காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

சிலரின்‌ அறிவுத்துறைச்‌ சாதனைகளைக்‌ காட்டிலும்‌, மனிதச்‌ சாதனைகள்‌ சமுதாயக்‌ கணக்கில்‌ பெரிதாக வரவு வைக்கப்படும்‌.

கன்னட எழுத்தாளர்‌ சிவராம கரந்த 'யட்ச கானா' என்ற நாட்டார்‌ கலையை அதன்‌ வேரோடும்‌ வேர்‌ மணத்தோடும்‌ மீட்டுருவாக்கம்‌ செய்தார்‌. 'யட்ச கானா' கூத்துக்‌ கலையை தேடிய பயணத்தில்‌, அவர்‌ மக்களைக்‌ கண்டடைந்தார்‌. எதிர்பாராத பாறை வெடிப்பிலிருந்து, கைகளால்‌ அடைக்க முடியாத வேகத்தில்‌ ஊற்று பீறியடித்தது. அந்த மனித நேய ஊற்றில்‌ நனைந்த உணர்வுகளால்‌, கருத்துக்களால்‌ இலக்கிய நதியின்‌ கரைகளுக்கு அப்பாலுள்ளதாக கருதப்பட்ட சுற்றுச்‌ சூழல்‌ பாதுகபாப்பாளராக ஆனார்‌ பின்னாளில்‌.

அருந்ததிராய்‌: புக்கர்‌ பரிசு, அவர்‌ இலக்கியத்திற்கு ஒரு தகுதியை மட்டும்‌ தந்தது. நர்மதை அணைக்கட்டின்‌ நிர்மானிப்பை எதிர்த்த மக்கள்‌ போராட்டம்‌, அவருக்கு எல்லாத்‌ தகுதிகளையும்‌ தந்தது.

வங்க நாவலாசிரியர்‌ மகாசுவேதா தேவியின்‌ 1984ன்‌ அம்மா நாவல்‌ “கல்கத்தாவின்‌ ஒரு முனையிலிருந்து மறுமனைக்கு இருபது வயது இளைஞன்‌ செல்ல முடியாது. சென்று விட்டு உயிரோடு திரும்ப முடியாது: மேற்கு வங்கத்தில்‌ பதினான்கு வயதிலிருந்து இருபத்து நான்கு வயது வரையுள்ள ஒரு தலைமுறை காணாமலே போய்‌ விட்டது“ - நக்சல்பாரி எழுச்சியை ஒடுக்குவது என்ற பெயரில்‌ நரவேட்டை நடந்த போது, அந்தக்‌ கொடூரங்களுக்கு எதிராய்‌ எப்போதும்‌ விழித்துக்‌ கொண்டிருக்கும்‌ ஒரு நெற்றிக்‌ கண்ணை நட்டு வைத்தார்‌. அதுதான்‌ 1984ன்‌ அம்மா நாவல்‌. தம்‌ குரலை உயர்த்தி முண்டா இன மலைவாழ்‌, பழங்குடி மக்களுக்காக நாட்டின்‌ உரிமைகளை அடைந்து தீர, போராடினார்‌.

இவரும்‌, இவர்‌ போன்றவர்களுக்கும்‌ எந்தத்‌ துறையில்‌ பதியமிட்டு தங்கள்‌ ஆளுமைகளில்‌ தடம்‌ பதித்தார்களோ - அதையும்‌ தாண்டி சமூக சாதனைகள்‌ படைத்திருக்கிறார்கள்‌.

பேரறிஞன்‌, பெருங்கலைஞன்‌, நாக்குச்‌ சுழட்டலில்‌ நானிலத்தை வசமாக்கும்‌ நாவலன்‌, தூரிகைச்‌ சிற்பி, கால்மேலாகவும்‌ தலைகீழாகவும்‌ மூழ்கி முத்தெடுத்து வரும்‌ பேனாவின்‌ நாயகன்‌, படைப்புப்‌ பிரம்மா - என்னென்ன பெயர்களில்‌ உலா வந்தாலும்‌, முதலில்‌ மனிதர்கள்‌. முதலில்‌ மனிதன்‌ என்ற பெயருக்கு மட்டுமே சொந்தமாகி, பிறகு மற்ற மற்ற பாங்குகளை முகிழ்கச்‌ செய்யலாம்‌.

