மலேயா கணபதி

முதுபெரும்‌ பொதுவுடமைக்‌ கட்சித்‌ தோழர்‌ கே.டி.கே.தங்கமணி மலேசியாவில்‌ பல்வேறு பிரச்சாரக்‌ கூட்டங்களை முடித்துக்‌ கொண்டு, இந்தியாவுக்குக்‌ கப்பல்‌ ஏறுகிறார்‌. கப்பல்‌ ஏறுகிற நேரத்தில்‌ அவர்‌ முன்னே ஆயுதம்‌ தாங்கிய தோழர்கள்‌ செவ்வணக்கம்‌ செலுத்தி விடை தருகின்றனர்‌. செவ்வணக்கத்தை ஏற்றுக்‌ கெண்டு “நீங்கள்‌ யார்‌” எனக்‌ கேட்கிறார்‌ கே.டி.கே. அதற்கு அவர்கள்‌ பதில்‌ “தங்கள்‌ பாதுகாப்புப்‌ பணிக்காக, மலேயா கம்யூனிஸ்டு கட்சி நியமித்த கொரில்லாக்கள்‌".

ஒரு தோழரின்‌ உயிர்‌, உடல்‌ அகில உலகத்துக்கு மட்டுமல்ல, நான்கு கோடித்‌ தமிழர்களுக்கும்‌ பத்திரமாக திருப்பி ஒப்படைக்கிற, இந்த பாதுகாப்புக்‌ கவசத்தின்‌ சூத்ரதாரி கணபதி.

தீண்டாமை என்பது ஓட்டுவார்‌ ஒட்டி நோய்‌. காசம்‌ (சயரோகம்‌), சொறி, சிரங்கு, படை போன்ற நோய்களுக்கு இந்தக்‌ குணம்‌ உண்டு. தமிழ்‌நாட்டிலிருந்து மலேயா, சிங்கப்புர்‌, ரங்கூன்‌ சென்ற தமிழர்கள்‌, தங்களுடன்‌ இந்த தீண்டாமை நோயையும்‌ இடுக்கி கொண்டு சென்றார்கள்‌. தமிழகத்‌ தேநீர்க்‌ கடைகளில்‌ தனித்‌ தம்ளர்கள்‌ என்றால்‌ மலேயாவில்‌ தனித்‌ தகர டப்பாக்கள்‌. தாழ்த்தப்பட்ட மக்களின்‌ கண்ணீரின்‌ உப்பு, கடல்‌ கடந்த பின்னும்‌ அந்த தகர டப்பாக்களில்‌ கரைந்தது. தாழ்த்தப்பட்ட மக்களை தன்னுடன்‌ தேநீர்க்கடை அழைத்துச்‌ சென்று மற்றவர்க்குச்‌ சரி சமமாக பெஞ்சுகளில்‌ உட்கார வைத்து, தேநீர்‌ அருந்த செய்து, தானும்‌ அருந்துவார்‌ கணபதி.

1936 - 38 ல்‌ மலேயாவில்‌ தீண்டாமை எதிர்ப்புக்‌ கனலை உச்ச நிலைக்கு எடுத்துச்‌ சென்றார்‌ கணபதி. தீண்டாமைப் பிரச்சனையை எப்போதும்‌ பிற இன சமுதாய மக்களின்‌ முற்போக்கு சக்திகளை இணைத்துக்‌ கொண்டே முற்றிலும்‌ ஒழிக்கும்‌ போரட்டத்தினை வெற்றி பெறச்‌ செய்ய இயலும்‌ என்பதை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டினார்.

அக்காலத்தில்‌ மலேயத்‌ தமிழர்களை 'ஒராங்கிள்ளேங்‌' என மிக இழிவாக அழைத்தார்கள்‌. மலேய மொழியில்‌ அந்த ஒரு சொல்லுக்கு திருடன்‌, கொலைகாரன், தாழ்ந்தவர்‌ என்று பல அர்த்தங்கள்‌. புதுப்புது அர்த்தங்களை உருவாக்கி, தமிழர்களை குற்றப்‌ பரம்பரை போல்‌ கருதிய எண்ண ஓட்டத்தை எதிர்த்து உலகிற்குத்‌ தொன்மையான நாகரிக நீரோட்டத்தை தந்தவர்கள்‌ தமிழர்கள்‌ என்ற கருத்தாக்கத்தை பதிய வைத்தார்‌ கணபதி.

