ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

ஓரிரு ஆண்டுகளுக்குள்‌ முன்னும்‌ பின்னுமாய்‌ பல கொடிய நிகழ்வுகள்‌ அரங்கேறிவிட்டன. 'ராகிங்‌' கொடுமைக்குத் தப்ப முடியாமல்‌ போன அண்ணாமலைப்‌ பல்கலைக்‌கழக மாணவர் நாவரசு. பருந்துகளின்‌ கொடூர நகங்களுக்குப்‌ பிடிபடாமல்‌ தப்பியோடிய கோழிக்குஞ்சு போல்‌ மாணவி சரிகா. கணவன்‌ கைப்பிடித்தும்‌ கருக்கப்பட்ட மலர் பாண்டிச்சேரி பார்வதி ஷா.

வாழ்க்கை - இவர்களுக்கு முடிந்து விட்டது - மீள முடியாத இவர்களின்‌ வாழ்வு முடிவை மரணம்‌ என்று சொல்வதை விட 'வன்கொலை' என்று சொல்வதே பொருத்தம்‌.

பார்வதி ஷாவின்‌ கொலை பாண்டிச்சேரியை மட்டுமல்ல; மாணவர்கள்‌ நாவரசு, சரிகா கொலை போலவே தமிழ்கூறும்‌ நல்லுலகை உலுக்கி எடுத்திருக்கிறது. பார்வதி ஷா கொலை அம்பலப்படுத்துதலில்‌, ஊடகங்கள்‌, மக்கள்‌ உரிமை அமைப்புகள்‌, சமூக இயக்கங்கள்‌ முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கின்றன.

  1. பி.யூ.சி.எல்‌ உறுப்பினர்கள்‌ மற்றும்‌ சமூக அக்கறை கொண்டவர்கள்‌ சாலை மறியலைத்‌ தொடங்குகிறார்கள்‌. பொதுமக்களின்‌ விழிப்புணர்வும்‌ சமூக அக்கறையும்‌ ஏதோ ஒரு புள்ளியில்‌ சமூக நடவடிக்கையாக மாறக்‌ காத்திருக்கின்றன. அது தொடங்கி வைக்கப்படுகிறது.
  2. குற்றவாளியான கமல்‌ ஷா பொய்க்‌ காரணங்கள்‌ காட்டி சேர்ந்துள்ள அரசினர்‌ பொது மருத்துவமனை முன்‌ திரளாக மக்கள்‌ ஆர்ப்பாட்டம்‌ செய்கிறார்கள்‌. குற்றவாளியிடம்‌ வாக்குமூலம்‌ பெறுவதற்காக காவல்துறையிடம்‌ ஒப்படை என்று முழக்கம்‌ செய்கிறார்கள்‌.
  3. ஆர்ப்பாட்டம்‌ செய்யும்‌ பொதுமக்களிடையே வித்தியாசமாக ஒரு ஆள்‌ தென்பட விசாரிப்பில்‌ "அவர்‌ சென்னை வழக்கறிஞர்‌. குற்றவாளியா கமல்‌ ஷாவை பிணையில்‌ (ஜாமின்‌) எடுக்க வந்திருக்கிறார்‌" என்று தெரிந்ததும் அவரை சுற்றி வளைத்து ஓட வைக்கிறார்கள்‌. ஒரு கட்டத்தில்‌ அவர்‌ மீது தாக்குதல் நடத்துகிற அளவு பொதுமக்கள்‌ கோபம்‌ விரிவடைகிறது.
  4. கடையடைப்பு, வேலை நிறுத்தத்திற்கு வீதி வீதியாக போய் சொல்லப்படுகிறது. ஏற்கனவே கொலை பற்றியும்‌ ஆர்ப்பாட்டம்‌ பற்றியும் செய்திகள் பரவியிருந்த பின்னனியில்‌ கொலையை மூடி மறைக்கும் முயற்சியில்‌ ஈடுபட்ட அரவிந்தத்  ஆசிரமம் மீது சமூகக் கோபம் கனன்று கொண்டிருந்த சூழலில் கடையடைப்பு, வேலை நிறுத்தம்‌ வெற்றிகரமாக எளிதில் நிறைவேறியது.
  5. பொது மக்களிடம்‌ கொந்தளித்து நிற்கும் தன்னெழுச்சியை பயன்படுத்துவது இன்றைய காலகட்டதில் முக்கியமான போராட்டமுறை. இது போன்ற சமூகக்‌ கொடுமைகளால்‌ மக்கள் மனதில் எதிர்க் கருத்து தொடர்ந்து சேமித்து வைக்கப்பட்டு கொண்டே வருகிறது. குறிப்பிட்ட ஒரு நிகழ்வு, துண்டுகோலாக அமைய மக்கள்‌ சுயமாகச் செயல்பட ஆரம்பிக்கிறார்கள், 'தட்டி விட்டதும்‌ படர்கிற மின்சாரம்‌ போல'

