தடங்கண்ணி அம்மையார்
இயற்கையோடு இயைந்த உயரிய வாழ்வு என்னும் கருத்தில் ஊன்றிக் கடைப்பிடித்தவர் ம.லெ.தங்கப்பா. நோயுற்று மருத்துவமனையிலிருந்து மீண்டு, அதே உடல்நலக் குறைவுடன் வீட்டில் படுத்திருந்தார். மூத்தமகன் செங்கதிர், விண்மீன் பாண்டியன், மகள் மின்னல் ஆகியோர் ஒவ்வொரு மணித்துளியையும் தப்பவிடாது அவரைக் கவனித்து வந்தனர். அவர் கொள்கைப்படி இயற்கை மருத்துவ மருந்தும், உணவுமே அவருக்குக் ஊட்டப்பட்டது.
வாழ்க்கையை முழுமையாய்க் காதலித்து வந்தவருக்கு, வாழ்க்கைத் துணையும் காதலால் அமைந்தார். விசாலாட்சி என்றழைக்கப்பெற்ற தடங்கண்ணி அம்மையாரை காதலித்து மணந்து கொண்டார். துணைவியார் தடங்கண்ணி அம்மையார் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். பள்ளி நிர்வாகத்தில் தேர்ந்தவர். நல்லாசிரியர் விருதும் தேடிவந்தது. பணி ஓய்விற்குப்பின் புதுவை தாய்த்தமிழ்ப் பள்ளியில் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். தங்கப்பாவும் தடங்கண்ணியும் சமூகப்பற்றாளர்கள் மட்டுமல்ல, சமூகச் செயற்பாட்டாளர்கள்.
அவரது இல்லத்திற்குச் செல்கிறபோதெல்லாம் அவருடைய துணைவியார் தடங்கண்ணி அம்மையார் ”அத்தான், சூரியதீபன் ஐயா வந்திருக்கிறார்” என்று தெரிவிப்பார். தங்கப்பாவுக்கும் அவரது துணைவியாருக்கும் சூரியதீபனைத் தான் தெரியும்: எங்களின் தோழமை உருவான தொடக்கநாட்கள் முதலாக அவர்கள் சூரியதீபனாய் என்னை அறிவார்.
அவரைக் கண்டு உரையாட அவர் இல்லம் செல்கிறபோது, ஒரு வித்தியாசமான காட்சியைக் காணுவேன்: அந்திப்பொழுது முற்றம், பெண்டிர் சளசளப்புக்கு, பொறணி பேசப் பயன்படுவது கண்டிருக்கிறேன். ஆனால் தடங்கண்ணி அம்மா தனியாளாய் அமர்ந்து ‘தெளிதமிழ்’ திங்களிதழை அனுப்புதல், உறையில் பெயர், முகவரி எழுதுதல், அடுக்கிவைத்தல் என உள் முற்றவெளி வித்தியாசமான காட்சியாய் அமையும். ‘தெளிதமிழ்’ ஆசிரியராக தங்கப்பா இருந்தாலும், அதன் நிர்வாகியாக அம்மா இருந்தார். ‘தெளிதமிழ்’ப் பக்கங்கள் ஒவ்வொன்றின் வடிவமைப்பிலும் உள்ளேயும் அம்மாவின் முகம் தெரியும்.
தங்கப்பா சிகரம் தொட்டிருக்கிறார் என்றால், அவரை சிகரத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றவர் அம்மா. அவர் அமைதியானவர். அல்லது இப்படிச் சொல்லலாம் – அவரைப் போல் அம்மா அமைதியானவர்.
எழுத்து, சொல், மேடை எனத் தனியாய் ஒரு வாழ்வும், சொந்த வாழ்வு தனியாயும் இருவாழ்வு கொண்டவர் அவர் அல்ல; அவர்போல் வாழ்வுக்கும், எழுத்து, சொல் என்பவற்றிற்கும் இடைவெளி அகற்றியவர் அம்மா.
ஒன்றை நானிங்கு பதிவிட்டாக வேண்டும். விசாலாட்சி உயர்சாதி என தம்மைக் கருதும் பிராமண குலம் சார்ந்தவர். தங்கப்பா சூத்திர சாதி. இருவரும் ஒருவரை விரும்பி மட்டுமல்ல, அறிந்து திருமணம் செய்து கொள்கின்றனர். ”நமது எதிரி பார்ப்பனர் இல்லை; பார்ப்பனியம்” என்ற பெரியாரின் மொழியின் புரிதலோடு இந்த இணைவு நடந்தது. சமஸ்கிருத மயமாக்கல் தமிழரின் அனைத்துப் பண்பாடுகளிலும் கலந்து விட்டது போலவே, பெயரிடுதலிலும் எவரது பெயரைத் தொட்டாலும் சமஸ்கிருதமயமாகியிருந்தது. விசாலாட்சி , ‘தடங்கண்ணி’ என்று பெயர்மாற்றிக் கொள்கிறார். அது அரசின் பதிவிதழிலும் வெளியாகிறது.
தங்கப்பா சிகரம் சென்றடைந்த மற்றொரு தருணம் 2001–இல் புதுச்சேரி அரசு தனக்களித்த கலைமாமணி விருதைத் திருப்பியளித்தத் தருணம்!
விருது பெறுதல் அரிது: அதனினும் கடினம் பெற்ற விருதினைத் திருப்பியளித்தல். புதுவை அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழே ஆட்சி மொழி விதியுள்ளது. பணியாளர்கள் அலுவலகத்திற்குள் சென்றதும், வருகைப் பதிவேட்டில் தமிழில் கையெழுத்திட வேண்டுமென்ற ஆணையைக் கண்டுகொள்வதில்லை; கடைப்பிடிப்பதில்லை. இதையே இந்திக்காரன் செய்வானா அவனுடைய ஊரில் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அது பிழை எனத் தட்டிக் கேட்காத அரசின் கிறுக்குத் தனத்தைக் கண்டித்து, தனக்களிக்கப்பட்ட விருதினை அரசிடம் திருப்பியளித்து சுயமரியாதையைக் காத்துக் கொண்டார் தங்கப்பா. விருதை திருப்பியளிக்க அவர் அணிவகுத்து தலைமைச் செயலகம் நோக்கிச் சென்ற வேளையில் தடங்கண்ணி அம்மையாரும் உடன்சென்றார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
- பா.செயப்பிரகாசம், 27 பிப்ரவரி 2021
கருத்துகள்
கருத்துரையிடுக