாக இருந்தவர் அதன் ஆசிரியப் பொறுப்பில் இருந்த சூரியதீபன். மனஓசையை ஓரளவு திகசியின் ஆசிரியப் பொறுப்பில் வந்த தாமரையின் நீட்சியாகவே நடத்தினார். இலக்கிய வடிவங்கள், கதை சொல்லலில் புதிய உத்திகள், புரட்சியோடு தொடர்பற்ற - ஆனால் வர்க்கப் பார்வையால் கவனிக்கப்பட வேண்டிய மாந்தர்கள் உலவும் எழுத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டது மனஓசை. சிறுபத்திரிகைகள் வழியாக அரசியல் எழுத்துக்குள் வந்த என்னைப் போன்றவர்களுக்கு மனஓசையை வாசிப்பது தவிர்க்கமுடியாத ஒன்று. அவ்விதழில் கல்வி நிலையங்கள், நிகழ்வுகளின் தாக்கம் போன்ற சில செய்திக்குறிப்புக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அப்படியெழுதிய ஒவ்வொன்றுக்கும் நேரடிப்பெயர்கள் எதனையும் குறிப்பிட்டதில்லை.

அவரை நேரடியாகச் சந்தித்தது புதுச்சேரியில் - 1990. கி.ராஜநாராயணனைச் சந்திக்க வந்ததோடு, அங்கு நடந்த தென்மண்டல நாடக விழாவொன்றைப் பற்றி மனஓசையில் எழுதும் நோக்கத்தோடு பின்னர் புதுவை வந்து 5 நாட்கள் தங்கியிருந்தபோதுதான் ஒவ்வொருநாளும் நாடகங்கள் பார்த்தபின் அவை குறித்து விரிவாகப் பேசிக்கொண்டோம். நவீன நாடகங்கள் தொன்மம், வரலாறு, நாட்டார் சொல்முறைகளுக்குள் நுழைவது குறித்து அவருக்கொரு எதிர்மறை மனப்பாங்கு இருந்தது. எனக்கும் கூட அப்போதும் இப்போதும் அத்தகைய கருத்தோட்டம் உண்டு. நாட்டார் வடிவங்கள் நவீனச் சொல்லாடல்களைத் திசைமாற்றும் இயல்பு கொண்டவை என்ற பார்வையில் இருவரும் உடன்பட்டோம். அந்த விவாதங்களுக்குப் பின் மனஓசைக்கொரு கட்டுரையை நீங்களே எழுதிவிடுங்கள் என்று சொல்லிவிட்டார். எழுதி அனுப்பிய அந்தக் கட்டுரையை என்ன பெயரில் எழுதினேன் என்பது இப்போது நினைவில் இல்லை. ஆனால் அந்தக் கட்டுரையின் மாற்று வடிவங்கள் சில என்னிடம் உண்டு.

அவரது சிறுகதைகளை எனது நெறியாள்கையில் எம்பில் பட்டத்திற்காக ஆய்வு செய்த ஆய்வாளர்கள் உண்டு. கரிசல் காட்டு மனிதர்களை எழுதிய தெக்கத்தி ஆத்மாக்களை முழுமையாக வாசித்து அவரது விவரிப்புகளில் திளைத்திருக்கிறேன். விவாதங்களின் போது கறாரான பார்வை உடையவர் என்பது போலத் தொடங்கினாலும் காரண காரியங்களோடு சொல்லப்படும் விமரிசனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவரிடம் வெளிப்பட்டதுண்டு. இந்தப்போக்கு இடதுசாரிக்கவிகளில் முதன்மையானவராகக் கருதப்பெற்ற இன்குலாப் அவர்களிடமும் உண்டு. தமிழக அரசின் செய்தித்துறைக்குள் இருந்துகொண்டு புரட்சிகர எழுத்தாளராக இயங்குவதின் நீக்குப்போக்குகள் குறித்துப் பலதடவை சொல்லியிருக்கிறார்.

கரிசல் இலக்கியத்தின் முன்னோடியான கி.ரா.வுக்கு ஞானபீட விருது பெறுவதற்கான முயற்சியாக அவரது எழுத்துகள் குறித்து வந்த விமரிசனக் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், பாராட்டுக்கட்டுரைகள் போன்றவற்றைத் தொகுத்து மூன்று தொகுதிகள் கொண்டுவந்தார். அதே போல நாடகக்காரரும் நாட்டார் இசைவடிவங்களில் விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடித் தமிழகமெங்கும் அறியப்பட்டவரான முனைவர் கே.ஏ.குணசேகரன் குறித்தும் ஒரு தொகுப்பு நூல் செய்தார். ஈழத்தமிழ் போராட்டங்கள், போர்கள் பால் அவருக்குத் தீவிரமான ஆதரவுப் பார்வை உண்டு. குறிப்பாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டவர் என்று கூடச் சொல்லலாம். அதுகுறித்த விவாதங்களை அவரோடு செய்வதை நான் தவிர்த்திருக்கிறேன். அதனாலேயே நெல்லையில் நான் பணியாற்றிய காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது என்னோடு உரையாடியதை விடவும் பேரா.தொ.பரமசிவனோடு உரையாடுவதில் தான் அதிக ஆர்வம் காட்டினார்.

பணி ஓய்வுக்குப் பின் சென்னையை விட்டுப் புதுவையில் வசிக்கத் தொடங்கியவர் அண்மையில் சொந்தக் கிராமத்திற்கருகில் இருக்கும் சிறுநகரமான விளாத்திகுளத்தில் இருப்பதாகச்சொன்னார். சந்தித்துச் சில ஆண்டுகள் ஆகியிருந்தன. ஆனால் தொலைபேசியில் ஒரு மாதத்திற்கு முன்னால் கூட இலங்கை எழுத்துகள் குறித்து நான் எழுதிய ஒரு கட்டுரை மீது விவாதித்தார். எப்போதும் விவாதம் செய்யும் ஆர்வம் கொண்ட பா.செயப்பிரகாசத்தின் இன்மையை நினைத்துக்கொள்கிறேன்.

அ.ராமசாமி, அக்டோபர் 24, 2022

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

மலேயா கணபதி

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?