மலேயா முழுவதும்‌ எதிப்புச்‌ சுவரொட்டிகள்‌ ஒட்டப்பட்டு சில இடங்களில்‌ சட்டத்தின்‌ துணையோடு எதிர்த்து இடையறாத போரட்டத்தை நடத்தி அந்தப்‌ பழிச்‌ சாயத்தை துடைத்து மலேயா சரிதத்தின்‌ பக்கங்களை வெண்மைப்படுத்தினார்‌ கணபதி.

ஒவ்வொரு போராளியும்‌, ஒவ்வொரு இலட்சியத்தை தலையில்‌ தூக்கிச் சுமந்து, அதை  நிவைற்றத்‌ தேவைப்படும்‌ மற்ற இலட்சியங்களை சுமையாகக் கருதி தரையில்‌ இறக்கி விடுவார்கள். அவரவர் எல்லைக் கோடுகளில் அவரவர்க்குச்‌ சுகம்‌. கத்தரிக்கப்ட்ட சிறகுகள்‌ அந்த எல்லைக்‌ கோடுகள்‌ வரை மட்டும்‌ செல்லும்‌.

கணபதி ஒரு மார்க்சியப்‌ போராளி. எல்லாத்‌ திசைகளையும்‌ உள்ளடக்கி எல்லாப்‌ பிரச்சனைகளையும்‌ உள்செறித்து, நடைமுறைகளின்‌ ஆயிரம்‌ கைகளை விரிக்கச்‌ சொல்கிறது மார்க்சியம்‌. மலேயா பல இன மக்களின்‌ கூட்டுத்‌ தீபகற்பம்‌, அங்கு தேசிய இனங்களை இணைத்துப்‌ போராடுவது, வரலாற்றின்‌ கட்டாயம்‌. போரட்டங்களை இணைத்தார்கள்‌. இணைத்தவர்கள்‌ பின்னாளில், கம்யூனிஸ்டாக மாறினார்கள்‌.

மலேயா கம்யூனிஸ்களின்‌ போராட்டம்‌, காங்கிரசின்‌ தேசியப்‌ போராட்டம்‌, தமிழ்‌ மொழிப்‌ போராட்டம்‌, தீண்டாமை ஒழிப்பு போர்‌, மலேயா விடுதலைப்‌ போர்‌, ஏகாதிபத்திய எதிர்ப்புப்‌ போர்‌, வர்க்கப்‌ போரட்டம்‌ என்ற அனைத்திலும்‌ தலைமை ஏற்றிருந்தார்‌ கணபதி. பன்முகங்களிலும்‌ கருக்‌ கொண்டு அவர்‌ போர்க்‌ குணம்‌ உயிர்த்தது. அவர்‌ தலைமையேற்றும்‌ உறுதுணையாய்‌ இருந்தும்‌ பங்களித்த அமைப்புகள்‌ ஏராளம்‌.

  1. தமிழர்‌ சீர்திருத்தச்‌ சங்கம்‌
  2. விளையாட்டரங்கம்‌
  3. இந்திய இளைஞர்‌ கழகம்‌
  4. பகத்சிங்‌ உடற்பயிற்சி மன்றம்‌
  5. இந்துஸ்தான்‌ சோசலிசப்‌ படை
  6. பல்வேறு தொழிற்சங்கங்கள்‌
  7. மகளிர்‌ உரிமை அமைப்பு
  8. தீண்டாமை ஒழிப்பு இயக்கம்‌
  9. மக்கள்‌ சனநாயகக்‌ கழகம்‌
  10. அகில மலேயா கம்யூனிஸ்ட்‌ கட்சி
  11. நேதாஜி இந்திய தேசிய ராணுவம்

பன்முகப்‌ பணிகளில்‌ தோள்கொடுத்தவர்கள்‌ பலர்‌, அவர்களில்‌ வாழும்‌ நிஜம்‌ குருதேவன்‌. கணபதியை குரு இயக்கினாரா, குருவை கணபதி இயக்கினாரா என்று சொல்ல முடியாது. யார்‌, யாருக்கு ஆதாரம்‌ என்று அறுதியிடுவது சுலபமல்ல. தோழர்களாய்த்‌ தொடங்கி அகில மலேயா விடுதலைப் படை, கொரில்லாப்‌ படை வரை அது தொடர்கிறது. இன்குலாப் குறிப்பிடுவது போல தோழர்‌ குருதேவன்‌ வெறுந்‌ தாத்தவாக மட்டுமே இங்‌கே மா.லே கட்சியால்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டார்‌. ஆனால்‌ அவரது வாழ்க்கையின்‌ சொல்லப்படாத  புரட்சிப்‌ பகுதிகள்‌ எத்தனையோ உண்டு.