பெண் மீதான வன்முறை அவள்‌ பிறக்கும்‌ போதிருந்தே தொடங்குகிறது. கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று பார்த்து அழிப்பதில்‌ ஆரம்பமாகிறது. உண்டி சுருக்குதல்‌ பெண்டிர்க்கு அழகு; உணவு, ஆரோக்கிய வாழ்வுக்கான மருததுவ வசதிகளில்‌ அலட்சியப்படுத்தப்படுகிறாள்‌. கல்வி, விளையாட்டு, தனித்திறமைகளை வெளிப்படுத்தும்‌ முயற்சிகளில்‌ ஓரங்‌கட்டப்படுகிறாள்‌. முயற்சி திருவினையாக்கும்‌ - ஆனால்‌ பெண்ணின்‌ முயற்சி 'என்ன அடக்கம்‌ , ஒடுக்கமா இல்லாம' என்று மட்டந்‌ தட்டப்படுகிறது. பிறகு காத்திருக்கிறது பூப்பெய்தல்‌, இதுவரை அவளுக்கு அளிக்கப்பட்ட கொஞ்ச நஞ்சம்‌ சுதந்திரம்‌ கூட அன்றிலிருந்து கத்தரிக்கப்படுகின்றது. குடும்பத்திற்கு உள்ளேயும்‌, வெளியேயும்‌ இருந்து பாயும்‌ பாலியல்‌ தாக்குதல்களில்‌ இருந்து தன்னுடைய உடம்பைச்‌ சதாகாலமும்‌ காக்க வேண்டியவளாக ஆகி, அவளுடைய முழுநேர வேலையும்‌ சிந்தனையும்‌ உடம்பு காப்பதிலேயே கழிகிறது.

பிறந்தது முதல்‌ தலை கீழே சாய்கிற வரை, முழு விகசிப்புக்கு ஆளாகாமல்‌, வெம்பிப்‌ போகிற பெண்‌ மீது பாயச்சப்படுகிற கருத்தியல்‌ வன்முறைதான்‌ பிற வன்முறைகளுக்கு அடிப்படை. அவள்‌ சம மதிப்புள்ள, மதிக்கப்பட வேண்டிய உயிர்‌ அல்ல. எப்பொதும்‌ கீழானவள்‌. காமத்‌துய்ப்புக்கான பொருள்‌ என்ற கருத்தியல்‌ நிலைப்பாடுதான்‌ பாலியல்‌ வன்முறை, சட்ட வன்முறை, உளவியல்‌ வன்முறை போன்ற பிற வன்முறைகளுக்கு இட்டுச்‌ செல்கின்றன.

