வீர.வேலுச்சாமி அஞ்சலி கடிதம்

சென்னை

8.7.2004

அன்புள்ள பிரகாஷ்‌,

அப்பா காலமாகிவிட்டார்‌ என கி.ரா சொல்லித்தான்‌ தெரிந்தது. நான்கு நாட்களாய்‌ தொலைபேசியில்‌ முயற்சி செய்தேன்‌. “எல்லா வழித்தடங்களும்‌ சுறுசுறுப்பாக இருக்கின்றன” என்ற பதிலே வந்தது. தொயந்தடியாய்‌ என்ன கோளாறு என்று தெரியவில்லை.

பிறகுதான்‌ “நீத்தார் நினைவு' பத்திரிகை கிடைத்தது.

கி.ரா கடிதத்தில்‌ எழுதியிருந்தார்‌, “கிட்டத்தட்ட எல்லாமே உதிர்ந்துகொண்டு வருகிறது என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. நாமும்‌ எப்போ “பொத்‌”தென்று உதிர்ந்து விழப்‌ போகிறோமோ தெரியல”

நேற்று கந்தர்வன்‌; கொஞ்சம்‌ முன்னால்‌ கவிஞர்‌ மீரா, இன்று அப்பா.

இப்போதுதான்‌ எழுதியது போலிருக்கிறது கந்தர்வனைப்‌ பற்றி. மரணக்‌ குறிப்பு எழுதி கணையாழி இதழில்‌ வெளியாகி, முழுசாய்‌ ஒரு மாசம் கூட முடியவில்லை.

“வீர, வேலுச்சாமியை வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான கலைஞன்‌. யதார்த்தம்னா என்னாங்கறத அவர்ட்டதான்‌ தெரிஞ்சிக்கிறனும்‌” என்றார்‌ கந்தர்வன்‌. அவர்தான்‌ அப்பாவைப்‌ பற்றி முதலில்‌ என்னிடம்‌ சொன்னவர்‌. பிறகு தான்‌ வீர.வேலுச்சாமியை தாமரை இதழ்‌ மூலம்‌ கிரகிக்க ஆரம்பித்தேன்‌.

எழுதிய எழுத்தின்‌ பச்சை காயாமலிருக்கிறபோதே, இன்னொரு விடைபெறலா? மாயம்‌ போல்‌ இருக்கிறது.

கனவுகளில்‌ சிரிக்கிறோம்‌; கனவுகளில்‌ தலைகீழாய்‌ மிதக்கிறோம்‌. அபூர்வங்களை கோர்த்துக்‌ கோர்த்து கனவுகளில்‌ தொடுத்துக்‌ கொள்கிறோம்‌. யதார்த்தத்தில்‌ விரும்பின யாவும்‌ கனவுகளில்‌ மெய்ப்படுகின்றன.

இப்போது இரத்தக்‌ காட்டேரி “டிராகுலா” இரு கடைவாய்ப்‌ பற்களிலும்‌ இரத்தம்‌ வழிய, சுற்றிச்‌ சுற்றி வேட்டையாடுகிறது. ஆகாய மார்க்கமாய்‌ பறந்து போகும்‌ பறவையாய்‌ அமைதியாய்‌ நடந்து போகும்‌ மக்களை ஒரு அக்னிக்‌ கணை இரண்டு துண்டமாக்கப்‌ பிளந்து வீசுகிறது. சித்திரபுத்திரன்‌ எமலோகத்தில்‌ கணக்குப்‌ புத்தகம்‌ எடுத்து வராமலே - பாவ புண்ணியப்‌ பட்டியல்‌ வாசிக்காமலே - கழுவிலேற்றி, தீக்குண்டத்தில்‌ தள்ளுகிற குரூரம்‌ அரங்கேறுகிறது.

இப்போது நமது கனவுகள்‌ குளிர்ச்சியாக இல்லை.

