அமுக்குப் பேய்

மந்தை வேம்புகளுக்கு மேலாக, கிழக்குத்‌ திசையிலிருந்து ஊருக்குள் இறங்கும்‌ நிலா. உயர்ந்த ஒற்றைத்‌ தென்னை வழியாக வெள்ளித்‌ தகடாய்‌ உருகி வழிகிறது. உயரமான ஒரு நெஞ்சுக்குள்ளிருந்து குளுமை புறப்பட்டு, ஊர்‌ முழுதையும்‌ குளிப்பாட்டி நிற்பது போல்‌ தெரிகிறது.

இருபது, முப்பது வருசங்கள்‌ முன்‌, கிராமம்‌ முன்னிருட்டி விடும்‌, ஏழு மணிக்கு ஒதுங்க வைத்து தூங்கப்‌ போய்‌ விடும்‌.

ஒரு சின்னப்‌ பிள்ளை முழித்தெழுவதைப்‌ போல்‌, வாழ்வு தொடங்கும்‌ காலை; இரவின்‌ மிச்சமான கறுப்பு படிவங்களை உடைத்துவிட்டு, மிதக்கும்‌ வெள்ளை வெயில்‌, கண்மாய்‌ ஓடுகால்‌ காலாங்கரை நெடுகிலும்‌, அந்திக்காற்றில்‌ சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு என்று ஆடுகிற மஞ்சள்‌ ஆவாரம்பூக்கள்‌. குழந்தைகளுக்கு 'சீர்‌ அடிச்சிருச்சி' என்பார்கள்‌. ஆவரம்‌ பூக்களின்‌ மொட்டையும்‌, பேர்‌ சொல்லாததையும்‌ சேர்த்து அரைத்துக்‌ கொடுத்தால்‌, அந்த நோய்க்கு சட்டென்று கேட்கும்‌. “ஆவாரை பூத்திருக்க சாவாரைக்‌ கண்டதுண்டோ” என்பது சொலவம்‌.

ஊர்‌ தலை கீழாக உருண்டிருந்தது.

ராத்திரி 10 மணிக்கு கடைசி பஸ் ஊரில் கால் வைக்கிறபோது வெளிச்சம் மூஞ்சியில் படுவதை, துடைத்துக்கொண்டே பெண்கள்‌ உட்கார்ந்து பேசிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.

11 மணி வரை ஊர் இரண்டாகுகிற மாதிரி, டேப் ரெக்கார்டரில் பெருத்த சத்தம் கேட்கிறது. நாலைந்து பேர் ஆடுமாடுகள் சேகரித்து, கேரளா பக்கம் கொண்டு போய் நல்ல வியாபாரம். இன்னும்‌ சிலருக்கு ஜவுளி வியாபாரம்‌. பம்பாய்‌ வரையிலும்‌ போய்‌, சரக்‌குப்‌ போட்டு வந்து விற்கிறார்கள்‌. வியாபாரம்‌ சக்கைப்‌ போடு போட்டது. பத்து நாள்‌, பதினைந்து நாள்‌, சில பொழுது மாசககணக்கில்‌ ஊர்‌ சுற்றி விட்டு வந்து, வந்ததும்‌ பாட்டு, டி.வி, என்று கதி கலங்க அடிக்கிறார்கள்‌.

''மானுடா ஓடுது

மறியடா நல்ல தம்பி

மானோடும்‌ வீதி எல்லாம்‌

தானோடித்‌ திரிந்தாயோ"

அமிர்தப்பால் ஊட்டி, நெஞ்க்‌ கூட்டுக்குள்ளிருந்து பீறிட்டு, தொட்டில்‌ வழி வழிந்து வரும் தாலாட்டுக்கு என்‌ காதுகள்‌ தவமிருக்கின்றன.

இனியொரு வரம்‌ போல்‌, தாலாட்டு வருமா?

"கருவ மரத்தடியில்‌ - என்‌

வலையைச்‌ சொன்னமின்னா

கருவ இலை உதிரும்‌ - அந்தக்‌

கருங்கிணறு நீர் ஊரும் எந்தன் மாதாவே"

நின்று எரிகிற நெருப்பு போல்‌, மயானக்‌ கரையெங்கும்‌ பரவி நிற்கிற ஒப்பாரியை இனியொரு தடவை கேட்க முடியுமா?

