நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா - தொகுப்பாளர் உரை
எஸ்.எஸ்.போத்தையா என்னவாக இருக்க நினைத்தார்?
“உள்ளத்தால் உயர்வுள்ளல்” - எனும் அறமொழிக்குப் பொருத்தமாய் - நினைப்புக்கு ஏற்ப வாழ்க்கை அமைகிறது என்பது பொதுவான நம்பிக்கை. நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி அமைய வேண்டுமென்று நினைப்புக்களில் விதை போடுகிறோம். பெரும்பாலான வாழ்க்கைகளில் விதையொன்று போட சுரையொன்று முளைக்கிறது. சமூக அமைப்பில் கணவன் என்பதும் மனைவி என்பதும் வேறுபாடான யதார்த்தங்களால் தீர்மானிக்கப்படுகிறது. நினைப்பு நிறைவேறாத பட்சத்தில்.
“திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது”
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”
- இவ்வாறு சொர்க்கத்துக்கோ, கடவுளுக்கோ, பொறுப்பைத் தள்ளி விடுகிறோம். கனவினும் கூடுதலான புனைவு இது.
போத்தையா காலத்தின் கிராமப்புற ஆசிரியர்களுக்கு அவர்கள் என்னவாக வேண்டுமென விரும்புகிறார்களோ, அதுவாக ஆகிற வாய்ப்புகள் சூழ இருந்தன. 1950, 60-களின் ஆசிரியர்கள் சுதாரிப்பானவர்கள். கிராமங்களில் இருந்தாலும், அவர்களுக்கு நகரவாழ்வின் சூழ்ச்சி தட்டியிருந்தது. கைக்கும் மெய்க்கும் இல்லாமல் (அன்றாடச் செலவுக்குமில்லாமல்) இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்றிருப்பதினும் “அக்கு தொக்கா வாழ்வது எப்படி" என்ற அறிவு உதயமானது. சம்பாத்தியத்துடன் இன்னொரு சம்பாத்தியம் சேர்ந்தால், வளமாக அமையும் என்று கணக்குப் பிறந்தது. ஆசிரியருக்கு ஆசிரியர், ஆசிரியர் இல்லாது போயினும் இன்னொரு அரசுப்பணியாளர் என்று வாழ்க்கைத் துணை தேடி அமைத்துக்கொண்டார்கள். இந்த இரண்டு சம்பளக் குடும்பம் என்பது நடுத்தர வர்க்கம் என்ற ஒன்றின் உருவாக்கத்தில் முன்னர் கண்டிராதது. ஓன்றோடு ஒன்று சம்பாத்தியம் சேர்ந்ததும், அதை மூன்றாக்கும் மூலதனப் பெருக்கத்தை எண்ணினார்கள். அவர்கள் எதிரில் காய்ஞ்ச கருவாடாய்ப் போய்க் கொண்டிருக்கும் விவசாயிகளும், மூங்குநீச்சல் போட்டு மேல்வரத் துடித்த சிறு வியாபாரிகளும் தெரிந்தார்கள். வட்டிக்குக்கொடுத்து வாங்கத் தொடங்கினார்கள்.
இன்னொரு பிரிவு-காடு, கரை வாங்கி விவசாயம் செய்வது, கல்யாணத் தரகு, ஜோசியம் என்று உழைக்க ஆரம்பித்தார்கள்.
பிழைக்க வழியாயில்லை! அஞ்சல் வழிக் கல்வியை பல்கலைக்கழகங்கள் திறந்தன. அவிழ்த்து விடப்பட்ட நாய்க்குட்டிகள் தாய்மடியை மொச்சி மொச்சிக் குடிப்பதுபோல் பி.ஏ, எம்.ஏ என்று படித்துப் புலமை பெற்றனர். புலமை பெற்றதும் நல்லதுக்கே! தமிழில் புலமை எய்தினால் பட்டிமன்ற உரையாளர்கள் ஆகலாம். கோயில் விழாக்கள், குடமுழுக்கு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், உரைவீச்சு என்று கோஷ்டி சேர்த்து வட்டாரத்தை கலக்கினார்கள். நயமாய், நயத்துக்கு மேலோரு நகைச்சுவையாய் பேசி நடித்து வட்டாரம் தாண்டி மாவட்டங்கள் கடந்து, எல்லை தாண்டிய புகழ்கொண்டனர்.
எடுத்துக்கோ, எடுத்துக்கோ என்று கூவுவதுபோல் எத்தனை வகைகள் அன்று ஆசிரிய சமூகத்தின் முன் கிடந்தன.