பெண்‌ இந்தச்‌ சமுதாயத்தின்‌ பிரதிநிதி, ஆண்‌ போலவே அவளும்‌! ஆனால்‌ கடந்த காலத்தில்‌. நடமாட விடப்பட்ட கருத்துக்கள இதை அங்கீகரித்ததில்லை. எழுத்து வடிவ இலக்கியங்கள்‌ மட்டுமல்ல, எண்ணற்ற காலமாக, எண்ண முடியாத மக்களால்‌ வாய்மொழியாக பரிமாறப்பட்டு, கவனமாகக்  கைமாற்றப்பட்ட சொலவடை, விடுகதை, பாடல்கள்‌, கதைகள்‌ எனப்‌ பல வாய்மொழி இலக்கியமும்‌ இந்தக்‌ கருத்தையே முன்வைத்து வந்திருக்கின்றன.
பெண்டிர்க்கு அழகு எதிர்‌ பேசாதிருத்தல்‌
பெண்டிர்க்கு அழகு உண்டி சுருக்குதல்‌,
பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில்‌ விடும்‌
பொம்பிளை சிரிச்சாப்‌ போச்சி
புகையிலை விரிஞ்சாப்‌ போச்சி
இக்‌ கருத்து, ஆண்‌ வழிச்‌ சமுதாயம்‌ மேலோங்கிய போது குடும்பம்‌, சமூகம்‌ போன்ற அமைப்புக்களில்‌ மட்டுமல்ல, காதல்‌, கோபம்‌, ஈகை, சிரிப்பு என்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும்‌ அவன்‌ கை மேலோங்‌கியே நிற்பதைக்‌ காட்டுகிறது. சிரிப்பும்‌ அவனுக்கே உரியது. சிரிக்கவோ, கோபம்‌ கொள்ளவோ, உணர்ச்சிகளை வெளிக்‌ காட்டவோ, பெண்ணாகிய "ஈனப்‌ பிறவிக்கு" எந்த உரிமையும்‌ இல்லை.

சிரிப்பு எல்லாருக்கும்‌ பொதுவானது. அது வெளிப்‌பாட்டு உணர்ச்சி வகை, ஆண்‌ சிரிப்பு, பெண்‌ சிரிப்பு என்று தனியாகப்‌ பிரிக்கப்பட வேண்டுமா? கலைவாணர்‌ என்‌.எஸ்‌.கிருஷ்ணன்‌,

"சிரிப்பு சிரிப்பு , சிரிப்பு"

- என்றொரு பாடலில் எல்லோருக்கும்  பொதுவாகத்தான் வைத்தாரே தவிர, அடிமைத்தனம், ஆணவம், மேட்டுக் குடித்தனம் என்ற பலவகைக் குணங்களின் வெளிப்பாடாகத் தான் காட்டினாரே தவிர, ஆண்‌ சிரிப்பு, பெண்‌ சிரிப்பு என்று விரிக்கவில்லை. பாடல் காட்சியில் கூட, என்‌.எஸ்‌.கிருஷ்ணனும்  டி.ஏ.மதுரமும், இருவரும் சிரித்து மகிழ்கின்றார்கள். பொம்பிளை சிரிச்சாப்‌ போச்சி என்று சிரிப்புத் தடை விதிக்கப்படவில்லை.

இப்படி எழுதப்படாத, நடைமுறையிலிருக்கும்‌ வாய்ப்‌பூட்டுச்‌ சட்டம்‌ தான் 'பெண்டிர்க்கு அழகு எதிர்‌ பேசாதிருத்தல்‌'.

இது ஆண்களின் கண்ணோட்டம் என்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் பெண்ணே இந்தக் கருத்தை தனக்குள் இறக்கியிருப்பவளாய், உச்சரிப்பவளாய் இருப்பது தான் அவலம். பெண்ணடிமைக் கருத்து சமூகத்தின் பொதுக் கருத்தியலாக மாறியிருக்கிறது. இது பெண்ணுக்குள்ளும் இறங்கி, கர்ப்பப் பை முதல் சிரசு வரை இயங்குகிறது.

