பா.செ எனும் பண்பாட்டுப் போராளி - இரா.காமராசு

வெகுமக்கள் இயக்கங்களில் இருந்தே நாயகர்கள் உருவாகிறார்கள். வரலாற்றில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் போராட்டங்களே எதிர்காலத் திசைவழியைத் தீர்மானித்துள்ளன. கூட்டுச் செயல்பாடும், கூட்டுத் தலைமையும் என்பதான சனநாயகப் பண்பே மார்க்சியர்களின் வழி என்றாலும் வரலாற்றில் தனிநபர் பாத்திரம் என்பது மறுக்கப்படமுடியாதது.

இந்திய விடுதலைப்போர் பலருக்கு நாடு, தேசியம் சார்ந்த உந்துதலைத் தந்தது. தொடர்ந்து சமத்துவத்துக்கான இயக்கங்கள் வழி சமூக அா்பணிப்பு மிக்க ஆளுமைகள் உருவாயினர். தமிழ்நாட்டில், மொழி, இனம், நிலம் அடிப்படையிலான உரிமை கோருதல் என்ற முழக்கம் இந்தியத் துணைக்கண்டத்தின் புதுமை. அதிலும் இந்தி மொழி ஆதிக்க எதிர்ப்பு என்பது தேசிய இனங்களின் விடுதலை நோக்கிய முதற்புள்ளியாக அமைந்தது.

அப்படித் தொடங்கி நடந்த இந்தி ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்தில் 1965ல் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவராய் இருந்து போராட்டத்தில் குதித்தவர் பா.செயப்பிரகாசம். கரிசல் காட்டின் எளிய விவாசயக் குடும்பப் பின்னணியில் வந்தவர். மொழி, இன உரிமை வேட்கையில் அப்போதிருந்த திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். கா.காளிமுத்து, நா.காமராசன் ஆகிய சக கல்லூரி சகாக்களோடு பாளையங்கோட்டைச் சிறைச்சாலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டவர். இப்போராட்டமும், தண்டனையும் இளம் பா.செ.வை பொது வாழ்வு என்ற தடத்தில் உறுதிப்படுத்திற்று எனலாம். தொடர்ந்து மேடைப் பேச்சாளராக வலம் வந்தார். மொழி, இன உரிமைக் களம் தி.மு.க.வை ஆட்சியதிகாரத்திற்கு நகர்த்திற்று. பின்னர் அவர்கள் கொள்கைகளில் தூரமாகிப் போயினர்.

இச்சூழலில் 1968 டிசம்பர் 25 விடுதலைப் பெற்ற இந்தியாவின் ஆகப்பெரும் படுகொலை நாளாக அமைந்தது. பெரு நிலவுடைமைக்கும், சாதி ஆதிக்கத்துக்கும் 44 தலித் தொழிலாளர்கள் கீழவெண்மணியில் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். இப்படுகொலையும், இதன் தொடர்பான அன்றைய அரசின் நிலைப்பாடும் இளைஞர் பலரை அதுவும் குறிப்பாக திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தியாவில் மார்க்சியத்தை ஏற்றுச் செயல்பட்ட பொதுவுடமை இயக்கங்களில் அடுத்தடுத்த நிகழ்ந்த பிளவுகளும் உச்சம் பெற்ற நேரமது. “வசந்தத்தின் இடி முழக்கமாக” வந்த, “தேர்தல் பாதையை திருடர் பாதை” என விளித்த இயக்கம் பலரை ஈர்த்தது. அதில் பா.செ.வும் இயக்கமானார்.

பா.செ அடிப்படையில் ஒரு கலைஞன். பேச்சில், எழுத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டவர். அவர் ஓர் அரசுப் பணியிலும் இருக்க வேண்டிய வாழ்க்கைச் சூழல். எனவே, கலை இலக்கியம் சார்ந்த செயல்பாட்டாளராகத் தன்னை முழுமைப்படுத்திக் கொள்கிறார். இளவேனில் நடத்திய “கார்க்கி” இதழில் பா.செயப்பிரகாசம் சூரியதீபனாகிறார். 

கவிதை, சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, நாவல் என்றெல்லாம் பல இலக்கிய வடிவங்களிலும் பா.செ இயங்கினாலும் அவரை அடையாளப்படுத்தி நிற்பது அவரது சிறுகதைகள் தான்.

“செயப்பிரகாசத்தின் எழுத்தில் என்னை ரொம்பவும் கவர்ந்தது அவருடைய கவித்துவ நடை. அதைப் பல இடங்களில் படிக்கும் போது, ஐயோ நமக்கு இப்படி எழுத வரமாட்டேங்குதே என்று நினைப்பேன்” எனக் கி.ரா குறிப்பிடுகிறார்.