தி.க.சி என்ற இலக்கியவாதி ஆற்றிய சாதனைகளை விட, தி.க.சி என்ற மானுடரால்‌ நாம்‌ ஈர்க்கப்பட்டோம். நான்‌ மட்டுமல்ல பொன்னீலன்‌, பூமணி, ஜெயந்தன், இன்குலாப், பிரபஞ்சன்‌, கந்தர்வன்‌, இளவேனில்‌, நா.காமராசன், கை.திருநாவுக்கரசு, தமிழ்நாடன், வண்ணநிலவன்‌, மேலாண்மை பொன்னுச்சாமி, வீர வேலுசாமி, தனுஷ்கோடி ராமசாமி, கதைப்பித்தன்‌ என்று இரண்டு தலைமுறைப்‌ படைப்பாளிகளுக்கு அந்தச்‌ சுனையில்‌ குளித்து மேலேறிய இனிமை ஞாபகம்‌ இருக்கும்‌.

தொடக்கத்தில்‌ துளிர்‌ விடும்‌ ஒரு எழுத்தாளன்‌ அதிர்ச்சிகுள்ளாக்கிய படைப்புகளால்‌ ஆஷிக்கப்படுவதைக்‌ காட்டிலும்‌, ஆதரவாய்த் தூக்கிவிடும்‌ கைகளையே தேடுவான்‌: தி.க.சி என்ற இலக்கியவாதி ஒரு மனிதராய்‌ நிலைப்‌புண்டிருந்த காரணத்தால்‌ ஆதரவான கரங்கள்‌ அவருடையனவாய்  இருந்தன.

ஒரு கலைஞனாக அறிமுகமாகி, ஒரு கலைஞனாக அதிர்ச்சிக்குள்ளாக்கி மனிதனாக எந்தப்‌ பாதிப்பையும்‌ ஏற்படுத்தாத, எந்தப்‌ பாதிப்புக்கும்‌ உள்ளாக்காமல்‌ போனவர்கள்‌ உண்டு. கலைஞனாக இருப்பதற்காக, மனித இருப்பையே புறக்‌கணித்தவர்கள்‌ அவர்கள்‌.

கலைஞனாக, படைப்பாளியாக உச்சத்தில்‌ ஏறி, அதே நேரத்தில்‌ மனுசத்தனத்தை, உதறிவிட்டுக்‌ கொண்டே போன பலரது வரலாறு நாமறிவோம்‌. அவர்கள்‌ கடைசியில்‌ இலக்கிய விருட்சத்தின்‌ உச்சாணிக்‌ கொப்பில்‌ நின்றபோது மனுசத்தனத்தின்‌ எல்லா ஆடைகளையும்‌ உதிர்த்து நின்றார்கள்‌.

அடிப்படையில்‌ மனுசத்தனம்‌ வற்றிப்‌ போகாத மனிதர்‌. எத்தனை வாளிகள்‌ போட்டாலும்‌ எடுத்தாலும்‌, ஊற்றுக்கண்‌ வற்றிப்‌ போகாது.

அதே நேரத்தில்‌ மார்க்சியத்தின்‌ பிடிமானத்தை எப்போதும்‌ விட்டு விடாத 'கறார்‌' விமர்சகராகவே அவரைக்‌ காணமுடியும்‌. கொள்கையை விட்டுக்‌ கொடுக்காத கறார்‌த் தன்மை, முரட்டுப்‌ பிடிவாதமாக மற்றவர்க்குத்‌ தெரியலாம்‌. கருத்தியலில் எதிர் நிலைப்பாட்டில் இருந்தவர்களை கூட, அவர்களுடைய பணிகளை இலக்கியம் என்ற ஒரு தளத்தில் நின்று அங்கீகரித்தார்‌. கறாராய்‌ விமர்சனப் பார்வையும் வைத்தார். 'மனக்குகை ஓவியங்கள்' கட்டுரைத் தொகுப்பு, இதற்கு நிரந்தரச்‌ சாட்சி.

"பத்திரிகை உலகம் ஒரு பெரிய தொழிற்சாலையாக உருமாற்றம்‌ கொண்டுவிட்டது. இங்கு உண்மையான படைப்பாற்றலுக்கும்‌, புதுமைக்கும்‌, நேர்மைக்கும்‌, நீதிக்‌கும்‌ மனித உரிமைகளுக்கும்‌ சுதந்திரங்‌களுக்கும்‌ இடமில்லை. இங்கே எழுத்தாளனது படைப்புகள்‌ மட்டுமின்றி, எழுத்தாளனே ஒரு விற்பனைப்‌ பண்டமாகச் கருதப்படுகிறான்‌: எழுத்துக்‌ கூலியாக கருதப்படுகிறான்‌" என்பார் தி.க.சி.