தான் பெண் என்ற கருத்தைத் தவிர சுயமாக வேறெந்தக் கருத்தும் பெண்ணுக்கு உருவாகக்கூடாது . இதில் ஆண்களும், ஆண்வழிக் கருத்துக்களால் கட்டுமானம் செய்யப்பட்ட குடும்பமும், சமூகமும் தொடர்ந்து மிக, மிக எச்சரிக்கையாக செயல்படுகிறார்கள். அவள் தனக்கென கருத்தெதுவும் இல்லாத ஒரு ஜடம். பிறரின் கருத்துக் கிணற்றுக்குள்ளே உள் அடங்கி அலைகளில் மிதக்கிற ஆமை. அப்படியே அவளுக்கென்று கருத்து உருவாகியிருந்த போதும், வெளியே ஒரு பேச்சுக்கு கூட வைக்கக் கூடாது.

பார்வதி கணவனுடைய வீட்டின் சுற்றுச்சுவர் உயரம்‌ 15 அடி. வீட்டிற்குள்‌ நடக்கிற எதையும் இந்த உயரம்‌ வெளியே தெரியாமல்‌ அடித்துவிடும்‌. என்னதான் காதல் கணவன் கைப்பிடித்தே, அவன்‌ காரியம்‌ யாவினும்‌ கைகொடுத்தே வந்தாலும், ஒரு பெண் தனக்கிழைக்கப்படும்‌ கொடுமைகளை தானாக வெளியே சொன்னால் தவிர வீதிக்குத்‌ தெரியாது. சொந்த அண்ணனுடைய குடும்பத்திற்கே தெரியாமல்‌ பார்வதி தனது வேதனைகளை மறைந்திருக்கிறார்.

இழைக்கப்படுகிற ஒவ்வொரு கொடூரத்தையும் அக்கம்‌, பக்கத்திற்கு தெரியாமல்‌ பெண்‌ தனக்குள்ளேயே அடைத்து வைத்துக்‌ கொள்வது பெண்மையின் இலக்கணமாக இதுவரை கருதப்பட்டு வந்தது. கடந்த கால பொற்கால இலக்கியங்கள் இந்தப்‌ போதனையை அவளுக்கு அணிகலன்களாகக் சூட்டி அலங்கரித்துள்ளன. சுவாசக்‌ காற்று தவிர
வேறெதுவும் அவளுக்கு உள்புகவோ, வெளிவரவோ இயலாதபடி வழிகள்‌ அடைக்கப்பட்டுள்ளன.

சுற்றும் முற்றும் அயலில் இருக்கிறவர்களிடையே கூட சொல்லாமல்‌
இருக்கிற அடக்க குணம்‌ கொண்ட எந்தப்‌ பெண்ணும் காவல்‌ நிலையமோ, 
(அது மகளிர்‌ காவல்‌ நிலையமாக இருந்தாலும்) நீதிமன்றமோ செல்ல மாட்டாள்‌. அக்கம்‌ பக்கம் இருக்கிறவர்கள் கூட அறியவிடுவதில்லை என்ற இந்த அடக்க குணம் பெண்ணைப் பாலவீனமாக ஆக்குகிற முதல் எதிரி. அதே நேரத்தில் அடக்கம் என்ற மறைப்புக் குணம் ஒரு ஆணுக்குத் தேவையில்லை.

எந்த ஆண் தன் மனைவியைப் பற்றி, பொதுவாகப் பெண்கள் பற்றி தன் உறவினரிடத்தில், நண்பர்களிடத்தில், பணியிடங்களில் கருத்தை வெளியில் இறக்கி வைக்காமல் இருக்கிறான்? பெண்கள் பற்றி தனது பார்வையை இயல்பாக கருத்துப் பரப்புதல் செய்யாது இருக்கிறான்? பெண் தனக்குக் கட்டுப்பட்டவள் என்ற கருத்தின் காரணமாக, அவள் பற்றிய எல்லாக் கருத்துகளையும் பேசுவதற்கு தனக்கு முழு சுதந்திரம் உண்டு என்று நினைக்கிறான்.