1971ல் “தாமரை” இதழில் வெளிவந்த “குற்றம்” சிறுகதை அவரது முதல் சிறுகதை. காற்றடிக்கும் திசையில் ஊர் இல்லை (2014) தொகுப்பு வரை சுமார் 120 சிறுகதைகளை அவர் எழுதி உள்ளார்.

அவர் பணி நிமித்தம் பல ஊர்களுக்கும் சென்று சென்னை மாநகரில் வாழத் தலைப்பட்டார் என்றாலும், அவர் நெஞ்சம் முழுக்க கரிசல் மண்ணும் மக்களும் தான். அவர் தொடக்கத்தில் எழுதிய சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதை உலகில் அதிர்ச்சியைத் தந்தது என்றால் மிகை இல்லை.

ஒரு ஜேருசலேம், அம்பலகாரர் வீடு, மூன்றாம் பிறையின் மரணம், காடு, இருளுக்கு அழைப்பவர்கள், அக்னி மூலை, தாலியில் பூச்சூடியவர்கள், இரவுகள் உடையும் போன்றவை கலையழகும், யதார்தமும் கைகூடி வரும் சிறுகதைகள். விதவிதமான கரிசல் மனிதர்கள் உயிரோட்டமாய் இக்கதைகளில் வலம் வருகிறார்கள். நிலவுடைமைச் சமூகத்தின் குணக்கேடுகளையும், மையத்திலிருந்து விலக்கப்பட்ட சமூகங்களின் பண்பியலையும் இக்கதைகள் வழி பா.செ பதிவு செய்வதைப் பார்க்க முடியும். தமிழின் ஆகச்சிறந்த நூறு கதைகளைத் தேர்வு செய்தால் யார், எப்படிப் பட்டியல் போட்டாலும் இவரின் இச்சிறுகதைகள் இடம் பெறும் எனத் துணிந்து கூறலாம்.

“பா.செ.யின் படைப்புகளில் பல பரிணாமங்களுடன் நாம் காண்பது அவருடைய புரட்சி மனம். அவருடைய அக்னி முகம். அவருடைய விமர்சனக் குரல் இவற்றிற்கெல்லாம் ஊடகமாகி இருக்கிற மொழித்திறன், இயல்பான சொல்லாடல்கள், கலையம்சத்தோடு பொருந்திக் கொள்கின்றன” என்ற களந்தை பீர்முகமதுவின் மதிப்பீடு சரியானது.

பா.செ தன் கிராமத்து மண்ணை, மக்களை எழுதியது போலவே, தன் அலுவலக அனுபவங்களை நடுத்தர மக்களை, நகர்மயமாக்கலை, அதிகாரத்தின் போலி முகங்களைப் பல சிறுகதைகளில் படைத்துள்ளார். நானறிய எழுத்தாளர் சு.சமுத்திரம் தான் அரசு அலுவலகங்களின் மனித விரோத முகத்தைத் தோலுரித்துக் காட்டியவர். அவரைப் போலவே, அரசு அலுவலகங்களின், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை, லஞ்சம், ஊழல் முறைகேட்டை பா.செ பல கதைகளில் விமர்சிக்கிறார்.

பா.செ மனஓசையில் பல கவிதைகள் எழுதியுள்ளார். பின்னர் வந்த “எதிர்க்காற்று” தொகுப்பும் முக்கியமானது. தாமிரபரணிப் படுகொலை குறித்த “நதியோடு பேசுவேன்” கவனம் பெற்ற கவிதை. இவரின் கவிதைகள் நேரடித் தன்மையோடு, நடந்த நிகழ்வுகளின் எதிர்க்குரலாக அமைந்தவை எனலாம். இவரின் உரைநடையே கவித்துவமானதாக உள்ளதால் தனியே கவிதைகள் அதிக அழுத்தம் பெறவில்லை.

பா.செ.வின் கட்டுரைகள் தனித்தன்மை வாய்ந்தவை கருத்தை நுட்பம், செறிவுடன் அமைப்பார். வாசக மனதில் ஒருவித எதிர்ப்புணர்வை விதைக்கும் கலகத்தன்மை கூடிவரும். கூடவே எள்ளலும் இருக்கும். படிப்பைத் தூண்டும். பேசுவது போலவே எழுதுவார். அவரோடு அறிமுகமானவர்களுக்குப் பத்தியை, கட்டுரையை வாசிக்கும் போது அவரது குரலும் உடன் வரும். ஈழம் தொடங்கி கதிராமங்கலம் வரை மக்களைப் பாதிக்கும் அனைத்துக்குமான உரிமைச்சமராக அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. அவர் தலைப்பிடும் விதமும் குறியீடாக, புதுமையாக அமையும்.

