பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

நியூஸிலாந்து சங்கநாதம் தமிழ் ரேடியோ - 18 ஜனவரி 2013

பொங்கல் வாழ்த்து உரை மற்றும் தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம்,  பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னணி பற்றி எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.



வணக்கம். முதலில் நியூஸிலாந்து வாழ் தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள். குறிப்பாய் தமிழ் கலை இலக்கிய வட்டத்தின் சங்கநாதம் வானொலி மூலமாக நாளை நடக்கவிருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் வாழும் ஒரு எழுத்தாளன் நான். எழுத்தாளன் என்பவன் முந்திய காலத்து ஞானிகள் போல சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும் என்று கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ கூறுவார். தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய், தமிழகத்தின் மனச்சாட்சியாய் நான் உங்களுடன் இந்த பொங்கல் விழாவினை பகிர்ந்து கொள்ள விழைக்கிறேன்.

எந்த நாளில், எந்த சூழலில் நீங்கள் இந்த பொங்கல் திருநாளை எடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது. நாம் ஒன்றும் இல்லை நமக்கென்று ஒன்றுமில்லை. ஏதிலிகளாய் உலக வீதிக்கு நடத்தப்பட்டுள்ளோம் நாம் என்றொரு நிலை இன்று இருக்கிறது. நமக்கென்று ஒரு காலம் இருந்தது. அது ஒரு காலம். அதுதான் பொங்கல் திருநாள், உழவர் திருநாள், அறுவடை திருநாள் என்று பலவகையாக பெயரிடப்பட்ட அந்த நாள். 

உலகப் பரப்பில் ஒவ்வொரு இனமும் தனக்கென ஒரு தனித்த பண்பாட்டு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. ஒரு பண்பாட்டு நிகழ்வு எதன் காரணமா எக்காலத்தில் தோன்றியது என்று கண்டறிவது, அந்த ஆதி புள்ளியை கண்டறிவது கடினம். இறுதிக்கும் இறுதியாய் ஒரு நம்பிக்கையாக மட்டுமே அதற்கு விளக்கம் காணுகிறார்கள். யூகம், அனுமானம் இவற்றினால் அதை சுற்றிக் கட்டப்பட்ட கதைகளும் உண்டு. தமிழனம் எடுக்கும் பொங்கல் விழா யூகத்தின் காரணமாய், அனுமானத்தின் காரணமாய் கட்டப்பட்ட ஒரு கதை நிகழ்வல்ல. அது ஒரு நம்பிக்கை அல்ல. சங்கராந்தி போல, தீபாவளி போல, கார்த்திகை போல மூடத்தனத்தின் மேல் கட்டப்பட்டஆரிய நிகழ்வுகள் அல்ல. காலம் மாறுதலை, தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தில் காலச் சூழற்சியில்  எழுந்த ஒரு மாறுதலை சுட்டும் ஒரு வரலாற்று நிகழ்வு. இனக் குழு சமூகமாக இருந்த தமிழ் இனம், வேளாண் சமூகமாக மாறியத்தின் அடையாள புள்ளி அது.

வேட்டைச் சமூகமாக இருந்த ஓர் இனம், வேளாண் சமூகமாய் நாகரிக உயர்வு பெறுகிறது. தம் உழைப்பை, உணவு தானியத்தை தங்களுக்கு தந்த சூரியனை, வான் மழையை, காற்றை, இயற்கையை வணங்கினார்கள் தமிழர்கள். பிள்ளைகளை போல் பொத்தி பொத்தி வளர்த்த பயிர்கள், தங்கள் தலையால் தானியம் தந்து வணங்குகிற போது, அந்த பயிர்களை கொண்டாடும் அறுவடைக்காலத்தை அவர்கள் வணங்கினார்கள். அந்த அறுவடைக்காலத்தை கொண்டு சேர்த்த, கழுத்து ஓடிய பாடுபட்ட மாடுகளை, அவர்கள் மாட்டு பொங்கல் என்ற நினைவு கொண்டார். அந்த பொங்கலை தங்களுக்கு கொண்டுதந்த உழைப்பாளிகளை, அவர்கள் காணும் பொங்கல் என்று கொண்டாடினார்கள். பொங்கல் திருநாள், உழவர் திருநாள், காணும் பொங்கல் என்று மூன்று வகையாக இவைகளை அவர்கள் வகுத்து தங்களுடைய நன்றிகளை தெரிவித்தார்கள். இந்த நேரத்தில் மே தினம் போல், மாவீரர் நாள் போல் பொங்கல் விழாவில் மேற்கொள்ள வேண்டிய சங்கர்ப்பங்கள் என உறுதி மொழிகள் உண்டு. 