ஆண்களின்‌ இந்த சுதந்திர மனோபாவம்தான்‌, பார்வதியின்‌ கொலை மறைப்பிலும்‌ செயல்பட்டிருக்கிறது. பெண்‌ மீது வன்முறையைப்‌ பிரயோகிக்கிற சுதந்திரம்‌ தங்களுக்கு உண்டு என்று கருதுகிற மாதிரியே வன்முறையை மறைப்பதற்கும்‌ முழுச்‌ சுதந்திரம்‌ உண்டு என்று அவளைக்‌ கற்பழித்த ஆண்‌, கட்டிய ஆண்‌, அரவிந்தர்‌ ஆசிரமத்திலிருந்து வந்த ஆண்கள்‌ கருதினார்கள்‌. இந்த அடிப்படை தான்‌ பார்வதிஷா.

இதுவே உயிருக்குக்‌ கெஞ்சுகிற கடைசிக்‌ கட்டத்திலும்‌, வீடெங்கும்‌ அவள்‌ சிந்திய இரத்த வெள்ளத்தை துடைத்து, உடுத்தியிருந்த உடைகளை மாற்றிக்‌ கொலை மறைப்புச்‌ செய்வதிலும்‌ தொடர்ந்திருக்கிறது.

அரவிந்தர்‌ ஆசிரமச்‌ சட்ட திட்டங்களில்‌ ஓரு விதி இருக்கிறது. ஆசிரமத்தில்‌ அங்கத்தினராக உள்ள குடும்பத்தின்‌ பிரச்சனைகளை முதலில்‌
ஆசிரமத்திக்குத்‌ தெரிவித்து, வழிகாட்டல்‌ பெறப்பட வேண்டும்‌. காவல்‌
நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ, வெளியிலோ கொண்டு செல்லப்படக்கூடாது என்பது விதி. இந்த அடிப்படையில்‌, அவள்‌ உயிர்‌ போகிற கட்டத்தில்‌ ஆசிரமத்திற்குத்‌ தெரிவித்து, ஆசிரமும்‌ மறைப்புச்‌ சதியில்‌
ஈடுபடுகிறது. ஆசிரமத்திற்கு தெரிவிக்கப்ட்ட போது இரவு 12 மணி. ஆசிரமப்‌ 
பிரதிநிதிகள்‌ ஆசிரமம்‌ என்ற கம்பீரமான போர்வையில்‌ செயல்பட்டிருக்கிறார்கள்‌. சுவர்‌ ஏறிக்‌ குதித்து அதுவும்‌ 15 அடி உயர சுவர்‌ ஏறிக்‌ குதித்து, களாவடிச்‌ செல்ல வந்த திருடனால்‌ பார்வதி தாக்கப்பட்டாள்‌ என்ற கட்டுக்கதை ஆசிரமத்தினால்‌ தரப்பட்டது.

சித்திரவதைகள்‌ தற்‌செயலானவை அல்ல. தற்செயலாய்‌ நேர்கிறவை சித்திரவதைகளும்‌ அல்ல. பலவீனமான சக்திகள்‌ மேல்‌ சிறுகச்‌ சிறுகச்‌ திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றவை தான் சித்திரவதைதள்‌, கணவன், மாமனார்‌, மாமியார்‌, நாத்தனார்‌, அண்ணன, தம்பி போன்ற குடும்ப உறுப்பினர்களால்‌ குடும்ப அமைப்புக்குள்ளும்‌, ஆட்சியாளர்கள்‌, அதிகாரிகள்‌, அரசியல்வாதிகள்‌, ரெளடிகள்‌ போன்றோர்களால்‌ சமூக அமைப்புக்குள்ளும்‌ வன்முறை பிரயோகிக்கபடுகிறது.

