பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்


கரிசல் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் பா.செயப்பிரகாசம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கடந்த 23-10-2022 அன்று காலமானார். 1941 ஆம் ஆண்டு விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் என்கிற கரிசல் கிராமத்தில் பிறந்த பா.செயப்பிரகாசம் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த காலத்தில் கிளர்ந்தெழுந்த 1965 ஆம் ஆண்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராடத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர். அப்போராட்டத்தில் பங்கேற்றமைக்காகக் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாத காலம் அடைபட்டிருந்தார். அந்த நாட்களில் திராவிட இயக்கப் பிடிப்போடு இருந்தவர், காலப்போக்கில் திமுக மீது அவநம்பிக்கையுற்று மார்க்சிய லெனினிய இயக்கத்தோடு தன்னைப் பிணைத்துக்கொண்டார்.

கரிசல் வாழ்க்கையை அவருக்கே உரிய தனித்த மொழி, நடையில் தன் சிறுகதைகளில் எழுதினார். 1960களில் நேரு யுகம் முடிவுக்கு வந்து, சுதந்திர இந்தியா விரித்த கனவுகள் ஏதும் நிறைவேறாத ஏமாற்றத்தில் இந்தியா தள்ளாடிக்கொண்டிருந்த காலத்தில் தன் கரிசல் மண்ணில் வாழ்க்கை சீர்குலைந்ததைத் தன் ஒவ்வொரு சிறுகதையிலும் வாசகர் நெஞ்சம் பதைபதைக்க எழுதினார்.

ஒரு ஜெருசலேம், அம்பலகாரர் வீடு, இருளின் புதிரிகள், சுயம்வரம், காடு, சரசுவதி மரணம், கோபுரங்கள் போன்ற கதைகளில் கரிசல் வாழ்வின் சிதைவு மிக நுட்பமாகப் பதிவாகியிருந்தது. “அவர்களுக்கு எவ்வளவு வளமான நிலங்கள்: சொன்ன சொல் கேட்கும் நிலங்கள்! அவனே பார்த்திருக்கிறான்.

இரண்டாம் களையெடுப்பு முடிந்த காலங்களில் அந்தப் புஞ்சை நிலங்களைத் தரிசிக்க வேண்டும். இரவு நட்சத்திரங்களை வைகறையில் அள்ளி எடுத்து ஆயிரங் கைகளால் பூமியில் தூவி விட்டது போல் பூத்துச் சிரிக்கும் கொத்தமல்லிக் காடுகள், தூர் பிடித்து மதமதப்பில் கரும்புத்தட்டை போல் கொழுத்துள்ள கம்மம் புஞ்சை, மகசூல் வீட்டுக்கு வரும் காலங்களில் வீட்டில் அங்கங்கே சிந்திக்கிடக்கிற நவதானிய வகைகள்” என்று அவர் கரிசல்காட்டுப் பெரிய சம்சாரிக் குடும்பத்தை அம்பலகாரர் வீடு கதையில் விவரிக்கும் அழகே தனி. அப்படிப்பட்ட வீடு சிதிலமடைந்து அவ்வீட்டுப் பெண்மணி உடலை விற்றுப் பிழைக்கும் அவலத்தைக் காணும் சாமியாடி சகலத்தையும் அங்கே அந்த வீட்டு வாசலிலேயே போட்டு விட்டு இதற்குமேல் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்பது போல ஓடிப்போகிறான்.

பா.செ.யின் மிகப்புகழ் பெற்ற கதை இந்த ‘அம்பலகாரர் வீடு’ 1980இல் அவர் ’மனஓசை’ என்கிற இலக்கிய இதழைத் துவக்கி நடத்தினார். பத்தாண்டு காலம் அவ்விதழ் தொடர்ந்து வெளியானது. சூரியதீபன் என்கிற புனை பெயரில் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அழுத்தமான மார்க்சியப் பார்வை கொண்ட அவர் எழுதிலும் களப்பணியிலும் சம அளவில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

2014இல் அவர் வெளியிட்ட “காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்” தொகுப்பில் உள்ள ‘அய்யப்பன் மரணம்’ கதையில் எல்லாக் கட்சிகளும் மோசம், கட்சிகளைத் தாண்டிய அரசியல்தான் வேண்டும் என்கிற பார்வையை வெளிப்படுத்துகிறார். இதில் நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. எனினும் அது அவருடைய அரசியல். அவருடைய பார்வை என்பதை மதிக்க வேண்டும்.