கணபதி போலவே தூக்குமேடையைச்‌ சந்தித்த வீரசேனன்‌, கீழக்காடு சுப்பிரமணியம்‌, சிந்தனையாளர்‌ அ.மார்க்ஸின்‌ தந்தை பாப்பா நாடு அந்தோணிசாமி, மலேசிய பழனி, தியாகி சாம்பசிவம்‌, திருமாக் கோட்டை இரத்தின சபாபதி, ராஜமாணிக்கம்‌, வாட்டாகுடி இரணியன்‌, செட்டிநாடு வீரசிம்மன்‌, புரட்சிப்‌ பித்தன்‌, மயில்‌ ராவணன்‌, முத்தையா, அருப்புக்கோட்டை ஜீவானந்தம்‌, அத்திப்பட்டு வீரசோழன்‌ என்று பலராலும்‌ தலையால்‌ முட்டுக்கொடுத்து தோள்களால்‌ தாங்கித்‌ தொடர்ந்த எழுச்சி வரலாறு, தமிழர்களுக்குப்‌ புதிய செய்தி.

பட்டுக்கோட்டைப்‌ பக்கமுள்ள தம்பிக்கோட்டையிலிருந்து நெல்‌ குவியும்‌ தஞ்சை பூமியில்‌ வயிற்றுக்கு ஒரு பிடி நெல்கூட கிடைக்காமல்‌ ஒன்பது வயதில்‌ கணபதி மலேயா பயணமாகிறார்‌.

"கருங்கல்‌ கணபதிக்கு சுடச்‌ சுடச்‌ சுட அதிரசமும்‌ அக்காரவடிசலும்‌, ஆனால்‌ தம்பிக்‌ கோட்டை கணபதிக்கோ தாங்காத விடுதலைப்‌ பசி” என்று கலைஞர்‌ கருணாநிதி எழுதுவார்‌. 'கயிற்றில்‌ தொங்கிய கணபதி' என 1952-ல்‌ எழுதிய நூலில்‌ குறிப்பிடுவார்‌. அது நாடகமாகவும்‌ தமிழ்நாட்டின்‌ பல இடங்களில்‌ நடத்தப்‌ பெற்றது.

கடல்‌ கடந்து சென்றதெல்லாம்‌ குடல்பசி தணிப்பதற்காக மட்டுமல்ல. தமிழ்ச்‌ சமுதாயத்தின்‌ மேன்மையை வளர்த்தெடுக்க - பொதுவுடமைத்‌ தீயை மூட்டிப்‌ பெரு நெருப்பாக்க என்பது, கணபதியின்‌ பின்னாளைய வரலாற்றுப்‌ பக்கங்கள்‌ வெளிச்சப்படுத்துகின்றன. மலேசியாவின்‌ விடுதலை வரலாறு கணபதியின்‌ பன்முகப்‌ போரட்டங்ளினூடாக தோள்மேல்‌ போட்டு தொடர்ச்சியாக நடந்து போகிறது.

கணபதி 1915-ல்‌ பிறந்தார்‌, 1949-ல்‌ தூக்குக்‌ கயிறு அவரை இறுக்கியபோது வயது 34. வாழ்வின்‌ ஒரு சிறிய இடம்தான்‌ அவருக்கு அளிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட அந்த சின்ன சந்தில்‌ அவர்‌ எத்தனை 'சாகசங்கள்‌' செய்திருக்கிறார்‌.

உலகின்‌ மாபெரும்‌ தொழிற்சங்கங்களின்‌ சம்மேளனத்திற்கு இணையாக பான்‌-மலேயா தொழிற்சங்க சம்மேளனம்‌ உருவாக்கப்படுகிறது. அகில மலேயா தொழிற்சங்கங்கள்‌ சம்மேளனம்‌, மலேயா அய்க்கிய முன்னனி, மலேயா அய்க்கிய கம்யூனிஸ்ட்‌ கட்சிகள்‌, இணைந்து பிரிட்டானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மலேயா விடுதலைப்‌ போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்‌. பிரிட்டீஷ்‌ ஏகாதிபத்தியம்‌ அவசர நிலைப்‌ பிரகடனம்‌ செய்து, பான்‌-மலேயா தொழிற்சங்கங்கள்‌ மேல்‌ பாசிச வெறிகொண்டு தாக்குகிறது. போராளிகள்‌ கொரில்லாப்‌ போரை முன்னெடுக்கிறார்கள்‌. அது ஒரு மக்கள்‌ சனநாயகப்‌ புரட்சி.

