இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்?
தேர்தல் முடிந்துவிட்டது, அனைத்தையும் தீர்மானிக்கிற அரசியலை மக்கள் தீர்மானித்து முடித்து விட்டார்கள். பணம், சாதி, பகட்டு என்ற பொங்குமாங் கடல்கள் பெருக்கெடுக்க, மக்கள் மூழ்கி எடுத்து வந்தது முத்துக்களா, சிப்பியா என்பதை ஜனநாயகம் நிரூபணம் செய்யும்.
மழை பெய்து ஓடை, வாய்க்கால், ஆறுகளில் மண்டியும் ககிழியுமாய் வரும் புதுவெள்ளப் பெருக்கின் அழுக்கைச் சாப்பிட மீன்கள் எதிர்த்தேறிச் சாடிவரும். சாடி கூட்டம் கூட்டமாய் வலையில் அகப்படுவது போல, அழுக்கைச் சாப்பிட்டு அரசியலைத் தூய்மைப்படுத்தி விட்டார்களா மக்கள்? காலம் சொல்லும்.
நடத்து முடிந்த தேர்தலில் சாதி அணிவகுப்பு விசுவரூபம் எடுத்திருந்தது. ஒரு தொகுதியில் எந்தச் சாதி அதிகம் இருக்கிறதோ, அந்த சாதி வேட்பாளரை நிறுத்துவது என்பதுடன் கூடுதலாக, சாதிக் கட்சிகள் என்ற வெளிப்படையான அடையாளங்களுடன் அரசியல் கட்சிகள் ஒளிவு மறைவின்றி வாக்கு வேட்டை நடத்தின. தேர்தலில் அந்தந்தச் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் கூட்டாக வாக்களித்துள்ளனர்.
சமூகம் என்ற வார்த்தை சாதியைக் குறிப்பதாகக் குறுகிவிட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போல், சமூகம் என்றால் குறிப்பிட்ட சாதிக்குழுவைச் சேர்ந்தவர் என்று பொருள் ஆகிவிட்டது. மக்கள், வர்க்கம், உறவுகள், வாழ்வு, பண்பாடு என்ற பன்முக அர்த்தங்கள் இருந்தன முன்பு. இப்போது அந்தச் சொல்லின் உள்முகம் ஒடுங்கிவிட்டது.
சமூகம் என்று அர்த்தப்படுத்துகிற சாதிகளுக்குள்ளேதான் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். கல்வியாளர்கள் இருக்கிறார்கள். கவிஞர்கள் இருக்கிறார்கள். மக்கள் பிரிவுகள் அனைத்தும் இந்த வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் இவர்கள் அனைவரும் சிந்தனையாளர் வகையினர். இவர்களுக்குள் கருக்கொண்டிருக்கும் ஆற்றல் வல்லமை, ஆளுமை வெளித்தெறிந்ததும், அறிவுச் சொந்தம் கொண்டாடி, சாதிகளுக்குள் அடையாளப்படுத்துகிறார்கள்.
இப்போது இந்த அணிவகுப்பில் புதிதாக வந்திருப்பவர்கள் இலக்கியவாதிகள். விவசாயி, தொழிலாளி, வியாபாரி, அலுவலர், வழக்குரைஞர், விழையாட்டு வீரர், நீதிபதி என்று ஒவ்வொருவரும் சமுதாயத்தில் ஒவ்வொருவகைப் பாத்திரம் ஆற்றுகிறார்கள், அவர்கள் என்னவாக இருந்தாலும் இலக்கியம் அவர்களை மனிதனாக உணரச் செய்கிறது.
யார் இலக்கியத்தை தொடுகிறார்களோ, அவர்களை இலக்கியம் தொட்டுப், பிசைந்து, மனித குணங்களுள்ள ஒருவராக பக்குவப்படுத்துகிறது. இலக்கியத்தின் உச்ச பட்ச நோக்கம் மனிதனை மனிதானாக உணரச் செய்வது.
இலக்கியவாதி சமுதாயத்தில் தான் வகிக்கின்ற பாத்திரத்தை தீர்மானித்ததும் கருத்துப் பரப்பாளன் என்ற சார்புநிலை உருவாகி விடுகிறது. கருத்து அறிவிப்பாளனாக, சிந்தனைப் பரப்பாளனாக செயல்படுகிறான். தனது கருத்துகளை கதை, கவிதை, கட்டுரை, நாவல், பேச்சு என்ற பல வடிவங்கள் வழியாக இன்னொருவருக்கு எடுத்துச் சொல்கிறபோது அங்கு இன்னொருவர் என்ற இடத்தில் சமுதாயத் தொடர்பு வந்துவிடுகிறது. சமுதாயத் தொடர்பில் இலக்கியவாதி அறிவிப்புச் செய்கிற கருத்துக்கள், அவைகளின் செயல்பாடுகள் மிக முக்கியமானவை. இங்கே இலக்கியவாதியின் பாத்திரத்தை அவன் கருத்துகள் எடுத்துக் கொண்டு வினையாறுகின்றன. எனவே சமூதாயம் பற்றிய கூடுதல் அக்கறை கொண்டவர் என்ற பின்புலத்துடன் முன்னேவரக் கடமைப்பட்டவன் இலக்கியவாதி.