இழவு விழுந்து விட்டால்‌, தூரந்‌ தொலைவிலிருந்து சொந்த பந்தங்கள்‌ வருவதற்காக, அன்று ராத்திரி கதை படிப்பார்கள்‌. சென்னப்பன்‌ தாத்தா ராக ஏற்றம்‌, இறக்கத்தோடு படிப்பார்‌. ஒரு நாடகம்‌ நடத்துற மாதிரியே இருக்கும்‌.

அப்படியான புராண வாசிப்பின்போது, என்னுடைய விதவைப்‌ பாட்டி “இப்படி நீ நல்லா வாசிப்பேன்னு தெரிஞ்சிருந்தா, சென்னப்பா, நா ஒன்னைக்‌ கல்யாணம்‌ பண்ணிக்கட்டிருப்பேன்னு” ஒரு தடவை சொன்னாள்‌.

அதற்கு சென்னப்பன்‌ பதில்‌ "ஒன்னையைக்‌ கட்டிக்கிட்டிருந்தா இந்நேரம்‌ நா செத்துப்போயிருந்திருப்பேனே''. பாட்டி கேட்டதற்கும்‌ சென்னப்பன்‌ சொன்ன பதிலுக்கும்‌ சரியாகி விட்டது.

கல்யாணம்‌ காலையில்‌ முடிந்திருந்தது. முளைவிடப்‌ போகும்‌ புது வாழ்வின்‌ அறிகுறிகளாக, திருமண அலங்காரங்கள்‌ அப்படியே நின்றன.

தங்கையின்‌ திருமண வேலைகளில்‌ களைத்து படுத்திருந்தவனை ஒரு நிழல்‌ எழுப்பியது. அந்த உருவம்‌ கொண்டு ராமு.

'“ஒன்னைய முருகேசன்‌ பையன்‌ மூத்தவன்‌ பாக்கணுமாம்‌"

"யாரு?"

"சுந்தர்"

"என்ன?"

“பாக்கணுமாம்‌. ராத்திரி வீடியோ போடறதுக்கு கோப்புக் கட்றான்னு (ஏற்பாடு செய்வது) பாக்கறேன். முதல்லே ஒந்தம்பி குருசாமியைப் போய்ப் பார்த்திருக்காங்க. அதெல்லாம் தோதுப்படாது. அப்படின்னா கூட, பெரியவர் தான் முடிவு செய்யனும்னு சொல்லிட்டாங்க, அதான்‌ பயக திக்குமுக்காடிட்டு நிக்கிறானுக''

வீடியோ டெக்‌, டிவிக்கு வாடகை நாளைக்கு 300 ரூபாய்‌, பட கேசட் 50 ரூபாய்‌, கார்‌ வாடகை எல்லாம்‌ சேர்த்து, ஒரு 500 ரூபாயைச் சுண்டு என்பதுதான்‌ சுந்தரின்‌ விண்ணப்பம்‌.

அதிலும்‌ ஒரு படம்‌, ரெண்டு படம்‌ போதாது. ராத்திரி முழுக்கப்‌பார்க்க வேண்டும்‌.

இழவு வீட்டில்‌ கூட, சடலத்தை உள்ளே வைத்துக்‌ கொண்டு வெளியே வீடியோ நடக்கிறது. “சாமி படம்‌ ஒன்னு போட்டா, ரஜனி படம்‌ ஒன்னு வாங்கிட்டு வாங்கப்பா" என்று சமரசம்‌ பேசுகிறார்கள்‌. புனிதங்களில்‌ புழு ஊருகிறது.

வாசிப்பு, அறிவைத்‌ தொந்தரவு செய்யும்‌. கேள்வி, சிந்தனையைச்‌ சிலிர்க்க வைக்கும்‌. படம்‌ பார்த்தல்‌, இந்த இரண்டையும்‌ செய்யாது. மூளையத்‌ தொந்தரவு செய்யாது தூங்க வைக்கும்‌. மூளை நிமிண்டாத களிமண்‌ உருண்டைகள்‌ பிசையப்படுகின்றன: அதிலிருந்து அவரவர்ககுத்‌ தேவைப்படுகிற உருவங்களைச்‌ செய்து கொள்ளாலாம்‌. கிராமங்களிலிருந்து சிறு அக்னியும்‌ முளைத்து திமிறிப்‌ பரவி மேலேறி வரக்கூடாது. உள்ளூர்‌ மற்றும்‌ சர்வதேச கலாச்சார வியாபாரிகளின்‌ கையாட்கள்‌ கிராமங்களையும்‌ வளைத்துப்‌ போட்டு விட்டார்கள்‌.

வீடியோ ஓடிக்‌ கொண்டிருக்கிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