எஸ்.எஸ்.போத்தையா எதைத் தேடி எடுத்தார்?
சாவின் வாசலில் நிற்கிற வேளையில் அவரது சட்டைப் பையை நிறைத்திருந்த சின்னச்சின்ன சிட்டைகள் சாட்சி! காற்றில் அலைந்தவைகளை ஏட்டில் ஏற்றிவிட வேண்டுமென்ற வெறியுடன் அவர் தேடித்தேடி எடுத்தவை அவைதாம். நிலத்துக்குக் கீழ் ஓடும் நீரோட்டம் போல், பூமிக்கு மேலே ஓடும் வெப்போட்டம் போல், அவருக்குள் ஒரு போதும் ஓய்வு கொள்ளா சமூக அக்கறை இயங்கிக்கொண்டிருந்தது.
பலசரக்குக் கடையில் சாமான் வாங்குகையில் குறித்துக் கொடுப்பார்கள்; அதுபோல் சின்னச் சின்ன சிட்டைகளில், அரைத் தாளை நான்காய் மடித்தால் வருமே - அதுபோல் உள்ளங்கையளவு காகிதத்தில், சிசர்ஸ், கோல்டு பிளேக் சிகரட் அட்டைகளில், திருமணம் - அன்புடன் அழைக்கின்றோம் என்று அழைத்தது போக மீதியுள்ள அழைப்பிதழில் போகிற இடமெல்லாம் நுணுகி நுணுகி குறித்து வைத்துக் கொண்டார்.
மகாகவி பாரதி விழா, எட்டயபுரம் செப்டம்பர் 16, 17 - 1989 என்றிருந்த அழைப்பிதழும் தப்பவில்லை. அது “இசை மேதை விளாத்திகுளம் சுவாமிகள், பொன்விழா” அழைப்பிதழாக (29-10-1960) இருக்கலாம். சாந்தி இதழ் வந்த உறையாக இருக்கலாம். எது கைவசம் கிடைக்கிறதோ அது. கேட்ட, பார்த்த நொடிப் பொழுதுக்குள் எதுவும் தப்பித்துப் போய்விடக்கூடாதே என்ற தவிதாயப்படல் அங்கு செயல்பட்டது.
அவருக்கு எது அபூர்வ தருணம்?
ஒரு முத்தாயிக் கிழவியிடமிருந்து உதிர்கிற சொலவம் -
“என் ஆட்டைக்கு வராதவ எண்ணெய்க்காரன் பெண்டாட்டி”. முற்றத்தில் எக்காளமாய் வக்கணை செய்கிற ஒரு பொண் குட்டியின் கேவி -
பாக்குக் கடிக்கும் நேரத்தில் பழனியக்காவிடமிருந்து நெருஞ்சியாய் வெடிக்கிற வசவுக்காடு -
இவை அபூர்வத் தருணங்கள்.
யார் எந்தப் பொழுதில் என்ன சொல்போடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. போட்டால் நழுவிடாமல் பிடித்துக் கொள்ள வேண்டும்; சாவகாசமாய் வீட்டில் வைத்து எழுதிவைத்துக் கொள்ளமுடியாது. நினைவின் மடி கனமாகிவிட்டால், எங்காவது பராக்குப் பார்க்கையில் அவிழ்ந்து இந்திவிடும். நினைவு என்பது நீர்போல/ கொட்டிப் போனால் கூட்டி அள்ளத் தோதில்லை.
சமகாலத்தின் ஆசிரிய சகாக்கள் பயணித்த எத்திசையையும் கண்டுகொள்ளவில்லை அவர். தனக்குள் இருந்த திறமையை அடையாளம் கண்டுகொண்டு அத்திசையில் பயணித்தார். அமைத்துக் கொண்ட வாழ்க்கை, அதற்கு ஏந்தலாய் தூக்கிக் கொடுத்தது.
பணி மூப்பு அடிப்படையில் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியிட நியமனம் வந்தது. வேறு இடத்திற்கு மாறுதலாக வேண்டியிருக்கும். ஆனால் இடைநிலை ஆசிரியர் ஊதியத்துக்கும், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஊதியத்துக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வித்தியாசம் அந்தக் காலத்திலேயே இருந்தது. இது போக ஆண்டு ஊதிய உயர்வு, லொட்டு, லொசுக்கு என்று இன்னும் 75 வருடங்கள் அப்பணியிடத்தில் வேலை செய்யலாம்; கணக்குப் பண்ணிப் பார்த்தால் எத்தனையோ லட்சங்கள் கிடைத்திருக்கும். அத்தனையும் வேண்டாமென்று உதறித் தள்ளி உள்ளூரிலேயே பணியாற்றுவேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.