அவ்வகையில்தான் அவன் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் அதல பாதாள வேறுபாடுகள் இல்லாதவனாக எதிர்பார்க்கப்படுகிறான். சாதாரண மனிதர்கள் போல் அல்ல. கருத்து அறிவிப்பாளன் என்ற பாத்திரம் அவனுடையது. என்னவாக சிந்திக்கிறானோ அதற்கு முரணற்றவானக, சமுதாயத்தின் பல்வேறு துறைகள் பற்றி அவன் அக்கறைகளுக்கு அவனே மாறுபாடு அற்றவனாக குறைந்தபட்சம் தன்னுடைய எழுத்துக்கு தானே நியாயம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறான்.
சாகித்ய அகாதெமி விருது, ஞானபீட விருது, கதாவிருது எனப் பல இலக்கிய விருதுகளை வழங்குகிற தெள்ளத் தெளிவான அமைப்புகள் சில உள்ளன. அவை தவிர தமிழ்ச் சூழலில் சில அமைப்புகள், தனியொருவர் பெயரிலோ அல்லது அறக்கட்டளைகளாகவோ விருதுகள் வழங்கி எழுத்தாளர்களைக் கெளரவித்து வருகின்றன.
இந்த இலக்கிய விருதுகள் எந்த அடையாளங்களிலிருந்து வழங்கப்படுகின்றன? உன்னதமான இலக்கிய படைப்புகள், உயர்ந்த மேதமை என்ற அடையாளத்திலிருந்தா? அப்படி இருந்தால் நமக்கு முற்றிலும் உடன் பாடே. கெளரவிக்கப்படுகிற இலக்கியங்கள் மீது நமக்கு மரியாதை உண்டு. கெளரவிக்கப்படுகிற இலக்கியவாதிகள் மீதும். ஆனால் வேறு எந்தக் கீழான அடையாளத்தின் காரணமாக மரியாதைக் குரியவர்களாக ஆக்கப்படுகிறார்கள்?
பரிசுகள் வழங்கும் அமைப்புகளின் குணங்களை, குறிக்கோள்களை வகிந்து, உள் கிடைக்கும் ரணப்பித்தை எடுத்து முகர்ந்து பார்த்தால் ஒரு கெட்ட வாசனை வீசும் - அது சாதிய வாசம். பரிசுகளைக் கொண்டு போய்ச் சேர்க்கிறவர்கள் மட்டுமல்ல - பரிசுகள் போய்ச் சேருசிற இட ம் பற்றியும் கேள்விகள் எழும்புகின்றன.
தமிழ் இலக்கியச் சூழல், விருதுகள் என்ற சாதிய நஞ்சு பாய்ந்து நீலம் பாரித்துப் போய்க் கொண்டிருக்கிறது. வெளிப்படையாக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட இந்தப் பரிசுகள் மட்டுமல்ல, ஆங்காங்கே இயங்குகிற சாதியக் குழுக்களால் வழங்கப்படுகிற பரவலாக வெளித் தெரியமால் இயங்குகிற அமைப்புகளும் இந்த மினுமினுப்பான திருப்பணியைச் செய்து கொண்டிருக்கின்றன.
பரிச பெறுகிற இலக்கியவாதிகள், சாதிய உணர்வோடு அந்த மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்களா என்ற கேள்விக்கு, இவரிவர் இப்படி இல்லை என்ற பதில்களை நாம் அடுக்க முடியாது. கேள்விகளுக்கு அவர்களே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். சாதிய அடையாளமா, இல்லையா என்பதை அவரவர் நெஞ்சு அறியும்.
அமைப்புகளின் நோக்கம் அறிந்து, அந்த கெளரவத்துக்கு நான் உகந்தவனில்லை என்று மறுதலிப்பதுதான் பொறுப்புள்ள பதில். மனித உள் மனசுகளை அகழ்ந்து ஆராய்ந்து அக்கக்காகப் பிய்த்து, பிரித்து எடுத்து வித்தைகள் நிகழ்த்துகிற ஒரு இலக்கியவாதி, ஓர் அமைப்பின் உள்நிறம் என்ன என்பதைக் கண்டறிய முடியாதவனாக இருக்கிறான் என்பது உலக அதிசயங்களுள் ஒன்றைக் கூட்டிக் கொள்வதாக இருக்கும்.