பா.செ படைப்புகளில் கரிசல் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் மிக முக்கிய இடமுண்டு. நாட்டார் கதைகள், பாடல்கள், கலைகள் குறித்த பதிவுகளைத் தனியேயும் செய்துள்ளார். “தெற்கத்தி ஆத்மாக்கள்” அற்புதமானப் படைப்பு. எழுத்தாளர் எஸ்.எஸ்.போத்தையா குறித்த ஆவணம் மிக முக்கியானது. போத்தையா எனக்கும் நெருக்கமானவர். எட்டயபுரம் பாரதி விழாவோடு, தங்கம்மாள்புரம் சென்று பலமுறை அவரோடு கலந்துரையாடியது நெஞ்சில் நிழலாடுகிறது. அவர் ஒரு நாட்டார் கலைக்களஞ்சியம். தன் சக தோழன் குறித்து பெருமுயற்சியோடு ஆவணப்படுத்தி இருப்பதில் பா.செ.வின் விசலாத்தை உணரலாம்.

“பிரபஞ்சத்தைப் பற்றி சிந்திப்பது, பிரபஞ்ச மக்களுக்காக வாழ்வது, பேசுவது என்கிற இந்த ஞானிதான் எழுத்தாளன், கவிஞன், கலைஞன் எல்லாமுமான மனிதன். தான் வாழும் பிரபஞ்சத்தின் மனசாட்சியாக இருந்து, இனி வரப்போகிற புதிய உலகத்தை முன் கூட்டியே அறிந்து இந்தமனிதன் பயணம் போவான்” என்ற தன் வாக்கு மூலத்திற்குத் தானே சான்றாகிறார் பா.செ.

1981 தொடங்கிப் பத்தாண்டுகள் “மனஓசை” எனும் மக்கள் பண்பாட்டிதழை ஆசிரியப் பொறுப்பேற்று நடத்தினார். இதில் பலரையும் எழுதச் செய்தார். இடதுசாரி இலக்கிய வரலாற்றில் சாந்தி, சரஸ்வதி, தாமரை, சமரன், செம்மலர் வரிசையில் மனஓசை இதழும் இடம் பெறும்.

பா.செ தொடர்ந்து சிற்றிதழ் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். பல எழுத்தாளர்களோடும் தோழமை அவருக்குண்டு.

வெண்மணி தொடங்கி, போபால் விஷவாயு, தாமிரப்பரணிப் படுகொலை, கூடங்குளம், ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம்....... என எல்லா மக்களியப் போராட்டத்திலும் படைப்புப் பலத்தைக் கூட்டியவர். ஈழச் சிக்கலை, ஆதரவை படைப்பாளிகள் மத்தியில் கொண்டு சென்றதில் இவருக்குத் தனித்த இடமுண்டு.

அவர் ஒரு படைப்பாளி, எழுத்தாளர், பேச்சாளர் என்பவற்றைக் காட்டிலும், அவர் தான் வாழுங்காலத்தின் சமூக அசைவியக்கத்தின் ஓர் கண்ணி என்பதே அவர் குறித்து அடையாளமாக அமையும். ஒரு படைப்பாளியின் சமூகப் பொறுப்புணர்வை எந்நேரமும் உணர்த்திக் கொண்டே இருப்பார். இயக்கமே இவரது இயங்குதளம்.

குமரியிலிருந்து வனமாலிகை எனும் எழுத்தாளர் “சதங்கை” எனும் அற்புதமான இலக்கிய இதழை நடத்தி வந்தார். அதில் எழுத்துலகில் தடம் பதித்த சு.சமுத்திரம், பா.செயப்பிரகாசம் போன்றோருடன் இளைஞனான என்னையும் (இரா.காமராசு) ஆசிரியர் குழுவில் இடம் பெறச் செய்தார். அத்தருணங்களிலும் பின்னரும் “தோழமையோடு” இருப்பவர் மட்டுமல்ல பா.செ, தமிழ்நாட்டில் மாற்றுக் கருத்துக்களோடு, மக்கள் சார்போடு இயங்க வரும் பலருக்கும் பா.செ மிக நெருக்கமான “தோழர்” தான். இந்த இயல்பால் தான் கழிந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக பெரிய அல்லது உறுதிப்பட்ட அமைப்புப் பின்புலம் இல்லாமேலே அவரால் ஓர் இயக்கமாக இயங்கமுடிகிறது.

கருத்தியலே அவரின் மூலதனம். நடை முறை இயக்கங்களில் கருத்தொற்றுமைப் பட்டவர்களோடு கூடிச் செயல்படுவதில் அவருக்குச் சிக்கலில்லை. அவர் உலகம் பெரியது. வானம் வசப்படும் எனும் அவரின் நம்பிக்கையும் பெரியதுதான். கொள்கை உறுதி, போராட்டக் குணம் மிக்க பா.செ.வின் மறுபக்கம் அன்பில், நேயத்தில் தோய்ந்தது. கலாநிதி கா.சிவத்தம்பி “நமக்குக் கலாச்சாரச் செயல்பாட்டாளர்கள் தான் தேவை” என்பார். பா.செ உறுதியான பண்பாட்டுப் போராளி!

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