மக்கள்‌ சனநாயகப்‌ புரட்சி வெற்றி பெற்றிருந்தால்‌, மலேசியாவின்‌ சித்திரம்‌ மட்டுமல்ல, இந்தியாவின்‌ முகம்‌ கூட மாற்றி எழுதப்பட்டிருக்கும்‌. இந்திய முகத்திற்கு ஒரு முகவரி கிடைத்திருக்கும்‌.

மாவீரன்‌ மலேயா கணபதியின்‌ வரலாறு போலவே மலேயா விடுதலைப்‌ போரை முன்னெடுத்த அக்னிக்‌ குஞ்சுகளின்‌ வரலாறும்‌ சொல்லப்படாமலே போயிருக்கக்‌ கூடும்‌. மணிகள்‌ மண்ணில்‌ கிடக்கையில்‌ உமிகள்‌ ஊர்வலம்‌ போகின்றன. அப்படி அப்படித்தானே நடை முறை அரசியல்‌ நிகழ்வுகளும்‌ நடந்தவாறுள்ளன. தமிழனின்‌ பழைய முன்மாதிரிகளை அகழ்ந்தெடுக்கும்‌ ஆர்வமின்மை, உழைப்புச்‌ சோம்பல்‌ இன்னும்‌ எத்தனை போராளிகளின்‌ வாழ்க்கை சரிதத்தை காவு கொள்ள போகிறதோ?

இந்த ரீதியில்‌ அல்லாமல்‌ மாவீரன்‌ கணபதியின்‌ மறைக்கப்பட்ட வரலாற்றை நம் முன்‌ வைத்து வரலாற்றுக்‌ கடமையை நிறைவு செய்திருக்கிறார்‌ இரா.உதயபாசுகர்‌,

ஒரு தேசத்தின்‌ திசையை மாற்றியமைத்த புரட்சியாளர்களின்‌ சரிதத்தை எழுதிட முதலில்‌ அவர்களைப்‌ பற்றிய செய்திகள்‌ தொகுக்கப்பட வேண்டும்‌. செய்திகள்‌, உண்மைகளாக இருப்பது, உண்மைகளைக்‌ காலவரிசைப்டி இயக்கவரிசைப்படி கோர்த்து அடுக்குவது, இவ்வளவும்‌ செய்து முடித்த பிறகு இப்போது ஒரு சுயமான படைப்பாளியின்‌ வேலை விரிகிறது. படைப்பாற்றலை இழைத்து, ஓட்டம்‌ குறையாமல்‌ எடுத்துச்‌ செல்வது லேசுப்பட்ட காரியம்மல்ல. ஒரு சுய படைப்பாளியை விட கூடுதலான கைகளும்‌, ஆற்றலும்‌ கொண்டவனாய்‌ ஒரு வரலாற்றாசிரியன்‌ மாறுகிறான்‌

பாட்டுத்‌ திறத்தால்‌ வையத்தைப்‌ பாலித்திடப்‌ பிறந்த பாரதிக்கு மரணம்‌ தீண்டியபோது வயது 38. மலேயா கணபதி தூக்கு மேடையில்‌ நின்றபோது வயது 34 தான்‌. பன்முகக்‌ கவிதைத்‌ திறத்தாலே பாரதி இன்றும்‌ வாழ்கின்றார்‌. பாரதியின்‌ வாழ்க்கை விவரணைப்‌ படமாகவும்‌ (டாகுமெண்டரி) வந்து, நிகழ்த்திக்‌ காட்டப்பட்டுள்ளது. இதுபோல்‌ பன்முகப்‌ போராட்ட பரிமாணங்‌ கொண்ட மாவீரன்‌ மலேயா கணபதியின வாரலறும்‌ டாகுமெண்டரியாக வரவேண்டிய கட்டம்‌. தமிழ்‌ அன்பர்கள்‌ முயல்வார்களாக.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