பொங்கல் எனும் பழைய தமிழர் திருநாளில் தமிழர் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள்கள் என்ன?

சித்திரையில் இருக்கும் தமிழா

நித்திரையில் இருக்கும் தமிழா 

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் 

கற்பித்ததே அறிவு கோவா 60 ஆண்டுகள் 

தரணி ஆண்ட தமிழனுக்கு 

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு 

என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சித்திரை திருநாளில் தொடங்குகின்ற புத்தாண்டு 60 மாதங்களும் வடமொழிப் பெயர்கள். 60 ஆண்டுகளும் வடமொழிப் பெயர்கள். நாயக்க மன்னர் ஆட்சியில்தான் இதை புழக்கத்துக்கு கொண்டு வந்தார்கள். 

நாம் இங்கே கவனிக்க வேண்டியது இந்த உழவர் திருநாளில், பொங்கல் திருநாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் என்ன. சாதி ஒழித்தல் ஒன்று. தமிழ் வளர்த்தல் மற்றொன்று. இதில் பாதியை மறந்தால் மறுபாதிக் தொலங்குவதில்லையாம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். நாம் இந்த நாளிலே சாதி பேதங்கள் கற்பித்து கொண்டு, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறோம். இன்றைய தமிழகம் இதே நிலையில்தான் இயங்கி கொண்டிருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் நிலைமைகள் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் சாதி பேதங்கள் பாராட்டுவது என்பது ஒவ்வொருவருடை ரத்தத்திற்கும் உள்ளேயும் ஊறி இருக்கிறது. ஆகவே சாதி ஒழித்தல் ஒன்று, தமிழ் வளர்த்தல் மற்றொன்று. 

அன்றைக்கு இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் போராடினோம். ஆனால் இந்தி ஆதிக்கத்துக்கு பதிலாக ஆங்கில ஆதிக்கம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை நாம் அன்னை மொழியாகவே ஏற்றுக் கொண்ட, ஏனென்றால் - எது ஆங்கிலத்தை இது உங்கப்பன் வீட்டு மொழியா? என்று கேட்டார் கவிஞர் காசி ஆனந்தன். ஆனால் அது அப்பனாக இல்லை. நமக்கு அம்மாவாகவே மாறி இருக்கிறது. எனவே நம்முடைய வாழ்வியல் மரபுகளில் எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய தமிழன் இடத்தில் ஆங்கிலம் அமர்ந்து கொண்டிருக்கிறது. 

எனவே இந்த பொங்கல் திருநாளில் நாம் சூளுரைக்க வேண்டியவை - போலி போலியான உறுதிமொழிகள், பாவனைகள் செய்தல் அன்றி உண்மையாகவே நாம்  உழைக்கும் மக்களுக்காக, உழவர்களுக்காக, பாடுபடும் மக்களுக்காக நாம் உறுதி ஏற்போமேயானால், ஜாதி ஒழித்தலும், தமிழ் வளர்த்தலும், உலகமயமாதலை எதிர்த்தலும் என்ற மூன்று கோட்பாடுகளை முன்வைத்து இந்த பொங்கல் திருநாளில் நாம் உறுதி ஏற்போம். உறுதி ஏற்போம்.

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?