ஒரு கட்டத்தில்‌, புதிது புதிதாய்‌ என்ன வருமென்று அறிய முடியாத குரூரங்கள்‌ கொண்ட நவீன உலகில்‌ வாழ்ந்தவர்‌ அப்பா. விடுதிக்‌ காப்பாளராகப்‌ பணியாற்றிய காலம்‌ அது. அப்போது சேர்த்துக்‌ கொண்டவைதாம்‌ நிம்மதியற்ற பகலும்‌, வெக்கையடிக்கும்‌ கனவுகளுடனான இரவும்‌; அப்போது சேர்த்துக்‌ கொண்டவைதான்‌ இந்த நோயும்‌ நொம்பலமும்‌. கி.ரா பரிந்துரை செய்து மருத்துவர்‌ கதிரேசன்‌ ஆலோசனையின்‌ பேரில்‌ சென்னை வந்து, ஓட்டேரி சானட்டோரியத்தில்‌ காசநோய்‌ மருத்துவமனையில்‌ அப்பா சேர்ந்திருந்தார்‌. பூமணியும்‌ நானும்‌ போய்ப்பார்த்துப்‌ பேசிக்‌ கொண்டிருந்தோம்‌. பூமணியும்‌ நானும்‌ அப்போது சென்னைவாசிகள்‌ ஆகிவிட்டோம்‌.

நோய்‌ அப்படியே தங்கிக்கொண்டு, அப்பாவின்‌ எழுத்தை துரத்திவிட்டது.

எழுதுவது லேசுப்பட்ட காரியமல்ல. எந்த நேரத்தில்‌ எந்தக்கனி கையில்‌ வந்து விழும்‌, எது கை நழுவிப்‌ போகும்‌ என்று சொல்ல முடியாது. தூக்கத்தில்கூட அதே சிந்தனையாய்ப்‌ புரள வேண்டியிருக்கும்‌. திடீரென்று மின்னல்‌ மாதிரி ஒரு நல்ல குறிப்புத்‌ தோன்றும்‌. சங்கடம்‌ பாராமல்‌ எழுந்து குறித்துக்‌ கொள்ள வேண்டியிருக்கும்‌. “என்ன சித்தப்பிரமை பிடிச்சமாதிரி” என்று பக்கத்திலுள்ளவர்கள்‌ பார்ப்பார்கள்‌. நினைவில்‌ வைத்திருப்பது தவறி, மறதிக்‌ கடலின்‌ ஆழத்தில்‌ மூழ்கி, மூழ்கி அது தேடினாலும்‌ கிடைக்காது.

ஒரு கணத்தில்‌ நமக்குள்‌ வெடித்து நம்மை உலுக்கிய ஒரு சொல்‌, ஒரு உவமை, ஒரு விவரணை, ஒரு காட்சி கை வசப்பட்டது போல்‌ ஒரு செண்டிப்பு அடித்து, பிறகு எங்கேயோ போய்‌ ஒளிந்து கொள்ளும்‌. ரத்தினக்கல்‌ கிடைத்து தொலைத்து விட்டதுக்குச்‌ சமமாய்‌ இழப்பின்‌ வலி அமுக்கும்‌; இந்த வலியோடுதான்‌ அப்பாவின்‌ எழுத்துப்‌ பயணமும்‌ நடந்திருக்கும்‌. ஏழெட்டு வருசங்களுக்குள்‌ மளமளவென்று எழுதி, வெற்றியின்‌ உயரத்தில்‌ ஏறி ஏறிப்‌ போனார்‌. தமிழுக்கு அப்போதுதான்‌ புதிதாய்‌ அறிமுகப்பட்டிருந்த யதார்த்தச்‌ சித்தரிப்புக்‌ கலையின்‌ மர்மத்தைப்‌ புரிந்து கையிலெடுத்தார்‌. கலைத்துவம்‌ கெடாமல்‌ அதில்‌ பல வர்மப்பிடிகள்‌ போடத்‌ தெரிந்திருந்தது அப்பாவுக்கு.

நிறங்கள்‌ சிறுகதைத்‌ தொகுதி எழுபதில்‌ வந்தது. அத்தோடு தமிழ்நாட்டு கிராமியக்‌ கதைகள்‌ அகரம்‌ வெளியீடாக வந்தது.

நிறங்கள்‌ தொகுப்பு உன்னிப்பாய்‌ கவனம்‌ பெற்றது. இப்போது இலக்கிய வட்டாரத்தின்‌ கவனம்‌ வேறொரு தசையில்‌ திரும்பிவிட்டது.

மெளனி கதைகள்‌ ஒரு தொகுதிதான்‌ காணக்‌ கிடைத்தது. அவர்‌ ஆயுளில்‌ எழுதியது அவ்வளவுதான்‌. கதைகளாக ஆக்கித்‌ தராமல்‌ வாழ்வை அவருடைய பார்வையில்‌ தத்துவ விசாரணை செய்த மெளனி ஜெபம்‌ எழுத்துலகில்‌ இன்னும்‌ ஓய்ந்த பாடில்லை.

