எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களின் 'காடு' சிறுகதைத் தொகுப்பு - வாசகர் மதிப்புரை
பொதுவாக எனது வாசிக்கும் ஆர்வம் வரலாற்று நூல்களிலும், கட்டுரைத் தொகுப்புகளிலும் இருக்கும் அளவிற்கு சிறுகதை தொகுப்புகளில் இருப்பதில்லை. (காரணம் கதைகளைப் படித்து முடித்ததும் அதன் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதில் என்னால் வெளிவர முடிவதில்லை)
ஆனால், காடு சிறுகதை தொகுப்பின் முதல் கதையின் முதல் வரியைப் எதேச்சையாக படித்த போது அவ்வரியே அக் கதைக்குள் என்னை இழுத்துச் சென்றது.
"கடவுள் எவ்வளவு உயரம் இருப்பார் தெரியுமா?" என்ற அந்த வரியே
அட என ஆச்சரியப்பட வைத்து கதை முழுவதையும் வாசிக்கச் செய்தது.
சமூகத்தில் நாம் பார்க்கக்கூடிய, காதால் கேட்கக்கூடிய ஒரு சம்பவம்தான் கதையின் மையக்கரு. ஆனால் ஆசிரியர் அதை சொல்லிய விதம் அடடே போட வைக்கிறது.
கதையில் இருக்கும் ஒரு பாராவை அப்படியே தருகிறேன் பாருங்கள் எத்தனை ரசனையுடன் எழுதி இருக்கிறார் என்று.
"கரிசல் பூமியில் ஆண்களும் கர்ப்பம் கொள்வது உண்டு. கொத்தமல்லி காடு வெளேரென்று பூக்கிற போது ஒவ்வொரு ஆணும் கர்ப்பம் கொள்கிறான். மசக்கையின் ஆயாசமும், களைப்பும் அவன் முகத்தில் தெரிகிறது.
பருவ மாறுதல்களால் தீட்டுப்படாமல் காடு விளைந்து விட வேண்டும் என்று அவன் கவலைப்படுகிறான். விளையப்போகும் மல்லி செடி அரும்பு காயாகி கனம் அதிகரிக்கின்ற கணமெல்லாம் கர்ப்பிணிப் பெண்ணின் முக அழகு வந்து விடுகிறது. பிரசவ வேதனையுடன் ஒவ்வொரு நாளும் காட்டை நெருங்குகிறான். நட்சத்திர துகள்கள் மண்ணில் உதிர்ந்து விட்டது போல் காடெல்லாம் கொத்தமல்லி பூத்திருக்கிறது".
எதையும் நாம் சொல்லும் விதத்தில் தான் அதன் ரசனை அமைகிறது.
காலத்தில் கரையாது ஐயா தங்களின் எழுத்து.
- கௌரேஇ கணேசன்
கருத்துகள்
கருத்துரையிடுக