“சம்பளத்தில் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. கடைசியில் பென்சன், கிராஜீட்டி அதிகமாய்க் கிடைக்கும் என்று நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் ஆசிரியர்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த பட்டம் பைத்தியகார மனுஷன்”
அவரது தலைமாணாக்கரும் எழுத்தாளருமான சூரங்குடி அ.முத்தானந்தம் சடைத்துக் கொள்கிறார்.
வாழ்க்கைக்கான வேலையா? வேலைக்காக வாழ்க்கையா? -
ஒற்றைக் கேள்விக்குள்ளிருந்து அவருடைய முடிவைப் பரிசீலித்தால், சடைத்துக்கொள்ளவோ, சலித்துக்கொள்ளவோ ஏதும் இல்லை. வேலைக்காக வாழ்க்கை என்று தொட்டுத் தொட்டுப் போய்க் கொண்டிருந்தால், தொடவேண்டிய கடைசி எல்லை இல்லாமல் போய்விடும்.
“வாழ்க்கைக்காகச் சேர்த்து வைப்பதா, சேர்த்து வைப்பதற்காக வாழ்வதா?” - இந்த ஒத்தையா ரெட்டையா விளையாட்டில், இரண்டாவதைத் தேர்ந்தெடுத்த அசிரிய சகாக்கள் அதற்குள்ளேயே போய்க்கொண்டிருந்தார்கள். அப்பேர்ப்பட்ட ஆட்கள் சூட்டிய பைத்தியக்கார மனுஷன் என்ற பட்டத்துக்கும், நடப்பு உலகிலிருந்து நாம் பார்க்கிறதுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
சமூதாய அக்கறையோடு, தான் எடுத்துக்கொண்ட நாட்டுப்புற இயல் சேகரிப்பு தன் வாழ்நாள் பணி என்று இயங்கினார். காலகாலமாய் தலைமுறை தலைமுறையாய் ஏடறியா மக்கள் வாய்மொழியாய் கொட்டிவைத்த அறிவுச் சேகரிப்பை மூலதனமாக்கி, வியாபாரம் செய்ய அவர் எண்ணியதில்லை.
“நான் பேராசிரியர் நா.வா அவர்களின் முதல் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்பார் எஸ்.எஸ்.போத்தையா.
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்”
- குறளைப் புரிந்தவர் நா.வா. இதை இதை - யார் யார் செய்வார்கள் என்று துல்லிதமாய்க் கண்டு பணிகளைப் பரிந்துரைத்திருக்கிறார்.
“இலக்கிய சாம்ராட்டு”களோடு மல்லுக்கட்டி மக்களின் மொழியை நிலைநிறுத்திய கி.ராஜநாராயணன், நாட்டார் வழக்காறுகளை கண்டறியத் தூண்டிய நா.வா, மக்களிடம் நின்று, மக்களிடம் பேசி, மக்களிடம் கேட்டு சேகரம் செய்த எஸ்.எஸ். போத்தையா, எஸ்.எம்.கார்க்கி, எம்.பி.எம்.ராஜவேலு, குமாரி பி. சொர்ணம், கவிஞர் எஸ்.சடையப்பன், கு.சின்னப் பாரதி, இவர்களுக்கு அப்பால் தனித்து நின்ற காந்திக் கிராம அன்னகாமு போன்றவர்கள் அய்ம்பது அறுபதுகளில் போட்ட விதைப்பு, நாட்டுப்புறவியல் என்றாலே முகஞ் சுளித்த பல்கலைக்கழக கட்டுமானத்துக்குள் “நாட்டுப்புறவியல் சிறப்பு அலகு” ஏற்படக் காரணமாயிற்று.
போத்தையா போன்றவர்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லையே பல்கலைக்கழக பீடங்கள் என்ற வாதனையிருக்கலாம் நமக்கு. ஆனால் அவருக்குத் துளியும் கிடையாது. நம் காலத்திலேயே அப்படியான சிறப்பு கி.ராஜநாராயணனுக்குக் கிடைத்தது. நாட்டுப்புறவியலின் மணம், குணம் அறிந்த ஒருவர், என்று சொல்வதினும், கி.ரா.வை அறிந்த ஒருவர் துணைவேந்தர் ஆனதால் புதுவையில் தன் பக்கமாகவே கூட்டி வைத்துக் கொண்டார்.