இதற்கு நடைமுறை சாட்சியாய்‌ ஊடகங்கள்‌ பலவும்‌ உலவிக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர் பலரும்‌ அலைந்து கொண்டிருக்கிறார்கள்‌. அறிவுக்‌ கம்பீரத்தை நிலை நிற்க வைப்பது என்பது சன்னம்‌ சன்னமாய்‌ குறைந்து, அது தேவையற்ற ஒன்று ஆகிவிட்டது. இந்த உளவியல்‌ போக்குக்கும்‌, காரிய சாதிப்பு ஒன்றே முக்கியம்‌, மனித நேயம்‌, கொள்கை வரையறை எதுவும்‌ காலடித்‌ தூசு என முன்வைக்கும்‌ உலக முதாலளித்துவச் செயல்பாட்டுக்கும்‌, சங்கிலிப்‌ பிணைப்பு இருப்பதைக்‌ காணமுடியும்‌.

பாரதியைப்‌ பற்றி எழுதுகிறபோது, தி.க.சியால்‌ நாட்டு நடப்புகளைச்‌ சுட்டாமல்‌ இருக்க முடியாது. நடப்புக்‌ காட்சிகளை கணக்குக்கு கொண்டுவராமல்‌ அவரால்‌ எழுத முடிவதில்லை.

“தனக்கு ஆதாயம்‌ வேண்டியிருக்கும்‌ நேரத்தில்‌, அருண்ஷோரி (பத்திரிகையாளர்‌; மேல்‌ வர்க்கச்‌ சிந்தனையாளர்‌) என்ற ரேஸ்‌ குதிரையை எக்ஸ்‌பிரஸ்‌ என்ற வண்டியில்‌ பூட்டி ஓட்டியவர்தான்‌ ராம்நாத்‌ கோயங்கா. இன்று அரசியலில்‌ அவரது நிலை வேறு. ஆகவே 'குதிரை' துரத்தப்படுகிறது. இதுதான்‌ இன்று பெரிய பத்திரிகைளில்‌ உள்ள நிலைமை. இந்தப்‌ போக்கைப்‌ பாரதி ஏற்றுக்‌ கொள்வானா என்று சிந்தித்துப்‌ பாருங்கள்‌.

'வேண்டுமடி அம்மா

விடுதலை எப்போதும்‌' 

என்று பாடியவன்‌ அவன்‌.

அவருடைய எழுத்துக்கள்‌ மனித விடுதலையை அடிப்படையாகக்‌ கொண்டவை. மனிதனைச்‌ சூழ்ந்து சகல தளைகளும்‌ கொண்டு பினணப்பவைக்கு எதிரானவை. உண்மையில்‌ அவரது எழுத்துக்குள்‌ இம்மாதிரி அநீதிகளுக்கு எதிரான உள்ளக்‌ கொதிப்பின்‌ வெளிப்பாடுகள்‌."

மார்க்சியம்‌ ஒரு மனித விடுதலைக்‌ கோட்பாடு. சமூக நடப்பை, உலக நிலையைக்‌ கணித்து, வளர்ச்சி நோக்கி உந்தும்‌ ஒரு விஞ்ஞானம்‌. தி.க.சி விஞ்ஞானத்திற்கு எதிராய்‌ ஒருபோதும்‌ நின்றதில்லை.

புறநிலைகளின்‌ யதார்த்தத்திலிருந்து எந்த ஒரு கருத்தின்‌, விசயத்தின்‌ உள்முகப்‌ பண்‌பையும்‌ அவர்‌ துலக்கப்படுத்தினார்‌. அதே நேரத்தில்‌ திட்டவட்டமான தீர்மானமான முன்‌ முடிவுகள்‌ உண்டு. ஒரு தெளிவான எல்லையைக்‌ கோடிட்டுக்‌ கொண்டு அதை நோக்கி நகர்த்தியவை அவருடைய விமரிசனங்கள்‌.