உண்மையில் இத்தகைய அமைப்புகள் தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படுகின்றன. பழைய சமூக அமைப்பு முறைக்குள் கலைஞர்கள், இலக்கியவாதிகள், சிந்தனையாளர்களை உள்திணித்துக் கொள்வதும், புதிய சமூக உருவாக்கத்திற்கான செயல்பாடுகளிலிருந்து இவர்களை அப்புறப்படுத்துவதும் இந்த அமைப்புகளின் நோக்கமும் நிறைவேற்றமும் என ஒன்றாய் ஒரு புள்ளியில் குவிகின்றன.
சமுதாயத்தின் கருத்து அறிவிப்பாளர்களாக பணியாற்றுகிற எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் விஞ்ஞானபூர்வமாக சமுதாயத்தை, அதன் இயக்கத்தை ஆய்வு செய்வதும் சமூக மனிதன் என்ற முறையில் அதற்கு நேரெதிரான நடவடிக்கை, செயற்போக்கு கொள்வதும் இழிவான முரண்கள். எவ்வளவு வேண்டுமானலும் ஆய்வு செய்யலாம்: உபதேசம் செய்யலாம்: வாழ்க்கைக்கு வருகிறபோது வழுக்கி விழலாம் என்ற ஆபத்தான கொள்கை கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து ஆயிரம் கோரப் பற்களும் நகங்களும் கொண்டு இளைய தலைமுறையையும் உள்செறித்து விழுங்கத் தயாராகி வருகிறது.
இன்றைய சூழலில் எழுத்தாளனுடைய தளம் விரிந்த எல்லைகளுடையது. இன்னொரு பொருளில் எல்லைகளற்றது. எழுத்து, இலக்கியம் என்ற வட்டத்துக்குள் மட்டும் இயங்குபவனாக எழுத்தாளன் இருக்க முடியாது. எழுத்தை சமூகப் பொறுப்புடன் கையாளுகிறவனாக இருக்கிறபோதே, எழுத்து அல்லாத பிற சமூகப் பிரச்சனைகளுக்கும் இட்டுச் செல்லப்படுகிறான். அவனைச் சூழ நிகழ்கிற அனைத்திலும் கருத்துச் செயல்பாடுள்ளவனாக வட்டம் விரிவடைகிறது. விரிவடைகிற இயல்புகளுக்கு எதிராகத் தன் வட்டத்தைச் சுருக்கிக் கொள்ளுதல், தன் படைப்பாற்றலைத் தனக்குத்தானே பங்கப்படுத்திக் கொள்ளுதல் ஆகும். தன் சுய படைப்பாற்றலுக்கு எதிரான முதல் கோடாரியை அவனே வீசுகிறான்.
இளைய தலைமுறை களங்கமற்ற நெஞ்சப் பரப்பும் செயலாற்றத் துடிக்கும் நெஞ்சத் துணிவும் கொண்டது. எந்த அழுக்கும் தனக்குள் அண்டாதவாறு காப்பது மட்டுமல்ல, சமுதாயத்ததில் மண்டிக் கிடக்கும் அழுக்கை வெளியேற்றுகிற போராளிகளாகவும் வெளிப்படுகிறார்கள். எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள இடைவெளியை மிக எளிதாகவே அவர்கள் அடையாளம் காணுவார்கள். ஒருவருடைய நிழலும் அவருடையதாக இல்லை என்பதைக் காணுகிற போது அதிர்ச்சியடைவார்கள். இலக்கியப் படைப்பாளிகளின் கருத்துக்களால் உலுக்கப்பட்டு அவர்களது நடைமுறைகளால் அதிர்ச்சியடைகிற இளைய தலைமுறையினர் அரசியல்வாதிகள் போலவே இலக்கிவாதிகளும் ஆகிவிட்ட அவலத்தைப் பேசுவார்கள்.
இலக்கியப் பறவைகளின் சிறகுகள் சாதிய எண்ணெய்ப் பிசுபிசுப்பில் சிக்கி, சுதந்திரமாகப் பறத்தல் தடைப்பட்டுப் போனதை அக்கறையுடன் சுட்டிக் காட்டுவார்கள்.
ஒரு கவிஞனை முன்னிறுத்திச் சொன்ன வெ.சாமிநாத சர்மாவின் இந்த வரிகள் நமது ஞாபகத்திற்கு வரட்டும்.
"கவிஞனே, தொட்டாற்சிணுங்கி செடியைப் போன்றதன்றோ உனது அறிவு. உனது இதயமும் தொட்டாற் சிணுங்கிதான்: பிறர் துயர்கண்டு நீ எவ்வளவு துடிக்கிறாய்! அநீதியைக் கண்டு எப்படிப் பொருமுகிறாய்! தீநெறி என்று தெரிந்தும் எப்படி துணுக்குற்று அதனின்றும் ஒதுங்கிக் கொண்டு விடுகிறாய்?"
- பா.செயப்பிரகாசம், அக்டோபர் 1999
கருத்துகள்
கருத்துரையிடுக