9.4.2000-த்தில், அருமைச் சகோதரர் அவர்களுக்கு - என்று போத்தையா அண்ணாச்சியிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. கரிசல் சொலவடைகள் - தொகுப்பு பற்றி தங்கம்மாள் புரத்திலிருந்து வந்த கடிதம்.
“அனால் பள்ளப்பய, பறப்பய, வண்ணாப்பய என்று வரும் சொலவடைகள் அவ்வின மக்களைப் புண்படுத்தத்தான் செய்யும். ஐயமில்லை; அரிச்சந்திர மயான காண்டத்தில் பாடப்படும்.
'அதியிலும் பறையனில்லை
சாதியிலும் பறையனில்லை'
என்ற பாட்டைப் பாடக்கூடாது என்ற ஓர் பெரிய எழுச்சியும் போராட்டமும் ஏற்பட்டு இன்று இப்பாடல் சொற்கள் மாற்றிப் பாடப்படுகிறது... இது போன்ற சொலவடைகளை நான் இதில் சேர்க்கவில்லை” - என்று பூர்வாங்கமாய்ப் பேசியது மட்டுமல்ல, காரிய ரீதியாகவும் தவிர்த்து விட்டார். சமூக மாந்தரை மதிக்கும் மனக்கட்டுமானம் அவருக்கிருந்தது. தன் வீட்டுக்கு வரும் அந்த மனிதர்களை வீட்டுக்குள் அழைத்து, சமமாய் உட்காரவைத்து உரையாடி அனுப்பினார். வருபவர்களில் சிலர், அப்படி உட்காராமல் மதிப்பளித்து நின்றபடியே பேசிவிட்டுப் போவார்கள்.
அய்யன் (திருவள்ளுவன்) நூலகம் என்று ஒவ்வொரு ஊராட்சியிலும் திறக்கப்பட்டிருந்தது. அந்தந்த ஊரில் ஓய்வுபெற்ற ஒரு ஆசிரியரைப் பொறுப்பாகப் போட்டிருந்தார்கள். மாதம் எழுநூறு ரூபாய். வேறு எந்த இடத்திலும் ஒரு ஆசிரியரும் நூலகத்தைத் திறந்து வைத்துப் பார்க்கவில்லை என்று அங்கங்கே மக்கள் “பிராது” (புகார்) செய்வார்கள். காலந்தவறாமை, கடமை வழுவாமை என ஆசிரியப் பணியில் எப்படி இருந்தாரோ, அப்படி நூலகப் பணியையும் செய்கிறவர் என்றார்கள் எஸ்.எஸ்.போத்தையாவை. “நல்ல நல்ல புத்தகங்கள் எல்லாம் வாங்கிப் போட்ருக்காங்க. படிக்க ஒருத்தரும் வர்றதில்லே” என குமைந்து போனார். வலியப் போய்த் தேடிப் பேச்சுக் கொடுத்து, சில பெண்கள், பையன்களை வரச்செய்வதுண்டு. நூல்களை வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது. ஆனாலும் விதிகள் பற்றி கவலைப்படாமல், வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய் படிக்க அனுமதித்தார்.
“அப்படித் தொலைச்சால்தான் என்ன?”
அர்த்தமுள்ள புஞ்சிரிப்பு அவர் இதழ்களில் தங்கியிருக்கும்.
அரசு நூலகங்கள் இயங்கும் இடங்களில் நூலகர் ஒருவர் உண்டு. அவர் ஒரு அரசுப் பணியாளர் அவ்வளவே; மேலைத் தேயங்களில் போல் அறிவுலகச் செயல்பாடுகளில் தன்னைப் பொருத்திக் கொள்பவர் அல்ல. கலை இலக்கிய சமுதாய இயல்களில் ஈடுபாடு கொள்வதோ, அறிவுத் தளச் செயல்களினது கூடமாக அக்குவதோ அவருடைய பணியல்ல. நூலகம் மூலம் அவ்வாறான சிந்திப்பு விதைக்கப்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் ஆட்சியாளர் எவராயினும் நட்டுக்க நின்று ஆடுகிறது.
எனவே எஸ்,எஸ், போத்தையாவின் மறைவுக்குப் பின் அய்யன் திருவள்ளுவனும் தூசி தும்பு படர்ந்த அறையில் பூட்டப் பட்டுக் கிடக்கிறார்.