விமரிசினங்கள்‌, நிதர்சனங்களால்‌ நடத்தப்பட்டன. ஆழமான ஆய்வுமுறைக்குள்‌ போகவில்லை. நடப்பு யதார்த்தங்கள்‌ கருத்துக்‌ கணிப்புக்களாய்‌ வெளிப்பட்டன

ஆண்டுகளின்‌ நகர்வில்‌ அவர்‌ தனது எல்லைகளை விரிவுபடுத்தினார்‌. உலக முழுதும்‌ மார்க்சியத்திற்கு, மார்க்சிய அணுகுமுறைக்கு நிகழ்ந்த வளர்ச்சியை அவர்‌ கவனித்தார்‌. சமூக அரங்கிற்கு வந்துவிட்ட புதிய புதிய யதார்த்தங்கள்‌ வெளிப்பார்வைக்கு, நமக்கு எல்லாமும்‌ ஒன்றாகத்‌ தெரியும்‌. காலமெல்லாம்‌ பழக்கப்பட்டவராதலால்‌, தேர்ந்த வாத்துக்காரன்‌ தன்னுடைய  வாத்துக்களைப்‌ பிரித்து ஒதுக்கி விடுவது போல்‌, ஒரு துண்டம்‌ ஆடுகளில்‌ (ஒரு துண்டம்‌ - அறுபது எண்ணிக்கை) தன்னுடையது எது என்று அக்கக்காய் பிரித்து விடுவது போல், அவர் சமுக விஞ்ஞான வெளிச்சத்தில்‌ நிகழ்வுகளை பிரித்தறிந்தார்.

இலக்கியத்தை விட, இலக்கியம்‌ எங்கிருந்து பிறப்பெடுக்கிறதோ, யாரைப் பற்றிப் பேசுகிறதோ, அந்த மனிதன் முக்கியமானவன் என்ற கோட்பாட்டை முன்னிறுத்திய போது, முன்பு போல் அல்லாமல், மார்க்சியம் தமிழியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம் என்று அவருடைய எல்லைகள் விரிவுற்றன.

மாறுதல்கள்‌, வளர்ச்சியை நோக்கி இருக்க வேண்டும்‌. வளர்ச்சிதான், இயங்குதல்‌ அல்லது இயக்கம்‌ என்பதற்குப்‌ பொருள்‌. கலை இலக்கிய கோட்‌பாட்டில்‌ அவரிடம்‌ புது வகையான இந்த மாறுதல்‌ வளர்ச்சியை நோக்கியவை.

விருதுக்கான நூல்‌ என்பது ஒரு அடையாளமே. மார்க்சியப்‌ பாதையிலான இலக்கியம்‌ மேதமைக்கான அடையாளம்‌.

விருதுக்கான நூல்‌ என்பதும்‌ ஒரு குறியீடே. அந்த நூலை மட்டும்‌ முன்னிருத்திப்‌ பார்த்தால்‌, பாரதிதாசனின்‌ பிசிராந்தையார்‌ நாடகத்திற்கு வழங்கப்பட்டதிலிருந்து பல சறுக்கல்கள்‌ சாகித்ய அகாதமியின்‌ விருதுகளுக்கு நேர்ந்துள்ளன.

“எனது 58 ஆண்டுக்காலப்‌ படைப்புக்கள்‌, உழைப்பு, கலை இலக்கியத்‌ துறையில்‌ நான்‌ ஆற்றிவரும்‌ பணிகளுக்காக கிடைத்த ஒட்டு மொத்த அங்கீகாரமாக இந்த விருதைக்‌ கருதுவதாக" அவரே குறிப்பிடுகிறார்‌.

படைப்புகளுக்கான மரியாதையா?

உழைப்புக்கான கெளரமா?

இலக்கியப்‌ பணிகளுக்கான பாத்தியதையா?

இவை எல்லாவற்றையும்‌ தாண்டி இந்கச்‌ சிறப்பு ஒரு புள்ளியில் மையம் கொண்டுள்ளதாக நான்‌ கருதுகிறேன்‌.

அவை காரணமாய்‌, இலக்கியத்திற்கு உள்வட்டத்திலும்‌ வெளிவட்டத்திலும்‌ அவர் தேடிச்‌ சேகரித்து வைத்த - 

மனிதாயத்திற்கு, மானுடத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்.

கருத்தியல் நிலையில், கோட்பாட்டுக் களத்தில் எதிர்த்திசையில் இருப்பவர்களால் இந்த அங்கீகாரம் பரிந்துரைகபபட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படுவதில்லை. ஏனெனில் கருத்துக்கள் கொள்கைகள், அடிப்படையிலேயே ஒவ்வொருவரும் நடைமுறைகளை அமைத்துக் கொள்வார்கள்.

- பா.செயப்பிரகாசம்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