அகமனக்‌ குதறல்களை கொட்டிய எழுத்துக்கள்‌ போற்றப்‌படுகின்றன. இம்மாதிரியே இலக்கிய உலகில்‌ அதற்கொரு மறுவாசனை தந்து கொண்டிருக்கிறார்கள்‌.

ஆனால்‌ நிறங்கள்‌ கதைகளின்‌ தகுதியை மூன்னிட்டு மறுபடி மறுபடி இவர்கள்‌ ஏன்‌ பேசுவதில்லை?

அவர்கள்‌ நிறத்தைக்‌ காட்டுகிறார்கள்‌ என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. வாழ்க்கையை, அதன்‌ சுயானுபவத்தை நிதரிசனமாக வைக்கிற எந்தப்‌ படைப்பையும்‌ பேசாமல்‌ விடுகிற மெளனம்‌.

இதுதான்‌ இலக்கிய வனாந்தரம்‌. எந்தக்‌ கருத்தியலையும்‌ கைப்படுத்தாமல்‌, கலைத்துவ உச்சாடனை செய்யும்‌ இலக்கிய முனிகளின்‌ வனாந்தரம்‌ அது. திட்டமிட்ட மெளனம்‌ என்பது புறக்கணிப்பு.

உங்கள்‌ ஊருக்கு, ஏழெட்டு வருசம்‌ முந்தி நானும்‌, சங்கரன்‌ கோவில்‌ நண்பர்‌ செயராமனும்‌ வந்திருந்தோம்‌. மதியச்‌ சாப்பாட்டுக்குப் பின்‌, அப்பா ஊர்‌ சுற்றிக்காட்ட கூட்டிப்‌ போனார்‌. ஊரின்‌ ஊடாகவும்‌ ஊரைச்‌ சுற்றிலும்‌ பாத்தி போட்டது போல்‌ வேப்ப மரங்கள்‌. வேப்பந்‌ தோப்புகளால்‌ இயற்கையைக்‌ கொண்டாடியிருந்‌தார்கள்‌ உங்கள்‌ ஊர்‌ மக்கள்‌,

சுத்தமான ஆளாய்‌, பிரியமும்‌ பாசமும்‌ கொண்ட மனிதராய்‌ பின்னணியில்‌ அப்பா சேர்த்துக்‌ கொண்ட பிரபல்யங்கள்‌ நிறைய.

உங்களுக்கு, வசந்தாவுக்கு, கல்பனாவுக்கு ஒரு நல்ல அப்பா.

அம்மாவுக்குப்‌ பிரியமுள்ள கணவர்‌.

எங்களுக்கு அறிவார்த்தமான, ஈரமான நண்பர்‌.

எல்லோரும்‌ இழந்துவிட்டோம்‌.

யதார்த்தவியல்‌ என்ற இலக்கிய நவீனப்‌ பிரிவுக்கு கை நிறைய அன்னமிட்ட ஒருவரை சிறுகதை உலகம்‌ இழந்துவிட்டது.

குடும்பத்தைச்‌ சுமந்து செல்வது - ஒழுங்கமைவு செய்வது - உறவுகளை, நட்பைக்‌ காப்பது - அப்பா கவனமாக இருந்தார்‌; அந்தக்‌ கவனத்தை நீங்கள்‌ கைகளில்‌ எடுத்துக்கொள்ள வேண்டும்‌. அதோடு இன்னொரு அபூர்வமான பொருள்‌ உங்கள்‌ கைவசமிருக்கிறது. உங்களிடம்‌ இலக்கியம்‌ செய்வதற்கான நல்ல தெறிப்பு இருக்கிறது. சிறு கங்கு. ஊதி, ஊதி கனலாக்குங்கள்‌.

சரியான தொலைபேசி எண்ணை எழுதுங்கள்‌. அவசியம்‌ ஊர்‌ வருவேன்‌. உங்களை, வசந்தாவை, கல்பனாவை, அம்மாவைப்‌ பார்த்துப்‌ போக.

ஆறு, ஆறு என்று சொன்னால்‌, ஆறுமா உங்கள்‌ அனைவரின்‌ மனசும்‌?

பிரியமுள்ள மாமா,

பா.செயப்பிரகாசம்‌

8.7.2004


கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?