ஒரு படைப்பாளியின் கதைப் பெண்டிருக்காக கலங்கிய அரங்கம்
காலத்தில் கரைந்து போகாமல் காலமாகி நிற்கிற ஒருவரை நினைவுகூரும் கூடுகைகளில் அவர் சந்தித்த சோதனைகளையும், வென்று காட்டிய சாதனைகளையும் பகிர்ந்திடும்போது பேசுகிறவர்களும் கேட்கிறவர்களும் உணர்ச்சிவசப்படுவது புதிதல்ல. ஒரு படைப்பாளியை நினைவுகூர்வதற்கான அந்தக் கூடுகையிலும் உரையாளர்கள், அவையினர் இரு தரப்பினரும் நெகிழ்ந்தார்கள். அவருடைய வாழ்க்கைத் தடங்களால் அப்படி உணர்ச்சிமயமாகவில்லை, மாறாக, அவருடைய எழுத்தாக்கங்களைச் சொன்னபோது, கதை மாந்தர்களை எடுத்துக்காட்டியபோது அரங்கத்தினரும், தாங்கள் சந்தித்த மனிதர்கள் பற்றிய நினைவுகள் கிளர்தப்பட்டவர்களாக ஆழ்ந்த உணர்வில் மூழ்கி எழுந்தார்கள்.
எழுத்தாளரும், மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்றவருமான பா.செயப்பிரகாசம் நினைவு கருத்தரங்கில் இந்த மாறுபட்ட அனுபவம் வாய்த்தது. சமூகப் போராளி எளியோரின் வழக்குரைஞர் பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு இணைந்து அந்தக் கருத்தரங்கத்தை சனிக்கிழமையன்று (2025 மார்ச் 15), சென்னையின் ‘இக்சா’ வளாகச் சிறு கூடத்தில் நடத்தின,
பா.செ‘யின் படைப்புலகம் சார்ந்தே உரைத் தலைப்புகள். அவரது அல்புனைவுகளில் பெண்ணியம் மற்றும் சமூகப் பங்களிப்புகள் பற்றிப் பேசினார், இதே தலைப்பு தனக்கும் பொருந்தக் கூடியவரான கமலாலயன். சில பதிவுகளைப் பகிர்ந்தபோது சில மணித்துளிகள் தொடர்ந்து பேச இயலாமல் உறைந்தார். குறிப்பாக, இந்தித் திணிப்புக்கு எதிராக 1960களில் ஏற்பட்ட எழுச்சியில் ஒரு தளநாயகராகவே பா.செ பங்களித்தது பற்றிச் சொல்லி வந்தவர், தமிழக வரலாற்றின் அந்த மகத்தான அத்தியாயம் இலக்கியப் புனைவுகளில் கொண்டுவரப்படவில்லை என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பதைக் குறிப்பிட்டபோது அடுத்த சொற்களுக்காகத் தவித்தார். தனது தொழிற்சாலை அனுபவங்கள், உயரரிகாரியின் எச்சரிக்கை, தொழிலாளர் போராட்டத்தில் முன்னின்றவர்கள் பழிவாங்கப்பட்டது குறித்த நினைவுகளையும் பா.செ கட்டுரைகள் கிளறிவிட்டதைத் தெரிவித்து, அத்தகைய பல போராட்டங்கள் புனைவுகளாக்கப்படாமல் இருப்பதன் வேதனையை ஒரு படைப்பாளிக்கே உரிய உறுத்தலுணர்வுடன் வெளிப்படுத்தினார்.