இன்றைக்கு அரசியல்‌ இயக்கங்களின்‌ செயல்பாடுகள்‌ இத்தகைய சமூகப்‌ பிரச்சனைகளின்‌ தளத்தில்‌ இல்லை. அவர்கள்‌ வேறொரு சுகமான தளம்‌
நோக்கி தங்கள்‌ அரசியல்‌ விசைப்‌ வதள்ன்ன செலுத்தித்‌ கொண்டிருக்கிறார்கள்‌. அணுமின்‌ நிலைய எதிர்ப்பு, சாதிக்‌ கொடுமைகள்‌ எதிர்ப்பு, கல்லூரிகளில்‌ ராகிங்‌ கொடுமை, பெண்கள்‌ மீது நடத்தப்படும்‌ பாலியல்‌ பலாத்காரங்கள்‌, ஆங்கில ஆதிக்கம்‌ என்று தகதகவென்று எரியும்‌ எந்தப்‌ பிரச்சனையும்‌ அரசியல்‌ கட்சிகளின்‌ நிகழ்ச்சி நிரலில்‌ வரவில்லை. அவர்களுடைய செயல்பாடுகள்‌ அரசியல்‌ அதிகாரத்தை வென்றெடுப்பது, தக்க வைப்பது என்ற நாற்காலிப்‌ போட்டிகளின்‌ திசை நோக்கி ஒதுக்கம்‌ கொண்டு விட்டன. சமுதாயத்தை எப்போதும்‌ விழிப்போடு கண்காணித்து பாதுகாக்கிற ஆற்றலை, ஆளுமைடைய அரசியல்‌ மையத்தை அவை இழந்து விட்டன, அப்படியே எப்போதாவது பங்கேற்றாலும்‌ அவை வெறும்‌ பாவனைகள்‌ மட்டுமே.

ஆகவே அரசியல்‌ இயக்கங்கள்‌ கை கழுவி விட்ட எரியும்‌ பிரச்னைகளின்‌ கங்கு அணையாமல்‌ காக்கும்‌ பொறுப்பு, இப்போது மனித உரிமை அமைப்பு, பெண்ணுரிமை இயக்கங்கள்‌, சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு அமைப்பு, தாய்மொழிப்‌ பாதுகாப்பு அமைப்புகள்‌, கலை இலக்கிய அமைப்புகள்‌ போன்ற சமூக இயக்கங்களின்‌ தலை மீது விழுந்திருக்கிறது.

எனவே பொறுப்பான இந்த இயக்கங்களின்‌ முன்‌, பெண்ணை விடுதலை செய்யும்‌ கடமைகள்‌ முன்னிற்கின்றன,

பாண்டிச்சேரி பார்வதியும்‌, வட இந்தியக்‌ குடும்பத்தைச்‌ சார்ந்த ரவி ஷாவும்‌ காதல்‌ மணம்‌ செய்து கொண்டவர்கள்‌. காதல்‌ மணம்‌ ஒன்றே பிரச்சனைகளின்‌ வெக்கை வீசாத, அமைதி தவழும்‌ பூஞ்சோலையில்‌ கொண்டு நிறுத்தி விடுவதில்லை. காதல்‌ மணம்‌ பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு நுழைவாயில் மட்டுமே. குடும்பத்திற்குள்ளோ, வெளிச்‌ சமூகத்திலோ புறப்படுகிற நெருக்கடிகளை முன்னுணர்ந்து எதிர்கொள்ள வேண்டும்‌. பார்வதியின் இந்த மரணம் இது போன்ற படிப்பினைகளையே உணர்த்துகிறது. ஒரு பெண் உயிரின் பலியிலிருந்து, சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் நம் காலத்தின் அவசியம்.