விவாதத்துக்குரிய விஷயம் என்னவெனில் அமைப்பில் பணியாற்றுவது படைப்புக்குக் குந்தகம் விளைவிக்குமா? என்பதை பா.செயப்பிரகாசம் விவாதிக்க வேண்டும் என்கிறார். காலச்சுவடு இதழுக்காக அவரைப் பேட்டி கண்ட பெருமாள்முருகனும் தேவிபாரதியும் இதற்கான பதிலைக் கோரி அவரை மடக்கி மடக்கிக் கேள்வி கேட்கிறார்கள்.

கேள்வி:

புகழ்பெற்றிருந்த கரிசல்காட்டு இலக்கியத்தின் முக்கியமான பிரதிநிதியாக வாசகர்களுக்கு அறிமுகமானீங்க. கரிசல்காட்டு வாழ்வின் உயிர்ப்பான கூறுகளை நீங்க உங்க கதைகளின் மூலமாகத் தொட்டிருக்கீங்க. அப்ப உங்க கதைகளில் ஒரு நேர்த்தி இருக்கும். பிறகு உங்க படைப்புகளில் பிரச்சாரத் தன்மை மேலோங்கத் தொடங்குது.

‘காடு’ தொகுப்புல அதற்கான விதைகள் தென்படத் தொடங்குது. கடைசிக் கதையான ‘விடிகிற நேரங்கள்’லில் வெளிப்படையான பிரச்சாரம் இருக்கும். அதுக்கு முன்னாடி உள்ள கதைகள்ல விளிம்பு நிலை வாழ்க்கை மீது, கிராமத்து வாழ்க்கை மீது, ஏழை விவசாயிகள் மீது ஒரு பரிவு இருக்கும், சாதிய அமைப்புக்கு எதிரான, ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு குரல் இருக்கும். எல்லாமே அந்த வாழ்க்கையின் பகுதிகளாத்தான் இருக்கும்.

‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ கதையக் கூடச் சொல்லலாம். அதுல பிரச்சாரம் இருந்தாக்கூட அது கலையாத்தான் இருக்கு.

‘விடிகிற நேரங்களுக்குப் பிறகு’ வந்த கதைகள் குறிப்பா உங்களோட நான்காவது தொகுப்பான ‘இரவுகள் உடையும்‘ தொகுப்புல இடம்பெற்றுள்ள எல்லாக் கதைகளுமே நேரடியாகப் பிரச்சாரம் பண்ற கதைகள்தான். அநேகமாகப் படைப்பிலக்கியம் சார்ந்து உங்ககிட்டப் பேச வேண்டிய விஷயம் இதுதான். இதை மையப்படுத்திப் பேசறது முக்கியமானதா இருக்கும் இல்லையா?

என்று ஒரு பென்னம் பெரிய கேள்வியைத் தூக்கிப் போடுகிறார்கள். அதற்கு பகுதி பகுதியாக அவர் சொன்ன பதில்களைத் தொகுத்தால் இப்படி வருகிறது.

“சுய அனுபவங்களச் சமூகரீதியான அனுபவங்களோடு இணைத்து அந்த எதார்த்தத்தை வெளிப்படுத்துபவைதான் என்னுடைய தொடக்ககாலக்கதைகள்னு நெனைக்கறேன்.

எழுதத் தொடங்குறபோது ஒருபொதுவான சமூகஅக்கறை இருந்துது. சமூக நெருக்கடிகள், கிராம வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் அது உருவாக்குகிற வாழ்வியல் நெருக்கடிகள் குறித்த அக்கறையும் கோபமும்தான் என் தொடக்ககால எழுத்துக்கான அடிப்படையாக இருந்தவை. ஆனா அவற்றுக்கான காரணம், தீர்வு குறித்தெல்லாம் போதிய தெளிவு கிடையாது. தீர்வுகள் வைக்கப்பட வேண்டும்ங்கிற புரிதல், தேவை வர்றபோது எழுத்து இயல்பாவே பிரச்சாரத்தன்மை கொண்டதாமாறிடுது..”

அமைப்பு சார்ந்து இயங்கும் படைப்பாளிகள் விவாதிக்க வேண்டிய ஒரு தொடக்கப்புள்ளியை பா.செயப்பிரகாசம் விட்டுச் சென்றுள்ளார். அந்த விவாதத்தை முன்னெடுப்பதுதான் நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும்.

- நன்றி: புத்தகம் பேசுது 


கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?