அவருக்கு என்ன நோய் உண்டு என்பது எங்களுக்குத் தெரியும். அவருடைய புத்திரர்கள், நான் - என நாலைந்து பேர் மட்டும் அறிவோம். நூலகத்துக்குப் போனவர், இரண்டு மூன்று முறை பேதியாகியிருக்கிறது. நூலகத்துக்கு உயரமான படிக்கட்டுகள்; படிகளில் ஏறமுடியவில்லை என்று இரண்டொரு நாளில் சொல்லியிருக்கிறார். பிறகு பிடுங்கிப் போட்ட தண்டாட்டம் உணர்ந்து போனார். உடம்புக்குச் சேட்டமில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது. போய் இருந்து பார்த்து வந்தேன். ஒரு மாதத்திற்குள் மூன்று தடவை போனேன். அப்போது, வந்து போகும் உறவினர்கள் நடமாட்டம் அவருக்குள் சம்சயத்தை உண்டாக்க, மருமகள் சீதா சாமர்த்தியசாலி, “உடம்பு முடியாம இருக்கீங்கன்னு கேள்விப்பட்டு வர்றாங்க” என்ற சமத்காரமாமாய் சொன்ன பதிலில் அமைதியடைந்துவிட்டார். கட்டிலிலும் ஈஸிசேரிலும் மாறிமாறிப் படுத்தார். ஈஸிசேரில் இருக்கிறபோது ரொம்ப லாத்தலாயிருக்கு (செளகரியமாய்) என்பார். ஈஸிசேரில் உட்கார்ந்திருக்கிறபோது பையில் எழுதி எழுதி வைத்திருந்த சட்டைகளை எடுத்து என்னிடம் தந்து பார்க்கச் சொல்வார். மஞ்சள் பையை எடுத்து வரச் சொல்லி, அதில் வைத்திருக்கும் துண்டுக் காகிதங்களை எடுத்துக் கொடுத்தார்; ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் அவர் வசம் வைத்திருந்த புதையலையெல்லாம் என்னிடம் சேர்த்து விட்டதாகக் கருதினார்.
எஸ்.எஸ்.போத்தையா என்ற ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது.
மரணித்த உடலை அடக்கம் செய்து முடித்த மறுநாள் காலையில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர், மனிதநேயப் போராளி ஆர்நல்லகண்ணு, குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் கூறிச் சென்றார் என்பது, தனக்கான கடமையை நிறைவேற்றினார் என்றே காட்டுகிறது; எஸ்.எஸ்.போ.வின் மறைவின் பின் பலதடவை தங்கம்மாள்புரம் போய், அவர் கட்டிவைத்திருந்த மூட்டையை அவிழ்த்து, பெட்டியைத் திறந்து மருமகள் சீதாவுடன் சேர்ந்து கிளறி, துளாவி எடுத்தவைகளை தோது பண்ணி நூலாகக் கொண்டு வருவதில் ஓரளவேனும் என் கடமையை ஆற்றியுள்ளேன். நாட்டுப்புறவியல் எனும் மலைக்குவியலைச் சேர்த்து தந்தவரின் மதிப்புணர்ந்த என்.சி.பி.எச் புத்தக வெளியீட்டாளர்கள் அது போலவே தம் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
- எஸ்.எஸ்.போ. சேகரித்து வைத்தவற்றுள் இது முதல் நூல்.
- கரிசல் சொலவடைகள், நம்பிக்கைகள், தோக்கலவார் வரலாறு - அடுத்த நூல்.
- எஸ்.எஸ். போத்தையா அவர்களுக்கு பேரா. நா.வானமாலை, கி.ராஜநாராயணன், பொன்னீலன், பா.செ. ஆகியோர் எழுதிய கடிதங்கள் மூன்றாவது நூல்.
இம் மூதல் நூலைத் தொடர்ந்து, அடுத்தடுத்து, அவர் சேகரித்து வைத்தவைகளைக் கொண்டு வரும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என நான் எண்ணுகிறேன்.
இந்நூலுக்கு அணிந்துரை அளித்திருக்கிற தோழர் ஆர்.நல்லகண்ணு, எழுத்தாளர் இி.ராஜஐநாராயணன் அகியோர் தங்கள் கடமையை ஆற்றியதாகவே கருதுகிறேன். அவர்களுக்கு நன்றிகள்.
இந்நூல் தொகுப்பின் போது அறிவார்ந்த உரையாடல்கள் வழியாக, அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கிய பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
- பா.செயப்பிரகாசம்
04.06.2013
புதுச்சேரி.
கருத்துகள்
கருத்துரையிடுக