முதலாவதாக

பெண் தனக்குரிய குணங்களாக குடும்பமும், சமூகமும் வடிவமைத்திருக்கும் பொது குணாம்சங்களை உடைக்க வேண்டும். அச்சமும்‌, நாணமும்‌ கொண்ட அசிங்கமான சித்திரத்தை அழிப்பது அவளுக்கு முன்னுள்ள முதல் கடமை. தனக்குள்‌ பூட்டிய சன்னல்‌, சதவுகளை, முதலில்‌ பெண்‌ திறந்துவிட வேண்டும்‌. 'உன்னுடன்‌ பேசு' என்கிறது ஒரு கவிதை. பூட்டிய இரும்புக்கூட்டை திறக்கும்‌ வல்லமையுடைய கைகள்‌ கொண்ட அவள் உள்ளிருந்து இரும்புக்‌ கதவுகளைத்‌ தள்ளினால்‌, வெளியே இழுத்துத்‌ திறப்பதற்கு ஆயிரம்‌ கைகள்‌ காத்திருக்கின்றன.

போராடுகிற பெண்களில்‌ சிலர்‌ அலைக்கழிப்புக்கு ஆளாகலாம்‌. தன் சொந்த வாழ்க்கையை இழக்க வேண்டியிருக்கலாம்‌. ஆனால்‌ “வாழ்க்கையே
போராட்டமாய்ப்‌ போச்சு'' என்று நொந்து வெந்து அழிவதைவிட உறுதியாகப்‌
போராடுவது மேல்‌ அல்லவா?

இரண்டாவது -

பாண்டிச்சேரி பொதுமக்களின்‌ கோபமும்‌, ஊடகங்கள்‌, சமூக
இயக்கங்களின்‌ கடமையும்‌ இணை நிகழ்வுகளாகவே உச்சத்திற்கு
அணிவகுத்துச்‌ சென்றுள்ளன. கணவனோ, காதலனோ, வங்கொடுமைக்குத்‌
துணை போகிற தனிநபரோ, நிறுவனமோ, யாராக இருந்தாலும்‌ தப்ப விடாமல்‌
சமூகத்தின்‌ தண்டிப்புக்கு, பழிப்புக்கு அவர்கள்‌ இலக்காக வேண்டும்‌ என்பதில்‌
ஒருமைப்பட்டுச்‌ செயல்பட்டுள்ளன. இந்த ஒன்றிப்பு, இணை நிகழ்வு
எதிர்வரும்‌ எப்பிரச்சனையிலும்‌ விழிப்போடு தொடர வேண்டியுள்ளது.

மூன்றாவதாக -

மாணவர்‌ நாவரசு கொலை காரணமாக ராகிங்‌' கொடுமைகளைத்‌ தடுக்கும்‌ சட்டம்‌ கொண்டுவரப்பட்டது போல்‌ -

சரிகா மரணத்தை முன்வைத்து பெண்களை இழிவுப்படுத்தும்‌ தடைச்‌
சட்டம்‌ பிறந்தது போல்‌ -

கற்பழிப்பு, கொலை என்ற இரண்டு திட்டவட்டமான வடிவங்களில்‌ அல்லாது இடைப்பட்ட லைகளில்‌ பெண்களுக்கு இழைக்கப்படும்‌ கொடுமைகளைத்‌ தடுக்க தனியான சட்டம்‌ உருவாக்கப்பட வேண்டும்‌. ஒரு மனைவி இருக்கிறபோது, இன்னொரு பெண்ணுடன்‌ குடும்பம்‌ நடத்துகிற 'சின்ன வீடு' கொடுமையின்‌ சீண்டலும்‌ அவமதிப்புமாக உளவியல்‌ வதைகள்‌, அடித்தல்‌, உதைத்தல்‌ போன்ற உடலியல் வதைகள்‌ போன்ற சித்திரவதைகளைத்‌ தடுத்து நிறுத்துவதற்க்கு சட்டப்பிரிவுகளில்‌ வழி இல்லை. தெள்ளத்‌ தெளிவான குற்றங்கள்‌ தவிர, வெளித்‌ தெரியாமலே பெண்களுக்கு இழைக்கப்படும்‌ கொடுமைகளைத்‌ தடுக்க தனிச்‌ சட்டப்‌ பாதுகாப்பு எழுப்பியாக வேண்டும்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?