பா.செ புனைவுகளில் நடமாடும் பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்திப் பேசினார், உண்மை வாழ்க்கையின் அத்தகைய மனிதர்களைத் தேடும் உந்துதலை இளம் எழுத்தாளர்களுக்கு எப்போதும் வழங்குகிறவரான ச.தமிழ்ச்செல்வன். பா.செ வாழ்க்கையோடு கலந்த பாட்டியும் அம்மாவும் கரிசல் கிராமங்களின் உயிரோட்டமான பெண்களும் அவருடைய சிறுகதைகளில் வாழ்ந்துகொண்டிருப்பதை எடுத்துக்காட்டினார். அவர்களின் பாடுகளையும் வலிகளையும் அழுகைகளையும் எவ்வளவு துல்லியமாகக் கவனித்து உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார் என்று சொல்லிவந்தவர், ஒரு கதையில் சித்தரிக்கப்படும் அவலச் சூழலைப் பகிர்ந்தபோது கண்ணீர் முட்டிக்கொள்ள, பேச்சைத் தொடர முடியாமல் தடுமாறினார். தண்ணீர் எடுத்துக்கொடுக்கப்பட்ட பிறகு, அதைப் பருகிவிட்டு, மனதை ஆற்றிக்கொண்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உரையைத் தொடர்ந்தார். நம் வீடுகளில், பக்கத்து வீடுகளில், தெருக்களில், ஊர்களில் இப்படிப்பட்ட பெண்களைப் பார்த்திருக்கிறோமே, இதே போலக் கவனித்திருக்கிறோமா என்ற குறுகுறுப்பை அவையினருக்குக் கடத்தினார் என்றால் மிகையில்லை.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர், நாடகக் கலைஞர் அசோக் சிங் நினைவுரையாற்றினார். பா.செ வாழ்க்கையின் நினைவுக் குறிப்புகளாக அல்லாமல், பா.செ பேச விரும்பிய பண்பாட்டுத் தளப் போக்குகளை நினைவில் கொண்டு புதிய கண்ணோட்டத்தில் விவாதிக்க வேண்டிய சிந்தனையை முன்வைத்தார். மொழி உள்பட எந்தவொரு பண்பாட்டு அடையாளத்தையும் நாம் எதிர்க்கவில்லை, ஆதிக்கத்தைத்தான் கேள்விக்கு உட்படுத்துகிறோம் என்றார்.
வரவேற்புரையோடு, தேர்ந்தெடுத்த தலைப்புகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்துரையாகவும் சுருக்கமாக வழங்கினார் மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு. இந்தத் தலைப்புகளைத் தேர்வு செய்ததே அவர்தான் என்று தெரியவந்தது. தலைப்புகளை மட்டுமல்ல, யாரிடம் அவற்றை ஒப்படைக்கலாம் என்று தேர்வு செய்ததிலும் அவருடைய அனுபவமும் அக்கறையும் பொதிந்திருக்கின்றன.
நன்றி நவில வந்த அறக்கட்டளைப் பொறுப்பாளர்களில் ஒருவருரான வழக்குரைஞர் அஜிதா, எழுத்தாளர், களச் செயல்பாட்டாளர் என்பதற்கெல்லாம் முன்பாக பா.செ தனது மாமா என்று தெரிவித்தார். பற்பல வாழ்க்கை நிலைகளுக்கு மாறினாலும் வர்க்க அடிப்படையில் எளிய மக்களின் பக்கம் நிற்பதில் ஒருபோதும் மாறாமல் நின்றார். அவரது கதாபாத்திரத் தேர்வுகளும் மொழிப்போராட்டம் புனைவாக்கப்படாதது பற்றிய மனக்குறையும் சேர்ந்து, பணியும் பணியில் சந்திக்கும் மக்களும் சார்ந்த எழுத்தாக்கங்களில் இனி தானும் ஈடுபடும் உறுதியை ஏற்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தினார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்தலாகும் என்ற நம்பிக்கையோடு அரங்கில் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார் முற்போக்குச் சிந்தனையாளர், மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன்.
மானுட மாண்பும் வர்க்க உணர்வும் வேறு வேறு அல்ல, ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று உணர்த்திய நிகழ்வு எனப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் அங்கிருந்து விடைபெறும்போதே உதித்திருந்தது.
- நன்றி அசாக்
கருத்துகள்
கருத்துரையிடுக